Home இஸ்லாம் ஹதீஸ் 'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!'
'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!' PDF Print E-mail
Friday, 01 April 2016 06:50
Share

'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!'

    ஆஷிக் அஹ்மத்    

இந்த நபிமொழியை ஒவ்வொருமுறை படிக்கும் போதும் மெய்சிலிர்த்து போவேன். வியப்பும், உற்சாகமும், பொறுப்புணர்வும் அதிகரிக்கும். இறையச்சம் சார்ந்த நல்ல போதனைகளே குழந்தைகளிடத்தில் நிலையாக நிற்கும். குழந்தைகளுக்கு ஓய்வு நேரத்தில் ஒரு கதை போல அறிவுரைகளை சொல்ல சூப்பரான ஹதீஸ் இது. நீங்களும் படித்திருக்கலாம், இருப்பினும் நினைவூட்ட இன்னொருமுறை...

"இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் 'சாட்சிகளை எனக்குக் கொண்டு வா! அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்' என்றார்.

கடன் கேட்டவர் 'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!' என்றார். 'அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!' என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார்.

அதற்குக் கடன் கேட்டவர் 'பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்' என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர் 'நீர் கூறுவது உண்மையே!' என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர வேண்டும் என்று ஆயிரம் தங்கக் காசுகளை அவருக்குக் கொடுத்தார்.

கடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டு, தம் வேலைகளை முடித்துவிட்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகனத்தைத் தேடினார். எந்த வாகனமும அவருக்குக் கிடைக்கவில்லை. உடனே, ஒரு மரக்கட்டையை எடுத்து, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் தங்கக் காசுகளையும் கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார்.

பிறகு கடலுக்கு வந்து, 'இறைவா! இன்னாரிடம் நான் ஆயிரம் தங்கக் காசுகளைக் கடனாகக் கேட்டேன்; அவர் பிணையாளி வேண்டுமென்றார்; நான் 'அல்லாஹ்வே பிணைநிற்கப் போதுமானவன்!" என்றேன்; அவர் உன்னைப் பிணையாளியாக ஏற்றார். என்னிடம் சாட்சியைக் கொண்டுவரும்படி கேட்டார்; 'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!" என்று கூறினேன். அவர் உன்னை சாட்சியாக ஏற்றார்; அவருக்குரிய (பணத்)தை அவரிடம் கொடுத்து அனுப்பி விடுவதற்காக ஒரு வாகனத்திற்கு நான் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என்பதையெல்லாம் நீ அறிவாய்! எனவே, இதை உரியவரிடம் சேர்க்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன்!" என்று கூறி அதைக் கடலில் வீசினார்.

அது கடலுக்குள் சென்றதும் திரும்பிவிட்டார். அத்துடன் தம் ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தையும் அவர் தேடிக் கொண்டிருந்தார். அவருக்குக் கடன் கொடுத்த மனிதர், தம் செல்வத்துடன் ஏதேனும் வாகனம் வரக்கூடும் என்று நோட்டமிட்ட வண்ணம் புறப்பட்டார். அப்போது, பணம் அடங்கிய அந்த மரக்கட்டையைக் கண்டார். தம் குடும்பத்திற்கு விறகாகப் பயன்படட்டும் என்பதற்காக அதை எடுத்தார். அதைப் பிளந்து பார்த்தபோது பணத்தையும் கடிதத்தையும் கண்டார்.

பிறகு, கடன் வாங்கியவர் ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக்கொண்டு இவரிடம் வந்து சேர்ந்தார். 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்முடைய பணத்தை உமக்குத் தருவதற்காக வாகனம் தேடும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன். இப்போதுதான் வாகனம் கிடைத்து வந்திருக்கிறேன்!" என்று கூறினார். அதற்கு கடன் கொடுத்தவர், 'எனக்கு எதையாவது அனுப்பி வைத்தீரா?' என்று கேட்டார்.

கடன் வாங்கியவர், 'வாகனம் கிடைக்காமல் இப்போதுதான் வந்திருக்கிறேன் என்று உமக்கு நான் தெரிவித்தேனே!" என்று கூறினார். கடன் கொடுத்தவர், 'நீர் மரத்தில் வைத்து அனுப்பியதை உம் சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்ப்பித்துவிட்டான்; எனவே, ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு (சரியான) வழியறிந்து செல்லும்!" என்று கூறினார். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி, பாகம் 2, அத்தியாயம் 39, எண் 2291)

இந்த ஹதீஸில் பல படிப்பினைகள் நமக்கு உண்டு!

1. கடன்பட்டவர், கடன் கொடுத்தவர் ஆகிய இருவருடைய நேர்மை. கடன் கொடுத்தவர் இறைவன் மீது நம்பிக்கை வைத்து கடன் கொடுத்தார். கடன்பட்டவர் வாக்குறுதி கொடுத்த காலத்திற்குள்ளாக கடனை திரும்ப கொடுக்க அதீத முயற்சிகளை மேற்கொண்டார்.

கடன் கொடுத்தவர் தன்னிடம் பணம் வந்து சேரவில்லை என்று கூறி மறுபடியும் அந்த பணத்தை பெற்றிருந்திருக்கலாம். ஆனால் இறையச்சம் அவரை நேர்மையாக செயல்பட வைத்தது. ஆக, இருவருமே நேர்மையின் எடுத்துக்காட்டாக விளங்கி நமக்கு படிப்பினையை கொடுக்கின்றனர்.

2. அடுத்து, நம்முடைய முயற்சிகள் உண்மையானதாக இருந்தால், இறைவன் அதனை லேசாக்கி வைப்பான். இன்ஷா அல்லாஹ்.

3. மற்றொரு முக்கிய விசயத்தையும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது. இறைவன் மீது நம்பிக்கை வைத்து அந்த காசை கடலில் அனுப்பினார். பிறகு வாகனம் கிடைத்தவுடன் இன்னொரு முறை காசை கொடுக்க வந்திருக்கின்றார். இறைவன் மீது நம்பிக்கை இல்லாமல் மறுபடியும் காசை கொடுக்க வந்தாரா?

இறைவன் மீது நம்பிக்கை சிறிதே கம்மியாக இருந்திருந்தாலும் அந்த பணத்தை அவர் கடல் வழியாக அனுப்பி இருக்க மாட்டார். கொஞ்சமா நஞ்சமா? 1000 பொற்காசுகள். இவ்வளவு பணத்தை கடல்வழியாக அனுப்புகின்றார் என்றால் அவருடைய ஈமானை நாம் புரிந்துக்கொள்ளலாம். அதே நேரம், அவர் பணத்தை மறுபடியும் கொடுக்க வந்ததற்கு காரணமாக நான் எண்ணுவது, அவர் சத்திய மார்க்கத்தை நன்கு புரிந்தவராக இருந்ததால் தான். இறைவன் நான் நாடுவோருக்கு சோதனைகளை, நன்மைகளை கொடுக்கின்றான். அந்த பணத்தை கொண்டு சேர்க்காமல் இறைவன் இவரை சோதித்து பார்க்க எண்ணியிருந்தால்? ஒரு இறைநம்பிக்கையாளர் இறைவனின் சோதனைகளை உணர்ந்தே இருப்பார். அதனால் இருக்கலாம்.

4. சில தர்க்கரீதியான விசயங்களும் கவனிக்கப்பட வேண்டியவை. கடன்பட்டவர் மரத்தை குடைந்து அதனுள் பணத்தை வைத்து அனுப்பியது, வீட்டிற்கு தேவைப்படலாம் என்று எண்ணி கடன் கொடுத்தவர் அந்த மரக்கட்டையை எடுத்தது போன்றவைகள்...

source: https://www.facebook.com/ethirkkural/posts/939885172775539