Home கட்டுரைகள் குண நலம் நன்றி அபூர்வமாகிறது!
நன்றி அபூர்வமாகிறது! PDF Print E-mail
Saturday, 12 September 2015 08:01
Share

நன்றி அபூர்வமாகிறது!

ஒரு காலத்தில் பிச்சைக்காரர்களுக்குக் காசு தந்தால் அவர்கள் கைகூப்பி “மகராசனாயிரு, மகராசியாயிரு” என்ற வார்த்தைகளை சொல்லி வாழ்த்துவதை சரளமாகக் கேட்க முடியும்.

இன்று பிச்சைக்காரர்களுக்குக் காசு தந்து பாருங்கள். ஏதோ கொடுத்த காசைத் திரும்ப வாங்குவது போல் சலனமே இல்லாமல் அவர்கள் நகர்வதை நீங்கள் சர்வசகஜமாகப் பார்க்கலாம். காசு தருவதற்கு முன்பாவது சில உருக்கமான வசனங்கள் வரலாம். காசு தந்த பின் நன்றி தெரிவிக்கும் பார்வையோ, வார்த்தைகளோ பெற்றால் அது அதிசயமே!

பிச்சைக்காரர்கள் வட்டத்தில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் இப்போது நன்றி என்கிற உணர்வு மிக அபூர்வமாகி வருகிறது எனலாம். குடும்பத்தில், அலுவலகத்தில், பொது இடத்தில் என எல்லா மட்டங்களிலும், எல்லா இடங்களிலும் அது மனிதனிடம் காணச் சிரமமான அபூர்வமான உணர்வாகி வருகிறது. பல சமயங்களில் நன்றி தெரிவிக்கப்படுவது கூட சம்பிரதாயமாகவும், வாயளவிலும் இருக்கிறதே ஒழிய அது ஆத்மார்த்தமாக இருப்பதில்லை.

தினையளவு உதவி செய்தாலும் அதைப் பனையளவாக எடுத்துக் கொள்ளச் சொன்ன திருவள்ளுவர் வாக்கு ஏதோ வேற்றுக் கிரக சமாச்சாரம் போல் தோன்ற ஆரம்பித்து விட்டது.

எனக்குத் தெரிந்த ஒருவர் ஒரு செல்வந்தரிடம் பெரிய பெரிய உதவிகள் வாங்கி வந்தார். அதைப் பற்றிப் பேச்சு வந்த போது அலட்டாமல் சொன்னார். “வேணும்கிற அளவு இருக்கிறது. தருகிறார்”.

“அதற்கும் மனம் வேண்டுமே சார். இருக்கிறவர்கள் எல்லாம் தருகிறார்களா?” என்றேன்.

“அதுவும் வாஸ்தவம் தான். என்னோட சொந்தத் தம்பி வேணும்கிற அளவு வச்சிருக்கிறான். ஆனா எனக்கு நயாபைசா உபகாரம் கிடையாது”

இருப்பவர்கள் எல்லாம் நமக்குத் தந்து உதவ வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறதே தவிர நம்மை விடக் கீழே இருப்பவர்களுக்கு நாம் என்ன உதவி எந்த அளவு செய்கிறோம் என்கிற சிந்தனை சுத்தமாகப் பலரிடமும் வற்றி வருகிறது.

மேலும், தருபவன் எப்போதும் தந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படிச் செய்யும் வரை அவன் நல்லவன் என்று பெரிய மனதுடன் ஒத்துக் கொள்வேன். அவன் ஒரு தடவை மறுத்து விட்டால் வாயிற்கு வந்ததைச் சொல்வேன் என்ற மனோபாவமும் பலரிடமும் வலுத்து வருகிறது.

“அவன் முன்னை மாதிரி இல்லை” என்று சொல்வதன் அர்த்தமே பல இடங்களில் அவன் கொடுப்பதை நிறுத்தி விட்டான் என்பதே.

“கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த ஒன்று நன்று உளக் கெடும்” என்ற குறளுக்கெல்லாம் இப்போது ஆதரவு சுத்தமாகக் கிடையாது. குழந்தைகள் பெற்றோரிடம் “நீங்கள் பெரிதாக என்ன செய்தீர்கள்?” என்று கேட்பதை நாம் சர்வ சகஜமாகப் பார்க்கிறோம். கடவுள் எத்தனையோ கொடுத்திருந்தாலும் கொடுக்காத ஒன்றைக் காரணம் காட்டியே ‘கடவுள் எங்கே இருக்கார்? இருந்தால் எனக்கு இப்படி செய்வாரா?’ என்று புலம்புவதைக் கேட்கிறோம்.

இதில் பெரிய தமாஷ் என்னவென்றால் பிறரிடம் பெற்ற உதவிகளை உடனுக்குடன் மறக்கும் மனிதனுக்கு, தான் அடுத்தவருக்குச் செய்யும் கடுகளவு உதவிகளும் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருப்பது தான்.

இது ஒரு பெரிய மனப்பற்றாக்குறையே. நன்றி என்ற உணர்வு உயர்ந்த உள்ளங்களில் மட்டுமே உருவாகக் கூடியது. பெருகின்ற உதவியின் அருமை தெரிந்தவன் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பான். அது இல்லாமல் இருப்பது உள்ளம் இன்னும் உயரவில்லை அல்லது உள்ளம் மரத்து விட்டது என்பதையே சுட்டிக் காட்டுவதாக இருக்கும். அந்த விதத்தில் நம் மன வளர்ச்சியை அளக்கும் அளவுகோல் தான் நன்றியுணர்வு.

மேலும் நன்றியுணர்வு இல்லாதவன் எதையும் பெறத் தகுதியில்லாதவனாகிறான். எனவே இயற்கையின் விதி அவனுக்குத் தானாகக் கொடுப்பதைக் குறைத்து விடுகிறது. (அப்படி குறைக்கா விட்டாலும் அவன் பெற்றதை யாருக்காக சேர்த்து வைக்கிறானோ அவர்கள் அவனிடம் நன்றி காட்டாதபடி பார்த்துக் கொள்கிறது.) எனவே பெறும் எதற்கும் மனதார நன்றி தெரிவியுங்கள். நன்றியுடனிருங்கள். பெறுவது பெருகும். நல்ல விதத்தில் பலனும் தரும்.

– என்.கணேசன்

source: http://zubairsiraji.com/?p=1329#more-1329