Home கட்டுரைகள் நாட்டு நடப்பு ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய பிரச்சாரத்தை முடக்க நினைக்கும் பாசிச பாஜக அரசிற்கு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்!
ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய பிரச்சாரத்தை முடக்க நினைக்கும் பாசிச பாஜக அரசிற்கு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்! PDF Print E-mail
Friday, 08 July 2016 12:42
Share

ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய பிரச்சாரத்தை முடக்க நினைக்கும் பாசிச பாஜக அரசிற்கு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்!

வங்கதேசத் தலைநகர் டாக்காவில், கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்தியர் ஒருவர் உட்பட பலர் பலியானார்கள். இந்தத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவன் இஸ்லாமிய பிரச்சாரகர் ஜாகிர் நாயக் பேச்சில் தான் கவரப்பட்டதாகக் கூறியுள்ளான் எனக்கூறி ஜாகிர் நாயக் தீவிரவாதத்தைத் தூண்டுவதாக அவர் மீது மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜாகிர் நாயக் குறித்து அனைத்து விவரங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது என்றும், அவரது பேச்சு ஆட்சேபனைக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

இது ஜாகிர் நாயக் அவர்களின் இஸ்லாமியப் பிரச்சாரத்தை முடக்குவதற்கு பாஜக அரசு செய்யும் அப்பட்டமான சதிச் செயல் என்பதில் சந்தேகம் இல்லை.

அனைத்து ஆங்கில செய்திச் சேனல்களும் ஜாகிர் நாயக் அவர்களை மிகப்பெரிய தீவிரவாதியைப் போல சித்தரித்து விவாத அரங்கங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.

பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி ஜாகிர் நாயக்கின் சொற்பொழிவைக் கேட்பவனாக இருந்ததால் ஜாகிர் நாயக் தீவிரவாதியாக ஆகிவிடுவாரா?

அப்படியானால் எவ்வளவோ திருடர்கள், கொள்ளைக்காரர்கள் சினிமா நடிகர்களைப் பின்பற்றுகின்றனர். அதற்காக சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் நடித்த திரைப்படங்களையும், அவர்களது உரைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்வதாக வெங்கய்யா நாயுடு சொல்வாரா?.

இவ்வளவு ஏன் சுவாதி கொலை குற்றவாளி ராம் குமார் என்பவன் மோடியினுடைய பக்கத்தை லைக் செய்து வைத்துள்ளான். அதனால் சுவாதி கொலைக்கு மோடிதான் காரணம் என்று வெங்கய்யா நாயுடு சொல்வாரா?

தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட ரோகன் இம்தியாஸ் கடந்த வருடம் இறுதியில் ஜாகிர் நாயக் ஒரு உரையில் பேசிய பேச்சுக்களை மேற்கொள்காட்டி பேஸ்புக்கில் பிரச்சாரம் மேற்கொண்டதனால்தான் ஜாகிர் நாயக்கை குற்றவாளியாக பார்க்கின்றார்களாம்.

"I said every Muslim should be a terrorist to all anti social elements." இதுதான் ஜாகிர் நாயக் அவர்கள் பேசிய வாசகம். இதன் பொருள், “ஒரு முஸ்லிம் என்பவன் அனைத்து தீமைகளுக்கு எதிராக போரிடும் விஷயத்தில் தீவிரவாதியாக இருக்க வேண்டும்”

மேற்கண்ட வாசகத்தில் என்ன தவறு இருக்கின்றது. மேற்கண்ட வாசகத்தைக் கூறியதற்காகத்தான் அவர் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்டு அவரது இஸ்லாமிய பிரச்சார குரல் வளை நெறிக்கப்படும் என்றால் இதே வாசகத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் பிரகடனப்படுத்துகின்றது.

ஒரு முஸ்லிம் என்பவன் மனிதநேயத்தைப் போதிப்பதில் தீவிரவாதியாக இருக்க வேண்டும்.

ஒரு முஸ்லிம் என்பவன் தீமைகளை எதிர்ப்பதில் தீவிரவாதியாக இருக்க வேண்டும்.

ஒரு முஸ்லிம் என்பவன் அன்பைப் போதிப்பதில் தீவிரவாதியாக இருக்க வேண்டும்.

ஆகமொத்தத்தில் ஒரு முஸ்லிம் என்பவன் நன்மைகளைச் செய்வதில் தீவிரவாதியாக இருப்பான். அவன் தான் உண்மையான முஸ்லிம்.

இஸ்லாமியரல்லாத மக்கள் மத்தியில் இஸ்லாத்தைப் போதிக்கும் எவரும் தீவிரவாதத்திற்கு ஆதரவாகச் செயல்படமாட்டார். அவ்வாறு செயல்படுவது அந்தப் பிரச்சாரத்திற்கு முழு முட்டுக்கட்டையாகத்தான் இருக்குமே தவிர அதன் வளர்ச்சிக்கு உதவாது.

ஜாகிர் நாயக் அவர்கள் இஸ்லாமியரல்லாத மக்கள் மத்தியில் செய்து வரும் தீவிரப்பிரச்சாரத்தை தீவிரவாத பிரச்சாரமாகக் காட்ட முயலும் பாசிச பாஜக அரசிற்கு எச்சரிக்கை விடுக்கின்றோம்.

ஜாகிர் நாயக்கிற்கும் எங்களுக்கும் மத்தியில் கருத்துவேறுபாடுகள் இருந்த போதிலும் மோடி அரசின் இந்த பாசிசப் போக்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது. அவருக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

இனியும் இதுபோல ஜனநாயத்தின் குரல் வளையை நெறிக்கும் ஜனநாயகப் படுகொலைகள் தொடருமேயானால் ஜனநாயக எதிரிகளை எதிர்கொள்ள வேண்டிய விதத்தில் எதிர்கொண்டு சரியான பதிலடி கொடுக்க இந்த இஸ்லாமிய சமுதாயம் தயங்காது என்பதையும், அதற்கு மனிதாபிமானத்தை விரும்பும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் துணை நிற்பான் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்படிக்கு;
M.முஹம்மது யூசுப்
மாநில பொதுச்செயலாளர்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்