Home கட்டுரைகள் கதைகள் ஆம்பளைகளுக்கு மட்டும்தான் எழுதுவியளா? பொம்பளைகளுக்கு எழுத மாட்டியளா?
ஆம்பளைகளுக்கு மட்டும்தான் எழுதுவியளா? பொம்பளைகளுக்கு எழுத மாட்டியளா? PDF Print E-mail
Saturday, 17 October 2015 06:45
Share

ஆம்பளைகளுக்கு மட்டும்தான் எழுதுவியளா? பொம்பளைகளுக்கு எழுத மாட்டியளா?

  செளதா மைந்தன்  

[ "கொழுந்தனாரே! போன மாசத்துக்கு முந்துன மாசம் ஒரு கதை எழுதினியளே! 70 வயசு கெழவன் 40 வயசுக்காரிய கட்டி புள்ள பெத்த மாதிரி. ஆம்பளைகளுக்கு மட்டும்தான் எழுதுவியளா? பொம்பளைகளுக்கு எழுத மாட்டியளா?

40 வயசுல எத்தனை வெதவைக என்னை மாதிரி இருக்காங்க. அவுகள 30 வயசு ஆம்பள கல்யாணம் பண்ற மாதிரி எழுதுங்க"

ஆம்பள மட்டும் கட்டலாம். பொம்பள கட்டக்கூடாதா? வயசான செளதா (ரளியல்லாஹு அன்ஹா)வெ யா ரசூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கட்டலையா?

83 வயசுக்குப் பிறகு வயசான தன்னோட முதல் மனைவி ஸாரா (அலைஹிஸ்ஸலாம்) மூலமா இஸ்ஹாக் (அலைஹிஸ்ஸலாம்)ஐ நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) பெறலியா?

நீங்க ஏன் இன்னும் கல்யாணம் செஞ்சுக்கல? ஒங்களைப் போல உள்ளவங்க 50 வயசு வெதவைங்கள, 40 வயசு வெதவைங்கள, அட 30 வயசு வெதவைங்களையாவது கட்டலாமுள்ள...?"]

ஆம்பளைகளுக்கு மட்டும்தான் எழுதுவியளா? பொம்பளைகளுக்கு எழுத மாட்டியளா?

வயது 50 ஆனதை அவர் தேகம் காட்டவில்லை. தலைக்கு எண்ணெய் தடவாமல் பரட்டையாக விட்டு, மகள் அணிந்து நைந்து போயிருந்த சேலைகளை அணிந்து தன் வாழ்வு முடிந்துவிட்டது, தான் வாழ்ந்து முடித்து விட்டவள் என்பதை எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டுவது போல் அவர் தோற்றமும், செயலும் அமைந்திருக்கும். மேல்தட்டுப் பெண்கள் போல் மேக்கப் செய்தால் 25 வயதாகத் தோற்றமளிப்பார். இவர் போல் பல ஆயிரம் பெண்கள் சமூகத்திற்குள் உள்ளனர்.

"என்ன கொழுந்தனாரே, காலையில ஏன் வேலைக்காரனோடு மல்லுக்கட்டுறீய?"

"யாரூ.. ஃபரிதா மதனியா... ஊருல இருந்து எப்போ வந்தீய?"

"காலையில தான் வந்தேன்"

"அம்மாளும் மகளும் வீட்டுல சண்டை போட்டுக்கிருவியலே, சத்தத்தை காணாமேன்னு கேட்டேன். யாரோ சொந்தக்காரவுக மவுத்துக்குப் போயிட்டதா ஒங்க மக சொல்லுச்சு."

"அதிருக்கட்டும் கொழுந்தனாரே! இன்னும் ஏன் வேலைக்குப் போகல?"

"அவசரமா ஒரு கதை வேணும்னு கேட்டாங்க, அதுதான் லீவு போட்டுட்டு உட்கார்ந்தேன்"

"கொழுந்தனாரே! போன மாசத்துக்கு முந்துன மாசம் ஒரு கதை எழுதினியளே! 70 வயசு கெழவன் 40 வயசுக்காரிய கட்டி புள்ள பெத்த மாதிரி. ஆம்பளைகளுக்கு மட்டும்தான் எழுதுவியளா? பொம்பளைகளுக்கு எழுத மாட்டியளா? 40 வயசுல எத்தனை வெதவைக என்னை மாதிரி இருக்காங்க. அவுகள 30 வயசு ஆம்பள கல்யாணம் பண்ற மாதிரி எழுதுங்க"

நஸீர் வியப்போடு மதனியைப் பார்த்தான்.

"ஆம்பள மட்டும் கட்டலாம். பொம்பள கட்டக்கூடாதா? வயசான செளதா (ரளியல்லாஹு அன்ஹா)வெ யா ரசூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கட்டலையா?

83 வயசுக்குப் பிறகு வயசான தன்னோட முதல் மனைவி ஸாரா (அலைஹிஸ்ஸலாம்) மூலமா இஸ்ஹாக்(அலைஹிஸ்ஸலாம்)ஐ நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) பெறலியா? நீங்க ஏன் இன்னும் கல்யாணம் செஞ்சுக்கல? ஒங்களைப் போல உள்ளவங்க 50 வயசு வெதவைங்கள, 40 வயசு வெதவைங்கள, அட 30 வயசு வெதவைங்களையாவது கட்டலாமுள்ள...?"

நஸீருக்கு கண்ணத்தில் அறைந்தது போலிருந்தது. பொருளாதாரத்தின் கடைக்கோடிப் பெண் எந்த அளவிற்கு ஊன்றி தனது கதையை வாசித்திருக்கிறார், அவர் மனத்துள் தாக்கம் புரிந்திருக்கிறது, நினைக்கும்போது நஸீருக்கு பெருமிதமாக இருந்தது.

"மதனி! நீங்க நீண்ட அனுபவசாலி, என்னைய விட 15 வயசு மூத்தவரு, ஒங்க வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், நீங்கள் அனுபவித்தவைகளை சொல்லுங்களேன். என் கதைக்கு "கரு" ஆகுமான்னு பாக்குறேன்."

"எதச்சொல்ல கொழுந்தனாரே! அப்படியும், இப்படியுமா வாழ்ந்து ஒரு பொட்டப் புள்ளைய பெத்ததோட என் வாழ்க்கை 30 வயசுல முடிஞ்சுப் போச்சே அதச் சொல்லவா? வீடு வீடாக வேலை பாத்து என் மவள கட்டிக்குடுத்தேனே அதச் சொல்லவா? எந்த சொந்த பந்தமும் ஒதவாம ஒதுங்கி ஓடுச்சுகளே! அதச் சொல்லவா?

புள்ளையோட நின்ன என்னைய நிகாஹ் செஞ்சு எனக்கு வாழ்வு குடுக்க நெனைக்காம, வந்துட்டுப் போக ஆசைப்பட்டு வரிசையில நின்னானுகளே அதச் சொல்லவா? நான் உத்தமியா வாழ்ந்தும் என்னைய சந்தேகக் கண் கொண்டு பார்த்த இந்த ஊரைப்பத்தி சொல்லவா? சனங்களைப்பத்தி சொல்லவா? 20 வருஷமா எந்த தப்புஞ் செய்யாம வாழ்ந்து வந்துருக்கேனே அதச் சொல்லவா?

ஒங்களுக்குத் தெரியாதா என்ன, புருஷனை வச்சுக்கிட்டே வந்துட்டுப்போற அந்த நகைப்பெட்டி செய்றவன் கிட்ட மாசம் ஐயாயிரம் படி வாங்குற தண்டை கொலுசுக்காரி கதை தெரியாதா?

புருஷனும், தலை நிமித்த புள்ளையும் இருக்கையில நல்லபுள்ள மாதிரி பேக்கை தொங்கப் போட்டுட்டுப் போயி திரும்புறாளே அந்த பழக்காரிய சொல்லவா?

புருஷனை கரண்டுல சாகக்கொடுத்துப்புட்டு இருக்காளே அந்த 30 வயசுக்காரி, அவ அப்பன் அவளை வேற எவனுக்கும் கட்டிக்கொடுக்காம, அவளும் அடங்காம வயசுப் பயளுகளைச் சேத்து வச்சு வட்டமேசை மாநாடு நடத்துறாளே அவ கதைய சொல்லவா?"

புருஷன் நம்பி விடுவிட்டு சம்பாதிக்க வெளிநாடு போயி அள்ளி அள்ளி அனுப்பிச்சா, ஒரு எளவட்டப் பய கையில அள்ளிக்குடுத்து கும்மாளம் போட்டுட்டு புருஷன் வந்த பின்னாடி போலிஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயி அசிங்கப்பட்டாளே 35 வயசுக்காரி அத எழுதலாமுல? ஆசைப்பட்ட மவள அவனுக்கே கட்டி வைக்காம ஏத்த தாழ்வு பேசி தீக்குளிச்சு எறந்து போச்சே எதித்த வீட்டு பால்கனிக்காரு பொண்ணு அத எழுதுங்க..."

"போதும் மதனி, போதும்...! இதையெல்லாம் எழுதி யாரு அடிவாங்குறது?"

"ஏன்... உள்ளத சொன்னா ஒடம்பெல்லாம் நோகுதோ?"

"மதனி ஒங்ககிட்ட பேசி மீள முடியாது. ஏதாவது நல்ல விஷயமா எழுதுறதுக்கு சொல்லுவியன்னு பாத்தா கல்லடி வாங்க வழி சொல்றீய...!"

"எங்க வீட்டு முருங்க மரத்துல ரெட்ட முருங்கக்கா சேந்து மொளச்சிருக்கு எல்லாரும் வந்து பாத்துட்டு போறாக, பாட்டனி லேப்புக்கு அதிகாரிக ஆய்வு செய்ய எடுத்துட்டு போயிருக்காகன்னு எழுதுங்க. பக்கத்து வீட்டு சேவ முட்டையிட்டிருக்கு, டிஸ்கவரி சேனல்காரவுக வந்து படம் புடிச்சுட்டுப் போயிருக்கானுன்னு எழுதுங்க. நாப்பது வருஷமா புள்ள இல்லாம இருந்த நாலு மாடி வீட்டுக் கெழவி புள்ளப் பெத்திருக்குன்னு எழுதுங்க. எழுதுறதுக்கு ஒங்க மாதிரி ஆளுகளுக்கு சரக்கா இல்லை?"

"கொழுந்தனாரே! கால காலத்துல கல்யாணம் செஞ்சுக்கிட்டு வாழுற வழிய பாருங்க. பொழப்ப திடப்படுத்தி காசை சேத்துக்கிட்டு அதுக்குப் பின்னால ஒங்க சமூகத்துக்கு எழுதுங்க. வழிகாட்டுங்க. மொதல்ல நீங்க நல்லா தெரிஞ்சுக்கிருங்க, சீக்கிரமா ஒரு பொண்ணு பாருங்க."

"பொண்ணு பாத்துட்டேன் மதனி!"

யாரு... எங்கிட்ட சொல்லவே இல்லே!"

"நீங்க தான் பொண்ணு! எனக்கின்னு யாருமில்ல. பக்கத்தில இருக்கிற மோதினாரை கூட்டிக்கிட்டு ஒங்ககிட்ட வந்து சம்மதம் கேக்கப் போறேன், நீங்க சம்மதிச்சா நிகாஹ் முடிச்சுக்கலாம்."

"போங்க கொழுந்தனாரே! வெளையாடாம சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன்... அதப்புடிச்சுக்கிட்டு!"

"இல்லை மதனி! வாழ்க்கையில யாருக்காவது பிரயோஜனமா இருக்கணும். நான் ஒங்க வாழ்க்கைக்கு துணையா இருக்க ஆசப்படுறேன். இது அவசரப்பட்டு எடுத்த முடிவு இல்ல. எனக்குள் இருந்த புரட்சி தீ...க்கு இன்றுதான் உணவு கிடைத்தது. இதுல எனக்கு மனத்திருப்தி கெடச்சிருக்கு."

அதுவரை இல்லாதிருந்த நாணம் ஃபரிதாவுக்குள் உண்டானது. நைந்து போயிருந்த அழுக்குச் சேலையை தலை மீது இழுத்திப்போர்த்தி வெட்கத்துடன் விறுவிறுவென வீட்டுக்கு நடந்தார்.

புன்னகைத்தவாறு பார்த்துக் கொண்டிருந்த நஸீர், அங்கு நின்றிருந்த எதிர்வீட்டு அலாவுத்தீனிடன், "தம்பி என் நிகாஹ்வுக்கு ஒரு சாட்சியா ஃபரிதா மருமகனை கையெழுத்து போடச் சொல்லலாம். என் சார்பா நீதான் கையெழுத்து போடணும், வர்ற திங்கள் கிழமை லுஹர் தொழுகைக்குப் பிறகு மோதினாரை கூட்டிட்டு வாரேன், நீயும் வந்திடு" சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்ற நஸீருக்கு ஏக நிம்மதி.

[ முஸ்லிம் முரசு டிசம்பர் 2014 இதழில் வெளியான "பரிதா கூறும் கதையைக் கேளுங்க..." கதையின் சுருக்கம் ]

www.nidur.info