Home கட்டுரைகள் குண நலம் உண்மை முஸ்லிமின் அடையாளம்
உண்மை முஸ்லிமின் அடையாளம் PDF Print E-mail
Tuesday, 23 February 2016 07:12
Share

உண்மை முஸ்லிமின் அடையாளம்

பொறாமை கொள்வது இறையச்சமுடைய முஸ்லிமுக்கு சற்றும் பொருத்தமற்ற குணமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொறாமை என்ற இழிகுணத்தை பற்றி வன்மையாகக் கண்டித்துக் கூறினார்கள். ''ஓர் அடியானின் இதயத்தில் ஈமானும் பொறாமையும் ஒன்று சேராது''. (ஆதாரம்: சஹீஹ் இப்னு ஹிப்பான்)

உண்மை முஸ்லிமின் அடையாளம் அவரது இதயம் மோசடி, பொறாமை, வஞ்சம் போன்ற தீய குணங்களிலிருந்து பரிசுத்தமானதாக இருப்பதாகும். அந்த மனத்தூய்மையே அவரை சுவனத்தில் சேர்ப்பிக்கும். அவர் பகல் முழுவதும் நோன்பிருந்து இராக்காலங்களில் நின்று வணங்கவில்லை என்றாலும் சரியே.

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்..

நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு அமர்ந்திருந்தோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''இப்போது உங்களிடத்தில் ஒரு சுவனவாசி வருகை தருவார்'' என்றார்கள்.

அப்போது ஒரு அன்சாரித் தோழர் உளுச்செய்த தண்ணீர் தாடியில் சொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் வந்தார். இடக்கரத்தில் செருப்பைப் பற்றியிருந்தார்.

மறுநாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறே கூறினார்கள். அம்மனிதர் அதே கோலத்தில் வந்தார்.

மூன்றாவது நாளும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறே கூறினார்கள்.

அம்மனிதரும் முதல் நாளைப் போன்றே வந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபையிலிருந்து எழுந்தபோது அம்மனிதரை அப்துல்லாஹ் பின் அம்ரு இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு பின் தொடர்ந்து சென்று அம்மனிதரிடம்,

''நான் என் தந்தையிடம் வாக்குவாதம் செய்தேன். மூன்று நாட்களுக்கு அவரிடம் வரமாட்டேன் என சத்தியம் செய்துவிட்டேன். அந்தக்காலம் முடியும்வரை உம்முடன் தங்கிக் கொள்ள அனுமதிப்பீரா?'' என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர் 'சரி' என பதிலளித்தார்.

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்;

அப்துல்லாஹ் அம் மனிதரிடம் மூன்று இரவுகள் தங்கினார். அம்மனிதர் இரவில் எழுந்து வணங்கவில்லை. ஆனாலும் தூக்கத்தில் விழிப் பேற்பட்டு படுக்கையில் புரண்டபோது அல்லாஹ்வை திக்ரு செய்து தக்பீர் சொல்லிக் கொள்வார். இறுதியில் ஃ பஜர் தொழுகைக்கு எழுவார்.

அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

நான் அவர் நன்மையான விஷயங்களை மட்டுமே பேசக் கேட்டேன். மூன்று இரவுகள் கடந்தபின் அவரது அமல்கள் மிகக் குறைவானது எனக்கருதி அவரிடம் நான் கூறினேன்.

''அல்லாஹ்வின் அடியாரே! எனக்கும் எனது தந்தைக்குமிடையே கோபமோ வெறுப்போ கிடையாது. எனினும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று நாட்களாக ''உங்களிடத்தில் சுவனவாசி ஒருவர் வருகிறார்'' என்று கூறினார்கள். மூன்று நாட்களும் நீங்கள்தான் வந்தீர்கள். நான் உங்களது அமல்களை கவனித்து உம்மைப் பின்பற்ற எண்ணி தொடர்ந்து வந்தேன். ஆனால் உமது அமல்கள் பெரிதாகத் தோன்றவில்லையே! பிறகு எப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய அந்தஸ்தை அடைந்தீர்? என்று கேட்டேன்.

அவர் ''நீங்கள் கண்டதைத் தவிர வேறொன்றுமில்லை''' என்றார்.

நான் திரும்ப செல்ல முயன்றபோது என்னை அழைத்து ''நீங்கள் கண்டதைத் தவிர வேறொன்றுமில்லை. என்னினும் நான் எந்த முஸ்லிமையும் மோசடி செய்ய வேண்டும் என்று எண்ணியதில்லை அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளைக் கண்டு எவர்மீதும் பொறாமை கொண்டதில்லை எனக்கூறினார்.

அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு,''அதனால்தான் இத்தகைய உயர் அந்தஸ்தை அடைந்தீர்கள். அதற்கு நாங்கள் சக்தி பெறவில்லை'' என்று கூறினார்கள். (ஆதாரம்: நசயீ)

முஸ்லிம் தனது மறுமையை நோக்கிய பயணத்தில் போட்டி, பொறாமை மோசடி போன்ற பாவசுமைகளுக்கு இதயத்தில் இடமளிக்காமல் தூய மனதுடன் இருந்தால், மிகக் குறைவான வணக்கமாக இருந்தாலும் அல்லாஹ் அதை அங்கீகரித்து உயர் அந்தஸ்தை வழங்குகிறான் என்பது இச்சம்பவத்தின் மூலம் தெரிய வருகிறது.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

-சுவனப்பாதை

source: http://islam-bdmhaja.blogspot.com/2016/02/true-muslim.html