Home இஸ்லாம் தொழுகை தொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும் காரணிகள்
தொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும் காரணிகள் PDF Print E-mail
Thursday, 17 September 2015 07:41
Share

தொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும் காரணிகள்

  முதலாவது அம்சம்  

இறையச்சத்தை ஏற்படுத்தி, அதனை வலுப்படுத்தக் கூடியவைகள்:

1. தொழுகைக்காக தயாராகுதலும், அதற்கான ஆயத்தங்கள் செய்வதும்: இது பல அம்சங்களைக் கொண்டதாகும். அவைகளில்:-

முஅத்தின் கூறும் பாங்கைப் போன்று பதில் பாங்கு கூறுதல், அதானுக்கும், இகாமத்திற்கு இடையில் பிரார்த்தித்தல், பிஸ்மில்லாஹ் கூறி உழூவை ஆரம்பம் செய்தல், அதன் பின்னர் திக்ர், பிரார்த்தனைகள் செய்தல், மிஸ்வாக் செய்வதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுதல், தூய்மையான அழகிய ஆடைகள் அணிந்து, அடக்கத் தோடும், பணிவோடும் பள்ளிக்குச் சென்று தொழுகையை எதிர் பார்த்திருத்தல், தொழுகையின் (ஸஃப்-ஐ) வரிசையை சரி செய்வதுடன் அதில் நெருக்கமாக நிற்றல் போன்ற காரியங்கள் உள்ளடங்கி இருக்கும்.

2. தொழுகையில் அமைதி பேணுதல்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது எலும்புகளின் இடுக்குகள் அதனதன் இடத்தில் மீண்டு நிலை பெறுகின்ற வரை தொழுகையில் அமைதி பேணுபவர்களாக இருந்தார்கள்.

3. தொழுகையில் மரணத்தை நினைவு கூறுதல்:

(உனது தொழுகையில் மரணத்தை நினைவு கூறுவீராக! ஏனெனில் ஒரு மனிதன் தொழுகையில் மரணத்தை நினைவு கூறுவதால் அவனது தொழுகையை அழகாக தொழுவதற்கு வாய்ப்புக்கிட்டும். மேலும் இதன் பின்னரும் தொழுகை கிடைத்திடாது என எண்ணித் தொழும் மனிதனின் தொழுகை போன்று தொழுவாயாக! என ஹதீஸ்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

4. ஓதப்படும் திருமறை வசனங்களையும், திக்ருகளையும் சிந்தனைக்கு எடுத்து, அவைகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்துதல்:

இதில் உள்ளம் கனிந்து, தாக்கம் ஏற்பட்டு, கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட வேண்டுமானால் ஓதப்படும் வசனங்கள், திக்ருகள் ஆகியவற்றின் கருத்துக்களின் ஆழத்தை அறிந்த ஒருவருக்கே இது சாத்தியமாகும். இது பற்றி அல்குர்ஆன் குறிப்பிடுகின்ற போது:

(இன்னும் அவர்களுடைய இரட்சகனின் வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால் குருடர்களையும், செவிடர்களையும் போல் அதில் விழமாட்டார்கள். சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்-26:73) எனக் குறிப்பிடுகின்றது.

“தஸ்பீஹ் உடைய வசனங்கள் இடம் பெறுகின்ற போது தஸ்பீஹ் செய்வது கொண்டும், (இஸ்திஆதா) பாதுகாப்பு வசனங்கள் வருகின்ற போது பாதுகாவல் தேடுவது கொண்டும் செயல்படுவதுடன், வசனங்களுடன் மனம் விரிந்த தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது சிந்திப்பதற்கு துணையாக அமையும். மேலும் ஃபாதிஹா அத்தியாயம் ஒதப்பட்டதும் அதற்குப் பதிலளித்து ஆமீன் கூறுவதால் மகத்தான கூலியும் கிடைக்கின்றது.

(இமாம் ஆமீன் கூறினால் நீங்களும் ஆமீன் கூறுங்கள் ஏனெனில் மலக்குகளும் ஆமீன் கூறுகின்றனர். எவர் ஆமீன் கூறுவது மலக்குகளின் ஆமீனுடன் நேர்படுகின்றதோ அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி). அதே போன்று இமாம் “ஸமி அல்லா ஹு லிமன் ஹமிதா” எனக் கூறினால் அதற்குப் பதிலளித்து ” றப்பனா லகல் ஹம்து” எனக் கூறுவது மகத்தான கூலியைப் பெற்றுத்தரும்.

5. ஓதலை தனித்தனி வசனமாக ஓதுதல்:

இது வசனத்தை விளங்கவதற்கும், சிந்திப்பதற்கும் பிரதான காரணியாகவும், நபியின் சுன்னத்தாகவும் விழங்குகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஓதல் அமைப்பு ஒவ்வொரு எழுத்தையும் தெளிவாக்கிக் காட்டக்கூடியதாக இருந்தது.

6. அல் குர்ஆனை அதன் முறையைப் பேணியும், அழகிய ஓசை நயத்துடனும் ஓதுதல்:

அல்லாஹ் அல்குர்ஆனில்: “மேலும் குர்ஆனை (தெளிவாக வும்), அதன் முறையைப் பேணியும் ஓதவீராக எனக் குறிப்பிடுகின்றான். “உங்களது ஓசை நயத்தைக் கொண்டு அல் குர்ஆனை அலங்கரியுங்கள். ஏனெனில் அழகிய ஓசை நயம் குர்ஆனுக்கு இன்னும் அழகை அதிகரிக்கின்றது” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஹாகிம்).

7. அல்லாஹ் தொழுகையில் பதில் தருகின்றான் என்பதை அறிந்து தொழுதல்:

அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தொழுகை என்ற ”ஃபாத்திஹா” அத்தியாயத்தை எனக்கும் எனது அடியானுக்கும் இடையில் இரு பகுதிகளாக பிரித்து வைத்துள்ளேன், எனது அடியான் வேண்டுவதெல்லாம் அவனுக்கு (என்னால்) வழங்கப்படும், அடியான் “அல்ஹம்து லில்லாஹ் றப்பில் ஆலமீன்” எனக் கூறினால் அல்லாஹ் எனது அடியான் என்னை புகழ்ந்துள்ளான் எனக் கூறுகின்றான், (அடியான்) “அர்ரஹ் மானிர் ரஹீம்” எனக் கூறினால் அதற்கு அல்லாஹ் “எனது அடியான் என்னை துதித்துள்ளான்” எனக் கூறுகின்றான், (அடியான்) “மாலிகி யவ்மித்தீன்” எனக் கூறினால் அதற்கு அல்லாஹ் “எனது அடியான் என்னை மேன்மைப்படுத்தி விட்டான்” என பெருமிதம் கொள்கின்றான், “அடியான் இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன்” எனக் கூறினால் அதற்கு அல்லாஹ் “இது எனக்கும் எனது அடியானுக்கும் இடையிலுள்ளதா (சமாச்சாரமா)கும், எனது அடியான் வேண்டுவதை எல்லாம் அவனுக்கு உண்டு. (நான்வழங்குவேன்) (அடியான்) ” இஹ்தி நஸ்ஸிராதல் முஸ்தகீம் ஸிரா தல்லதீன் அன்அம்த அலைஹிம் கைரில் மஃக்லூபி அலைஹிம் வலல்லால்லீன்”; எனக் கூறினால் இது எனது அடியானுடன் தொடர்புடயதாகும், எனது வேண்டுவதை அவனுக்குண்டு) வழங்குவேன். என அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிக் காட்டினார்கள்.

8. தொழுகையில் (சுத்ரா)தடுப்பை வைத்து, அதன் பக்கமாக நெருங்கித் தொழுதல்:

இவ்வாறு தொழுவதால் உள்ளச்சத்துடனும், பார்வையை சிதறிவிடாமலும், அதனைக் கடக்க எத்தணிப் போரை தடுத்தும், நிம்மதியாக தொழுவதற்குத் துணையாகவும் அமைவதுடன், தொழுகையை ஊடறுத்துச் சென்று அதனை பாழடித்திடும் ஷைத்தான்களின் நடவடிக்கைகளிகலிருந்தும் தற்காத்துக் கொள்ள உதவும். (உங்களில் தொழும் ஒருவர் ஷைத்தான் அவரது தொழுகையை முறித்திடாதவாறு (சுத்ரா) தடுப்பிற்கு நெக்கமாக நின்று தொழுது கொள்ளட்டும். என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.(அபூதாவுத்).

9. வலது கையை இடது கையின் மீது ஆக்கி நெஞ்சின் மீது வைத்து தக்பீர் கட்டுதல்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக்காக தயாரானால் அவர்களது வலது கையை இடது கையின் மீதாக்கி, நெஞ்சின் மீது வைப்பார்கள. இந்த அமைப்பு பணிந்து யாசிப்பவன் நிலை போன்றதாகும். மேலும் அது வீண் சேட்டைகளிலிருந்து தடுப்பதுடன், இறை அச்சத் திற்கு மிகவும் நெருக்கமாகவும் அமைகின்றது.

10. பார்வையை சுஜூத் செய்யும் இடத்தின் பக்கமாக நோக்குதல்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுவார்களாயின் தனது தலையை தாழ்த்தி தனது பார்வையை பூமியின் பக்கமாக செலுத்துபவர்களாக இருந்தார் கள். “தஷஹ்ஹுத்” ஓதுவதற்காக அமர்ந்தால் தனது பார்வையை ஆட்காட்டி விரலின் பக்கம் நோக்கியவர்களாக ஆக்கி, அதனை (விரலை) அசைப்பவர்களாக இருந்தார்கள். என அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

11. ஆட்காட்டி விரலை அசைத்தல்:

இது இரும்பால் அடிப்பதை விட ஷைத்தானுக்கு மிகவும் கடிமான ஒரு கடிமானதாகும் என (முஸ்னத் அஹ்மத்) எனும் கிரந்தத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அடியான் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதும், வணக்கத்தில் மனத்தூய்மையும் பொதிந்துள்ளது. இது ஷைத்தான் மிகவும் வெறுக்கின்ற ஒரு காரியமாகும்.

12. தொழுகையில் அத்தியாயங்கள், வசனங்கள், திக்ர்(இறை நினைவு)கள், பிரார்த்தனைகள் ஆகியவற்றை பலதரப்படுத்தி ஓதுதல்:

இந்நிலை தொழுகையாளிக்கு புதிய பல கருத்துக்கள், திக்ருகள் ஆகியவற்றை உணர்த்தும். இந்த நடைமுறை சுன்னாவாகவும், உள்ளச்சத்தில் பூரண நிலையை தேடித்தரக் கூடியதாகவும் இருக்கின்றது.

13. சுஜூதின் வசனங்கள் குறிக்கிடும் போது சுஜுத் செய்தல்.

இன்னும் அழுதவர்களாக முகம் குப்புற விழுவார்கள் இன்னும் அவர்களுடைய உள்ளச்சத்தையும் (அது) அதிகப்படுத்தும். என 18:109 வனத்திலும், அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்கள் மீது ஓதிக் காட்டப்பட்டால் அவர்கள் அழுதவர்களாகவும், சுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள். என்று 19:58 வசனத்திலும் அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிட்டுக் காட்டுகின்றான்.

“ஆதமின் மகன் சுஜ்தா வசனத்தை ஓதி சுஜுதும் செய்தால் ஷைத்தான் ஒரு ஓரமாக ஒதுங்கி, அழுது கொண்டு, எனக் கேற்பட்ட கேடே! சுஜூது செய்யுமாறு பணிக்கப் பட்ட ஆதமின் மகன் அதனை நிறை வேற்றினான். ஆகவே அவனுக்கு சுவனம் உண்டு. நானும்; சுஜுது செய்யும்படி ஏவப்பட்டிருந்தேன். ஆனால் (அதனை நிறை வேற்றாது) மறுத்தேன். ஆகையால் எனக்கு நரகம் உண்டு எனக் கூறி, கூறி கதறுவான். என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

14. அல்லாஹ்விடம் ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாவல் கோரல்:

ஷைத்தான் எமது விரோதியாவான். தொழுகையாளி ஒருவரின் உள்ளச்சம் போகும் வரை அவனது தொழுகையை குழப்பி, அவனில் ஊசலாட்டங்களை உருவாக்கிக் கொண்டிருப்பது அவனது விரோத செயற்பாடுகளில் உள்ளதாகும். இதனால்தான் அடியான் அல்லாஹ்விடம் நெருங்கிச் செல்லும் போதெல்லாம் அவனை வழிப்பறிக் கொள்ளைக்காரன் போன்று தடுத்து நிறுத்துகின்றான். இறை விசுவாசி இவைகளுக்கு முன்னால் உறுதியாக இருப்பதும், சகிப்புடனும் இருந்து அதிலிருந்து விடுதலை பெறத் தேவையான திக்ருகள், தொழுகைகள் ஆகியவற்றை வாழ்வில் கடைப்பிடித்து (அரண் அமைப்பதால்) அவன் அதிலிருந்து விலகிவிடுகின்றான். ஏனெனில் “ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதாகும் என அல்லாஹ் அல்குர்ஆனில் 3:76-ல் குறிப்பிட்டுக் காட்டுகின்றான்.

15. முன்னோர்களின் தொழுகையிலுள்ள உயிரோட்டத்தை சிந்தித்தல்:

அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகை நேரம் வந்து விட்டால் நடுக்கம் பிடித்து, அவர்களின் முகம் சிவந்து விடும். அது பற்றி அவர்களிடம் வினவப்பட்ட போது “அல்லாஹ்வின் மீதாணையாக! வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றின் மீது சுமத்தப்பட்ட இந்தப் பொறுப்பை அவைகள் ஏற்காது, ஒதுங்கிக் கொண்டன. ஆனால் நான் அதனை சுமந்து கொண்ட நேரம் வந்து விட்டது. எனக் கூறுவார்கள். எனவும், அறிவிக்கப்படுகிறன்றது. ஸயீத் அத்தன்னூகி என்ற அறிஞர் தொழ ஆரம்பித்தால் அதை முடிக்கின்ற வரை அவரது கன்னங்களிலிருந்து கண்ணீர் கசிந்த வண்ணமாகவே இருக்கும் எனக் கூறுகின்றனர்.

16. தொழுகையில் இறையச்சத்துடன் இருப்பது பற்றிய சிறப்பம்சத்தை உணர்தல்:

கடமையான தொழுகை சமூகம் தரும் எந்த முஸ்லிமும் அதன் உழூவையும், அதன் ருகூவையும், அதன் உள்ளச்சத்தையும் அழகு படுத்திக் கொள்வாரானால் அவரது பெரும்பாவமில்லாத எந்தப்பாவத்திற்கும் அது பரிகாரமாக அமையும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

17. தொழுகை பிரார்த்தனை செய்ய வேண்டிய இடங்களில் -குறிப்பாக- சுஜூதின் நிலையில் அதிகம் ஈடுபாடு காட்டுதல்:

உங்கள் இரட்சகனை பணிவாகவும், இரகசியமாகவும் பிரார்த்தியுங்கள். (7:55). அடியான் தனது இரட்சகனுக்கு சுஜூதின் நிலையில் மிகவும் நெருக்கமாக இருக்கின்றான். ஆகவே அதில் பிரார்த்தனையை அதிகப்படுத்துங்கள். (முஸ்லிம்).

18. தொழுகைக்குப்பின் ஓத வேண்டிய அவ்ராதுகளை ஓதுதல்:

இது இதயத்தில் இறை அச்சத்தின் தாக்கத்தை உண்டு பண்ணுவதோடு, தொழுகையில் பெறப்படும் பரகத் (அபிவிருத்தி) களை இஸ்திரப்படுத்தியும் வைக்கின்றது.

  இரண்டாவது அம்சம்  

இறையச்சத்தை திசை திருப்பி, அதன் தூய்மையை கெடுக்கின்ற சகல விதமான தடைகளையும், அம்சங்களையும் தவிர்த்தல்.

19. தொழுமிடத்தில் தொழுகையாளியை பராக்காக்குகின்றவைகளை அகற்றுதல்:

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் -அன்னை- ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் பல வர்ணங்கள் தீட்டப்பட்ட ஆடை ஒன்றிருந்தது. அதனைக் கொண்டு அவர்கள் தனது வீட்டின் ஒரு பகுதியை திரையிட்டுக் கொள்பவர்களாக இருந்தார்கள். இதனை அவதானித்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “எம்மை விட்டும் இந்த வருணத்திரையை அகற்றி விடும்! அதன் உருவங்கள் எனது தொழுகையில் என் கவனத்தை திசை திருப்பிக் கொண்டே இருந்ததது” எனக் கூறினார்கள். (புகாரி).

20. தொழுபவரின் தொழுகையை பாராமுகமாக்கும் வர்ணங்கள், எழுத்துக்கள், அல்லது உருவங்கள் ஆகியவைகளை தாங்கிய ஆடையுடன் தொழாதிருத்தல்:

அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நாட்சதுர வரி இடப்பட்ட ஒரு ஆடை இருந்தது. அதன் வர்ணங்களில் (தொழு கையில்) ஒரு போது அவர்கள் பார்வை பட்டுவிட்டது. அவர்களின் தொழுகை முடிந்ததும் “இதனை அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா என்பரிடம் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக எந்தவிதமான வரிகளும், வர்ணங்களும் அற்ற ஒரு ஆடையை மாற்றி கொண்டு வாருங்கள். ஏனெனில் அது எனது தொழுகையில் எனது கவனத்தை திசை திருப்பி விட்டது. எனக் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னையாரிடம் கூறினார்கள். (முஸ்லிம்).

21. மனம் விரும்பும் உணவுப் பதார்த்தங்கள் தயார் நிலையில் இருக்கும் போது தொழாதிருத்தல்:

இது தொழுகையில் உள்ளச்சத்திற்கு ஊறு விளைவிக்கும் காரணத்தால் “உணவு தயார் நிலையில் இருக்கின்ற போது தொழுகை இல்லை” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்).

22. மல, ஜலங்களை அடக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தொழாதிருத்தல்:

மல ஜலங்களை அடக்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஒருவர் தொழுகையில் ஈடுபடுவதால் அவரது தொழுகயில் ஏற்படும் அச்சத்தை அது குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனால்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: மல ஜலங்களை அடக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தொழுகை கிடையாது எனக் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்).

இவ்வாறு அடக்கிக் கொள்வது சந்தேகமின்றி இறையச்சத்தைப் போக்கிவிடும். இந்த சட்டம் வாயுக்களை அடக்கிக் கொள்வதற்கும் பொருந்தும்.

23. சிறு தூக்கம் மேலாடும் நிலையில் தொழாதிருத்தல்:

தொழுகையில் உங்களில் ஒருவரை சிறு தூக்கம் மிகைத்தால் அவர் என்னதான் பேசுகின்றார் என்பதை உணர்வுபூர்மாக அறிகின்றவரை உறங்கட்டும் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிகார்கள்.(புகாரி)

24. பேசிக் கொண்டிருப்பவருக்கும், தூங்குபவருக்கும் பின்னால் இருந்து தொழாதிருத்தல்:

“தூங்கபவருக்கும், பேசிக் கொண்டிருப்பவருக்கும் பின்னால் தொழ வேண்டாம்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

பேசிக் கொண்டிருப்பவன் தனது பேச்சினால் கவனம் செலுத்தி, அதனால் தொழுகையாளியை அவனது தொழுகையிலிருந்து திசை திருருப்பவான். இன்னும் தொழுகையாளியின் கவனத்தை திசை திருப்புகின்ற ஏதாவது ஒன்று உறக்கத்திலிருப்பவனிடமிருந்து வெளியாகும் சாத்தியம் தென்படும் என்பதை கவனித்தில் கொண்டே இவ்வாறு தடை செய்திருக்க முடியும். (அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்)

25. சிறு கற்களை அகற்றுவதில் கவனத்தை செலுத்தாதிருத்தல்:

(சுஜுதின் போது) கற்களை அகற்றிக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம்: “நீ அப்படி செய்ய வேண்டும் என்ற அவசியம் இருப்பின் ஒரு தடவை செய்யலாம்”. என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சுட்டிக்காட்டினார்கள். (புகாரி)

தொழுகையில் பேணப்பட வேண்டிய இறையச்சத்தைப் பாதுகாத்தல், தொழுகையில் அதிகப்படியான சேட்டைகளை செய்யாதிருத்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தடுத்திருக்க முடியும். ஒருவர் அவ்வாறு செய்ய வேண்டும் என்ற அவசியம் ஏற்படின் அவர் தொழுகையை ஆரம்பிப்பதற்கு முன்னர், சுஜூத் செய்யும் இடத்தை விட்டும் கற்களை அகற்றி விட்டு, தொழுகையில் ஈடுபடுவதே மிகவும் சிறிந்த வழி முறையாகும்.

26. ஓதலால் பிறரை குழப்பத்தில் ஆழ்த்தாதிருத்தல்:

கவனியுங்கள்! நீங்கள் ஒவ்வொரு வரும் அவரது இரட்சகனுடன்தான் உரையாடுகின்றனர். எனவே உங்களில் ஒருவரை மற்றவர் இம்சிக்காமலும், ஒருவர் மற்றவரை விட ஓதலில் (அல்லது தொழுகையில்) சப்தத்தை உயர்த்தாமலும் இருக்கட்டும். என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத்).

27. தொழுகையில் திரும்பிப்பார்ப்பதை விட்டு விடுதல்:

ஒரு அடியான் தொழுகையில் திரும்பிப் பார்க்காத வரை அல்லாஹ் அவனின் பக்கம் முன்னோக்கியவனாக இருக்கின்றான், அவன் எப்பொழுது திரும்பிப்பார்க்கின்றானோ அப்போது அவனை விட்டும் அல்லாஹ் திரும்பிக் கொள்கின்றான். என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூதர் அல்கிபாரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்: ஒரு மனிதன் தொழுகையில் திரும்பிப் பார்ப்பது பற்றி வினவப்பட்டபோது “அது ஒரு அடியானின் தொழுகையில் இருந்து ஷைத்தான் இராஞ்சிச் செல்லும் ஒரு இராஞ்சலாகும்” எனப் பதிலளித்தார்கள். (புகாரி).

28. பார்வையை வானின் பக்கம் உயர்த்தாதிருத்தல்:

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இது பற்றி மிக வண்மையாக கண்டித்திருப்பதுடன், அந்தச் செயலை: “உங்களில் ஒருவர் தொழுகையில் இருந்தால் அவரது பார்வையை உயர்த்த வேண்டாம்” (அஹ்மத்). என்றும்

“தொழுகையில் தமது பார்வைகளை உயர்த்தும் ஒரு கூட்டத்தினர் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்! இல்லையேல் அவர்களின் பார்வைகள் பறிக்கப்பட்டுவிடும்” என்றும் தனது சொல்லால் எச்சரித்தும் இருக்கின்றார்கள். (புகாரி).

29. தொழுகையாளி தொழுகையில் தனக்கு முன்னால் துப்பாதிருத்தல்:

ஏனெனில் அது தொழுகையில் பேணப்பட வேண்டிய உள்ளச்சத்தையும், அல்லாஹ்வுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்கு முறையையும் சிதைத்து விடுகின்றது.

“உங்களில் ஒருவர் தொழுகையில் இருந்து கொண்டிருந்தால் அவருக்கு முன்னால் துப்புவதைத் தவிர்த்துக்; கொள்ளவும். ஏனெனில் அவர் தொழுகின்ற போது அவருக்கு முன்னால் அல்லாஹ் இருக்கின்றான். என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

30. கொட்டாவியை முடிந்த அளவு அடக்கிக் கொள்ளுதல்:

“உங்களில் ஒருவர் தொழுகையில் இருக்கின்ற போது கொட்டாவி வந்தால் அவர் அதனை முடியுமான அளவு அடக்கிக் கொள்ளவும். ஏனெனில் (அதனூடாக) ஷைத்தான் நுழைகின்றான்”. என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

31. தொழுகையில் இடுப்பில் கை கட்டுவதை தவிர்த்தல்:

“தொழுகையில் இடுப்பில் கையை குத்தி நிற்பதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

32. தொழுகையில் ஆடையை பூமியில் அழுந்தும் படி அணிதல்:

தொழுகையில் ஒருவர் ஆடையை பூமியில் அழுந்தும் படியாக விட்டு விடுவதையும், தனது வாயை மூடிக்கொள்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.(அபூதாவுத்)

33. மிகங்களுக்கு ஒப்பாகுவதை விட்டொழித்தல்:

காகம் போல் கொத்துதல், மிருகங்கள் போன்று அகட்டிப் படுக்கை, ஒட்டகம் போன்று ஒரு தளம் அமைத்துக் கொள்ளுவதல் ஆகிய மூன்று காரியங்களையும் தொழுகையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

source: https://todayislamicsound.wordpress.com