Home இஸ்லாம் கட்டுரைகள் ஓய்வு நேரங்களை கழித்தல் - ஓர் இஸ்லாமிய நடுநிலைப்பார்வை
ஓய்வு நேரங்களை கழித்தல் - ஓர் இஸ்லாமிய நடுநிலைப்பார்வை PDF Print E-mail
Tuesday, 24 May 2016 06:22
Share

ஓய்வு நேரங்களை இஸ்லாம் அனுமதித்துள்ள விடயங்களில் கழித்தல் பற்றிய நடுநிலைப் பார்வை

உலகத்தில் மனித வாழ்வின் ஒவ்வொரு பகுதிக்கும் அதற்கே உரிய பெறுமானத்தை வழங்கும் படியே இஸ்லாம் போதிக்கின்றது.

இதனையே இஸ்லாத்தின் தனிப்பண்புகளுள் ஒன்றான (அத் தவாஸுன்) சமநிலைத் தன்மை என்று சொல்லப்படுகிறது.

(اياكم والغلو)

அத்துமீறுவதை விட்டும் நான் உங்களை எச்சரிக்கிறேன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்கள்: அஹ்மத், நஸாஈ)

பொதுவாக எந்த விடயமாயினும் அதில் தீவிரப்போக்கை கடைப்பிடிப்பதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

இஸ்லாம் என்பது நடைமுறைக்கு ஒவ்வாத வரண்டுபோன சித்தாந்தமோ, குறுட்டுத்தனமான ஆன்மீக பக்தர்களை உருவாக்கும் மூட நம்பிக்கையோ கிடையாது என்ற வகையில் மனிதனின் அன்றாட வாழ்வில் ஏற்படும் மனக்கோளாறுகள், பிரச்சினைகள், போன்றவற்றின் போது உளவியல் ரீதியான சிகிச்சை பெறுவதற்கும்.

ஓய்வு நேரங்களை இஸ்லாம் அனுமதித்துள்ள விடயங்களில் கழிப்பதற்கும் இஸ்லாம் வழிகாட்டியுள்ளது.

ஸஹீஹ் முஸ்லிமின் அறிவிப்பில் ஹன்ழலா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தாம் முனாஃபிக் ஆகிவிட்டதாக சப்தமிட்டுக் கொண்டு வருகையில் அவருக்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் ஒரே நிலையிலேயே என்னிடமும் இறை சிந்தினையிலுமே திலைத்துவிட்டால் வானவர்கள் உங்கள் விரிப்புக்களிலும் பாதைகளிலும் உங்களோடு கைலாகு செய்வதற்கு வந்துவிடுவார்கள் எனக்கூறி ஹன்ழலாவே! ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நேரம் இருக்கிறது என்று வழிகாட்டினார்கள்.

மேலும் அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்; நோன்பு வையுங்கள், நோன்பு துறந்திருங்கள், ஏனெனில் உமது உடம்புக்கென்று ஒரு கடமை உங்களுக்கு இருக்கின்றது, உமது கண்ணுக்கென்று ஒரு கடமை உங்களுக்கு இருக்கின்றது, உங்கள் மனைவிக்கென்று ஒரு கடமை உங்களுக்கு இருக்கின்றது, உங்கள் விருந்தினருக்கென்று ஒரு கடமை உங்களுக்கு இருக்கின்றது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். (நூல்: புகாரி)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறந்த ஒரு உளவளத்துணை ஆலோசகர் என்ற வகையில் தமது சஹாபாக்களை வாழ்வின் ஒவ்வொரு பகுதிக்கும் அதற்கே உரிய பெறுமானத்தை வழங்கும் படியும் அதன் கடமைகளை நிறைவேற்றும் படியும் வழிகாட்டியுள்ளார்கள்.

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்; நான் நபிகளாரோடு ஒரு பயணம் சென்றிருந்த போது நானும் நபிகளாரும் எங்களுக்கிடையில் ஓட்டப்போட்டி வைத்தோம் அதில் நபிகளாரை நான் தோற்கடித்து விட்டேன். பிற்பட்ட காலங்களில் நான சற்று கொழுத்திருந்ததால் என்னால் வேகமாக ஓட முடியாது போனது அதனால் என்னை அவர்கள் தோற்கடித்து விட்டார்கள் அப்போது இது அதற்கு பகரமாகிவிட்டது என (நகைச்சுவையாக) கூறினார்கள். (நூல்: அபூ தாவுத்)

ஓட்டப்போட்டி உடம்புக்கு உற்சாகத்தை உண்டு பண்ணக்கூடியது அதுதான் நபியவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள் என்று யாராவது கருதுவார்களாயின் அவர்கள் அதனை தன் மனைவியோடு அதுவும் பிரயாணத்தில் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும் எனவே உல்லாசமாக குடும்பத்தோடு பயணிப்பது சிறு சிறு போட்டிகள் வைத்து பரிசில்கள் வழங்குவது போன்ற விடயங்களை நபிகளார் ஊக்குவித்துள்ளார்கள் என்றே இந்த நபி மொழியிலிருந்து புரிந்து கொள்ளவேண்டும்.

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்; நபியவர்கள் எனது வீட்டு வாசலில் இருந்து கொண்டு எத்தியோப்பியர்களின் விளையாட்டைக் கண்டு கழித்தார்கள். அவர்களோடு சேர்ந்து நானும் அதனை கண்டு கழிக்க வேண்டும் என்பதற்காக அவர்களது போர்வையால் என்னை மறைத்தார்கள். நான் போதும் என்று சொல்லும் வரை எனக்காக காத்திருந்தார்கள். (நூல்: முஸ்லிம்)

இந்த செய்தியில் ஆடவர்கள் விளையாடுவதை அன்னை ஆயிஷா ரழி பார்த்துள்ளார்கள் நபியவர்கள் தன் மனைவி போதும் என்று சொல்லுமளவிற்கு அவருக்கு உதவியாகவும் இருந்துள்ளார்கள் என்றும் விளங்கமுடிகிறது.
இங்கும் பொழுது போக்கிற்காக விளையாட்டுக்களை கண்டு கழிப்பதை இஸ்லாம் அனுமதித்துள்ளது என்ற விடயமும் மேலதிகமாக ஆண்களின் விளையாட்டை பெண்களே பார்த்துள்ளார்கள் என்றும் வந்துள்ளது.

இதனால்தான் உங்களது உள்ளங்களுக்கு அடிக்கடி ஓய்வு வழங்கி அதற்கு உற்சாகமளியுங்கள் என அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் கூறியுள்ளார்கள்.

நபிகளாரை விட உலகில் வேறு எவர்தான் பேணுதலுடையவராகிவிட முடியும்? நபியவர்கள் காட்டாத ஒரு வழிமுறையில் பேணுதலையும் பயபக்தியையும் தேட ஒருவர் முயற்சிப்பார் எனின் அவர் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட துறவறத்தை நோக்கியே பயணிக்கிறார் என்று பொருளாகிவிடும்.

சத்தியத்தை புரிந்து செயல்படுவோமாக

நட்புடன் TM முபாரிஸ் ரஷாதி,
ஹதீஸ் துறை விரிவுரையாளர் - பாதிஹ் கல்வி நிறுவனம் - திஹாரி

source: http://www.lankascholars.com/2016/03/blog-post_33.html