Home இஸ்லாம் கட்டுரைகள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்போம்!
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்போம்! PDF Print E-mail
Sunday, 10 April 2016 06:46
Share

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்போம்!

     பஷீர் அஹ்மத் உஸ்மானி    

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது நாம் உண்மையான அன்பு கொள்வதாயின், அவர்களை நம் உயிரை விட மேலாக நேசிக்க வேண்டும்.

அதன் வெளிப்பாடாக வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களை முழுக்க முழுக்கப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் சொற்படி நடக்க வேண்டும்.

அவர்களின் முன்மாதிரிகளை அடியொற்றி வாழ வேண்டும். எதனை விட்டு தடுத்தார்​களோ அதனை அறவே விட்டுவிட வேண்டும்.

இன்பத்திலும், துன்பத்திலும், வறுமையிலும், செல்வத்திலும், வாழ்வின் எல்லா நிலைகளிலும் அண்ணலாரையே பின்பற்றி நடந்துகொள்ள வேண்டும்.

சுறுங்கக் கூறிவிடின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வை சுவாசிக்கக் கூடியவர்களாக நாம் மாறிப்போய் விட வேண்டும்.]

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்போம்!

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பதும், அவர்களின் மீதான நேசத்தை வெளிப்படுத்துவதும் சமீப காலமாக அதிகம் விமர்சிக்கப்பட்டு வருவதை சமூகத்தில் காணமுடிகிறது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதான நேசத்திற்கு எல்லை வகுக்கும் இழிநிலை கொண்ட கேடானவர்கள் வாழும் காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

நாம் அவர்களை நேசிப்பதற்கும், ஆசிப்பதற்கும் கோடான கோடி காரணங்கள் உண்டு. ஏனென்றால், அவர்கள் ”நம் உயிருக்கு உயிரானவர்கள்! இல்லை, இல்லை நம் உயிரினும் மேலானவர்கள்”!

அல்லாஹ் கூறுகின்றான்:

النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ

“திண்ணமாக, இறை நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிரை விட நபி தான் முன்னுரிமை பெற்றவராவார்” (அல்குர்ஆன்: 33:6)

இன்னுமோர் இறைவசனம் இவ்வாறு பிரகடனப்படுத்தும்...

قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا

وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ

وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ ()

”நபியே! இறை நம்பிக்கையாளர்களை அழைத்துச் சொல்லி விடுங்கள்! உங்கள் பெற்றோர், மக்கள், சகோதரர்கள், மனைவியர், மற்றும் உறவுகள், நீங்கள் நஷ்டப்படுவதை அஞ்சும் உங்கள் வர்த்தகம், நீங்கள் ஆசிக்கும் உங்களது இல்லங்கள் ஆகியவை அல்லாஹ்வையும் அவனது தூதரையும், நேசிப்பதை விட, அவனுடைய பாதையிலே போரிடுவதை விட உங்களுக்கு அதிக பிரியமுடையவைகளாக இருப்பின், அல்லாஹ், தன்னுடைய ஆனையைக் கொண்டு வரும் வரை நீங்கள் பொறுத்திருங்கள்! அல்லாஹ், பாவிகளுக்கு அவர்களது நோக்கத்தில் ஒரு போதும் வெற்றியை தரமாட்டான்”. (அல்குர்ஆன்: 9: 24)

அல்லாஹ்வின் இந்தப் பிரகடனம், மேற்காணும் எல்லோரையும் விட, அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் மீதும் அன்பும், நேசமும் கொண்டிருக்க வேண்டும் என்பதைக் கூறுவதோடு, அன்பும், நேசமும் குறைவாக கொண்டிருப்பவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கையாக அமைந்திருப்பதை காணமுடிகின்றது.

எனவே, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதான நேசமும், அன்பும் மிகவும் உயர்ந்ததாய் அமைந்திருக்க வேண்டும்.

இது விஷயத்தில் அண்ணலாரின் அருமைத் தோழர்கள் தான் இந்த உம்மத்திற்கு மிகச் சிறந்த முன்மாதிரிகள்.

அண்ணலாரின் மீது அன்பு, நேசம் வைப்பதன் எல்லையை நாம் அவர்களின் வாழ்விலிருந்து பெறுவோம்! வாருங்கள்!

நபித்தோழர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது  கொண்டிருந்த

எல்லையில்லா அன்பிற்கு வரலாற்றில் வாகாய் மிளிரும் சில பதிவுகள்:

ஹஜ்ரத் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது நபித்தோழர்களான உங்களுக்கு எந்த அளவு அன்பு இருந்தது?” என்று ஒருவர் கேட்டார்.

அதற்கு, அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாகச் சொல்கின்றேன். எங்களுடைய சொத்துக்கள், நாங்கள் பெற்றெடுத்த மக்கள், எங்களைப் பெற்றெடுத்த அன்பு அன்னையர்கள், ஆகியவர்களை விடவும், கடுமையான தாகத்தின் போது கிடைக்கும் குளிர்ந்த நீரை விடவும் நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசித்தோம்” என்று கூறினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் அனைவருமே அப்படித்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார்கள்.

ஒரு படி மேலே சொல்வதானால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விருப்பம் எதுவோ அவைகளையும் தங்களது விருப்பமாக ஆக்கிக் கொண்டார்கள். அவர்கள் எதை வெறுக்கின்றார்களோ அவைகளையும் தங்களின் வெறுப்புக்குரிய ஒன்றாக மாற்றிக் கொண்டார்கள்.

o    1. நபியே உங்களோடு இருக்கும் ஒரு கன நேரம் இந்த உலகம் கிடைப்பதை விடச் சிறந்தது எனக்கூறிய அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்த நபித்தோழர்களில் ஒருவராவார்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூத்தா யுத்தத்திற்கான படைப்பிரிவை அனுப்பும் போது, வழக்கத்திற்கு மாறாக தளபதிகளாக மூன்று நபித்தோழர்களின் பெயர்களை அறிவித்தார்கள்.

ஆரம்பமாக, ஜைத் இப்னு ஹாரிஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் படையை வழி நடத்துவார்! அவர் காயமுற்றால் ஜஅஃபர் இப்னு அபூதாலிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் படையை வழி நடத்துவார். அவரும் காயமுற்றால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் படையை வழி நடத்துவார். அவரும் காயமுற்றால் இஸ்லாமியப் படை வீரர்கள் அடுத்த தளபதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்!” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி படையை வழியனுப்பி வைத்தார்கள்.

படை புறப்பட்டுச் சென்ற நாள் வியாழன் மாலையாக இருந்தது. விடிந்தால் வெள்ளிக்கிழமை.

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தளபதிகளை நியமிக்கும் அந்த விதத்தைப் பார்த்தே நிச்சயம் தாம் மூத்தா யுத்தத்தில் ஷஹீதாகி விடுவோம் என்று உறுதியாக நம்பினார்கள்.

ஆகையால், ”எப்படியும் நாம் ஷஹீதாகி விடுவோம். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இனி பார்க்க முடியாது. கடைசியாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பின் நின்று ஜும்ஆ தொழுகையை முடித்து விட்டுச் செல்வோம்” என்று மதீனாவிலேயே இருந்து விட்டார்கள்.

ஜும்ஆ தொழுகைக்கான பாங்கு சொல்லப்படவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மைப் பார்த்து விடாதவாறு ஒரு ஓரமான இடத்தில் அமர்ந்து கொண்டார்கள்.

தொழுகை முடிந்து வெளியே செல்லும் போது, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து விட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து ”நேற்றே நான் யுத்தத்திற்கான படைப்பிரிவை அனுப்பி வைத்தேனே! ஏன் நீங்களும் அவர்களுடன் செல்லாமல் இருந்து விட்டீர்? உம்மை செல்ல விடாமல் செய்த காரியம் எது?” என்று வினவினார்கள்.

அப்போது, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இறுதியாக உங்களுக்குப் பின்னால் நின்று ஜும்ஆ தொழுகையை தொழுதிடும் ஆவல் தான் என்னைத் தாமதப்படுத்தி விட்டது. இதோ அல்லாஹ்வின் தூதரே! யுத்த களத்தை நோக்கித் தான் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். விரைவாகச் சென்று வழியில் படைப்பிரிவில் சேர்ந்து கொள்வேன்” என்று பதில் கூறினார்கள்.

அதற்கு, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அப்துல்லாஹ்வே! பூமி முழுவதையும் நீர் செலவழித்தாலும் கூட, முன்னால் சென்று விட்ட படைப்பிரிவினர் அடைந்த நன்மைகளை உம்மால் அடைந்து கொள்ள முடியாதே!” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பரிவோடு கூறினார்கள்.

அப்போது, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! உங்களோடு நான் இருக்கும் ஒரு காலைப் பொழுதோ, அல்லது மாலைப் பொழுதோ இந்த உலகமும், உலகின் அனைத்துச் செல்வங்களும் எனக்கு கிடைப்பதை விட மேலாக நான் கருதுகின்றேன்!” என்று கூறி, விடை பெற்று யுத்தகளம் நோக்கி விரைந்தார்கள். (நூல்: முஸ்னத் அஹ்மத் )

o    2. என் உடமைகள் அனைத்தும் உங்களுக்கே சொந்தம் என்று அர்ப்பணித்த உத்தமர் ஹாரிஸா இப்னு நுஃமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்ஸ.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத் செய்து வந்த ஆரம்பத்தில் சில மாதங்களாக அபூஅய்யூப் அல் அன்ஸாரி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் இல்லத்தில் தங்கினார்கள்.

அது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதுன் நபவீக்கு அருகே அதிக எண்ணிக்கையில் வீடுகளைக் கொண்டிருந்த ஹாரிஸா இப்னு நுஃமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் தங்களின் சிரமம் குறித்து சொல்லி, மஸ்ஜிதுன் நபவீக்கு அருகே இருக்கிற வீடுகளில் ஒன்றை தாம் தங்கி இருக்கும் வீட்டை பெற்றுக் கொண்டு, பகரமாகத் தருமாறு கோரினார்கள்.

அதற்கு, ஹாரிஸா இப்னு நுஃமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடைய வீடுகளில் பெருமானாருக்கு எது பிரியமாக இருக்கின்றதோ அதை எடுத்துக் கொள்ளுமாறு கூறி, தங்களின் ஒரு வீட்டைக் கொடுத்தார்கள்.

இந்நிலையில், அன்னை ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும், அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது.

பாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களது வீடு, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டிலிருந்து சற்று தூரத்தில் இருந்து வந்தது.

ஒரு தடவை ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் அண்ணலார் ”உனது வீடு, எனக்குச் சமீபத்தில் இருக்க வேண்டும் என்று எனது மணம் நாடுகின்றது!” என்று கூறினார்கள்.

தந்தையே! ஹாரிஸா இப்னு நுஃமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வீடு உங்களுக்கு அருகில் தானே இருக்கின்றது. எனது வீட்டுக்கு பதிலாக அவருடைய வீட்டில் ஒன்றை எனக்குக் கொடுக்கும் படி தாங்கள் அவரிடம் கூறுங்களேன்!” என ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்.

இதற்கு முன்பொரு தடவையும், அவருடைய வீட்டில் ஒன்றை இவ்வாறு மாற்றியுள்ளேன். இப்பொழுது மீண்டும் அவ்வாறு கேட்க எனக்கு வெட்கமாக இருக்கிறது! என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

ஹாரிஸா இப்னு நுஃமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறியச் செய்தி எட்டியதும், உடனே ஓடோடி அண்ணலாரின் சமூகம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே!, ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடைய வீடு உங்களுக்கு அருகில் இருக்க வேண்டும், என்று தாங்கள் பிரியப்படுவதாக எனக்குத் தெரிய வந்தது! இதோ எனது அத்தனை வீடுகளையும் உங்களுக்கு அர்ப்பணிக்கின்றேன்! இவற்றை விட வேறு எந்த வீடும் தங்களுக்கு அருகில் இல்லை” இவற்றில் எதை விரும்புகின்றீர்களோ அதனை மாற்றிக் கொள்ளுங்கள்!

அல்லாஹ்வின் தூதரே! என்னிடமுள்ள எல்லா பொருட்களுமே, அல்லாஹ்வுக்கும் அவனது தூதரான உங்களுக்கும் உரியனவே! அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகின்றேன்! இவை என்னிடம் இருப்பதை விட தங்களிடம் இருப்பதையே நான் விரும்புகின்றேன்!” என்று கூறினார்கள்.

இதனைக் கேட்டு மகிழ்ந்த அண்ணலார், “நீர் உண்மையையே கூறுகின்றீர்! என்று கூறி ஹாரிஸா இப்னு நுஃமான் ரளியல்லாஹு அன்ஹுஅவர்களுக்கு வாழ்வின் பரக்கத் - அபிவிருத்திக்காக துஆவும் செய்தார்கள்.

அவ்வாறே தங்கள் விருப்பப்படி ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்காக வீட்டை மாற்றிக் கொண்டார்கள். (நூல்: தபகாத்துல் குப்ரா லி இமாமி இப்னு ஸஅத் ரஹ்மதுல்லாஹி அலைஹி)

o    3. நினைவு யாவும் உங்கள் மீது யாரஸூலுல்லாஹ்! என பறைசாற்றிய காலித் அல் மஹாரிபீ ரளியல்லாஹு அன்ஹு மற்றும் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்ஸ

காலித் அல் மஹாரிபீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனார், அபீதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

‘’எனது தந்தை உறங்கச் சென்றால், அவர்கள் உடனே உறங்கிட மாட்டார்கள். என்னிடம் ”அண்ணலாரோடு கழித்த நாட்களை பகிர்ந்து கொண்டே இருப்பார்கள்; அவர்களோடு, அன்போடு அளவளாவிக் கொண்டிருந்ததை நினைவு கூறுவார்கள். முஹாஜிரீன்கள், மற்றும் அன்ஸாரிகள் ஒவ்வருவருடைய பெயரையும் குறிப்பிட்டு நினைவு கூறுவார்கள்.

”இவர்கள்தான் எனது சகோதரர்கள், என் உறவினர்கள் என் மனம் முழுவதும் இவர்களின் நினைவுகள் தான் நிறைந்திருக்கின்றது” என்று கூறிவிட்டு,

“யாஅல்லாஹ்! எனக்கு விரைவில் மரணத்தை தருவாயாக! நானும் என் இதயத்தில் நிறைந்தவர்களான இவர்களோடு போய் சேர்ந்து கொள்கிறேன்’’ என்று கூறியவாறே தூங்கி விடுவார்கள். (நூல்: அல் முஃதலிஃப் வல் முஃக்தலிஃப் லி இமாமி தாரகுத்னீ ரஹ்மதுல்லாஹி அலைஹி)

பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், மரணப்படுக்​கையில் இருந்த தருணம் அது..

இறுதி மூச்சின் கடைசி எல்லை நெருங்கிக் கொண்டிருந்தது. கணவரின் கடைசிக்கட்டத்தை காணச்சகிக்காது அவர்களது துணைவியார் ”அந்தோ என் கதியே! என்று அழுது புலம்பிய வண்ணமிருந்தார்கள்.

அச்சமயம் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தம் மரணத்தைக் குறித்து மகிழ்ச்சி அடைந்தவராக ‘’ ஸுப்ஹானல்லாஹ்! என்ன இன்பமயமான விஷயம்! நான் நாளை அண்ணலாரை தரிசிப்பேன்! அவர்களது சத்திய தோழர்களையும் சந்திப்பேன்!” என்று கூறினார்கள். (நூல்: ஹயாத்துஸ் ஸஹாபா)

o    4. என் மகிழ்ச்சியை விட உங்களின் மகிழ்ச்சியே உண்மையில் எனக்கு சந்தோஷம் தரும் எனக்கூறிய அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்...

மக்கா வெற்றியின் போது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது தந்தை அபூ குஹாஃபாவை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்பாக திருக்கலிமாவை மொழிவதற்காக அழைத்துச் சென்றார்கள்.

பார்வையற்றவராக இருந்த அபூகுஹாஃபாவைப் பார்த்ததும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அபூபக்ர் அவர்களே! தாங்கள் என்னை அழைத்திருந்தால் உமது தந்தையின் இருப்பிடம் தேடி நான் வந்திருப்பேனே!” என்று அன்பொழுக கூறினார்கள்.

அதற்கு, அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “எல்லா விதத்திலும் அதிகம் தகுதி படைத்தவர்கள் நீங்களே! நானும், எனது தந்தையும் உங்கள் இருப்பிடம் தேடி வருவது தான் உங்களின் தகுதிக்கு அழகு!” என்று கூறினார்கள்.

பின்னர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கரம் பிடித்து அபூகுஹாஃபா இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

அப்போது, அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தேம்பித் தேம்பி அழுதார்கள். அது கண்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அருகில் இருந்த தோழர்களும் “இன்று மகிழ்ச்சிக்குரிய தினம்! மகிழ்ச்சியாய் இருங்கள்! உங்கள் தந்தையும் இஸ்லாத்தில் இணைந்து நரகில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டார் அல்லவா? பின்னர் ஏன் நீங்கள் அழவேண்டும்?” சந்தோஷமாக இருங்கள்” என்று கூறினார்கள்.

அப்போது, அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘’அல்லாஹ்வின் தூதரே! எனக்கு எனது தந்தை முஸ்லிமானதைவிட, தங்கள் பெரிய தந்தையார் அபூதாலிப் அவர்கள் முஸ்லிம், ஆகிவிட வேண்டும் என்றே நான் அதிகம் ஆசைப்பட்டேன்! ஏனெனில், அவர்கள் முஸ்லிமாவதைக் கொண்டு தாங்கள் அதிக சந்தோஷப்படுவீர்கள் அல்லவா?” என்று பதில் கூறினார்கள். (நூல்: மனாகிப் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு லி இமாமி அஸ்ஸுல்லாபி)

அதாவது தமது சந்தோஷத்திற்கு பதிலாக அண்ணலாரின் சந்​தோஷத்தையே அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அதிகம் விரும்பினார்கள்.

உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ஹழ்றத் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ‘’எனது தந்தையார் முஸ்லிமாவதை விட தாங்கள் முஸ்லிமாவதைக் கொண்டு நான் அதிகம் சந்தோஷப்படுகிறேன்! எனெனில் தாங்கள் முஸ்லிமாவது அண்ணலாருக்கு அதிகப் பிரியமாக இருக்கின்றது’’ என்று கூறினார்கள். (நூல்: திர்மிதீ )

அல்லாமா காழீ இயாள் ரஹ்மதுல்லாஹி அலைஹி   அவர்கள் கூறுகிறார்கள்:

‘’ஒரு மனிதன் ஒரு பொருளின் மீது நேசம் கொள்வதாயின், மற்றெல்லாவற்றையும் விட அதன் மீது அன்பு கொண்டே தீருவான். இதுவே அந்த அன்பின் உன்மையான அடயாளமாகும். அவ்வாறு இல்லையாயின், அந்த அன்பு வெறும் போலி அன்புதான்!’’

ஸஹ்ல் இப்னு அப்துல்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி   அவர்கள் கூறுகின்றார்கள்: “அல்லாஹ்வின் மீது நேசம் இருப்பதன் அடையாளம் குர்ஆனை நேசித்தலாகும். குர்ஆனின் மீது நேசம் இருப்பதன் அடையாளம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பதாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது நேசம் இருப்பதன் அடையாளம் அவர்களின் வாழ்வை நேசிப்பதும், (சுவாசிப்பதும்) பின்பற்றுவதும் ஆகும். (நூல்: குர்துபீ )

எனவே, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது நாம் உண்மையான அன்பு கொள்வதாயின், அவர்களை நம் உயிரை விட மேலாக நேசிக்க வேண்டும்.

அதன் வெளிப்பாடாக வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களை முழுக்க முழுக்கப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் சொற்படி நடக்க வேண்டும்.

அவர்களின் முன்மாதிரிகளை அடியொற்றி வாழ வேண்டும். எதனை விட்டு தடுத்தார்​களோ அதனை அறவே விட்டுவிட வேண்டும்.

இன்பத்திலும், துன்பத்திலும், வறுமையிலும், செல்வத்திலும், வாழ்வின் எல்லா நிலைகளிலும் அண்ணலாரையே பின்பற்றி நடந்துகொள்ள வேண்டும்.

சுறுங்கக் கூறிவிடின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வை சுவாசிக்கக் கூடியவர்களாக நாம் மாறிப்போய் விட வேண்டும்.

எப்படி சுவாசம் நின்று போனால் நம் உடலை விட்டும் உயிர் சென்று விடுமோ, அது போன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தையும், வாழ்க்கையும் நம்மிடம் இல்லாது போனால் நம் உயிரே நின்று விடுவதைப் போன்று நாம் கருத வேண்டும்.

யா அல்லாஹ்! அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது நேசம் கொள்கிற, அன்பு வைக்கிற மேன்மக்களாக எங்களை ஆக்கியருள் புரிவாயாக!

அந்த நேசத்தின் வெளிப்பாடாக அவர்களின் வாழ்வை எல்லா நிலைகளிலும் பின் பற்றுகிற உறுதிமிக்கவர்களாக எங்களை ஆக்கியருள் புரிவாயாக!

யா அல்லாஹ்! உன் ஹபீப் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷஃபாஅத்துக்கு உரியவர்களாக எங்களை ஆக்கியருள் புரிவாயாக!

ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!

source: http://vellimedaiplus.blogspot.in/2015/12/blog-post_16.html