Home கட்டுரைகள் நாட்டு நடப்பு அதிகாரவர்க்கத்தின் கண்களை உறுத்தும் முஸ்லிம்கள்
அதிகாரவர்க்கத்தின் கண்களை உறுத்தும் முஸ்லிம்கள் PDF Print E-mail
Friday, 08 July 2016 12:06
Share

அதிகாரவர்க்கத்தின் கண்களை உறுத்தும் முஸ்லிம்கள்

    ஆளூர் ஷாநவாஸ்    

கோவை, பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்குகளில் சிக்கவைக்கப்பட்ட மதானியும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சட்ட உதவி வழங்குவதாக சித்தரிக்கப்பட்ட ஒவைசியும், பங்களாதேஸ் பயங்கரவாதிகளுக்கு தூண்டுகோலாய் இருந்ததாக பழி சுமத்தப்படும் ஜாகிர் நாயக்கும் நாடறிந்த ஆளுமைகள்.

சமூக, அரசியல், ஆன்மீகத் தளங்களில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு அறவழியில் பயணிப்பவர்கள்.

அத்தகைய இவர்களை அதிகார வர்க்கம் குறிவைப்பது ஏன்? பயங்கரவாதத்தோடு இவர்களை இணைப்பது எதனால்?

1) மதானி:

கேரளாவின் சமூகவியலை மிக இளம் வயதில் மாற்றியமைத்தவர். பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின் ஆர்.எஸ்.எஸ்ஸை எதிர்த்து முஸ்லிம் இளைஞர்களிடம் வன்முறை எண்ணம் மேலோங்க இருந்த நேரத்தில், அதை மடைமாற்றி தமது எழுச்சி உரைகளின் மூலம் ஜனநாயக வழியில் இளைஞர்களை அணிதிரட்டியவர். அம்பேத்கர் பிறந்தநாளில் தமது கட்சியை தொடங்கினார். முஸ்லிம் கட்சி என்று பெயர் வைக்காமல் மக்கள் ஜனநாயகக் கட்சி என்று பெயர் சூட்டினார். முஸ்லிம் அல்லாதவர்களை பெருமளவில் வேட்பாளர்கள் ஆக்கினார். பொதுத் தொகுதிகளில் தலித்களை நிறுத்தி அதிக வாக்குகளை அள்ளினார். ஐந்தே ஆண்டுகளில் அவர் செய்த இந்த அதிரடிகள்தான் அவரை முடக்குவதற்கான அடிப்படைக் காரணிகள். 1998-இல் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கவைத்தனர். 9 ஆண்டுகளுக்குப் பின் 2007-இல் குற்றமற்றவராக விடுதலை ஆனார். மீண்டும் பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கவைத்து 2010-இல் கைது செய்து இன்றுவரை குற்றத்தை நிரூபிக்க முடியாமல் விசாரணைக்கைதியாகவே சிறைவைத்துள்ளனர்.

2) ஒவைசி:

பாரம்பரிய அரசியல் குடும்பத்து வாரிசு. பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். மிகச்சிறந்த கல்வியாளர். சிறந்த சட்டமன்ற நாடாளுமன்ற உறுபினராக முத்திரை பதித்தவர். முஸ்லிம் அணிதிரட்டல் என்பதோடு நின்றுவிடாமல் முஸ்லிமல்லாத ஒடுக்கப்பட்ட மக்களையும் இணைத்து வெற்றி பெற்றவர். ஆந்திராவைச் சேர்ந்த அவரால், சிவசேனாவின் கோட்டையான மராட்டியத்தில் சென்று தலித்களின் ஆதரவுடன் வெல்ல முடிந்தது. நாடாளுமன்றத்திலும், நாடு தழுவிய ஊடகங்களிலும் ஆர்.எஸ்.எஸ்ஸை அம்பலப்படுத்தி சொற்போர் நிகழ்த்தி வருகிறார். இவரது வாதங்கள் வெகுமக்களால் கவனிக்கப்படும் நிலை வந்ததும் எதிர்மறையாக சித்தரிக்கப்பட்டார். இப்போது ஐ.எஸ் ஆதரவாளராக அடையாளப்படுத்தப் படுகிறார்.

3) ஜாகிர் நாயக்:

முஸ்லிம் அல்லாத மக்களிடம் இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் பரப்பப்படும் அவதூறுகளை தவிடுபொடியாக்கியவர். தமது அறிவார்ந்த வாதங்களாலும், அமைதியான அணுகுமுறையாலும், தன்மையான பதில்களாலும் கோடிக்கணக்கான முஸ்லிமல்லாத மக்களை ஈர்த்தவர். குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறை போன்ற நவீன தளங்களில் இயங்கும் முஸ்லிமல்லாத இளைஞர்களுக்கு இஸ்லாம் பற்றிய நற்செய்திகளை கொண்டு சேர்த்தவர். அவதூறுகளுக்கும் பழிக்கும் பதிலடி ஆயுதம் அல்ல; அறிவுதான் என்று முஸ்லிம் இளைஞர்களுக்குப் புரிய வைத்தவர். அத்தகையவர்தான் இன்று பங்களாதேஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவராக சித்தரிக்கப்படுகிறார்.

ஆக, இந்த மூன்று ஆளுமைகளும் முஸ்லிம்களிடம் மட்டுமே வேலை செய்திருந்தால் அதிகாரவர்க்கம் இவர்களைக் குறிவைத்திருக்காது. வெகுமக்களிடம் இவர்கள் ஏற்படுத்திய தாக்கமே அதிகாரவர்க்கத்தின் கண்களை உறுத்துகிறது. முஸ்லிமல்லாத மக்களிடமிருந்து முஸ்லிம்களை அந்நியப் படுத்த அதிகாரவர்க்கம் கண்டுபிடித்து வைத்துள்ள மிகப்பெரும் ஆயுதம் தான் பயங்கரவாதம்!

source: https://www.facebook.com/aloor.shanavas/