நல்லாட்சி வழங்குங்கள்! |
![]() |
![]() |
![]() |
Friday, 20 May 2016 07:06 | |||
நல்லாட்சி வழங்குங்கள்! 100 சதவிகித வாக்குப்பதிவு என்பதை இலக்காகக் கொண்டு சுவரொட்டிகள் முதல் மின்னணு ஊடகங்கள் வரை விளம்பரங்களையும், விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் முழு வீரியத்தோடு முடுக்கி விட்டது தேர்தல் ஆணையம். 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கான வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் தள்ளி வைத்ததைத் தொடர்ந்து, 232 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 16 –ஆம் தேதி நடைபெற்றது. அதில் 74.26 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. 5 கோடியே 77 லட்சத்து 33 ஆயிரத்து 574 வாக்காளர்கள் கொண்ட தமிழகத்தில் 4 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 674 வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர். இதில் ஆண்கள் 2, கோடியே 12 லட்சத்து 44 ஆயிரத்து 129 பேரும், பெண்கள் 2 கோடியே 16 லட்சத்து 28 ஆயிரத்து 807 பேரும் வாக்களித்து உள்ளனர். இதன் முடிவாக தமிழக சட்டப்பேரவையின் ஆட்சிப்பீடத்தில் அமரப்போவது யார் என்ற கேள்விக்கு 19/5/2016 - வியாழக்கிழமை அன்று விடை கிடைத்துள்ளது. அடுத்து யார் அந்த அரியணையில் அமரப்போகிறார்?, ஊழல் இல்லாத ஆட்சி அமைக்கப்படுமா? மதுவை தடை செய்து விடுவார்களா? விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்தி விடுவார்களா? என்று இப்படி ஆயிரமாயிரம் கேள்விகளோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழக வாக்காளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விடை கிடைத்துள்ளது. இந்த தருணத்தில் ஜனநாயகக் கடமையை இஸ்லாமிய வழிகாட்டுதலோடு நிறைவேற்றி அமைந்திருக்கிற தமிழக முஸ்லிம் சமூகம் நமக்கான இஸ்லாமிய வழிகாட்டுதல் என்ன? என்பதைப் பார்க்க கடமைப் பட்டிருக்கின்றது. ஓர் இறை நம்பிக்கையாளனைப் பொறுத்த வரையில் அவனைச் சுற்றி நடக்கிற எந்த மாற்றங்களும் அவனது வாழ்வில் எவ்வித சலனங்களையும், சஞ்சலங்களையும் ஏற்படுத்தி விடக்கூடாது. அவனைச் சுற்றி நடப்பவைகள் அனைத்தையும் ஈருலகத்திற்கும் சாதகமான அம்சங்களாக மாற்றிட பழகிக் கொள்ள வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகின்றது. வலியுறுத்தவும் செய்கின்றது. அப்படி அவன் வாழ்வை அமைத்துக் கொள்கிற போது ஆச்சர்யங்களும் அற்புதங்களும் நிறைந்த மகத்தான இறை நம்பிக்கையாளன் என்பதாக வர்ணிக்கவும் செய்கின்றது. 1. யார் வந்தாலும் நம்மை ஒன்றும் செய்திட இயலாது என்கிற மனோதிடம் இருக்க வேண்டும். قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே) நீர் அவர்களை அழைத்து அறிவித்து விடுவீராக! ”(நன்மையோ, தீமையோ) அல்லாஹ் எங்களுக்காக விதித்து வைத்திருப்பதைத் தவிர வேறு எதுவும் எங்களை வந்து அணுகாது. அவன் தான் எங்களின் பாதுகாவலன். மேலும், இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே முழுமையாக சார்ந்திருக்க வேண்டும்.” 2. ஆட்சி அதிகாரம் வழங்கப்படுவதும் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் என நம்ப வேண்டும். قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ அல்லாஹ் கூறுகின்றான்: “ நபியே! நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம் அனைத்திற்கும் அதிபதியே! நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியை கொடுக்கின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களிடமிருந்து ஆட்சியைப் பறிக்கின்றாய். நீ நாடுகின்றவர்களுக்கு கண்ணியத்தை வழங்குகின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களை இழிவுபடுத்துகின்றாய். நலவுகள் அனைத்தும் உன் கைவசமே உள்ளன.” 3. நாம் விரும்புகின்றவற்றில் உள்ள நன்மை தீமைகளை நாம் அறிய மாட்டோம் என ஒப்புக் கொள்ள வேண்டும். وَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ وَعَسَى أَنْ تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَكُمْ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ அல்லாஹ் கூறுகின்றான்: “ஒரு விஷயம் உங்களுக்கு நன்மையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் வெறுக்கக் கூடும். மேலும், ஒரு விஷயம் உங்களுக்குத் தீமையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் விரும்பக்கூடும். (இவற்றை) அல்லாஹ் நன்கு அறிகின்றான். ஆனால் நீங்கள் அறிவதில்லை.” வாழ்வின் எல்லா நிலைகளும்.. إِنْ يَمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِثْلُهُ وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ அல்லாஹ் கூறுகின்றான்: “நீங்கள் மனம் தளர்ந்து விடாதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் இறை நம்பிக்கை கொண்டோராயின், நீங்களே மேலோங்குவீர்கள். (இப்போது) உங்களுக்கு (தோல்வி) காயம் ஏற்பட்டுள்ளதென்றால், இதற்கு முன்னர் உங்கள் எதிரணியினருக்கும் இதே போன்ற (தோல்வி) காயம் ஏற்படத்தான் செய்தது. இவையெல்லாம் காலத்தின் மாற்றங்களாகும். இவற்றை மக்களிடையே நாம் மாறி மாறி வரச் செய்கின்றோம்.” உஹத் யுத்த களத்தில் தோல்வியை சந்தித்த முஸ்லிம் அணியினருக்கு அல்லாஹ் மேற்கூறிய வசனத்தை இறக்கியருளினான். ஆகவே வாழ்வில் எது நடந்தாலும் அது நன்மைக்காகத் தான் நடக்கின்றது என்று நாம் விளங்கிக் கொண்டு, நம் வாழ்வை தொடர்ந்து நல் வழியிலே அமைத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தின் 15 – வது முதலமைச்சர் யாராக இருந்தாலும், அவர் ஆட்சியமைப்பின் கீழ் செயல்படுகிற அரசு மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நல்லது செய்கிற வரை அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதும், அவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதும் நம்முடைய தார்மீக கடமையாகும். எப்போது அநீதியும், அக்கிரமும் தலைவிரித்தாடுமோ அப்போது அவர்களுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதும், அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதும் தீமைக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுப்பதும் கட்டாயக் கடமையாகும். وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ அல்லாஹ் கூறுகின்றான்: “எந்தக் காரியம் நல்லதாகவும், இறையச்சத்திற்கு உரியதாகவும் உள்ளதோ அதில் எல்லோருடனும் ஒத்துழையுங்கள்! ஆனால், எது பாவமானதாகவும், வரம்பு கடந்ததாகவும் உள்ளதோ அதில் எவருடனும் ஒத்துழையாதீர்கள்! மேலும், இறைவனை அஞ்சுங்கள்! நிச்சயமாக அவனுடைய தண்டனை மிகக் கடுமையானது.” புதிதாக ஆட்சியமைக்க இருக்கிற அரசுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இந்த தருணத்தில் ஆட்சியதிகாரம் என்பதும், மக்களுக்கான பிரதிநிதிகளின் செயல் வடிவம் குறித்தும் நீண்ட நெடிய அரசியல் பாரம்பர்யத்திற்குச் சொந்தமான முஸ்லிம் சமூகம் சில அரசியல் செய்திகளை, அரசியல் ஆளுமைப் பண்புகளை அவர்களின் காதுகளுக்கு எத்திடச் செய்வது நம்முடைய தலையாய கடமை எனும் அடிப்படையில் இதோ! சிலவற்றைத் தருகின்றோம்! அல்லாஹ் போதுமானவன்!! மக்கள் பிரதிநிதிகள் எப்படி இருக்க வேண்டும்? உமைர் இப்னு ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், சத்திய சன்மார்க்கத்தின் மீதும் சிறு பிராயம் முதலே அளப்பெறும் காதல் கொண்டிருந்தவர்கள் உமைர் இப்னு ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு என்கிற நபித்தோழர். உலக பற்றற்ற வாழ்விற்கு முன்னுதாரனமாய் விளங்கிய முக்கியமான மூன்று நபித்தோழர்களில் இவர்களும் ஒருவர். (அபூ தர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ஸத்தாத் இப்னு அவ்ஸ் இப்னு ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், உமைர் இப்னு ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு. ஏக காலத்தில் வாழ்ந்த எல்லா நபித்தோழர்களாலும் மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்தப்பட்டார்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் சிரியா வெற்றி கொள்ளப்பட்டது. அப்போது இவர்களின் பங்களிப்பு மிகுதமாகவே இருந்தது. வெற்றி கொண்ட படையினரில் முக்கியமானவராக உமைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இருந்தார்கள். ஆரம்பத்தில் சிரியாவினுடைய ஒரு பகுதியான ஹிம்ஸ் மாகாணத்திற்கு அபூ உபைதா ரளியல்லாஹு அன்ஹு அவர்களும், அவர்களின் மறைவுக்குப் பின்னர் இயாள் இப்னு அனம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும், அவர்களுக்குப் பின்னர் ஸயீத் இப்னு ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஆளுநராக பணியாற்றினார்கள். ஹிம்ஸ் பகுதியிலிருந்து ஸயீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பதவியைத் துறந்து வந்ததும் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கட்டாயத்தின் பேரிலும், வற்புறுத்தலின் பேரிலும் உமைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிம்ஸ் –ஸின் ஆளுநராய் பதவியேற்றுக் கொண்டார்கள். வியக்கத்தக்க வகையில் தமது பதவியைப் பயன்படுத்தி மக்கள் மெச்சும் வகையில் பல மக்கள் திட்டங்களை உருவாக்கி செயலாற்றினார்கள். உமைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆளுநராக பதவியேற்று உரை நிகழ்த்துகிற போது குறிப்பிட்ட சில அம்சங்கள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களாக இலங்கிக் கொண்டிருக்கின்றன. ولقد رسم وهو أمير على حمص واجبات الحاكم المسلم في كلمات طالما كان يصدح بها في حشود المسلمين من فوق المنبر. ”ஓ ஜனங்களே! இஸ்லாம் என்பது பலமான கோட்டையையும், உறுதியான வாயில்களையும் கொண்டது. இஸ்லாமின் கோட்டை என்பது நீதியாகும். அதன் வாயில்கள் உரிமைகளாகும். கோட்டை தகர்க்கப்பட்டு வாயில்கள் உடைக்கப்பட்டால் இந்த மார்க்கம் வெற்றி கொள்ளப்பட்டு விடும். மக்களின் பிரதிநிதிகளான அதிகாரிகள் உறுதியாக இருக்கும் வரை இஸ்லாம் பாதுகாப்பாக இருக்கும். அதிகாரிகளின் உறுதி என்பது வாளால் வெட்டுவதோ, கசையால் அடிப்பதோ கிடையாது. மாறாக, நீதியை நிலைநாட்டுவதும் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் தான் இருக்கின்றது.” (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், பக்கம்:383) இந்த உரையின் மூலம் மக்கள் மத்தியில் நீதி வழங்குதல் மற்றும் ஒவ்வொருவரின் உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தல் ஆகியவைகள் விஷயத்தில் தான் மிக உறுதியாக இருப்பதாகவும் தமது அதிகாரத்தை அதற்காகவே பயன்படுத்துவதாகவும் தெளிவுபடுத்தினார்கள். மக்களின் விவகாரங்களில் மிகவும் பொறுப்புணர்வோடும், நளினத்தோடும் நடந்து கொண்டார்கள். அரசு முறை பயணமாக ஒரு தடவை ஃபலஸ்தீனுக்கு உமைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் செல்கிற போது அங்கே சில மக்கள் வெயிலில் நிறுத்த வைக்கப்பட்டிப்பதைக் காண்கிறார்கள். அதிகாரிகளிடம் ஏன் இப்படி இவர்கள் வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என வினவியதற்கு, அதிகாரிகள் “இம் மக்கள் அரசுக்கு வரி செலுத்தாதவர்கள்” என்று கூறினார்கள். அது கேட்ட உமைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆவேசமடைந்தவர்களாக “இவர்கள் வரி செலுத்த இயலாதவர்களாக இருந்தால் இவர்களை சக்திக்கு மீறி கட்டாயப்படுத்துவது எந்த விதத்திலும் நியாயமில்லை. அதற்காக, இவர்களின் மீதான வரியை செல்வந்தர்கள் மீது சுமத்துவதும் சரியில்லை. ஆகவே, வரி கொடுக்க முடியாத மக்களை இது போன்று இனி ஒரு போதும் தண்டிக்க வேண்டாம் என்று கூறி, அவர்களை விடுவிக்க உத்தரவிட்டார்கள். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகியும் உமைர் இப்னு ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்து எந்த விதமான தொடர்பும் இல்லாத நிலை கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வெறுமையை ஏற்படுத்தவே கடிதம் ஒன்றை எழுதினார்கள். அதில், ”இந்தக் கடிதம் உங்களின் கையில் கிடைத்ததும் ஹிம்ஸை விட்டு விட்டு உடனடியாக உங்களிடம் இருப்பவற்றை எடுத்துக் கொண்டு மதீனா நோக்கி புறப்பட்டு வரவேண்டும்! இது ஆட்சியாளர் உமரின் உத்தரவு!” என்று எழுதி இருந்தார்கள். கடிதத்தைப் பிரித்து படித்த உமைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், உடனடியாக மதீனா நோக்கி பயணமானார்கள். السلام عليك يا امير المؤمنين.. அஸ்ஸலாமு அலைக்கும் அம்மிருல் முஃமினீன் அவர்களே அமீருல் முஃமினீன் அவர்களின் அமைதியை திருப்பியது அந்த ஸலாம் ஸலாம் வந்த திசை நோக்கி திரும்புகின்றார்கள். அங்கே, புழுதி படிந்த ஆடைகளுடன், பாலைவன மணற்காற்று அள்ளி வீசிய மண் சுவடுகளை தேகம் எங்கும் தாங்கியவர்களாக, சோர்ந்து போய் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார்கள் உமைர் (ரலி) அவர்கள். பதில் ஸலாம் உரைத்த உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? இந்த நிலையில் வந்திருக்கின்றீர்கள்” என்று வினவினார்கள். ஒன்றும் நேர்ந்து விட வில்லை அமீருல் முஃமினீன் அவர்களே! நான் உடல் நலத்துடன் நன்றாகவே இருக்கின்றேன். இதோ என்னுடன் என் முழு உலகத்தையும் கொண்டு வந்திருக்கின்றேன். உமர் ரளியல்லாஹு அன்ஹு: ”என்ன கொண்டு வந்து இருக்கின்றீர்கள்?” உமைர் ரளியல்லாஹு அன்ஹு: ”இதோ நான் சாப்பிட பயன்படுத்தும் தட்டு, நீரருந்த, உளூ செய்ய பயன் படுத்தும் பாத்திரம், ஓய்வு எடுப்பதற்கும் எதிரிகளிடமிருந்து என்னைக் காத்துக் கொள்ள நான் பயன் படுத்துகின்ற கம்பு இவைகள் தான் என்னுடைய உலகம். இதை விட வேறெந்த தேவையும் இந்த உமைருக்கு இவ்வையகத்தில் இல்லை.” உமர் ரளியல்லாஹு அன்ஹு: ”நீங்கள் நடந்தா வந்தீர்கள்?” உமைர் ரளியல்லாஹு அன்ஹு: ”ஆம்! அமீருல் முஃமினீன் அவர்களே!” உமர் ரளியல்லாஹு அன்ஹு: ”ஏன் நீங்கள் நடந்து வர வேண்டும்? அரசுக்கு சொந்தமான ஒட்டகைகளை ஏற்பாடு செய்து அம்மக்கள் தரவில்லையா?” உமைர் ரளியல்லாஹு அன்ஹு: ”அம்மக்கள் எனக்காக ஏற்பாடு செய்யவும் இல்லை! ஏற்பாடு செய்து தருமாறு நான் கோரவுமில்லை.” உமர் ரளியல்லாஹு அன்ஹு: ”உம்முடைய பணிகளை முறையாக செய்தீர்களா?” உமைர் ரளியல்லாஹு அன்ஹு: ”ஆம்! அமீருல் முஃமினீன் அவர்களே! நீதியோடும் நெறியோடும் அவர்களின் விவகாரங்களில் நடந்து கொண்டேன். அம்மக்களிடமிருந்து பெறப்படுகின்ற வரிகள் ஜகாத் பொருட்களை அவர்களிலேயுள்ள வறியவர்களுக்கு நான் கொடுத்து விடுகின்றேன்.” பாருங்கள் இப்போதும் கூட நான் மட்டும் தான் இங்கு வந்திருக்கின்றேன். முன்னரே நான் காட்டிய இவைகள் தான் என்னுடைய சொத்துக்கள். ஒரு சல்லிக் காசு கூட அவர்களிடமிருந்து நான் எடுத்துக் கொண்டு வரவில்லை.” ஆச்சர்ய மேலீட்டால் அல்லாஹ்வைப் புகழ்ந்த உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ”இன்னும் சில காலத்திற்கு நீங்களே ஹிம்ஸ் பகுதியின் கவர்னராக இருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன்” என்றார்கள். அதற்கு, உமைர் இப்னு ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “நடந்து முடிந்தவைகளை குறித்து நான் ஆனந்தப்பட்டதும் இல்லை! கவலைப்பட்டதும் இல்லை! இனி ஒரு போதும் உங்களுக்காக நான் பணி செய்யப்போவது இல்லை. வேறு யாருக்காகவும் நான் இப்பணியை மேற்கொள்ளப் போவதும் இல்லை” என்று கூறி மறுத்து விட்டார்கள். (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மக்களின் நல்வாழ்வுக்காக தங்களின் நலன்களை இழக்க முன்வந்த மக்கள் பிரதிநிதி... அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருக்கத்தைப் பெற்ற நபித்தோழர்களில் மிக உயர்வான இடத்தைப் பெற்றவர்களில் இவர்களுக்கு தனி இடம் உண்டு. பல்வேறு சிறப்புக்களுக்கும், பேறுகளுக்கும் சொந்தக்காரர்கள் முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வல்ல அல்லாஹ் மகத்தான பல நற்பேறுகளை வழங்கியிருந்தான். அவர்களுக்கு வழங்கப்பட்ட பேறுகள் குறித்து வரலாற்றில் பல்வேறு சம்பவங்கள் வனப்பாகவே சான்றுரைக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் யமனுக்கு ஆளுநராக, இஸ்லாமிய அழைப்பாளராகச் சென்ற அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித மறைவுக்குப் பின்னர் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் தான் மதீனாவிற்கு வந்திருந்தார்கள். ஒரு முறை ஹஜ் செய்வதற்காக முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கஅபாவிற்கு வருகை புரிந்தார்கள். அப்போது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஹஜ் செய்ய வந்திருந்தார்கள். முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைச் சுற்றி ஏராளமான அடிமைகள் நின்று கொண்டிருந்ததைக் கண்ட ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “இவர்கள் எல்லாம் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “அபூபக்ர் அவர்களே! உங்கள் முன் நிற்கின்ற இந்த அடிமைகள் என்ன்னுடைய அயராத உழைப்பினால் எனக்கு கிடைத்த சொத்தாகும்” என்று கூறினார்கள். அது கேட்ட அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “முஆத் அவர்களே! அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கின்ற அருட்பேறுகள் குறித்து நான் மிகவும் அகமகிழ்வு கொள்கின்றேன்” என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார்கள். فَقَدِمَ عَلَى أَبِي بَكْرٍ، فَقَالَ لَهُ عُمَرُ: كان معاذ ظاهر الكف، طاهر الذمة، ولئن كان قد أثري، فانه لم يكتسب اثما، ولم يقترف شبهة، ومن ثم فقد رفض عرض عمر، وناقشه رأيه.. மதீனாவில் பொருளாதார நெருக்கடியொன்று ஏற்பட்ட போது, ஒரு மாலைப் பொழுதில் கலீஃபா அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள். பேச்சின் ஊடாக உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒரு யோசனை எம்மிடம் உண்டு. வேண்டுமானால் முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து அவர்கள் யமனில் சம்பாதித்த அவரின் தேவைக்குப் போக மீதமிருக்கிற அனைத்து சொத்துக்களையும் அரசுக்கு ஒப்படைக்கு மாறு சொல்லுங்கள். நீங்கள் ஆட்சியாளர் தானே! அவர் தந்தார் என்றால் இந்த நிலை கொஞ்சம் மாறிவிடும் அல்லவா?” என்று கூறினார்கள். அது கேட்ட அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “அவர்களாக விரும்பி எதைத் தந்தாலும் நாம் பெற்றுக் கொள்வோம்! மாறாக, அவரிடம் இருந்து எதையும் கட்டாயப்படுத்தி நான் பெற்றுக் கொள்ளமாட்டேன்.” என்றும், மேலும், முஆத் அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யமனுக்கு அனுப்பும் போதே பொருளீட்டுவதற்கும் சம்பாத்யம் செய்வதற்கும் அனுமதி அளித்திருந்தார்கள்” என்று கூறி மறுத்து விட்டார்கள். அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மறுத்ததும், முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நேரிடையாகச் சந்தித்து மதீனாவின் நிலையை எடுத்துக் கூறி தமது அபிப்பிராயத்தைக் கூறினார்கள். முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மறுத்து விடுகின்றார்கள். முஆத் ரளியல்லாஹு அன்ஹு மறுத்ததும் அங்கிருந்து விடைபெற்று வீட்டிற்கு வந்து விடுகின்றார்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அபிப்பிராயத்தை நிராகரித்த முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நீண்ட நேரம் யோசித்தார்கள். சட்டென அவருக்கு பழைய கனவொன்று மின்னல் கீற்று போல் பளிச்சிட்டு மறைந்தது. மீண்டும் அதிகம் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அபிப்பிராயம் குறித்து சிந்தித்தார்கள் முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். ஒருவாராக உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டை நோக்கி நடந்தார்கள். அந்த நடையில் அவர்கள் எடுத்த முடிவின் வேகம் தென்பட்டது. வீட்டின் கதவை தட்டி உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை வெளியே அழைத்த முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “உமர் அவர்களே! நான் உங்களுடைய ஆலோசனையையும், அபிப்பிராயத்தையும் ஏற்கின்றேன்” என்னுடைய இந்த மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்று என்னிடம் நீங்கள் அவசியம் கேட்கத்தான் வேண்டும்?” என்றார் முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். உம்முடைய மன மாற்றத்திற்கான காரணம் என்ன? என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வினவியதற்கு. “ஒரு முறை நான் கனவொன்று கண்டேன். அதில் ஆழமான நீர்ச்சுழலில் நான் சிக்கிக்கொண்டேன். இன்னும் சிறிது நேரத்தில் மூழ்கப்போகிறேன் எனும் அச்சம் மனதை ஆட்கொண்ட போது, நீங்கள் தான் வந்து கரம் கொடுத்து என் கரம் பிடித்து காப்பாற்றினீர்கள்” என்று முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். பின்னர், உமர் அவர்களையும் அழைத்துக் கொண்டு அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று தமது பொருளாதாரம் முழுவதையும் கொடுத்து விட்டு, அமீருல் முஃமினீன் அவர்களே! இதோ இங்கிருப்பவைகள் மட்டும் தான் நான் சம்பாதித்தது! அதை நான் அல்லாஹ்விற்காக தந்துவிட்டேன்” என்று கூறி சென்று விட்டார்கள். (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், பக்கம்:139, ஸியரு அஃலா மின் நுபலா, பாகம்:1) மேற்கூறிய இரண்டு நபித்தோழர்களின் அரசியல் வாழ்வும் அப்பழுக்கற்ற தூய்மையானதாகவும், மக்களின் விவகாரத்திலும் அரசின் விஷயத்திலும் அவர்கள் கொண்டிருந்த பேணுதல் சுகபோகங்களை, சலுகைகளை அனுபவிக்காதிருத்தல் போன்றவையை வெளிக்காட்டுபவையாக இருப்பதை உணரமுடிகின்றது. 1. ஊழலை ஒழிக்க பாடுபடுங்கள்! ஊழல் இல்லாத அரசமைப்போம் இது தமிழக தேர்தல் களத்தில் நின்ற அத்துனை அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் முதல் அம்சமாக இடம் பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியாகும். ஆட்சியில் அமரப் போகும் ஆட்சியாளர்கள் இந்த வாக்குறுதியை நிறை வேற்றிட முன்வரவேண்டும். ஏனெனில், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் பெரிய பிரச்னையாகவும் தடங்கலாகவும் இருப்பதற்கு ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் செய்யும் ஊழலும் ஒரு காரணமாகும். உலகளவில் ஊழல் ஒரு பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகின்றது. அது நமது இந்திய தேசத்தையும், தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கின்ற காரணிகளில் ஊழலுக்கு மிக முக்கியப் பங்கு இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.. இந்தியாவில் டிரான்சிபரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) நடத்திய 2005 -ஆம் ஆண்டின் ஆய்வின் படி 62 சதவிகிதத்திற்க்கும் மேற்பட்டவர்கள் இலஞ்சம் கொடுத்தோ, அல்லது செல்வாக்கை பயன்படுத்தியோ அரசு அலுவலகங்களில் வெற்றிகரமாக வேலைகளை முடித்துக் கொள்கின்றனர்” என்று தெரியவந்துள்ளது. மேலும், 40% இந்தியர்கள் இலஞ்சம் கொடுப்பது அல்லது ஒரு தொடர்பை பயன்படுத்தி அரசு அலுவலகத்தில் வேலையை செய்து முடிப்பதில் அனுபவம் பெற்றுள்ளனர், எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 ல் இந்தியா டிரான்சிபரன்சி இன்டர்நேஷனலின் Corruption Perceptions Index -இல் 178 நாடுகளுள் 85 வது இடத்தில் இந்தியா இருக்கிறது. ஒரு அரசு ஊழியர் தன் கடமையை செய்யவோ அல்லது செய்யாமல் இருக்கவோ, ஒரு குறிப்பிட்ட பணியில் சாதகமாக செய்யவோ அல்லது பாதகமாக செய்யவோ சட்டப்படியாக ஊதியம் அல்லாத பணத்தையோ அல்லது பொருளையோ பெறுதல் அல்லது பெற ஒப்புக்கொள்ளுதல் ஆகியவை ஊழல் எனும் சுரண்டல் ஆகும். ஒரு தனிநபர் இலஞ்சம் கேட்பதற்கு உடந்தையாக இருக்கும் அரசு ஊழியரும் ஊழல் செய்கிறார். அரசு ஊழியர் ஒருவர், தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தல் ஊழல் ஆகும். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை தண்டிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. எனவே, ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுகிறவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும். இந்திய தண்டனைச் சட்டம் ஊழல் தடுப்புச் சட்டம், 1988 பிரிவு 7, 8, 9 மற்றும் 10ன் கீழ் ஊழல் செய்தவரின் குற்றம் நிருபிக்கப்பட்டால், அபராதத்துடன் அல்லது அபராதம் இன்றியோ குறைந்த பட்சம் ஆறு மாதங்களும், அதிக பட்சம் ஐந்து ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்படலாம். ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 13ன் கீழ் ஊதியத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றத்திற்கு குறைந்த பட்சம் ஒரு ஆண்டும், அதிக பட்சம் பத்து ஆண்டுகளும் சிறை தண்டனை உண்டு. மேலும் ஊழலின் மூலம் சேர்த்த அசையும் சொத்துகளையும், அசையாச்சொத்துகளையும் கைப்பற்றவும், முடக்கவும் அரசுக்கு அதிகாரம் உண்டு. (நூல்: இந்தியத் தண்டனைச் சட்டம்) இந்திய தேசத்தின் ஊழல் குறித்த சில புள்ளி விவரங்கள்.. 1. டிசம்பர் 2008 இல், 523 இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களில் 120 நபர்களுக்கு மேல் குற்றவியல் குற்றச்சாட்டு இருந்தது. 2. 2010 இல் இருந்து நடந்த மிக பெரிய ஊழல்களுக்கும், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள் போன்ற மிக உயர் அரசு நிலைகளுக்கும் தொடர்புகள் இருந்தது. 3. வரி மற்றும் இலஞ்சம் மாநில எல்லைகளுக்கு இடையே வழக்கமானது; லாரி உரிமையாளர்கள் ஆண்டுதோறும் 22,200 கோடி (4.5 பில்லியன்) லஞ்சம் செலுத்துகிறார்கள் என்று திரான்சிபரன்சி இன்டர்நேஷனல் மதிப்பீட்டுள்ளது. அரசாங்க கட்டுப்பாட்டு அதிகாரிகள் 43% மற்றும் காவல் துறையினர் 45% லஞ்சம் பணத்தை பங்கு போட்டுக்கொள்கின்றனர். சோதனை சாவடிகள் மற்றும் நுழைவு இடங்களில் ஒரு வாகனம் ஒரு நாளைக்கு 11 மணி நேரம் வரை நிறுத்திவைக்கப்படுகிறது. அத்தகைய நிறுத்தங்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் அரசு அதிகாரிகளால் பணம் பிடுங்கப்படுகிறது. 4. அரசு மருத்துவமனைகளிலும் ஊழல் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, மருத்துவரை பார்ப்பதற்கு, ஆலோசனை பெறுவதற்கு இலஞ்சம் வாங்குவது, போலி மருந்துகள் விற்பது ஆகியவை அடங்கும். தேசிய ஊரக சுகாதார திட்டத்தில் மிகப் பெரிய அளவில் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இத்திட்டத்தில் நடந்த ஊழல் மற்றும் மோசடியால் சுமார் 10,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. 5. 2004 மற்றும் 2005 இடையே நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்திய ஓட்டுனர் உரிமம் பெறும் நடைமுறை ஒரு பயங்கரமாக உருக்குலைந்த அதிகாரத்துவ செயல் எனவும் ஒருவருக்கு குறைந்த ஓட்டும் திறன் இருந்தாலும் உரிமம் தரப்படுகிறது என்றும் கண்டறியப்பட்டது. இந்த ஊழலால் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு தகுதி இல்லாத பலர் சட்டவிரோதமாக உரிமம் பெறுகின்றனர். கணக்கெடுக்கப்பட்ட நபர்களில், தோராயமாக 60% மக்கள் உரிம தேர்வை எடுக்கவில்லை. அவ்வாறு தேர்வு எடுக்காமல் உரிமம் வைத்திருப்பவர்களில் 54% சுயாதீனமான ஓட்டுனர் சோதனையில் தோல்வியடைந்தார்கள். 6. பேராசிரியர் விவேக் தேப்ராய் மற்றும் லவீஷ் பண்டாரி ஆகியோர் எழுதிய புத்தகத்தில் இந்தியாவின் பொது அதிகாரிகள், 92,122 கோடி ரூபாய், அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.26 சதவீதத்தை பதுக்கி வைத்திருக்கலாம் என்று கூறுகின்றார். எனவே,அரசு இயந்திரமும், அதிகாரிகளும், தங்கள் காரியம் சுலபமாக முடிய வேண்டும் எனக் கருதும் சில சுயநலவாதிகளும், சட்ட விரோத தொழில் மற்றும் நடவடிக்கை கொண்டோரும் செய்கிற ஊழல் தான் வெகுஜன மக்களையும், சமூகத்தையும் அழிவின் பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர். தற்போது, ஆட்சி அதிகாரத்தில் அமரப்போகும் அரசு ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் கடுமை காட்டுவதோடு, ஊழலில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளான எம். எல். ஏ க்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரின் மீது உடனடியாக பதவி நீக்கம் செய்து வேறெவரும் ஊழலில் ஈடுபடாதவாறு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். இத்தனைச் சட்டங்கள் இருந்தென்ன பயன்? சட்டத்தில் இருக்கிற ஓட்டைகளைப் பயன்படுத்தி ஊழல் செய்கிறவர்கள் தப்பி விடுகின்றார்கள். அப்படி என்றால் என்ன தான் தீர்வு? எங்கே இருக்கிறது தீர்வு? என இந்த தேசத்தின் நடுநிலையாளர்கள் கேட்பது என் காதுகளில் வந்து விழுகிறது. இதோ இஸ்லாம் எனும் தூய மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி செய்த ஆட்சியாளர்களைப் போன்று அப்பழுக்கற்ற தூய்மையான ஓர் அரசியலைச் செய்ய ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும். தாம் வகிக்கும் பதவி, அதிகாரம் என்பது மக்களுக்கு சேவை செய்வதற்கு தான் என்பதை உணர வேண்டும். அதிலும் குறிப்பாக, மக்கள் பிரதிநிதிகளாக தேர்வாகி இருக்கின்ற ஒவ்வொரு சட்டமன்ற, உறுப்பினர்கள் மற்றும் மக்கள் நலப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் என தங்களை அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரிடமும் கட்டாயம் இருந்தாக வேண்டிய உயரிய தகுதியாக ‘சேவை மனப்பான்மையை” இஸ்லாம் வலியுறுத்திச் சொல்கிறது. இதற்கு இஸ்லாமிய ஆட்சியாளர்களில் மிகச் சிறந்த ஆளுமைகளோடு ஆட்சி புரிந்த இரண்டு மேன்மக்களின் சிறந்ததோர் சான்று இதோ.... فقد روى البيهقي في سننه عن عبد الرحمن بن القاسم حدثنا مالك قال: ஜனாதிபதி உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவிக்கு, அரசவையில் பணி புரிந்த ஒருவர் இரண்டு தலையணையை அன்பளிப்பாக வழங்குகின்றார். ஜனாதிபதி உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அரசவையில் அரசர் சாய்ந்து அமர்கின்ற மாதிரியான இரு தலையணையை தம் வீட்டினுள் பார்க்கிறார்கள். உடனே, தன் மனைவியிடம், இந்த இரண்டும் எங்கிருந்து வந்தது? அல்லது நீ விலைக்கு வாங்கினாயா? உண்மையைச் சொல், மறைக்காதே என ஜனாதிபதியாக தன் மனைவியிடம் சற்று வேகத்தோடு கேட்கிறார்கள். இதை இன்ன நபர் நமக்கு அன்பளிப்பாக அனுப்பியுள்ளார் என தன் மனைவி கூறிய பதிலைக் கேட்டு, “அல்லாஹ் அவருடன் போரிடுவானாக...” எனக் கோபமாகக் கூறினார்கள். பின்னர் அந்த இரண்டு தலையணையையும் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் மனைவியிடமிருந்து பிடுங்கிச் செல்கிற போது, எதுவும் பேச இயலாது விக்கித்து நின்ற உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி தன் கணவர் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பின் சென்று, அதன் மேல் இருக்கின்ற கம்பளி உறை நம்முடையது என்றதுமே அதை மட்டும் எடுத்துக் கொடுத்து விடுகிறார்கள். روى البخاري بسنده عن عمر بن عبد العزيز ஜனாதிபதி உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு நாள் ஆப்பிள் பழம் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் ஆப்பிள் வாங்குவதற்கான பணம் அவர் கைவசம் இல்லை. அப்போது, அவர்களின் தோழர்களுடன் சபையில் இருந்தபோது ஒரு கூடை ஆப்பிள் அன்பளிப்பு செய்யப்படுகிறது. அவற்றில் ஒரு ஆப்பிளை எடுத்து முகர்ந்து பார்த்து விட்டு, திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள். அருகிலிருந்தவர்கள் “இதைச் சாப்பிட எவ்வளவு ஆசையுடன் இருந்தீர்கள்? ஏன் சாப்பிடவில்லையா..?” இது போன்று, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், ஃகலீஃபாக்களான அபூபக்ர், உமர் ரளியல்லாஹு அன்ஹுமா ) ஆகியோருக்கு வழங்கப்பட்டு, அவர்களும் வாங்கி இருக்கின்றார்களே!? எனக் கேட்டார்கள். அதற்கு, உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், ஹஜ்ரத் அபூபக்கர் ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஹஜ்ரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் இது போன்ற பொருட்கள் தரப்பட்டது. அது அவர்களுக்கு அன்பளிப்பாகும். ஆனால் என்னைப் போன்ற மக்கள் பிரதிநிதியான அரசு ஊழியனுக்கு இன்று வழங்கப்படுகின்ற எல்லா அன்பளிப்புக்களும் யாரோ ஒருவரால் தன் சுய தேவையை முன் வைத்து தரப்படுகின்ற இலஞ்சமே ஆகும். எனவே எனக்கு ஆப்பிள் வேண்டாம் என திருப்பி அனுப்பி விடுங்கள் என உத்தரவிடுகிறார்கள். (நூல்: தப்ஸிரத்துல் ஹுக்காம் லிஇப்னி ஃபர்ஹூன் ரஹ்மதுல்லாஹி அலைஹி, 1/30) படுத்துறங்க உதவும் சிறிய தலையணையிலும், ஒரு ஆப்பிள் பழத்தை உண்பதிலும் என்ன நேர்ந்து விடப் போகிறது என் நாம் நினைக்கலாம். ஆனால், அற்பமான பொருளுக்குக்கூட ஒரு ஆட்சியாளன், மக்கள் தலைவன் விலை போய் விடக் கூடாது என்பதே இதன் ஆழமான தத்துவமாகும். மக்கள் நலப் பணியான அரசியல் என்பது தூய்மையோடும், சேவை மனப்பான்மையோடும் இருக்க வேண்டும், நேர்மையோடும், வாய்மையோடும் இருக்க வேண்டிய அரசியலை இலஞ்சம், ஊழல் எனும் கறைகளால் களங்கம் செய்து விடக் கூடாது என்பதில் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மிகக் கவனமாக இருந்துள்ளார்கள் என்பதை இதிலிருந்து உணர முடிகின்றது. 2. ஏழை எளியோர் இல்லாத ஓர் தமிழகம் உருவாகப் பாடுபடுங்கள்!! தேசிய குற்றப்பதிவு மையம் (NCRB) 2013 ஜூன் மாத இறுதியில் வெளியிட்ட புள்ளி விவரத்தின் படி 1995 முதல் 2013 வரையிலான 18 ஆண்டுகளில் 2,84,694 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக கடைசி 9 ஆண்டுகளில் ஒவ்வொரு 32 நிமிடங்களுக்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் தமிழகம் விவசாயம் சார்ந்த, செழித்தோங்கிய ஓர் மாநிலம் ஆகும். அதிக விவசாயிகளைக் கொண்ட மாநிலமும் ஆகும். இந்த தற்கொலைப் பட்டியலில் தமிழக விவசாயிகளும் பெருமளவு இடம் பெற்றிருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனவே, மிகச் சிறந்த திட்டங்களை தீட்டி, விவாசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க முன்வரவேண்டும். திறமையும், ஆற்றலும் கொண்ட ஏழை – எளிய மாணவர்களைக் கண்டறிந்து தொழில் முனைவோர்களாக மாற்றும் பொருட்டு சுய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தொழில் தொடங்கிட கடன் வழங்கி ஏழை எளியோரை வறுமையிலிருந்து முழுமையாக வெளியேற்றுவதற்குரிய பல்நோக்கு திட்டங்களை உருவாக்க வேண்டும். முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், யமனுக்கு ஆளுநராக நியமித்தார்கள். நபி {ஸல்} அவர்களின் கட்டளைப்படி முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், செல்வந்தர்களிடமிருந்து முறையாக வசூலித்து, அத்தொகையை அங்கு வாழ்ந்த ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும் முறையாக பகிர்ந்தளித்தார்கள். இதன் காரணமாக, ஒவ்வோர் ஆண்டும் கணிசமாக ஏழைகளின் எண்ணிக்கை குறைந்து ஜகாத் கொடுக்கும் செல்வந்தர்களின் எண்ணிக்கை கூடியது. உமர் ரளியல்லாஹு அன்ஹு ஆட்சியின் போது, முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் யமனில் இருந்து மூன்றில் ஒரு பங்கை மதீனாவிற்கு அனுப்பி வைத்தார்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், காரணம் கேட்டதற்கு முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏழைகள் கிடைக்க வில்லை என்று பதில் கூறினார்கள். அடுத்த ஆண்டு யமனில் இருந்து ஜகாத்தாக வசூலித்ததில் பாதி தொகையையும், அதற்கு அடுத்த ஆண்டு முழுத்தொகையையும் அனுப்பி வைத்தார்கள் முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் காரணம் கேட்டதற்கு, யமன் தேசத்தில் ஒரு ஏழை கூட இல்லை” என்று பதில் கூறினார்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த பொருளாதாரத்தைக் கொண்டு இஸ்லாம் இயம்பும் இன்ன பிற வழிகளில் அதைச் செலவிட்டார்கள். (நூல்: அல் அம்வால்) فروى أبو عبيد بإسناده عن سهيل بن أبي صالح، عن رجل من الأنصار، قال ஜனாதிபதி உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஈராக்கின் ஆளுநர் அப்துல் ஹமீத் இப்னு அப்துர்ரஹ்மான் அவர்களுக்குப் பின் வருமாறு கடிதம் எழுதினார்கள். “மக்களுக்குக் கொடுக்க வேண்டிய மாதாந்திர உதவித் தொகையை அரசுக் கருவூலத்திலிருந்து கொடுத்து விடுங்கள்” என்று. அதற்கு, அப்துர்ரஹ்மான், “நான் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விட்டேன். ஆயினும், அரசுக் கருவூலத்தில் ஏராளமான நிதி மீதமிருக்கிறது” என்று பதில் எழுதினார்கள். அதற்கு, உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் “யாராவது கடனாளியாக கஷ்டப்பட்ட்டால் அவருக்கு அத்தொகையை அரசுக் கருவூலத்திலிருந்து கொடுத்து விடுங்கள்” என்று இன்னொரு கடிதத்தில் பதில் எழுதினார்கள். அதற்கு, அப்துர்ரஹ்மான் அவர்கள் “அப்படிச் செலுத்திய பின்னரும் அரசுக் கருவூலத்தில் இருப்புத் தொகை மீதமிருக்கிறது” என்று பதில் எழுதினார்கள். மீண்டும், உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் “திருமண மஹர்த் தொகையை கொடுப்பதற்கு சிரமப்படுகிற ஏழை இளைஞர்கள் எவரேனும் இருந்தால் அவர்களுக்கு கொடுத்து திருமணம் செய்ய உதவுங்கள்” என்று இன்னொரு கடிதம் எழுதினார்கள். அதற்கு, அப்துர்ரஹ்மான் அவர்கள் “அப்படிச் செலுத்திய பின்னரும் அரசுக் கருவூலத்தில் இருப்புத் தொகை மீதமிருக்கிறது” என்று பதில் எழுதினார்கள். இறுதியாக, உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் “ஜிஸ்யா வரி செலுத்தக் கடமைப் பட்ட சகோதர சமய மதத்தவர்களில் எவராவது விவசாயத் தொழில் செய்ய முற்பட்டால் அவர்களுக்குத் தேவையான தொகையைக் கருவூல நிதியிலிருந்து வழங்குங்கள்” என்று பரிந்துரைத்தார்கள். (நூல்: அல் அம்வால்) முறைப்படுத்தப் பட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு, முறையான பொருளாதார சீர்திருத்தங்கள் பேணப்பட்டு, முறையாக செயல்படுத்தப் பட்டால் நிச்சயமாக ஏழை, எளியோர் இல்லாத ஓர் சமூகத்தை உருவாக்க முடியும் என்பதை மேற்கூறிய இஸ்லாமிய ஆட்சியாளர்களின் மாட்சிமை நிறைந்த ஆளுமைப் பண்புகள் உணர்த்துகின்றன. நம்மைச் சுற்றி நடக்கின்ற எல்லாமும் நன்மை அடிப்படையில் தான் நடக்கின்றன என்கிற நல்ல சிந்தனையை நம் உள்ளத்திற்கு உணர்த்துவோம்! அல்லாஹ் கொடுங்கோலர்கள், அக்கிரமக்காரர்கள் ஆகியோரின் ஆட்சியிலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும், தீங்கிலிருந்தும் ஒட்டு மொத்த மனித சமூகத்தையும் காப்பாற்றுவானாக! ஆமீன்! ஆமீன்! வஸ்ஸலாம்!! நல்லாட்சி மலரட்டும்!! நாடு செழிக்கட்டும்!!! - Basheer Ahmed usmani source: http://vellimedaiplus.blogspot.in/
|