Home கட்டுரைகள் சமூக அக்கரை அறிஞர் பெருமக்களே! விழித்தெழுவது காலத்தின் கட்டாயம்!
அறிஞர் பெருமக்களே! விழித்தெழுவது காலத்தின் கட்டாயம்! PDF Print E-mail
Friday, 21 August 2015 06:44
Share

அறிஞர் பெருமக்களே! விழித்தெழுவது காலத்தின் கட்டாயம்!

உண்மையிலேயே இன்றைய அறிஞர் பெரு மக்களுக்கு இன்றைய மக்களின் இழிநிலை தெரியாதிருக்க வாய்ப்பே இல்லை.

மனிதர்கள் இன்று ஐயறிவு மிருக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் தெளிவாகச் சொன்னால் மிருகங்களை விடக் கேடுகெட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எனக் கூறிக் கொண்டு குடி, கூத்து, விபச்சாரம், வன்புணர்ச்சி, கொலை, கொள்ளை, களவு, மோசடி, ஏமாற்று என அனைத்து வகை கூடா ஒழுக்கங்களும் இன்று தலைவிரித்து ஆடுகின்றன.

அரசியல் வியாபாரிகளிடமும், ஆட்சியாளர்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் மேலிருந்து கீழ் வரை அனைத்து மட்டங்களிலும் லஞ்சமும், ஊழலும் காட்டாறாக கரை கடந்து ஓடிக்கொண்டிருக்கின்றன. அரசில் வியாபாரிகளும், மதவியாபாரிகளும் கூட்டு சேர்ந்து மக்கள் சொத்துக்களை சூரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்களும், பெரும் செல்வந்தர்களும் நூறு தலைமுறைக்குச் சொத்துக்களை குவித்துக் கொண்டிருக்கும் நிலையில் நடுத்தர மக்களும், ஏழைகளும் மேலும் மேலும் ஏழைகளாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள். அன்றாட வயிற்றுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கே திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரும் பெரும் தவறுகளைச் செய்யும் அசாத்தியத் துணிச்சல் இன்று போல் என்றும் இருந்ததாகத் தெரியவில்லை. எப்படிப்பட்டத் தவறுகளைச் செய்தாலும் தர்கா, சர்ச், கோவில் உண்டியல்களில் பணத்தைப் போட்டு மதகுருமார்களுக்கும் காணிக்கைச் செலுத்தினால் போதும். கடவுளை ஏமாற்றி விடலாம்; கடவுளின் மன்னிப்பைப் பெறலாம் என்ற மூட நம்பிக்கையில் ஆத்திகர்கள் இருக்கிறார்கள்.

ஓரளவு சிந்தனையுள்ளவர்கள் இம்மதகுருமார்களின் அட்டூழியங்களைத் தாங்க இயலாமல், கடவுளே இல்லை; கடவுளை மற என நாத்திகத்தைப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆக ஆத்திகர்களும், நாத்திகர்களும் இணைந்து செய்யும் துர்போதனைகளால், மக்கள் அவர்கள் செய்யும் மகாபாதகங்களுக்கு எவ்விதத் தண்டனையும் இல்லை என்ற அசாத்தியத் துணிச்சலில் பஞ்சமா பாவங்களையும் துணிந்து செய்து கொண்டிருக்கின்றனர். இவ்வுலக வாழ்க்கையே வாழ்க்கை என ஏமாறுகின்றனர்.

அதன் தீய விளைவுதான் இன்றைய மனிதர்களின் நான்கு கால் மிருகங்களை விட கேடு கெட்ட நிலை. மனிதர்களின் இம்மிருக வாழ்க்கை மாறி அவர்கள் மனிதர்களாக வாழவேண்டு மென்றால், எந்த மஹானின் வாழ்க்கைத் திட்டமும் பலன் தராது. எந்த மதமும், இஸமும், கொள்கையும் பலன் தராது. ரஷ்யன் தயாரித்த ஒரு கருவியை சிறந்த முறையில் இயக்க அமெரிக்கனின் வழி காட்டலை ஏற்கக் கூடாது என்பதை ஏற்றுக் கொள்ளும் மனித அறிவு, மனிதனைப் படைத்த இறைவனின் வழிகாட்டலைத் தவிர்த்து மனிதனே கற்பனை செய்துள்ள வழிகாட்டலை ஏற்று நடப்பது வெற்றியைத் தருமா? அறிவுடமையா? சிந்தியுங்கள்.

மனிதன் படைக்கப்பட்டக் காலத்திலிருந்து இறைவன், காலத்திற்குக் காலம் தனது தூதர்களை அனுப்பித் தனது நேர்நெறி வழிகாட்டலை செயல் முறையில் நடைமுறைப்படுத்திக் காட்டச் செய்தான். ஏப்ரஹாம், மோசஸ், தாவூது, ஜீஸஸ் போன்றோர் அந்த வரிசையில் வந்த இறைத்தூதர்களே. ஒவ்வொரு இறைத் தூதருக்குப் பின்னரும் அந்தச் சமூகத்தில் திருட்டுத்தனமாகப் புகுந்து ஒரே நேர் வழியை பல கோணல் வழிகளாக்கி மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பவர்களே கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றும் மதகுருமார்கள்.

முன்னாள் நபிமார்களுக்கு அருளப்பட்ட வேதங்கள், தோரா, பைபிள் போன்றவை மனிதக் கரம் பட்டு மாசடைந்து விட்டன. அவை இறைவனால் இரத்தும் செய்யப்பட்டுவிட்டன. இறுதித் தூதர் முஹம்மதுக்கு இறுதியாக அருளப்பட்ட நேர்வழி நூல் குர்ஆன் மட்டுமே மனிதக் கரம் பட்டு மாசு படாமல் தூய்மையான நிலையில் இருக்கிறது. அது இப்போது எல்லா மொழிகளிலும் கிடைக்கிறது. அகிலங்கள் அனைத்தையும் மனிதனையும் படைத்த எல்லாம் வல்ல ஏகன் இறைவனின் இறுதி நெறிநூல் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன்படி வாழ மக்களுக்கு வழிகாட்டினால் மட்டுமே இவ்வையகம் உய்ய வழி பிறக்கும். அறிஞர் பெருமக்களே சிந்தியுங்கள். மக்களுக்கு நேர்வழியைக் காட்டுங்கள்!

source: http://annajaath.com/archives/6685