Home கட்டுரைகள் Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) என்னோட கதையைக் கேளுங்கள் என் சொந்தங்களே!
என்னோட கதையைக் கேளுங்கள் என் சொந்தங்களே! PDF Print E-mail
Thursday, 15 October 2015 07:23
Share

என்னோட கதையைக் கேளுங்கள் என் சொந்தங்களே!

  Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)  

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் 11.9.2001 அன்று தாக்கப்பட்டதற்கு பின்பு ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான எதிர்ப்புக் குரல் எழுப்பப்பட்டு அமெரிக்கக் கூட்டுப்படை ஆப்கானிஸ்தான் 2001 ஆண்டு படையெடுப்பின் போதும், இராக் 2003 ஆண்டு படையெடுப்பின் போதும் தனது நாட்டுப் படைகளை ஆஸ்திரேலியாவும் அனுப்பியது அனைவரும் அறிவர்.

அதன் எதிரொலியாக முஸ்லிம்களை கறுப்புக் கண்ணாடியோடு பார்க்க ஆரம்பித்தனர் ஆஸ்திரேலிய மக்கள். அப்படிப் பட்ட நாட்டில் 'கிப்ஸ் லாண்ட்' என்ற சிறு நகரத்தில் வாழும் சாரா ப்ரைஸ் என்ற கிறுத்துவ மதப் பெண்மணி பிற்காலத்தில் '"ஏன் முஸ்லிமாக மாறினேன்?" என்ற கதையினைச் சொல்ல, அதனை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகின்றேன்!

மரியா பிரைஸ் ஆஸ்திரேலியா நாட்டில் மனாஸ் பல்கலைக் கழகத்தில் பத்திரிக்கைப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்று பத்திரிக்கையாளராக உலகில் பல நாடுகளுக்குச் சென்று செய்திகள் தயாரிப்பவர் ஆவார். அவர் கிருத்துவ மதத்தில் மிகுந்த நம்பிக்கையும், இயேசு பெருமான் மீது அளவற்ற பாசத்தினையும் கொண்டவராவார்.

ஏனெறால் மனித இனத்திற்குத் தேவையான பரிவு, இறக்கக் குணம், அன்பு, பாசம் ஆகியவை கிருத்துவ மதத்தில் போதிப்பதாலும், சமூக சேவையில் அதனைக் காட்டுவதாலும் அதன் மீது பிடிப்புடன் இருந்தார். கிருத்துவ மதத்தின் மீது இருந்த அசைக்க முடியா நம்பிக்கை அவர் ஒரு முறை மலேசியா சென்றது வரை இருந்தது.

மலேசியாவிற்கு மாணவர் பண்பாடு பரிமாற்றத்தின் அடிப்படையில் ஒரு முறை சென்றார். அந்த நாட்டிற்கு செல்வதிற்கு முன்பு அவருக்கு முஸ்லிம்கள் பழக்க வழக்கங்கள், பண்பாடு ஆகியவை தெரியாது.

அதுவும் முஸ்லிம் பெண்கள் என்றால் கருப்பு ஆடை தலை முதல் கால் வரை அணிபவர்கள், மேற்காசியா நாட்டினைச் சார்ந்தவர்கள், நாகரீகத்திற்கும் அவர்களுக்கும் ஒரு காத தூரம், ஆண்களால் நசுக்கப்படுபவர்கள், கணவர் இல்லாமல் வெளியில் செல்ல மாட்டார்கள், கல்வி அறிவு இல்லாதவர்கள், வெளி வேலைக்குச் செல்வது அபூர்வம் என்று எண்ணி இருந்தார்.

ஆனால் மலேசியா சென்ற பிறகு அவர் கண்ட காட்சி முஸ்லிம்கள் பற்றிய தவறான எண்ணத்தினை மாற்ற ஆரம்பித்தது. அப்படி என்ன அவர் அங்கே கண்டார் என்று நீங்கள் கேட்கலாம்.

அவைகள்:

1) முஸ்லிம் பெண்கள் வித விதமான கலர் கொண்ட ஹிஜாப் மற்றும் ஆடைகளை அணிந்து உலா வந்தனர்.

2) பல்கலைக்கழக மேல் படிப்பினை தொடரும் ஏராளமான பெண்களைக் கண்டார்.

3) பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வதினைக் கண்டார்.

4) சிலர் மட்டும் முகத்திரையினை அணிந்திருந்தார்கள்.

5) இஸ்லாமிய மார்க்கத்தில் பற்றுடன் இருந்தனர்.

பத்திரிக்கை மாணவரான மரியாவிற்கு முஸ்லிம் பெண்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் அவர்களைப் பற்றியும் வெளி உலகிற்கு தெரிய எழுத தூண்டியது. அவர் எழுத, எழுத செய்திகள் நீருற்று போல வெளியே பீறிட்டு கிளம்பின.

அவைகளில் சில:

1) முஸ்லிம் பெண்கள் திருமணம் அவர்கள் சம்மதத்தோடு தான் நடந்தது.

2) சொத்துரிமை, பணபரிமாற்ற உரிமை மேற்கத்திய நாட்டு பெண்களுக்குக் கூட இல்லாத அளவு முஸ்லிம் பெண்களுக்கு இருந்தது.

3) இஸ்லாமிய மார்க்கத்தின் மீது அசைக்க முடியா நம்பிக்கை கொண்டு இருந்தனர்.

ஆகவே மரியா அல்குர்ஆனையும் பல்வேறு ஹதீதுக்களையும் அர்த்தத்தோடு படிக்க ஆரம்பித்து, அவைகளை தன் எழுத்துத் திறன் மூலம் வெளி உலகிற்கு தெரியப்படுத்தினார்.

கோலாலம்பூர் நகரில் உள்ள துங்கு அப்துர்ரஹ்மான் பெரிய பள்ளிவாசலுக்கு ஒரு முறை சென்றார். அவர் அங்கு கண்ட காட்சி அமைதி, நிசப்தம், ஆடம்பர மில்லாத அமைப்பு அவரது உள்ளத்தினை கொள்ளைக் கொண்டது. அப்போது பாங்கு சப்தம் கேட்டு தொழுகைக்கு அழைப்பதினை அறிந்தார். வாழ்க்கையில் முதல் முறையாக காபாவினை நோக்கி தலை சாய்த்தார். ஆனால் மலேசியா இருந்தது வரை அவர் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறவில்லை.

இஸ்லாம் பற்றி இன்னும் ஆழமாக தெரிந்து கொள்ளவேண்டும் என்று எண்ணினார். அப்போது தான் ஐக்கிய நாட்டு சபையால் அந்த ஆண்டின் சிறந்த பெண்மணிக்கான விருது மலேசியாவினை 27 ஆண்டுகள் ஆட்சி செய்த பிரதமர் மகாதீர் மூத்த மகள் மரினா மகாதீருக்கு கிடைத்திருந்தது. அவர் சமூக சேவைக்கான அந்த விருதினைப் பெற்றிருந்தார். உடனே அவரை அணுகி இஸ்லாம் பற்றிய பல்வேறு கேள்விக் கணைகளை விடுத்தார். அத்தனைக்கும் மிக விரிவான பதில்களை மரினா கொடுத்தார்.

அவரிடமிருந்து விடை பெறும்போது மரினா, 'நாமெல்லாம்(கிருத்துவர்கள், முஸ்லிம்கள்) ஒன்று பட்டவர்கள் ஆனால் பல்வேறு நாட்டில் வாழ்வதினால், இனம், மொழி, நிறம் ஆகியவற்றால் மாறு பட்டுள்ளோம். ஆனால் நாம் சிந்தும் ரத்தமும், சுவாசிக்கும் காற்றும் ஒன்றே என்று தினம், தினம் நினைவு கொள் என்று சொன்னது ஆஸ்திரேலியா திரும்பிய பின்னரும் அவர் காதுகளில் ரீங்காரம் இட்டு ஏதோ ஒன்று அவர் மனதினை நெருடியது.

நாடு திரும்பியதும் கிருத்துவ மற்றும் முஸ்லிம் மார்க்கத்தினை பற்றிய பல்வேறு ஒற்றுமை, வேற்றுமையினை புனித புத்தகங்களான பைபிள், அல்குரான் மூலமும், வராற்று புத்தகங்கள் மூலமாகவும், கிருத்துவ, முஸ்லிம் பெரியவர்களிடையே நடந்த பட்டி மன்றம் மூலமும் ஆராய ஆரம்பித்தார்.

அதில்:

1) குர்ஆனில் கிருத்துவர்கள், யூதர்கள் புனித நூல்களின் மக்கள் என்று கூறியிருப்பதினை அறிந்தார்.

2) கிருத்துவர்களும், யூதர்களும் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழிதோன்றல்கள் என்று அறிந்தார்.

3) இயேசுபிரான் பற்றி அல்குர்ஆனில் முஹம்மது(ரசூலல்லா) விட அதிகமான இடத்தில் சொல்லப் பட்டத்தினையும் அறிந்தார்.

4) முஸ்லிம்கள் எப்படி கிருத்துவர்களை நடத்த வேண்டும் என்று ரசூலுல்லா (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறியிருப்பதாவது, 'கிருத்துவர்களை மரியாதையுடன் நடத்துங்கள், எந்த அளவிற்கு என்றால் ஒரு முஸ்லிம் ஆண் ஒரு கிருத்துவப் பெண்ணை திருமணம் செய்யும் போது அவள் கிருத்துவ மதத்தினை வழிபடுவதிலிருந்து தடுக்காதீர்கள் என்பது வரை' என்றார்கள்.

5) இயேசு பிரானை முஸ்லிம்கள் தூதராக ஏற்றுக் கொண்டார்கள், ஆனால் கிருத்துவர்கள் இயேசு பிரானை கடவுளாக கண்டார்கள்.

தனது ஆராய்ச்சியின் முடிவில் இஸ்லாமிய மார்க்கத்தினை ஏற்றுக் கொண்டார். கிருத்துவ மதத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தில் மாறிய பின்பு பல்வேறு சிரமங்கள் இருந்தன.

அவைகள்:

1) புற சுத்தம், உள சுத்தத்துடனான ஐவேளை தொழுகை.

2) பெண்களின் பாலின வெளித்தெரியா ஆடை.

3) ஏழைகளுக்கு கொடுக்கப் படும் சக்காத்து, சதக்கா

4) குடும்ப, சமூக மாறு பட்ட கண்ணோட்டம்.

5) முக்கியமாக இது வரை பயன் படுத்தி வந்த மது ஒழித்தல்.

அத்தனை வேதனைகளையும் தாங்கிக் கொண்டு இஸ்லாமில்லாத அந்நிய நாட்டில் இன்று இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஈர்க்கப்பட்டு இஸ்லாம் பற்றி மிக உயர்வாக தனது பத்திரிக்கை தொடர்பினை வைத்துக் கொண்டு வெளி உலகிற்கு பறை சாட்டுகிறார், மரியா பரிஸ்.

ஆனால் நாம் முஸ்லிம்களாக பெயரளவில் இருந்து கொண்டு, இயக்கங்களிடையே நானா நீயா என்று பதவி வேட்கையில் இறங்கி, நாலு காசு சம்பாதிக்க நினைப்பதும், நம் வீட்டுப் பெண்கள் தடம் புரள்வதினை கண்டும் காணாது இருப்பதும், சகோதரிடையே சொத்து சுகத்திற்காக சண்டை இடுவதும், பெண்களுக்கு கல்வியினை மறுப்பதும், பொது நிறுவனங்களில் பதவிக்கு வந்தவர்கள் சுரண்டுவதிற்கு வழி தேடுதலும், உலக முஸ்லிம்கள் கூடாரத்திற்குள்ளே குத்து வெட்டு நடப்பதும் சரியா சகோதர சகோதரிகளே!

AP,Mohamed Ali