Home கட்டுரைகள் அரசியல் நரேந்திர மோடியின் தொடர் வெளிநாட்டுப் பயணங்கள்! பின்னணியில் உள்ள திட்டம் என்ன?
நரேந்திர மோடியின் தொடர் வெளிநாட்டுப் பயணங்கள்! பின்னணியில் உள்ள திட்டம் என்ன? PDF Print E-mail
Saturday, 03 October 2015 06:03
Share

நரேந்திர மோடியின் தொடர் வெளிநாட்டுப் பயணங்கள்! பின்னணியில் உள்ள திட்டம் என்ன?

பிரதமர் மோடி அதிகமான வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வது குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் நக்கலும் நையாண்டியும் கேலியும் கிண்டலும் அதிகமாக செய்யப்படுவதும் அதை மக்கள் அதிகம் ரசிப்பதும் குறிப்பாக முஸ்லிம்கள் ஒரு படி மேலாக இதில் குதூகலிப்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.

நக்கல் நையாண்டிகளையெல்லாம் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு மோடியின் வெளிநாட்டு பயணங்களின் போது திட்டமிடப்படும் நடவடிக்கைகள், சந்திக்கும் பிரமுகர்கள், ஆற்றும் உரை அனைத்தையும் நாம் கொஞ்சம் உன்னிப்பாக கவனித்து பார்த்தோமானால் நமக்கு ஏற்படுகின்ற சந்தேகத்தை புறந்தள்ளிவிட முடியாது.

பொதுவாக இந்துத்துவா சிந்தனையாளர்களின் நீண்ட நாள் திட்டமும் கனவும் என்னவென்றால் இந்தியாவை இந்து நாடாக பிரகடனப்படுத்த வேண்டும் என்பதுதான்.

ஒரு நாடு மதம் சார்ந்து அறியப்படுவதிலோ, பிரகடனப்படுத்துவதிலோ நமக்கு எவ்வித ஆட்சோபனையும் இல்லை. பெரும்பாலான இந்துக்களை பொறுத்தவரையில் அவர்கள் நமக்கு மிக சிறந்த நண்பர்கள், நல்லிணக்கம் பேணக் கூடியவர்கள். மாமன் மச்சான் என்ற உணர்வில் வாழக்கூடியவர்கள். தாங்கள் கொண்டிருக்கின்ற கடவுட் கோட்பாட்டின் அடிப்படையில் மத நம்பிக்கை உடையவர்கள். அண்டை வீட்டாராக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், வியாபார தொடர்புகள் மற்றும் கொடுக்கல் வாங்கலாக இருந்தாலும் முஸ்லிம் மக்களுடன் நல்லிணக்கத்துடன் வாழக்கூடியவர்கள்.

இதன்படி வாழக்கூடிய இந்து மக்கள் என்பவர்கள் வேறு. இந்துத்துவா என்பது வேறு.

இந்தியாவை இந்து நாடாக பிரகடனப்படுத்த வேண்டும் என்பது இந்துத்துவாவின் செயல்திட்டம்தானே தவிர இந்துக்களின் நிலைபாடு கிடையாது. காரணம் இந்து நாடென அறியப்படுவதற்குரிய தார்மீக உரிமை இந்திய நாட்டிற்கு கிடையாது என்பதை மத நல்லிணக்கத்தையும், இந்தியாவின் பன்முகத்தன்மையையும், இறையாண்மையையும் பேணக் கூடிய பெரும்பான்மையான இந்து மக்கள் புரிந்தே வைத்திருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் இந்தியா என்ற நாட்டை வடிவமைத்ததிலும், சுதந்திரத்திற்காக செய்த அளப்பெறும் தியாகங்களையும், இழந்த பொருளாதாரங்களையும் யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

பாகிஸ்தான் பிரிந்ததை முஸ்லிம்களின் தியாகத்திற்கு ஈடாக காரணம் காட்டி இந்த உண்மையை சிலர் மூடி மறைக்க நினைக்கலாம். எத்தனை பாகிஸ்தான்கள் பிரிந்தாலும் இந்தியாவை தன் வாழ்விடமாக நேசித்து இன்றைக்கும் தங்களுடைய உடல்,பொருள், வாழ்வாதாரம், அன்னிய செலவாணி அனைத்தையும் தன் நாட்டிற்காக அர்ப்பணித்து வாழ்கின்ற முஸ்லிம்களுடன் தான் மற்ற இந்திய மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சி என்பது கிடையாது. பிரதமர் மோடி கனவு காணும் டிஜிட்டல் இந்தியாவாக இருந்தாலும் சரி.

இந்துத்துவ சிந்தனையான இந்தியா இந்து நாடெனும் செயல் திட்டம் மோடியின் இடையறாத வெளிநாட்டு பயணங்களின் மூலம் கனகச்சிதமாக காய் நகர்த்தப்படுவதாகவே தெரிகிறது.

மோடியின் வெளிநாட்டு பயணங்களின் போது நிகழ்த்தப்படும் உரைகளில் இந்தியா இந்து நாடு என்ற வடிவம் திட்டமிட்டு தயார் செய்யப்படுகிறது.

இந்துக்கள் மட்டுமே சுதந்திரத்திற்காக சிந்தனை செய்தார்கள். செயல் வடிவம் கொடுத்தார்கள். தியாகம் செய்தார்கள் எனும் விதமாக ஆழமாக பதிய வைக்கும் விதத்தில் உரைகள் தயார் செய்யப்படுகிறது.

அனைத்து உரைகளிலும் இந்தியா என்பது இந்துத்துவ சிந்தனைகள், கலாச்சாரங்கள், நம்பிக்கைகள் கொண்ட மக்களால் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கிறது என்ற அழுத்தம் உலக அரசியல் அரங்கில் ஆழமாக பதிய வைக்கப்படுகிறது.

முஸ்லிம்கள் கோலோச்சும் அரபு நாட்டுக்கே சென்றாலும் இந்தியா சார்பாக இந்துக்களுக்கு கோவில் நிலம் கேட்டு பெறுவதின் மூலம் இந்தியா இந்து கலாச்சார மக்கள் மட்டுமே நிரம்பிய நாடு என்ற அழுத்தம் பதிய வைக்கப்படுகிறது.

முத்தாய்ப்பாக கடந்த தினத்தில் கலிபோர்னியாவில் பிரதமர் மோடி சந்தித்த அதிமுக்கிய பிரமுகர்களையும் ஆற்றிய உரைகளையும் வரிக்கு வரி கூர்ந்து கவனித்தோமானால் திட்டம் மிக துல்லியமாக செயல்படுத்தப்படுவதை அறிய முடிகிறது.

இன்றைக்கு தொழில் நிறுவனங்களாக இருக்கட்டும், வியாபார நிறுவனங்களாக இருக்கட்டும், அரசியலாக இருக்கட்டும், ஆட்சியை பிடிப்பதாக இருக்கட்டும் முதலில் மக்கள் மத்தியில் ஒருமித்த சிந்தனை தாக்கத்தை டிஜிட்டல் கார்ப்பரேட் நிறுவனங்கள் கனகச்சிதமாக உருவாக்குகின்றன. இதற்கு ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும், இணையதளங்களும் துல்லியமாக தங்கள் பங்களிப்பை செயல்படுத்துகின்றன.

பி.ஜே.பி. ஆட்சியை பிடித்ததும் மோடி பிரதமரானதும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மார்க்கெட்டிங் மூளைதான் என்பதை நாம் புரிந்துக் கொள்ள முடியும். இதே பாணியில்தான் மோடியின் அதிகாரபூர்வ வெளிநாட்டு பயணங்களில் இந்தியா இந்து கலாச்சாரத்தை மட்டுமே கொண்ட நாடு என்ற பரப்புரை ஒரு தேர்ந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மூலம் கனகச்சிதமாக செய்யப்படுவதாகவே தெரிகிறது.

மிக தேர்ந்த முறையில் தயார் செய்யப்படும் தனது வெளிநாட்டு அதிகாரப்பூர்வ உரைகளில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட முஸ்லிம்களின் பெயர்களை மறந்தும் கூட உச்சரித்து விடுவதில்லை. மாறாக மற்றவர்களின் பெயர்கள் உரக்க உச்சரிக்கப்படுகிறது. அதற்கு அரங்கத்தில் அமர்ந்திருக்கக் கூடிய உலக தலைவர்களையும் மக்களையும் ஆமோதிக்கச் சொல்வதன் மூலம் அங்கேயே அங்கீகாரமும் பெறப்படுகிறது. கலிபோர்னியா உரையில் இதை நாம் கவனிக்க முடியும்.

கலிபோர்னியாவில் ஐ.டி. ஜாம்பவான்களான பேஸ்புக் அதிபர் மார்க், ஜுகர்பெர்க் மற்றும் கூகுள் அதிபர் ஆகியோரை சந்தித்து இந்து கலாச்சாரம், இந்து கோவில்கள் பற்றி அவர்களை கொண்டே சிலாகிக்க வைத்ததன் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகளின் திட்டமிடல் மிக சரியாகவே வேலை செய்கிறது. இப்படி சொல்வதால் அவர்களுக்கு ஆட்சோபனையும் இருக்கப் போவதில்லை. அவர்களுக்கு லாபம்தான். ஏனென்றால் பேஸ்புக் மற்றும் கூகுள் பயன்பாட்டாளர்களில் இந்தியர்கள்தான் மிக அதிகம்.( நாம் தான் வேறு வேலை வெட்டி இல்லாமல் இதில் அதிக நேரம் செலவழிக்கிறோம்).

நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க சென்ற எந்தவொரு நாட்டின் அதிபருக்கும் தோன்றாத சிந்தனை மோடியின் மூலம் கச்சிதமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றைக்கு, உலக மக்கள் மத்தியில் ஒரு சிந்தனையை ஆழமாக பதியவைக்க சமூக வலைத்தளங்களும் இணைய தளங்களும் ஆற்றும் பங்கும் அதனுடைய வீச்சும் மிக அதிகமானது.

ஆக, பிரதமர் மோடியின் இடையறாத வெளிநாட்டு பயணங்களின் மூலம் இந்தியா என்பது இந்து(த்துவ ) பாரம்பரியமும், கலாச்சாரமும், வழிபாடும் கொண்ட நாடு என்ற சிந்தனை தாக்கம் உலக அரசியல் அரங்கிலும், உலக மக்களிடத்திலும் ஏற்படுத்த கச்சிதமாக காய் நகர்த்தப்படுவதாகவே தோன்றுகிறது. அப்படி ஏற்படுத்தி விட்டால் நாளை இந்து நாடென அறிவிக்கப்படும்போது உலக அரங்கில் பெரிதாக எந்த சலசலப்பும் இருக்காது. மக்கள் இதை நியாயம் என்று கூட நினைக்க முற்படலாம்.

சரி. இந்து நாடென அறியப்பட்டால் அதனாலென்ன?

முதலில் இந்தியா இந்து நாடென உலக அரங்கில் அறியப்படுவதற்கு அதற்கான தார்மீக உரிமையை பெற்றிருக்கவில்லை என்பது இந்தியா ஒரு நாடாக வடிவமைக்கப்பட்ட வரலாற்றையும், அதன் பாரம்பரியத்தையும், இந்த நாட்டின் விடுதலைக்காக தங்கள் சதவிகிதத்திற்கும் மேலாக முஸ்லிம்கள் செய்த தியாகத்தையும் அறிந்தவர்களுக்கு தெரியும். அதனால்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் தார்மீக சிந்தனை கொண்ட தலைவர்களால் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று பிரகடனப்படுத்தபட்டது. ஆதலால்தான் இன்றுவரை உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற அந்தஸ்துடன் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது.

ஒரு நாடு மதம் சார்ந்த நாடாக அதிகாரப்பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டால் அந்த நாட்டில் மற்ற மதத்தினர் தங்கள் நம்பிக்கையின்படி வணக்க வழிபாடுகளை நிறைவேற்றவோ, தங்கள் மதகலாச்சாரங்களை பின்பற்றவோ சட்டப்படி கட்டுப்பாடுகளை விதிக்க முடியும். நியாயம் கேட்டு நீதிமன்றங்களுக்கெல்லாம் செல்ல முடியாது. மதச்சார்பற்ற நாடு என்ற நிலையிலேயே இன்றைக்கு முஸ்லிம்கள் தங்கள் மதவழிபாடுகளை நிறைவேற்றுவதற்கு பல வழிகளில் அரசாங்கம் கொடுக்கக்கூடிய இடையூறுகளை பார்த்து வருகிறோம். இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல. அனைத்து இதர மதத்தவர்களுக்கும் தலித்துகளுக்கும் பொருந்தும். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற இந்தியாவின் நிலை கேள்விக்குறியாகும்.

ஆகவே இந்துத்துவா என்பது வேறு இந்து மக்கள் என்பது வேறு என்பதை நியாய உணர்வுள்ள மக்கள் புரிந்து இது போன்ற செயல்பாடுகளை கண்டிக்க முன்வர வேண்டும். பல சமய மக்களுடன் பரஸ்பர ஒற்றுமையான வாழ்க்கை என்பது தான் நம் இந்தியாவின் பலம்.

-முகநூல்