வயோதிகம் PDF Print E-mail
Wednesday, 09 September 2015 06:44
Share

வயோதிகம்

  சாலிகா இக்பால் – பாளையங்கோட்டை  

ஒரு குவளை தண்ணீரை சிரமத்துடன் சுமந்து கொண்டு கொல்லைப்புறம் சென்று கொண்டிருந்தார் இப்ராகிம். முன்பொருகாலம் இதேபோல் தட்டுத் தடுமாறியதுண்டு. அப்போது அவருக்கு மழலை பேசும் வயது. அவருடைய அந்தத் தடுமாற்றம் அவருடைய அம்மாவுக்கும், மற்றவர்களுக்கும் ரசிக்கக் கூடியதாக இருந்தது.

பின்னொரு காலம் தடுமாறியவர்களுக்கெல்லாம் இவருடைய கரங்கள் தாமாக உதவி செய்ததும் உண்டு. ஆனால் இந்த அறுபது வயது காலத் தடுமாற்றம் அனுதாபப்படக்கூடியதாக இருந்தனை காலத்தின் விளைவுகளை எண்ணி அவருடைய இதழ்களில் புன்னகை அரும்பியது.

தானே சிரித்துக்கொண்டு செல்லும் இப்ராகிமை பார்க்க அவருடைய மனைவி மர்யம் பீவிக்கு எரிச்சலாக வந்தது. காரணம் காலையிலிருந்து மதியம் 12 மணி வரை ஒன்றுமே சாப்பிடாத அவளுடைய வயிறுதான். முதல்நாள் ஆக்கியதில் மீதம் இருந்ததை கணவருக்குக் கொடுத்து விட்டு, வெறும் தண்ணீரை மட்டும் அருந்தி விட்டு இருந்தாள்.

ஆயிற்று இன்னும் இரண்டு சிட்டம் நூலையும் சுற்றி முடித்து விட்டு, நூல் தார்களை சாகுலிடம் கொடுத்தால் இரண்டு ரூபாய் கிடைக்கும். இன்றைய பொழுதை ஓட்டி விடலாம் என்று எண்ணிக் கொண்டு கருமமே கண்ணாக இருந்தாள். கிழவனாரின் சிரிப்பு அவளுடைய சிந்தனையைக் கலைத்தது.

“ஏது மகன் வீட்டிலிருந்து கோழிக்கறி விருந்து சாப்பிட கூப்பிட்டு விட்டார்களா என்ன? ஒரே சிரிப்பாக இருக்கிறதே?”

பொக்கை வாய் முழுவதும் தெரிய சிரித்த இப்ராகிம் நானா, “உனக்கு அழைப்பில்லாமலா எனக்கு மட்டும் வரும். நம்ம நிலைமையை எண்ணினேன். சிரிப்பு வந்தது.”

“நம்ம நிலைமை உங்களுக்கு சிரிப்பு வருதா? இந்த தள்ளாத வயதிலும் நாம் பாடுபட்டு கால ஜீவனம் கழிப்பது உங்களுக்கு ரொம்ப சந்தோஷமாவா இருக்கு?”

“என்ன செய்ய இந்த வயசு நேரத்தில் நம்ம சொந்த வேலையைக் கவனிக்கவே தடுமாறும் போது, உழைத்து சாப்பிடும் நிலைமை இருக்கிறதேஸ எல்லாம் இறைவன் விட்ட வழி.”

“ஆமா, ஆமா ! இறைவன் விட்ட வழி, இறைவன் விட்ட வழின்னு இரண்டு மகன்களையும் தகுதிக்கு மீறி மேற்படிப்பு படிக்க வச்சு, என்னுடைய நகை நட்டையெல்லாம் கொடுத்து ஆளாக்கினீங்க. இப்போ அவனுக பொண்டாட்டுமாருங்க பின்னாலே போயிட்டான்கள். அடுத்த வீட்டுல அண்ணனும், எதிர் வீட்டுல தம்பியுமா அமோகமா இருக்கானுங்க. எங்கியும் நல்லா இருக்கட்டும். ஆனால் அண்ணன் பார்க்கட்டும் என்று தம்பியும், தம்பி பார்க்கட்டும் என்று அண்ணனும் நம்மளை ஏறெடுத்தும் பார்க்காம இப்படி விட்டது கொஞ்சங்கூட நல்லா இல்லை.” பசியுடன் நீண்ட வசனம் பேசிய களைப்புடன் கண்ணோரம் துளிர்த்த நீரை சுண்டியெறிந்தாள் மரியம்மா.

“அவங்க என்ன செய்வாங்க மரியம்! அந்த மகராசிங்க வந்துதான் இப்படி மாத்திட்டாங்க.”

“இதா பாருங்க ! அவளுகளை சொல்ல ஒன்னும் குத்தமில்லை. அவனுக ஆரம்பத்திலேயே அவளுகளுக்கு இடம் கொடுத்து குட்டி சுவராக்கியாச்சி. நாமளும்தான் நாற்பது வருஷ காலம் குடித்தனம் பண்ணினோம். நான் உங்க சொல்லைத் தட்டியதுண்டா சொல்லுங்க.”

“நீ தட்டமாட்டே. உன்னை மாதிரி எல்லாரும் இருப்பாங்களா?”

“அந்த பெருமை உங்களுக்குதான். உங்க சொல்லை கேக்காட்டி நீங்கள் எப்படி கோபக்காரராக மாறுவீர்கள் என எனக்கு தெரியாதா. அப்படிப்பட்ட உங்களுக்கு இப்படி பசங்க வந்து வாய்ச்சாங்களேஸ என்னத்த சொல்றது.”

“அதுவும் சரிதான். என் தாய் – தகப்பனை நாங்க கவனிக்கிறது எங்க கடமையென்று இவங்க அடித்துச் சொன்னால், அவர்கள் என்ன சொல்ல முடியும். ம்ஸ எல்லாம் நம்ம நேரம். வேற என்னத்தச் சொல்ல?”

“உங்க தாய் – தகப்பனுக்கும் என்ன குறை வச்சோம். அதுவும் காணாது என்று ஸ சிலோன்காரர் உங்களுக்கு மாமாவா? சாச்சாவா? எங்கேயோ உள்ள அனாதை, அவருக்குத்தான் கொஞ்சமா பாத்தீங்க. என்ன புண்ணியம் நமக்குத்தான் நாதியில்லாம போய்விட்டது.”

“அப்படி ஏன் சொல்றே. இரண்டு மகன்கள், பேரப் பிள்ளைகள், இவங்களெல்லாம் இருக்க, எல்லோருக்கும் மேல் அல்லாஹ் ஒருவன் இருக்கிறான்.”

“ஆமா... அப்படி வேதாந்தம் பேசினால் ஆச்சா. பக்கத்திலே மகங்க வீட்லே தினமும் விருந்துதான். தெருவே மணக்குது. அவனுங்களோ, அவங்க பிள்ளைகளோ நம்மள ஏறெடுத்தும் பார்க்கறது இல்லை.”

“பிள்ளைகளை குறை சொல்லாதே பெற்றோர் வழிகாட்டியபடி நடக்கிறார்கள். அதுகளுக்கு என்ன தெரியும். பாவம் ஸ அந்த சிலோன்காரருக்கு நாம் உதவியது மாதிரி, யாரையாவது அல்லாஹ் புகலிடம் காட்டுவான்.”

“நீங்க சிலோன்காரரை கவனிச்சாப்ல யாரு கவனிப்பா. அல்லாஹ் புகலிடுவான், புகலிடுவான்னு சொல்லி, சொல்லி ஐந்து வருஷம் ஓடிடுச்சி! வர வர கண்ணும் சரியா பாக்கமாட்டேங்கிது.” ஆற்றாமையுடன் எழுந்து, தடுமாறியவாறு நூல் தார்களைக் கொடுத்துவிட்டு வரக் கிளம்பினால் மரியம்பீவி.

இந்த தம்பதிகளைப் பற்றி அதிகம் பேச வைத்தது இவர்கள் சிலோன்காரரைக் கவனித்த விதம். சிலோன்காரர் என்றழைக்கப்பட்ட ஹபீபுல்லாவும், அவர் மனைவியும் ஒருநாள் திடுதிப்பென்று அந்த சிற்றூரில் வந்து இறங்கினார்கள். ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு அதில் குடியிருந்தார்கள். மாதாமாதம் சிலோனிலிருந்து அவருடைய மகனிடமிருந்து பணம் வரும். மகன் அங்கு கடை வைத்திருப்பதாகவும், இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்தியாவிற்குத் திரும்பி இங்கு கடை வைக்கப் போகிறான் என்றும் கூறிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று பணமோ, கடிதமோ வராமல் போனது. ஹபீபுல்லா தம்பதிகள் மிகுந்த கலக்கமடைந்தனர்.

தினம் தினம் மகனிடமிருந்து தபாலை எதிர்பார்த்து ஏங்கி, அந்த ஏக்கத்திலேயே ஹபீபுல்லாவின் மனைவியும் மெளத்தாகிவிட்டார். கொண்டு வந்த பணம், சாமான்கள் எல்லாம் காலியாகி ஹபீபுல்லா அனாதையானார். மகனைப் பற்றி எந்தவொரு தகவல் இல்லாத நிலையிலும், மனைவியையும் இழந்து தவித்த ஹபீபுல்லாவை இப்ராகிம்தான் பெற்ற தந்தையை கவனிப்பது போல் கவனித்துப் போற்றினார்.

“என் மகன் பார்க்கிற கடமையெல்லாம் நீங்க பார்க்கறீங்க” என்று கூறிக் கூறி நன்றிக் கண்ணீர் துளிர்ப்பார் ஹபீபுல்லா. காலச் சக்கரங்களின் சுழற்சியால் ஹபீபுல்லாவும் ஒருநாள் மெளத் ஆன போது, இப்ராகிம் தான் எல்லாக் கடமைகளையும் ஒழுங்காக நிறைவேற்றினார். ஊரிலுள்ளோர் இவரை விமர்சித்ததோடு நிறுத்திக் கொண்டார்கள். இத்தகைய நல்ல குணம் படைத்தவருக்கு, கடைசி காலத்தில் இப்படிப் பிள்ளைகளின் உதாசீனம் தாங்கொணா மனத்துன்பத்தைக் கொடுத்தது.

“பீப்” என்ற சத்தத்துடன் அந்தப் படகுக்கார் இப்ராகிமின் குடிசை முன் நின்றது. அந்தத் தெருவிற்கு இப்படிக் கார்கள் வருவது ஒன்றும் புதிதல்ல. சமூகத்தில் உயர்ந்த பதவிகளை வகிக்கும் அவருடைய மகன்களை தேடி அடிக்கடி கார்கள் வருவதுதான். இப்பவும் அது போல யாரோதான் வந்திருப்பார்கள் என்றிருந்தவர்க்கு காரிலிருந்து இறங்கிய ஆள் இவரை நோக்கி வந்ததையும், “நீங்கள் தானே இப்ராகிம் நானா? என்று கேட்டதும் மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.

“ஆமாம், வாப்பா. நீங்கள் யார் என்று எனக்கு தெரியவில்லையேஸ வயதாகிவிட்டதால் கொஞ்சம் ஞாபக மறதி” என்று பொக்கை வாயுடன் கூறி சிரித்தவர் அவனை உட்காரச் சொல்லி உபசரிக்க சங்கடப்பட்டார்.

அதைப் புரிந்து கொண்டவர் போல் வந்தவர் அவர் அருகில் அன்புடன் அமர்ந்து இப்ராகிம் இரு கைகளையும் பிடித்துக் கொண்டார். “உங்களுக்கு என்னைத் தெரிந்திருக்க நியாயமில்லை. சிலோன்கார ஹபீபுல்லாவைத்தான் உங்களுக்குத் தெரியும். அவருடைய மகன் மன்சூர்தான் நான்” என்றார்.

“அல்ஹம்துலில்லாஹ்” என்று கூறிய இப்ராகிமிற்கு கொஞ்ச நேரம் வார்த்தைகளே வரவில்லை. “உங்க நினைவோடு தான் உங்க பெற்றோர்கள் தவறினார்கள். ஆனாலும் நீங்கள் இப்படி எந்தத் தகவலுமே கொடுக்காமல் இருந்திருக்கக் கூடாது.

“நடப்பவை நடந்துதானே தீரும். நாம் நினைப்பது எங்கே நடக்கிறது. வாப்பாவையும், அம்மாவையும் ஊருக்கு அனுப்பிவிட்டு, கடையை செட்டில் பண்ணிவிட்டு வரத்தான் நான் மட்டும் சிலோனில் தங்கி இருந்தேன். திடீரென்று வந்த வெள்ளப் பெருக்கில் கடை, பணம் எல்லாவற்றையும் இழந்து அதிர்ச்சியில் புத்தி சுவாதீனமில்லாமல் ஐந்து வருடங்கள் இருந்திருக்கிறேன். அல்லாஹ் வழி நடக்கும் ஒரு பெரியவர் தான் எனக்கு வேண்டிய உதவிகள் செய்து, குணப்படுத்தி என்னை பழைய நிலைக்கு ஆளாக்கினார். இதற்குள் எனக்கு பெற்றோர்கள் தங்கியிருக்கும் ஊர் கூட மறந்து விட்டிருந்தது. என்னை ஆதரித்த பெரியவர்தான் வியாபாரத்திலும் உதவி செய்து வசதி மிக்கவனாக ஆக்கினார். ஆனாலும் என் பெற்றோர்கள் நினைவு என்னை விட்டு போகவில்லை. என்னை ஆதரித்த பெரியவரின் மகளையே மணமுடித்து, இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.

நாங்கள் எல்லோரும் மெட்ராஸிலேயே செட்டில் ஆகி இரண்டு வருடங்களாகின்றன. தற்செயலாக இந்த ஊர்க்காரரை நண்பராகப் பெறும் அரிய வாய்ப்பு கிட்டியது. அவர் உங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். நீங்கள் ஒரு சிலோன்கார தம்பதியை ஆதரித்ததைக் கூறினார். அவர்கள் என்னுடைய பெற்றோர்களாக இருப்பார்களோ என்ற ஐயத்துடன் பெயரைக் கேட்டேன். ஹபீபுல்லா என்று கேட்டதும் ஓடோடி வந்தேன்” என்று தன்னுடைய கதையைக் கூறி கண்ணீருடன் நிறுத்தினார் மன்சூர்.

“அழாதீங்க மன்சூர். நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். உங்க பெற்றோர்களை ஆதரித்த எனக்கு உங்களுக்கு ஒரு வாய் காப்பி கூட தந்து உபசரிக்க முடியலேயே என்றுதான் வருத்தமாக இருக்கிறது” என்றார் இப்ராகிம்.

“அப்படியொன்றும் சொல்லாதீங்க வாப்பா, நீங்கதான் இனிமேல் எனக்கு பெற்றோர்கள். என்னுடைய பெற்றோர்களை காப்பாற்றிய உங்களை இந்த நிலைமையில் இங்கு விட்டுச் சென்றால் அல்லாஹ் எனக்கு ஒருநாளும் துணை செய்ய மாட்டான். நீங்கள் இருவரும் என்னுடன் வந்தால், என் மனைவியும் மிக்க மகிழ்ச்சியடைவாள்” என்று கூறி அந்த இரண்டு வயோதிகர்களையும் ஆயத்தப்படுத்தி, தனது படகுக் காரில் அழைத்துச் சென்றார் மன்சூர். இப்ராகிமின் மகன்களும் மருமக்களும் பேயறைந்தது போல் நின்று கொண்டிருந்தார்கள். வானுலகிலிருந்து அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கீழ்க்கண்ட வசனத்தை இன்றுதான் பொழிவது போலிருந்தது.

”முதியவர் ஒருவருக்கு அளிக்கப்படும் கெளரவம் இறைவனுக்குச் செய்யப்படும் மரியாதையாகும். முதியவர்களுக்கு அவர்களது வயோதிகத்தின் காரணமாக கண்ணியமளிக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் அவர்களது வயோதிகப் பருவத்தில் மரியாதை செய்பவர்களை இறைவன் நியமிக்கிறான்.”

( நர்கிஸ் – ஆகஸ்ட் 2015 )