Home கட்டுரைகள் சமூக அக்கரை வசையும் வேண்டாம், வன்முறையும் வேண்டாம்!
வசையும் வேண்டாம், வன்முறையும் வேண்டாம்! PDF Print E-mail
Monday, 18 July 2016 06:08
Share

வசையும் வேண்டாம், வன்முறையும் வேண்டாம்!

     Dr. K.V.S.ஹபீப் முஹம்மத்    

உயிர், உடைமை, கண்ணியம், நம்பிக்கை இவை நான்கும் மனிதனின் மிக முக்கிய அடிப்படை உரிமைகளாகும். இவற்றில் எதைப் பறித்தாலும் மனிதன் பொங்கி எழுவான். தன் இனம், மொழி, மதம், கலாசாரம், நாடு ஆகியன இழிவுபடுத்தப்படும்போது மோதல்கள் உருவாகின்றன.

பல நூற்றாண்டுகளாகவே மேலை நாட்டினர் இஸ்லாத்தின் மீது வெறுப்பைக் கொண்டுள்ளனர். அதற்கு அவர்கள் எழுதிக்குவித்துள்ள ஆயிரக்கணக்கான இஸ்லாமிய வெறுப்பு நூல்களே சான்றாகும். 

எகிப்தில் நடைபெற்ற முபாரக்கிற்கு எதிரான போராட்டங்களில் முஸ்லிம்களுக்கும் காப்டிக் கிறித்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட ஒற்றுமையை உடைப்பதும் ஒரு நோக்கமாகும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவிவிரும் இஸ்லாத்தைப் பற்றி அங்குள்ள மக்களிடையே ஒரு அவப்பெயரை ஏற்படுத்துவதும் அவர்களின் எண்ணமாகும்.

அத்தோடு முஸ்லிம்களைச் சீண்டிவிட்டு அவர்களைப் போராட்டக் களத்தில் இறக்கி அதன் மூலம் அவர்களை நாகரிமற்றவர்களாகவும் உணர்ச்சிவசப்படுபவர்களாவும் உலகத்திற்குச் சித்திரிக்க வேண்டும் என்ற நோக்கமும் இருக்கலாம்.

மத உணர்வுகளைப் புண்படுத்தும் புத்தகங்கள், கட்டுரைகள், திரைப்படங்களைத் தடுக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இவற்றை அனுமதிக்க முடியாது. விமர்சனம் என்பதும் இழிவுபடுத்துதல் என்பதும் வெவ்வேறானவை.

இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது, குர்ஆன் இறைவாக்கு அல்ல, பலதார மணம், தலாக், மணவிலக்கு செய்யப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுத்தல் போன்ற விஷயங்களில் இஸ்லாத்தைக் குறித்து விமர்சனங்கள் எழுந்தபோது எந்த முஸ்லிம் அமைப்பும் அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவற்றை விமர்சனமாகவே எதிர்கொண்டனர்.

தமது மதம் பற்றி எந்தக் கேள்விகளும் கேட்கலாம் என்ற நிகழ்ச்சிகளை முஸ்லிம்கள் உலகெங்கும் நடத்தி வருகின்றனர். அந்த நிகழ்ச்சிகளில் முஸ்லிமல்லாதவர்கள் தொடுக்கும் கடுமையான விமர்சனங்களையும் எற்றுக்கொண்டு தக்க பதில்களையும் அளித்து வருவதை இன்றும் காணலாம், இங்கும் காணலாம். விமர்சனங்களை அனுமதிக்கலாம் ஆனால், இழிவுபடுத்துவதை எப்படி அனுமதிப்பது?

எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருப்பதுபோல கருத்துச் சுதந்திரத்துக்கும் ஓர் எல்லை உண்டு. கட்டுப்பாடற்ற முழுச் சுதந்திரம் என்ற ஒன்று கிடையாது. “அடுத்தவனின் மூக்கில் இடிக்காதவாறு தெருவில் தாராளமாகக் கைவீசிச் செல்லலாம். அடுத்தவன் மூக்கு ஆரம்பமாகும் இடம், உனது சுதந்திரம் முடிவடையும் இடம்’ என்பது அனைவரும் அறிந்த கருத்தாகும்.

நமது அரசியல் சாசனத்தின் 19ஆவது பிரிவு சுதந்திரம் பற்றிய பிரிவாகும். அதில் (ரைட் டூ பிரீடம்) நாட்டின் ஒருமை, இறையாண்மை, பாதுகாப்பு, வெளிநாட்டவருடனான நட்புறவு, பொது அமைதி, ஒழுங்கு, நீதிமன்ற அவமரியாதை, குற்றங்களைத் தூண்டுதல் போன்ற விஷயங்களில் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்று கூறுகின்றது.

சட்டமன்ற, நாடாளுமன்ற நடவடிக்கைகளில், அவைத் தலைவர் அவைக் குறிப்பிலிருந்து நீக்கும் விஷயத்தை வெளியிட முடியாது. சமூகங்களிடையே மோதல் உண்டாக்கும் பேச்சுகளைக் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அனுமதிப்பதில்லை.

கருத்துச் சுதந்திரம் பற்றி உரக்கப் பேசும் அமெரிக்கா, விக்கி லீக்சின் ஜூலியன் அசான்ஜை ஏன் துரத்திப் பிடிக்க முயல்கிறது? கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அவரைச் செயல்பட விடலாமே?

இன்னும் பல ஐரோப்பிய நாடுகளில் யூதர்களை ஹிட்லரின் நாஜிப் படைகள் படுகொலை செய்த “ஹோலோகாஸ்ட்’ பற்றி ஆட்சேபங்களோ சந்தேகங்களோ எழுப்பக்கூடாது என விதிகள் உள்ளன. கருத்துச் சுதந்திரத்தில் இரட்டை நிலைகள் இருப்பதையே இவை காட்டுகின்றன.

எனவே வெறுப்பையும் துவேஷத்தையும் உண்டுபண்ணக்கூடிய அனைத்து எழுத்து, பேச்சு, காட்சிகளைத் தடைசெய்ய வேண்டும். ஒரு நாட்டின் பாதுகாப்புக்காக எழுத்தில், பேச்சில் கட்டுப்பாடுகள் இருக்கலாம் என்றால், அமைதி, ஒற்றுமை, நம்பிக்கை ஆகியவற்றுக்காகவும் கட்டுப்பாடுகள் கொண்டுவரலாம் அல்லவா?

ஒருவரின் மத உணர்வுகள் காயப்படுத்தப்படும் வேளைகளில் பாதிக்கப்பட்டவர்களும் கட்டுப்பாடாக நடந்துகொள்ள வேண்டும். வெறுப்பை விதைக்க விரும்புபவர்களின் எண்ணம் வெற்றி பெறாமலும் அவர்கள் விரும்பும் விளம்பரமும் வியாபாரமும் அவர்களுக்குக் கிடைக்காமலும் பார்த்துக் கொள்ளவேண்டும். இழிவுபடுத்தும் கட்டுரைகள், படங்களால் ஒரு மதத்தின், கொள்கையின் மேன்மையை வெற்றியை யாராலும் தடுத்துவிட முடியாது. பலவீனமான கொள்கை உடையவர்கள்தான் விமர்சனங்களைக் கண்டு அஞ்சுவார்கள்.

இஸ்லாம் விமர்சனங்களை எதிர்கொண்டே வளர்ந்திருக்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்த காலத்திலேயே பல வசைமொழிகள் வெளிப்பட்டன. மந்திரவாதி, சூனியக்காரர், பொய்யர், குறிசொல்பவர் என்று வசைகளை மொழிந்தபோது பெருமானார் தமது தோழர்களை ஏவி அவர்களைத் தாக்கவில்லை. மாறாக, அவர்கள் எடுத்துவைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும்படி கூறினார்.

கவிதைகள் மூலம் பெருமானாரை வசை பாடியபோது தமது அணியிலிருந்த கவிஞர்கள் மூலம் அவர்களுக்குப் பதில் அளிக்குமாறு செய்தார். தமது மனைவி ஆயிஷாவின்  ரளியல்லாஹு அன்ஹா கற்பு குறித்து எதிரிகள் அவதூறு சுமத்தியபோதும் பொறுமை காத்தார்.

இத்தகைய தருணங்களில் முஸ்லிம்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென குர்ஆன் மூலம் இறைவன் வழிகாட்டினான். வசைமொழிகளைக் கேள்வியுறும் வேளைகளில் பொறுமையையும் இறையச்சத்தையும் மேற்கொள்ளுமாறும் (குர்ஆன் 3:186) அறிவீனர்களின் வாதங்களைப் புறக்கணிக்குமாறும் (குர்ஆன் 25:63)) திருக்குர்ஆன் கூறுகிறது. அத்தோடு அவர்கள் எடுத்துவைக்கும் வாதங்களுக்கு அழகிய முறையில் பதில் அளிக்குமாறு கட்டளையிடுகிறது. (குர்ஆன் 25:33, 16: 124)

“குர்ஆன் இறைவாக்கல்ல, முஹம்மதால் புனையப்பட்டது’ என்று கூறியபோது, “அப்படியாயின் இதுபோன்ற ஒரு திருக்குர்ஆனை நீங்களும் கொண்டு வாருங்களேன்’ என்று பதில் அளிக்கப்பட்டது. “எழுத, படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் இலக்கியத் தரமிக்க கவித்துவமிக்க ஒரு நூலை உருவாக்க முடியுமா?’ என்று கூறி அவர்களின் சிந்தனைக்குச் சவால் விடப்பட்டது. எனவே அறிவை அறிவால் சந்திக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பிற மதங்களைப் பழிக்க வேண்டாம் என்றும் அவர்கள் வழிபடும் தெய்வங்களைத் திட்ட வேண்டாமென்றும் திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது. (குர்ஆன் 6: 108) இந்தக் கட்டளைப்படியே கடந்த 1,400 ஆண்டுகளாக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். எந்த மதத்தையும் புண்படுத்தும் இலக்கியங்களை, பிரசாரத்தை முஸ்லிம்கள் செய்ததில்லை.

விமர்சனங்கள் கீழ்த்தரமானவையாக இருந்தால் அவற்றைப் புறக்கணித்துவிடலாம் அல்லது அறிவுபூர்வமாகப் பதில் அளிக்கலாம். அல்லது எவருக்கும் தொல்லை தராத அமைதிப்பேரணி நடத்தலாம். ஆனால், பேரணிகள் நடத்தும்போது கலந்துகொள்ளும் அத்தனை பேரையும் கட்டுப்படுத்துவது இயலாது. கூட்டம் அதிக அளவில் இருக்கும்போது ஒருவகையான ஆவேசம் ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு குறிப்பாக பயணிகள், நோயாளிகள் படும் அவஸ்தைகள் அனைவரும் அறிந்ததே.

அமைதிப் பேரணியுடன் கருத்தரங்குகள் ஏற்பாடுகள் செய்து சர்வ சமயத்தவர்கள், மனிதநேயர்கள், சமயச் சான்றோர்கள், நல்லிணக்கம் நாடுவோர் எனப் பலதரப்பினரையும் அழைத்து – மத உணர்வுகளைக் காயப்படுத்தும் நிகழ்வுகளைக் கண்டிப்பதோடு – நபிகள் நாயகம் பற்றி உண்மையான சித்திரத்தை மக்களுக்கு எடுத்துரைக்கலாம். அமைதியை ஏற்படுத்தலாம். மதவெறியர்களின் திட்டங்களைத் தவிர்க்கலாம். அதுதான் சரியான வழிமுறையாக இருக்கும்.

(கட்டுரையாளர்: இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளையின் துணைத்தலைவர்.)

http://www.ift-chennai.org/archives/2240