Home இஸ்லாம் தொழுகை ஜும்ஆ தொழுகையின் தத்துவத்தையும், மகத்துவத்தையும் தெரிந்து இருந்தால்...
ஜும்ஆ தொழுகையின் தத்துவத்தையும், மகத்துவத்தையும் தெரிந்து இருந்தால்... PDF Print E-mail
Wednesday, 16 September 2015 06:19
Share

ஜும்ஆ தொழுகையின் தத்துவத்தையும், மகத்துவத்தையும் தெரிந்து இருந்தால்...

மனமே! ஜும்ஆ தொழுகையைப் பற்றி நீர் தெரிந்திருக்க மாட்டாய் என்று நினைக்கிறேன். அதன் தத்துவத்தையும் மகத்துவத்தையும் தெரிந்து இருந்தால் இமாம் அவர்கள் குத்பா பிரசங்கம் முடித்து தொழுகைக்காக மிம்பர் படியை விட்டு கீழே இறங்கும்போது இதைவிட பெரிய காரியத்தை முடித்து சாதனை புரிந்து வருவது போல் அவசர அவசரமாக அரையும் குறையுமாக ஒழு செய்துவிட்டு லுங்கி தரையை கூட்டி சுத்தப்படுத்தும் அளவுக்கு லுங்கி உடுத்திக்கொண்டு கட்பனியன் அதாவது ஸ்டைல் பனியன் போட்டுக்கொண்டு தொழுகையில் வந்து நிற்கமாட்டாய்.

முழுக்கையுள்ள சட்டை போடா உனக்கு வசதி இல்லையா? நீர் என்ன ஏழையின் மகனா? நம்மை படைத்து வளர்க்கும் எஜமானனின் முன் அலங்காரமாக நிற்க வேண்டாமா? ஒரு பெரிய அதிகாரியை காண வேண்டுமானால் எப்படி உன்னை அலங்கரித்து செல்வாய்?  நீ வசிக்கும் நாட்டின் உச்சபட்ச தலைவரை சந்திக்கும்போது எப்படி செல்வாய்? ஆனால் இங்கு நீ யாருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வருகிறாய்? உலகையே ஆளும் மகா அதிபதியை அல்லவா?   உன் படிப்பின் இலட்சணம் இது தானா? இதனை நீர் உற்று உணர்ந்து பார்த்தால் தானே உனக்கு உன்னுடைய அறிவீனம் விளங்கும். உதவாத உருப்படாத வேலைகளுக்கே உனக்கு நேரமில்லாமல் இருக்கும்போது மார்க்க விடயத்தில் தெரிந்து கொள்ள உனக்கு எங்கே நேரம் இருக்க போகிறது!

இமாம் மிம்பர் படியில் ஏறும் முன்பே மலக்குகள் தொழுகைக்கு வருகின்றவர்களின் பெயர்களை பதிவு செய்கின்றனர். இமாம் மிம்பர் படி ஏறியதும் மலக்குகள் பதிவு ஏட்டை முடிவிட்டு இமாம் உடைய பிரசங்கத்தை கேட்கின்றனர் என்ற நபி மொழியை இப்போதாவது தெரிந்து கொண்டு தொழுகைக்கு முந்திக் கொள்! இதனை தெரிந்தும் உரிய காலத்தை வீணடித்து பிற்படுத்துவாயானால் நீர் நாடி வரும் நன்மைகளை பெற முடியாமல் போய்விடும். எனவே முந்திக் கொள்.

எவன் ஒருவன் பூமியில் படும்படி கரண்டை காலுக்கு கீழ் லுங்கியை உடுத்துவானேயானால் இறைவன் மறுமையில் அவன் முகத்தை பார்க்கமாட்டான். அவனுடன் பேச மாட்டான். அவனுடைய பாவத்தை சுத்தப்படுத்தவும் மாட்டான் என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மொழியை மனதில் ஏற்று உன் போக்கை மாற்றிக் கொள்.

கடைசியாக கூற விரும்புவது...

உங்கள் மனதில் எப்போதும் இறையச்சம் நிலவட்டும். அதுதான் மறுமையில் உங்களுக்கு செல்வமாகும். நேர்வழியை விட்டு என்றைக்கும் விலகிவிடாதீர்கள். அவ்வாறு விலகி விட்டால் அது ஈடுகட்ட முடியாத பெரியதோர் நஷ்டமாகும் .

உள்ரங்கத்திலும் சரி, வெளிரங்கத்திலும் சரி, எந்த நிலைமையிலும் நீங்கள் இறையச்சம் கொள்ளுங்கள்.

உன் வீட்டு மிருகம் மற்றவருடைய தோட்டத்தின் பக்கம் செல்லும்போது அதை நீர் தடுத்து நிருத்துகின்றாய். அதுபோல் உன் மனம் என்னும் மிருகத்தை உலக போகங்களில் பக்கமும் காம இச்சையின் பக்கமும் போக விடாமல் இறைவன் சிந்தனையால் தடுத்து நிறுத்து, ஏனெனில் இறைவன் தன் சன்னிதிக்கு தகுதியுடையவர்களியே தேர்ந்தெடுப்பான்.

நேற்று என்பது முடிவு பெற்றது அதை நம்மால் பெற முடியாது. நாளை என்பது சந்தேகமானது. அதனால் நீர் அதை பெற முடியாமல் போகலாம். இன்று மட்டுமே உனக்குச் சொந்தமானது, அதனை பயன் படுத்திக் கொள்! நாளை செய்யலாம் நாளை செய்யலாம் என்று இதுவரை நீர் எத்தனை முறையோ சொல்லிவிட்டாய். நீர் செய்யக்கூடிய நாள் எப்போது வரப்போகிறதோ தெரியவில்லை. ஏன் உனக்கு தெரியாதா?!

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

source: http://islam-bdmhaja.blogspot.com/2015/09/jumaa-sinthanai.html