Home இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் அல்லாஹ் பாவியான மனிதனின் மூலமாகவும் அவனது தூய மார்க்கத்திற்கு வலுவூட்டுகின்றான் (2)
அல்லாஹ் பாவியான மனிதனின் மூலமாகவும் அவனது தூய மார்க்கத்திற்கு வலுவூட்டுகின்றான் (2) PDF Print E-mail
Friday, 22 April 2016 07:56
Share

அல்லாஹ் பாவியான மனிதனின் மூலமாகவும் அவனது தூய மார்க்கத்திற்கு வலுவூட்டுகின்றான் (2)

    S.M. அமீர், நிந்தவூர், இலங்கை    

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! இரு (யூத) மூதாட்டிகள் என்னிடம் வந்து மண்ணறை வாழ்வு குறித்து இப்படி இப்படியெல்லாம் சொன்னார்கள்; இவை உண்மைதானா? என்று நபிகளாரிடம் கேட்டேன்.

அவ்விருவரும் உண்மையையே சொன்னார்கள். மண்ணறையிலிருக்கும் பாவிகள் கடுமையாக வேதனை செய்யப்படுகிறார்கள். அவ்வேதனையை தாங்க முடியாது. அவதியுறும் அவர்களின் அலறல்களை எல்லா மிருகங்களும் செவியேற்கின்றன என்று சொன்னார்கள்.

அதற்குப் பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லாத் தொழுகைகளிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை என்று அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி : 6366, 1372, 1049, 1050, 1056)

நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு மதீனா வருவார்கள் என்பதை தங்களது நபிமார்களிடமிருந்து அறிந்து வைத்திருந்த யூதர்கள் அவ்வாறு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வரும்போது அவர்களை முதலில் ஏற்பவர் களாக ஆகவேண்டும் என்பதற்காக எகிப்து, பலஸ்தீன் போன்ற பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து மதீனாவிற்கு வந்து குடியேறினார்கள். மதீனாவாசி களுக்கும் குடியேறிய யூதர்களுக்கும் சண்டை மூழும்போதெல்லாம் கடைசி காலத்தில் ஒரு நபி வருவார் அவருடன் சேர்ந்து நாங்கள் உங்களைக் கடுமையாகக் கொலை செய்வோம் என்று யூதர்கள் மதீனாவாசிகளைப் பார்த்துக் கூறுவார்கள்.

இதன் காரணமாகவே மதீனாவில் “அகபா’ என்ற இடத்தில் தங்கியிருந்த மதீனாவாசிகள் ஆறு பேர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவு நேரம் சென்று தன்னை நபி என்று அறிமுகப்படுத்தியபோது அவர்களை நபி என்று தெளிவாக அறிந்து கொள்வது மதீனா வாசிகளுக்கு மிகவும் எளிதாக இருந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த நபியை வைத்தே யூதர்கள் உங்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். எனவே அவர்களுக்கு முன்னர் நாம் இவரை முதலில் ஏற்போம் என்று பேசிக் கொண்டார்கள். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம், (ரஹீக் 178, 2:146, 7:157, 48:29, 61:6)

கிறிஸ்தவப் பாதிரியாரைக் கொண்டும் :
ஹிஜ்ரி ஒன்பதாவது ஆண்டு நஜ்ரான் தேசத்திலி ருந்து அறுபது பேர்கள் கொண்ட கிறிஸ்தவர்கள் குழுவொன்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்திக்க மதீனாவிற்கு வந்து அதில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் முக்கிய பிரமுகர்கள் பதினான்கு பேரும் அடங்கும். வந்தவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பலவிதமான வாதங்களை வைத்தனர். அவர்களது வாதத்திற்குப் பதிலாக ஆலு இம்றான் அத்தியாயம் அருளப்பட்டு அதை அவர்கள் ஏற்க மறுத்தால் அவர்களுடன் சாப அழைப்புப் பிரமாணம் (முபாஹலா) செய்யுமாறு அல்லாஹ் அறிவித் தான். அதன் பிரகாரம் முபாஹலா செய்வதற்கு முன்வருமாறு அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழைத்தார்கள். சற்று அவகாசம் கேட்டு அவர்களில் நல்ல ஆலோசனைகளை வழங்கக் கூடிய “ஆகிப்’ என்பவரைத் தனிமையில் சந்தித்து “முபாஹலா’ செய்வது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டனர்.

அதற்கு அவர் சொன்ன பதில்,

கிறிஸ்தவப் பெருமக்களே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முஹம்மத் ஓர் இறை தூதர் என்பதை நீங்கள் அறிந்தே உள்ளீர்கள். உங்களின் தோழர் ஈசா தொடர்பாக அவர் தெளிவான தகவலை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அது மட்டுமல்ல, ஒரு சமூகம் தம்முடைய நபியுடன் சாப அழைப்புப் பிரமாணம் செய்தால், அதிலுள்ள பெரியவர்கள் அதன் பிறகு தொடர்ந்து வாழ்ந்ததாகவோ, சிறிய வர்கள் வளர்ந்ததாகவோ வரலாறில்லை. அந்த நிமிடமே அனைவரும் அழிந்து போவார்கள் என்பதை நீங்களும் அறிந்தேயுள்ளீர்கள்.

எனவே நீங்கள் முஹம்மதுடன் “முபாஹலா’ செய்தால் நீங்களே உங்களை வேரோடு சாய்த்துக் கொள்வதாக அர்த்தம். எனவே பேசாமல் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லை ஏற்க முடியாது என்று கருதினால் அந்த மனிதரிடம் ஒரு சமாதான உடன்படிக்கை செய்துவிட்டு உங்கள் ஊர்களுக்குத் திரும்புங்கள் என்று கூறினார். (சுருக்கம்) சீரத் இப்னு ஹிஷாம் பாகம் 2, பக்கம் 162-170, 3:61, தப்ஸீர் இப்னு கஸீர் : 2, பக்கம் 109-118 புகாரி : 3745, 4380, 4381,7254,4958.

ஹிஜ்ரி ஐந்து துல்கஅதா மாதத்தில் பனூ குரைளாவினரின் கோட்டைகளைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்ட மூவாயிரம் பேர் கொண்ட இஸ்லாமியப் படையினரின் முற்றுகை கடுமையாக இருந்ததைக் கண்ட குரைளாவினரின் தலைவர் “கஅப் இப்னு அஸது’ தனது மக்களிடம் மூன்று கருத்துக் களை முன்வைத்தார்.

அவற்றில் முதலாவது அனைவரும் முஸ்லிமாகி முஹம்மதுடைய மார்க்கத்தில் சேர்வது; அப்படிச் சேர்ந்தால் நாம் நமது உயிர், பொருள், பிள்ளைகள், பெண்கள் அனைவரையும் பாதுகாத்துக் கொள்ளலாம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக முஹம்மது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட தூதர் என்பதும் அவரைப் பற்றித் தவ்றாத்தில் கூறப்பட்டிருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியும் என்று கூறினார். இதன் காரணமாக யூதர்கள் தங்களது கோட்டைகளிலி ருந்து வெளியேறி நபியவர்களுக்கு முன் சரணடைந்தனர். (இப்னு ஹிஷாம், ரஹீக் 383-389, ஜாதுல் மஆது, புஹாரி, முஸ்லிம், திர்மிதி) ஆனாலும் அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை.

ஹிஜ்ரி நான்காம் ஆண்டளவில் முஸ்லிம்களின் வளர்ச்சியைப் பார்த்து மதீனாவை அண்டியுள்ள யூதர்கள் உள்ளுக்குள் எரிந்தனர். முஸ்லிம்களை நேரடியாக எதிர்க்க ஆற்றலும் துணிவும் இல்லாததால் மக்காவிலுள்ள இணைவைப்பாளர்களுடனும் மதீனாவிலுள்ள நயவஞ்சகர்களுடனும், தங்களின் தொடர்பை வலுப்படுத்திக் கொண்டு முஸ்லிம்க ளுக்கு எதிராக மறைவாக சூழ்ச்சி செய்வதிலும், சதித்திட்டம் தீட்டுவதிலும் ஈடுபட்டு வந்தனர். தங்களின் பகைமை மற்றும் குரோதத்தையும் அவ்வப்போது வெளிப்படுத்தினர்.

பனூ நழீர் இனத்தவரான இந்த யூதர்கள் குறித்து பொறுமையைக் கடைப்பிடித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் தோழர்கள் சிலரை அழைத்துக் கொண்டு இவர்களிடம் வந்தார்கள். அம்ர் இப்னு உமய்யா ழம்ரி என்ற தனது தோழரால் தவறுதலாகக் கொல்லப்பட்ட கிலாப் குலத்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும். அதற்காக தங்களால் ஆன உதவிகளைச் செய்யும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கோரினார்கள். யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் மத்தியில் இதற்கு முன்னர் செய்யப்பட்ட உடன்படிக்கையின்படி நஷ்டஈடு கொடுக்கும் விஇஷயத்தில் முஸ்லிம்களுக்கு யூதர்கள் உதவி செய்ய வேண்டும் என்பதும் ஒன்று.

ஆனால் காலங்காலமாக சூழ்ச்சிக்குப் பேர் போன வஞ்சக யூதர்கள் நபியவர்களிடம் இங்கு அமருங்கள். நீங்கள் வந்த தேவையை நாங்கள் நிறைவேற்றித் தருகின்றோம் என்றனர். இவர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள் என்று எதிர் பார்த்த நபி அவர்கள் அவர்களின் வீட்டுச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு, அலி ரளியல்லாஹு அன்ஹு மற்றும் சகல தோழர்களும் இருந்தனர். அவ்வேளை யூதர்கள் தங்களுக்குள் தனிமையில் சிந்தித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் களை வஞ்சமாகக் கொன்று விட சதித்திட்டம் தீட்டினர். திருகைக்கல்லை எடுத்துக் கொண்டு வீட்டுக் கூரைக்கு மேல் ஏறி முஹம்மதின் தலை மீது போட்டு தலையை நொறுக்கிக் கொன்றுவிடலாம் என அவர்களில் ஒருவன் ஆலோசனை கூறினான். அதை அனைவரும் ஆமோதித்தனர். இதைச் செய்ய வழிகேடன் அம்ர் இப்னு ஜஹாஷ் என்ற விஇமி ஆயத்தமானான்.

ஆனால் யூதர்களில் “ஸலாம் இப்னு மிஷ்கம்’ என் பவர் இவ்வாறு செய்ய வேண்டாம் என்று அவர்க ளைத் தடுத்தார். மேலும் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் தீட்டும் சதித்திட்டம் அவருக்கு அறிவிக்கப்பட்டு விடும். அது நமக்கும் அவருக்குமிடையில் உள்ள உடன்படிக்கையை முறிப்பதாகி விடும் என்று எச்சரித்தார். (ஸுனன் அபூதாவூத், ரஹீக் : 358,359.) ஆனாலும் அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை.

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது ஒரு மனிதர் கிறிஸ்தவராக இருந்தார். பிறகு அவர் இஸ்லாத் தைத் தழுவினார் (பரிசுத்த குர்ஆனின்) அல்பகறா மற்றும் ஆலு இம்றான் ஆகிய அத்தியாயங்களை ஓதினார். அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக (இறை வெளிப்பாடாகிய அல்குர்ஆனை) எழுதி வந்தார் (அவர் மீண்டும் மதம் மாறி) கிறிஸ்தவராகவே மாறிவிட்டார். அந்நிலையிலேயே மரணித்தும் விட்டார். (புகாரி : 3617)

துறவி “பஹீரா”வைக் கொண்டும் :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பன்னிரெண்டு வயதா கும்போது அபூதாலிப் வியாபாரத்திற்காக “ஷாம்’ தேசம் சென்றார். அப்போது சிறுவராக இருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் தன்னுடன் அழைத்துச் சென் றார். அவர்கள் ஷாம் நாட்டின் புஸ்ரா நகரை வந்தடைந்தபோது அங்கு இருந்த “பஹீரா’ என்ற பிரபலமான துறவி ஒருவர் சிறுவராக இருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கரத்தைப் பற்றிக் கொண்டு “இதோ உலகத்தாரின் தலைவர்’ இதோ உலகத்தாரின் இறைவனுடைய தூதர் இவரை அல்லாஹ் அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்புவான் என்று கூறி அவரது புஜத்துக்குக் கீழிருக்கும் ஆப்பிளைப் போன்ற இறுதித்தூதரின் முத்திரையையும் காண் பித்து இது சம்பந்தமாக தமது வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் எடுத்துச் சொல்லி அவர்களுக்கு விருந்தளித்து சிறப்பாக உபசரித்து விட்டு இச்சிறுவரை ஷாமுக்கு அழைத்துச் சென்றால் அங்குள்ள ரோமர்கள் மற்றும் யூதர்களால் இவருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே இவரை இங்கிருந்தே மக்காவிற்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்பிவிடுங் கள் என்று அபூதாலிப்பிடம் கூறினார்.

அதற்கிணங்க அபூதாலிப் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சில வாலிபர்களுடன் பாதுகாப்பாக மக்காவுக்கு அனுப்பி வைத்தார். (ஸுனனுத் திர்மிதி, தபரி, முஸன்னஃப் அபீஷைபா, இப்னு ஹீஷாம், பைககீ, ரஹீக்:79)

யூதர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கஅபா வின் மீது சத்தியமாக என்றும் அல்லாஹ் நாடினான். நீங்களும் நாடினீர்கள் (அல்லது) அல்லாஹ்வும் நீங்களும் நாடினால் என்றும் உங்களை நோக்கி, உங்கள் தோழர்கள் கூறுகிறார்கள். (இதன் காரணமாக) நீங் களும் இணை வைக்கிறீர்கள்? (தானே) என்று கூறி னார்கள். இதனைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சத்தி யம் செய்ய நாடினால் கஅபாவின் இறைவனின் மீது சத்தியமாக என்று கூறுங்கள். (மேலும்) அல்லாஹ் நாடினான் நீங்களும் நாடினீர்கள் என்று கூறுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தமது தோழர்களுக்கு) கட்டளையிட்டார்கள். (அறிவிப்பு : கதீலா (ரழி), நஸயீ, குதைலத் பின்ந் ஸைஃபி ரளியல்லாஹு அன்ஹு, நஸயீ, இப்னு மாஜா)

ஷைத்தானைக் கொண்டும் :

ஸக்காத் பொருட்களைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அதைத் திருடு வதற்காக வந்து இரண்டு நாட்களும் பிடிபட்ட ஷைத்தான் பொய்யான சாக்குப் போக்குகளைக் கூறித் தப்பிச் சென்ற போதிலும் மூன்றாவது நாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அறிவுறுத்தல் பிரகாரம் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டபோது தப்பிச் செல்வதற்காக வேறு வழியின்றி என்னை விட்டுவிடும். அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன் என்று கூறி நீர் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதும்; அவ்வாறு செய்தால் விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டே இருப்பார். ஷைத்தான் உம்மை நெருங்கமாட்டான் என்று கூறியபோது நல்லமல்களின்பால் ஆர்வமுள்ள அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவனை விடுவித்து விட்டு நடந்த சம்பவத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் விபரித்தபோது அவன் பெரும் பொய்யனாக (பாவியாக) இருப்பினும் அவன் உம்மிடம் உண்மை யைத்தான் சொல்லியிருக்கின்றான் என்று கூறி ஷைத்தான் சொன்ன விஇயத்தை அங்கீகரித்து அதை மார்க்கமாகவும் அறிவித்து விட்டார்கள். (சுருக்கம்) அறிவிப்பு : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி: 2311, 3275,5010.

உர்வாவைக் கொண்டும் :

ஹிஜ்ரி ஆறாம் ஆண்டளவில் நடைபெற்ற ஹுதைபியா சம்பவத்தின் போது குறைஒகளின் தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட “உர்வா இப்னு மஸ்வூத் ஸகஃபி’ என்பவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து பலவிதமான வாதப் பிரதிவாதங்கள் நடை பெற்று பேச்சுவார்த்தைகளுக்கு இடையில் நபி தோழர்களையும் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் செய்யும் கண்ணியத்தையும் நன்கு கவனித்து விட்டு பிரமிப்படைந்த “உர்வா’ அங்கிருந்து தமது நண்பர் களிடம் திரும்பிச் சென்று கூறினார். எனது சமுதாயத்தாரே! நான் பல அரசர்களிடம் தூதுக் குழுவில் ஒருவனாகச் சென்றுள்ளேன்.

உரோம் மன்னன் சீசரிடமும், பாரசீக மன்னன் கிஸ்ராவியிடமும், அபீ சீனிய மன்னன் நஜ்ஜாஒயிடமும் தூதுக்குழுவில் சென்றுள்ளேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! முஹம்மதின் தோழர்கள் முஹம்மதுக்கு அளிக் கின்ற கண்ணியத்தைப் போல் எந்த அரசருக்கும் அவரது தோழர்கள் கண்ணியம் அளிப்பதை நான் பார்த்ததே இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் சளியைத் துப்பினால் அதை அவரது தோழர்களில் ஒருவர் தமது கையில் ஏந்திக் கொள்கிறார்.

அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டால் அவரது கட்டளையை நிறைவேற்ற அவர்கள் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு முன் வருகிறார்கள். அவர் ஒளூ செய்தால் அவர் ஒளூ செய்து எஞ்சிய தண்ணீரைப் பெறுவதற்காக ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொள்கின்ற அளவிற்குச் சென்று விடுகிறார்கள். அவர் பேசினால் அவரிடம் தமது குரல்களைத் தாழ்த்திக் கொள்கிறார்கள். அவரைக் கண்ணியப்படுத்தும் விதத்தில் அவரைக் கூர்ந்து நேருக்கு நேர் பார்ப்பதில்லை. மேலும் அவர் உங்கள் முன்னால் நேரிய திட்டம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார். ஆகவே அதை “ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறினார். (சுருக்கம்) (அறிவிப்பு : மிஸ்வர் பின் மத்ரமா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி :2731, 2732, ரஹீக் : 410-426)

அறிமுகமற்ற ஆட்டிடையனைக் கொண்டும் :

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அருமைத் தோழர் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் மக்கா நகரிலிருந்து மதீனா நோக்கி ஹிஜ்ரத் செய்த ஆபத் தான பிரயாணத்தில் நண்பகல் நேரம் நிழலே இல் லாத சிரமமான பாதையில் வெப்பம் அதிகரித்து எவரும் நடமாட முடியாதபடி காலியாகி விட்ட சிரமமான நேரத்தில் தனது ஆடுகளுடன் அவ்வழியே வந்த ஓர் ஆட்டிடையனிடம் விபரம் கேட்டு வழிப்போக்கர்களுக்கு இடையர்கள் தங்கள் கால்நடைகளிலிருந்து பால் கறந்து கொடுப்பது பொதுவாக அன்று நடைமுறையில் இருந்த காரணத்தினாலும் அதற்கு கால்நடைகளின் உரிமையாளர்களும் பொது அனுமதி அளித்திருந்த காரணத்தினாலும் அந்த அடிப்படையிலேயே அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இடையனிடம் பால் கறந்து கேட்டு அதிலே தண்ணீரையும் கலந்து அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தாகம் தீர அருந்தக் கொடுத்தார்கள்.(சுருக்கம்) (அறிவிப்பு : அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு, பராஉ பின் ஆஸிப் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி : 2439, 3615).

சிரமமான அப்பிரயாணத்தின் மூன்றாவது நாள் குஜாயி கிளையைச் சேர்ந்த “உம்மு மஅபத்’ என்ற பெண்ணின் அனுமதி பெற்று அவரது மெலிந்த ஆட்டிலிருந்தும் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே பால் கறந்து மற்றவர்களுக்கும் தாகம் தீர அருந்தக் கொடுத்து தாமும் அருந்தினார்கள். (ஜாதுல் மஆது, முஸ்தத்ரகுல் ஹாகிம், ரஹீக் : 204-218)

அறியாமைக்கால “வரகா’ வைக் கொண்டும் :

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிரா குகையில் தனித்திருந்த வேளையில் முதன் முதலாக இறை அறிவிப்போடு வந்த ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கண்டு இதயம் படபடத்தவர்களாக கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்து என்னைப் போர்த்துங்கள். என்னைப் போர்த்துங்கள் என்றார்கள்.

நடுக்கத்துடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை போர்த்திய கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஹிராவில் நடந்த சம்பவங்களைக் கேட்ட றிந்து ஆறுதல் சொல்லி விட்டு தமது தந்தையின் உடன் பிறந்த சகோதரரான நவ்ஃபல் என்பவரின் மகனும் அப்துல் உஸ்ஸா என்பவரின் பேரனுமாவார்.

“வரகா’ அறியாமைக் காலத்திலேயே கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். அவர் ஹிப்ரு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இன்ஜீல் வேதத்தை ஹிப்ரு மொழியில் எழுதுகிறவராகவும் கண் பார்வையற்ற வயோதிபராகவும் இருந்தார். அப்போது வரகா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் என் சகோதரர் மகனே நீர் எதைக் கண்டீர்? எனக் கேட்டார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாம் பார்த்த செய்திகளை அவர்களிடம் சொன்னார்கள். அதைக் கேட்டதும் வரகா இவர்தாம் மூஸாவிடம் இறைவன் அனுப்பிய நாமூஸ்(என்றழைக்கப்படும் ஜிப்ரீல்) ஆவார் என்று கூறிவிட்டு உமது சமூகத்தார் உம்மை உமது நாட்டி லிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே! என்றும் அங்கலாய்த்துக் கொண்டார்.

அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கள் என்னை வெளியேற்றவும் செய்வார்களா? என்று கேட்டார்கள். ஆம் நீர் கொண்டுவந்திருப்பது போன்ற சத்தி யத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் மக்களால் பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. அவர்கள் உம்மை வெளியேற்றப்படும் அந்நாளை நான் அடைந்தால் உமக்குப் பலமான உதவி செய்வேன் என்று கூறினார். (சுருக்கம்) (அறிவிப்பு : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, புகாரி: 03, முஸ்லிம், ரஹீக்: 89-94)

நெருப்பு வணங்கியைக் கொண்டும் :

அநேகமாக எல்லா மதரஸாக்களிலுமுல்ள மிகப் பிரபல்யமான அரபு அகராதி “முன்ஜித்’ இதை எழுதியவர் “அபூ லுவைஸ் மஃலூஃப் அல் யகஈ எனும் (நெருப்பு வணங்கியான) மஜுஸி தானே!

ரோமாபுரி மன்னர் யஹர்குலிஸைக் கொண்டும் :

ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு நடைபெற்ற ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு பின்னர் அப்போது இஸ்லாத்தை ஏற்றிராத குறைஒகளின் ஒரு தலைவர் அபூசுஃப்யான் சிரியா நாட்டிற்கு வியாபாரத்திற்காகச் சென்றிருந்த போது பைத்துல் முகத்திஸ் ஆலயத்தில் முகாமிட்டிருந்த ரோமபுரி மன்னர் யஹர்குலிஸ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வருகை குறித்து செய்தி கேள்விப்பட்டு விபரம் அறிய வேண்டி அபூ ஸுஃப்யானை தமது சபைக்கு வரவழைத்து

1. உங்களில் அவரது குலம் எத்தகையது?

2. இவருக்கு முன்னர் உங்களில் யாரேனும் எப்போதாவது இந்த வாதத்தை செய்ததுண்டா?

3. இவரது முன்னோர்களில் யாராவது மன்னர்களாக இருந்திருக்கிறார்களா?

4. இவரைப் பின்பற்றுவோர் மக்களில் சிறப்பு வாய்ந்தவர்களா? அல்லது சாமானியர்களா?

5. அவரைப் பின்பற்றுவோர் அதிகரிக்கின்றார்களா? அல்லது குறைகிறார்களா?

6. அவரது மார்க்கத்தில் நுழைந்த பின் அதன் மீது அதிருப்தியுற்று யாரேனும் மதம் மாறி இருக்கிறார்களா?

7. அவர் இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?

8. அவர் வாக்கு மீறியது உண்டா?

9. அவருடன் நீங்கள் போர் புரிந்திருக்கிறீர்களா?

10. அவருடன் நீங்கள் நடத்திய போரின் முடிவு என்ன?

11. அவர் உங்களுக்கு என்னதான் போதிக்கிறார்?

போன்ற கேள்விகளைக் கேட்டு அதற்கான பதில்கள் சொல்லப்பட்ட உடன் மன்னர் யஹர்குலிஸ் சொன்னார்.

நீர் சொல்லியது அனைத்தும் உண்மையானால் ஒரு காலத்தில் எனது இரு பாதங்களுக்குக் கீழுள்ள இந்த இடத்தையும் அவர் ஆளுவார். இப்படிப்பட்ட ஒரு இறைத்தூதர் வெகு விரைவில் தோன்று வார் என்று நான் முன்பே அறிந்திருக்கிறேன். அவரைச் சென்றடையும் வழியை நான் அறிந்திருந்தால் மிகுந்த சிரமப்பட்டாவது அவரைச் சந்திப்பேன். இப்போது நான் அவர் அருகே இருந்தால் அவரது பாதங்களை நான் கழுவி விடுவேன் என்றார்.

இதன் பிறகு ஹிம்ஸ் என்ற நகரத்திற்கு பயண மாகிச் சென்று அந்நகரில் இருந்த தமது கோட்டை ஒன்றிற்கு வருமாறு ரோமாபுரியின் பிரமுகர்கள் அனைவரையும் அழைத்து வரும்படி ஆணையிட்டார்.

அவர்கள் அனைவரும் வந்து சேர்ந்ததும் அந்த கோட்டையின் வாயில்களை எல்லாம் பூட்டிவிடும்படி உத்தரவிட்டார். கோட்டையின் வாயில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பின்னர் மன்னர் யஹர்குலிஸ் அப்பிரமுகர்கள் முன் தோன்றி ரோமா புரியினரே! நீங்கள் வெற்றியும், நேர்வழியும் பெற வேண்டுமென்றும் உங்கள் ஆட்சி நிலைத்திருக்க வேண்டும் என்றும் நீங்கள் விரும்பினால் இந்த இறைத்தூதரை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார். (சுருக்கம்) இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி: 07, 51, 2681, 2804, 2941, 2978, 3174, 4553,7541

கிறிஸ்தவரைக் கொண்டும் :

உலகப் பிரசித்தி பெற்ற உலகில் சரித்திரம் படைத்த நூறு பேரில் அதில் முதலாவது அந்தஸ் தைக் கொடுத்து முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது நபித் துவத்தை உலகிற்கு மேன்மைப்படுத்தியது அமெரிக் காவைச் சேர்ந்த மைக்கல் யஹட்ச் ஹார்ட் என்னும் கிறிஸ்தவர் தானே! (The 100)

மேற்கண்ட சில அறிவிப்புகள் சிறந்த பாடமாக அமைவதுடன் அல்லாஹ் பெரும் பாவிகளைக் கொண்டும், காஃபிர்களைக் கொண்டும் கூட அவனது தூய மார்க்கத்தை மேலோங்கச் செய்வான் என்பதற்கு அவ்வறிவிப்புகள் மிகச் சிறந்த சான்றுகளாகும்.

source: http://annajaath.com/archives/7636#more-7636