Home கட்டுரைகள் சமூக அக்கரை அழிவின் விளிம்பில் ‘அரபுத் தமிழ்' - பாதுகாக்க இஸ்லாமிய அறிஞர்கள் கோரிக்கை
அழிவின் விளிம்பில் ‘அரபுத் தமிழ்' - பாதுகாக்க இஸ்லாமிய அறிஞர்கள் கோரிக்கை PDF Print E-mail
Tuesday, 13 October 2015 06:51
Share

அழிவின் விளிம்பில் ‘அரபுத் தமிழ்' - பாதுகாக்க இஸ்லாமிய அறிஞர்கள் கோரிக்கை

  எஸ்.முஹம்மது ராஃபி  

தமிழகத்தில் அரபுத் தமிழ் மொழி சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. அதை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூகத் தொடர்புக் கருவியான மொழியும் சமூகத்தைப் போல் மாற்றத்துக்குட்பட்டது. அரசியல், சமய, சமூக வணிகத் தொடர்புகளால் வசதிக்கேற்ப வழங்கியும், வாங்கியும், வாழ வேண்டிய நிலை மொழிகளுக்கும் ஏற்படுகிறது.

சமணர் மற்றும் வைணவர் தொடர்பால் பிராகிருதமும், சமஸ்கிருதமும், அரேபியர் மற்றும் இஸ்லாமியர்கள் தொடர்பினால் அரபியும், பார்சியும், துருக்கியும், ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சு ஆதிக்கத் தினால் ஆங்கிலமும், பிரெஞ்சும் இந்திய மொழிகளில் கலந்துள்ளன.

கலாச்சார பிணைப்பு

இலக்கிய வளம்மிக்க தமிழ் மொழிக்கும், அரபு மொழிக்கும் இடையே நிகழ்ந்த வணிக மற்றும் கலாச்சார பிணைப்பாகத் தோன்றிய ‘அரபுத் தமிழ்' தற்போது முற்றிலும் அழியும் நிலையை நோக்கிச் செல் வதாக வேதனையுடன் தெரிவிக்கின் றனர் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள்.

இது குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் தாகிர் சைபுதின் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

தமிழகத்துக்கும், அரபு நாடு களுக்கும் இடையே உள்ள தொடர்பு மிகத் தொன்மையானது. இத்தொடர்பு சங்ககாலம் முதல் இருந்து வந்ததற்கான அகச் சான்றுகள் நமக்கு கிடைத்திருக்கின்றன. சங்க காலத்தில் வியாபார நிமித்தமாக ஏற்பட்ட இத்தொடர்பு கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இஸ்லாம் தோன்றிய பின்னர் மேலும் வலுப்பெற்றது.

அந்த காலகட்டத்தில் வணிகத் தொடர்பானது கலாச்சார, பண் பாட்டு உறவாக வளர்ச்சி அடைந்தது. இலங்கை மற்றும் தமிழகத்தின் கடற்கரைப் பிரதேசங்களான காயல்பட்டினம், கீழக்கரை, பாம்பன், மரைக்காயர்பட்டினம், தொண்டி, அதிராமப்பட்டினம், நாகப்பட்டினம், பழவேற்காடு ஆகிய பகுதிகளிலும் அரபுக் குடியேற்றங்கள் தோன்றின.

அரபுத் தமிழ் தோற்றம்

இப்பகுதிகளில் வழக்கில் இருந்த தமிழ் மொழியை அரபிகள் எதிர்கொண்டனர். இதன் விளைவாக நீண்டகால இலக்கிய பாரம்பரியமிக்க தமிழ் மொழிக்கும் அதேபோன்ற இலக்கியவளம் மிக்க அரபு மொழிக்கும் இடையில் நிகழ்ந்த கலாச்சார பிணைப்பாக அரபு எழுத்துக்களை பயன்படுத்தி தமிழ் மொழியை எழுதும் அரபுத் தமிழ் தோன்றியது.

தமிழகத்தில் இஸ்லாம் பரவிய போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தமிழர்கள் தங்களின் தாய் மொழியான தமிழ் மொழியிலேயே பேசினர். அதே நேரம் இஸ்லாமிய மதக்கடமைகளை நிறைவேற்று வதற்கு அரபு மொழியறிவு தேவையாக இருந்தது. இதனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தமிழர்கள் வணிகம் மற்றும் மதம் சார்ந்த பயன்பாட்டுக்காக அரபுத் தமிழை பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் இஸ்லாமிய சமயநெறி நூல்கள், இஸ்லாமிய சட்ட விளக்க நூல்கள், திருக்குர்ஆன் விரிவுரைகள், ஹதிஸ் விளக்கங்கள், இஸ்லாமிய சிற்றிலக்கியங்கள், காப்பியங்கள், கடிதங்கள் வாயிலாக அரபுத் தமிழை வளர்த் தனர்.

அரபுத் தமிழில் இதழ்கள்

சென்னையில் இருந்து கி.பி.1889-ம் ஆண்டில் `கஷ்பூர் ரான் பீ கல்பில் ஜான்’ என்ற ஒரு வார இதழும், கி.பி. 1906-ம் ஆண்டில் சென்னையில் இருந்து `அஜாயிபுல் அக்பர்’ என்ற வார இதழும் அரபுத் தமிழில் வெளிவந்தன.

தமிழகம் மற்றும் இலங்கையில் உள்ள ஒரு சில மதரசாக்களில் மட்டுமே அரபுத் தமிழ் மூலமாக திருக்குர்ஆன், ஹதிஸ்கள் தற்போது கற்றுக் கொடுக்கப் படுகின்றன.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் அரபி மொழி ஆங்கில வழியில் தான் கற்பிக்கப்படுகிறது.

மேலும் தமிழக இஸ்லாமியர்களின் சமூக மற்றும் பொருளாதார காரணங்களால் அரபுத் தமிழ் தற்போது சிறிது சிறிதாக அழியத் தொடங்கியுள்ளது.

அரபுத் தமிழ் குறித்த ஆய்வுகளை மதரசாக்களும், பல்கலைக் கழகங்களும் மேற்கொண்டு அதை தற்கால சமுதாயத்துக்கு வழங்கு வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, பழமையான அரபுத் தமிழை அழிவில் இருந்து பாதுகாக்க முடியும் என்றார்.

-எஸ். முஹம்மது ராஃபி

source: http://tamil.thehindu.com/tamilnadu/article7738042.ece