Home கட்டுரைகள் அரசியல் வங்கதேச முஸ்லிம் அகதிகள் விரட்டப்பட வேண்டியவர்களா?
வங்கதேச முஸ்லிம் அகதிகள் விரட்டப்பட வேண்டியவர்களா? PDF Print E-mail
Thursday, 06 August 2015 08:06
Share

வங்கதேச முஸ்லிம் அகதிகள் விரட்டப்பட வேண்டியவர்களா?

[அமெரிக்க – ஐரோப்பிய, ஜப்பான் நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் இந்தியாவைக் கூறுபோடடு விற்கும் பா.ஜ.க., இந்து மத வெறிக் கும்பல், ரிக்ஷா இழுத்தும் மூட்டை தூக்கியும் தெருவில் வாழும் வங்கதேசத்து ஏழைகளை தேச விரோதிகள் என்று கூசாமல் கூறுகிறது.

இந்த அகதிகள் அரசியல் ரீதியாக ஒன்று சேர்வதைத் தடுத்து மிரட்டுவதற்காக உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு அகதிகளைக் காரணம் காட்டி அந்நாட்டு இளைஞர்களை உசுப்பி விடுவது என்ற தந்திரத்தை இந்நாட்டு அரசுகள் பின்பற்றி வருகின்றன.

அகதிகளுக்காகக் கண்ணீர் விடுவதும், அவர்கள் உழைப்பைச் சுரண்டுவதும், அவர்களை அடித்து விரட்டுவதும் , ஏகாதிபத்தியத்தின் இரட்டை முகங்ககளாகும். ஐ.நா.சபையின் மனித உரிமை சாசனம் வகுத்திருக்கும் அகதிகளின் உரிமைகள் உண்மையில் ஒரு கேலிக்கூத்தாக மாறிவிட்டன. வல்லரசு நாடுகளின் அரசியல் ஆதாயத்துக்காகப் பந்தாடப்படும் அகதிகளின் அவலம இக்கணம்வரை அதிகரித்தே வருகிறது. இந்தியாவிலும் அப்படித்தான்.]

வங்கதேச முஸ்லிம் அகதிகள் விரட்டப்பட வேண்டியவர்களா?

”பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுத்து விட்டோம். பாகிஸ்தான் ஒரு புதிய தந்திரம் பண்ணியது. பாகிஸ்தான், பங்களாதேஷ் எல்லைப் பகுதிகளில் இருந்த முசுலீம்களைப் பசி, பட்டினி போன்ற காரணங்களைக் காட்டி ‘எங்கள் நாட்டில் வறுமை, பிழைக்க வழியில்லை’ என்று சொல்ல வைத்து பாரதத்திற்குள் ஊடுருவிய அந்த அந்நியர்கள் சுமார் இரண்டரை கோடிப் பேர் பாரதத்தில் உள்ளார்கள். ஏற்கெனவே இருக்கிற தலைவலி போதாது என்பது போல் வெளியிலிருந்து இறக்குமதி செய்கின்ற இந்தப் பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

உலகில் ஒவ்வொரு நாடுமே தங்கள் நாட்டிற்குள் அதிகப்படியாக மற்ற நாட்டின் குடிமக்களை அனுமதிப்பதில்லை. எல்லா நாடுகளும் இப்படி கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் போது நமது நாடு மட்டும் என்ன சத்திரமா? எவர் வேண்டுமானாலும் வரலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை மிகக் கொடுமையானது.”

– இந்துக்களுக்கு உரிமையே கிடையாதா?” – இந்து முன்னணி, வெளியீடு, பக்கம் – 26.

முதலில் பொய்களைக் கவனிப்போம். இரண்டரைக் கோடிப் பேர் அகதிகளாக வந்தார்கள் என்பது எந்தவித ஆதாரமும் அடிப்படையும் இல்லாத வடி கட்டிய பொய். அடுத்து பாகிஸ்தானிலிருந்து அகதிகள் வருகிறார்கள் என்பதும் முழுப் பொய்தான். காசுமீர் பிரச்சினை தீவிரமடைவதற்கு முன்பேயே, பாகிஸ்தானுடன் நடந்த மூன்று போர்களையொட்டி எல்லையைக் கடுமையாகக் கவனித்து வருகிறது இந்திய அரசு.

சாதாரண வாழ்க்கைத் தேவைகளுக்காக எல்லை மாறும் இருநாட்டு எல்லையோர கிராம மக்கள் பலர் இந்திய மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதனால் பல கிராமங்கள் வருடத்தில் பாதி நாட்கள் காலியாகத்தான் இருக்கின்றன.

எனில் இந்தியாவில் அகதிகள் என்ற நிலையில் இருப்பவர்கள் யார்?

இங்கே அரசின் சட்டபூர்வ பாதுகாப்பைப் பெற்ற அகதிகளும், பெறமுடியாத பரிதாபமான அகதிகளும் இருக்கின்றனர். இந்திய அரசின் பிராந்திய வல்லரசு என்ற நலனக்கேற்ப அகதிகளைக் கவனிக்கும் முறை வேறுபடுகிறது.

வங்க தேசத்தில் புத்த மதத்தைச் சேர்ந்த ‘சக்மா’ எனும் பழங்குடியினர் இருக்கின்றனர். இவர்களது நிலத்தையும், வாழ்வையும் பறித்துக்கொண்ட வங்கதேச அரசு இராணுவத்தின் மூலம் தொடர்ந்து அடக்கியும் வருகிறது. அதனால் வேறு வழியின்றி மேற்கு வங்கத்திற்கும், அஸ்ஸாமிற்கும் சில ஆயிரம் பேர் அகதிகளாக வந்தனர். இவர்கள் மூலம் அரசியல் ஆதாயம் ஏதும் இல்லையென்பதால், கணிசமான சக்மா பழங்குடியினரை மீண்டும் வங்க தேசத்திற்கே விரட்டி வருகிறது இந்திய அரசு.

சீனாவின் தென்மேற்கில் அமைந்திருக்கும் திபெத் பீடபூமியில், கடந்த சில நூற்றாண்டுகளாக லாமா எனப்படும் பௌத்தத் ‘துறவி’ நிலப்பிரபுக்கள் பெரும்பான்மை திபெத்தியர்களை ஒடுக்கி வந்தனர். 1949-இல் முடிவடைந்த சீனப் புரட்சி, இந்தக் கொடுங்கோன்மையான, பௌத்த நிலப்பிரபுக்களின் ஆட்சியையும் முடிவுக்குக் கொண்டு வந்தது. அதிகாரத்தை இழந்த லாமாக்கள் தலாய்லாமா தலைமையில் 60-களில் இந்தியாவிற்கு ஓடி வந்தனர்.

இமாச்சல பிரதேசத்தின் தர்மஸ்தலாவிலும், ஏனைய வடஇந்திய நகரங்களிலும் பரவிக்கிடக்கும் சில ஆயிரம் திபெத்தியர்களை இந்திய அரசு தொடர்ந்து சீராட்டி வருகிறது. தலாய்லாமா கும்பலைத் தனி அரசாக அங்கீகரித்ததோடு அவர்களையம் உலக அரங்கில் ‘சுதந்திர திபெத் நாடு’ என்று பிரச்சாரம் செய்வதற்கு அனுமதியும் ஆதரவும் அளித்து வருகிறது. இந்திய அரசின் அமெரிக்க ஆதரவு – சீன எதிர்ப்புக் கொள்கையின் காரணமாக இந்த ‘திபெத் அகதிகள்’ நட்சத்திர அந்தஸ்துடன் வாழ்கின்றனர்.

காலனிய ஆட்சிக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பேயே பாரசீகத்தைச் (ஈரான், ஈராக்) சேர்ந்த பார்ஸிகள் மேற்கு இந்தியாவிற்கு வந்தனர். குஜராத்திலும், பம்பாயிலும் வாழும் இப் பார்ஸிகளும், இவர்களது தரகு முதலாளிகளும் இந்து மத வெறியர்களுக்கு ஆதரவான சமூகப் பிரிவாகவே இருக்கின்றனர். எனவேதான் வெளிநாட்டுப் பின்னணியும், வேற்று மதச் சடங்குகளும் கொண்ட பார்ஸிகளை இந்து மதவெறியர்கள் முசுலீம்களைப் போல் எதிர்ப்புணர்ச்சி கொண்டு நடத்துவதில்லை.

தமது தாயகத்திலிருந்து துரத்தப்பட்ட யூதர்கள் உலகெங்கும் சிதறியபோது ஒரு சிலர் இந்தியாவிற்கும் வந்தனர். இஸ்ரேல் உருவான பிறகு பெரும்பான்மை யூதர்கள் அங்கே சென்றுவிட்டாலும் சிறு எண்ணிக்கையிலான யூதர்கள் இங்கே இருக்கின்றனர். அமெரிக்க ஆதரவு, முசுலீம் எதிர்ப்புக் கொள்கையிலிருக்கும் இஸ்ரேலிய அரசு இந்து மதவெறியர்களுக்கும், இந்திய அரசுக்கும் நெருக்கமாக இருப்பதால், இந்திய யூதர்களும் பிரச்சினையின்றி நலமுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இமயத்தின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் நேபாளம் இந்தியாவின் பிராந்தியத் துணை வல்லரசு ஆதிக்கத்திற்கு அடங்கி வாழ்ந்துவரும் நாடாகும். தமது வாழ்க்கைத் தேவைகளுக்காக இந்தியாவுடன் பிணைக்கப்பட்டிருக்கும் நேபாள மக்களை இந்திய அரசு தனது தேவைகளுக்கேற்பப் பயன்படுத்திச் சுரண்டி வருகிறது. அதனாலேயே இந்தியாவிலிருக்கும் நேபாள மக்களைக் கண்டும் காணாமலும் நடத்தி வருகிறது.

இந்திய இராணுவத்தின் தீவிரப் போரிடும் பிரிவான ‘கூர்க்கா ரெஜிமண்ட்’டில் பல ஆயிரம் நேபாள வீரர்கள் இருக்கின்றனர். பம்பாய் விபச்சாரத்திற்கு ஆயிரக்கணக்கான நேபாளச் சிறுமிகள் ஆண்டுதோறும் விற்கப்படுகின்றனர். இந்திய ஆளும் வர்க்கங்களின் ஆசியுடன் இந்திய மாஃபியா கும்பல்கள் நேபாளத்தை மையமாக வைத்து போதைப் பொருள் வியாபாரத்தையும் வளமாகச் செய்து வருகின்றனர். இப்படி இராணுவத்தில் குறைந்த கூலி கொடுத்துப் பலியிடவும், பம்பாய் விபச்சாரத்தில் பணத்தை அள்ளவும் பயன்படும் நேபாள மக்களை, இந்த மதவெறியர்கள் அகதிகளாகக் கருதாமல் இருப்பதன் மர்மம் இதுதான்.

சோவியத் ஆதரவுடன் ஆப்கானில் ஆட்சி நடத்திய நஜிபுல்லா அரசு, இந்திய அரசாலும் ஆதரிக்கப்பட்டது. இது பாக். எதிர்ப்பு மற்றும் சோவியத் ஆதரவு கொண்டிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கேற்ப தீர்மானிக்கப்பட்டதாகும். பின்னர் அமெரிக்க – பாக். ஆதரவு முஜாஹிதீன்களும், தாலிபான்களும் நஜிபுல்லா அரசை வீழ்த்தினர். அப்போது இந்தியாவிற்கு ஓடிவந்த ஆயிரக்கணக்கான நஜிபுல்லா ஆதரவு ஆப்கானியர்களை இந்திய அரசு வரவேற்று இன்று வரை பராமரித்து வருகிறது. இவர்களும் முசுலீம்கள்தான் என்றாலும் ஆர்.எஸ்.எஸ்.கும்பல் வாய் திறவாமல் இருக்கக் காரணம் பாகிஸ்தான் எதிர்ப்பு அரசியல்.

அடுத்து நமக்கு நெருக்கமான ஈழ அகதிகள் பிரச்சினையைப் பார்ப்போம். ஈழத்திலிருந்து வெளியேறி உலகமெங்கும் சிதறிக் கிடக்கும் அகதிகளில் சரிபாதிப் பேர், பல்லாயிரக்கணக்கானோர், இந்தியாவில் – தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். நேபாளத்தைப் போல இலங்கையும் இந்தியாவுடன் பல்வேறு உறவுகளில் பிணைக்கப்பட்டிருக்கும் நாடுதான்.

இந்திய பிராந்தியத் துணை வல்லரசுக் கொள்கையின் முக்கியமான அங்கமாக இலங்கை இருப்பதும், ஈழவிடுதலைப் போராட்டம் காரணமாக, அக்கொள்கை இன்னும் முக்கியத்துவம் பெறுவதும் நாம் அறிந்ததே. 1983 ஜுலை படுகொலைக்குப் பிறகு தமிழகம் வந்த ஈழ அகதிகள் ஆரவாரத்துடன் மைய அரசினால் வரவேற்கப்பட்டனர். ஈழப் போராளிக் குழுக்களுக்கு ஆயுதமும், பணமும், பயிற்சியும் தடையின்றித் தரப்பட்டன. காரணம், இலங்கையில் தன் தலையீட்டையும், ஆதிக்கத்தையும் ஏற்படுத்துவதற்கும், உறுதி செய்வதற்கும், இந்திய அரசு அகதிகளையும், போராளிகளையும வரவேற்று உபசரித்தது.

இன்றோ தமிழகத்தின் ஈழ அகதிகள் முகாம்கள் அனைத்தும் சிறைக் கூடங்களாக மாற்றப்பட்டுவிட்டன. சிங்கள அரசால் ஈழத் தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் கூட இங்கே அகதிகளுக்குக் கிடையாது என்பதே உண்மை. முன்பு ஈழ அகதிகளுக்கு கலங்கரை விளக்காகத் திகழ்ந்த இராமேசுவரம், இன்று மரணப் பள்ளத்தாக்காக மாறிவிட்டது. தலைமன்னாரிலிருந்து புறப்பட்டு பாதி வழியில் கடலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டும், மீறி வந்தால் ஐந்தாம் மணற்திட்டில் இறங்கி பசி – வெயில் – குளிரில் பரிதவித்தும் வாடுவதே அவர்களின் தலைவிதியாகிவிட்டது. பத்தாண்டுகளுக்குள் நடந்த இந்தத் தலைகீழ் மாற்றம், அகதிகள் பிரச்சினையில் அரசியல் நலனுக்கேற்ப இந்திய அரசு போடும் இரட்டை வேடத்தைப் பளிச்செனப் புரிய வைக்கும். அவ்வகையில் இந்து மதவெறியர்களும் ஈழ அகதிகளை ஒடுக்குவதையே விரும்புகின்றனர்.

இனி ஆர்.எஸ். கும்பல் விரட்டத் துடிக்கும் வங்கதேச அகதிகளைப் பார்க்கலாம். 80-களில் ஈழத்தமிழ் அகதிகளுக்கு என்ன நேர்ந்ததோ அதுதான் 70-களில் வங்கதேச அகதிகளுக்கும் நடந்தது. பாகிஸ்தானைப் பிளப்பதற்குத் தருணம் பார்த்திருந்த இந்திய அரசுக்கு வங்கதேசம் ஒரு கருவியாக வாய்த்தது. இந்திரா காலத்தில் பாகிஸ்தானுடன் இதற்காக நடந்த 1971 போரின்போது வங்கதேசத்திலிருந்து வந்த அகதிகள் வரவேற்கப்பட்டார்கள். பாகிஸ்தானை எதிர்த்த வங்கதேசத்து சேக் முஜிபுர் ரஹ்மான் இந்தியாவால் வளர்க்கப்பட்டார். அவரது ‘முக்தி வாஹனி’ இயக்கத்திற்கு ஆயுதமும், பயிற்சியும் இந்திய அரசால் அளிக்கப்பட்டன. போரில் பாகிஸ்தான் தோல்வியடைந்து, வங்கதேசம் பிரிந்தபோது அகதிகளின் வாழ்வும் முடிவுக்கு வந்தது.

சேக் முஜிபூர் ரஹ்மானுக்குப் பிறகு வந்த இராணுவ மற்றும் ஜனநாயக ஆட்சியாளர்கள் இந்திய ஆதிக்கத்தை எதிர்த்து வருவதால், இங்கிருக்கும் வங்கதேச ஏழைகளை விரட்டுவதற்கு இந்திய அரசும், இந்து மதவெறியர்களும் தீவிரம் காட்டுகின்றனர். இன்றைய வங்கதேசமும் (பங்களாதேஷ்) இங்கிருக்கும் மேற்கு வங்க மாநிலமும், மொழியால், இனத்தால், பண்பாட்டால் ஒரே மக்கள் வாழும் பிராந்தியமாகும். மேற்கு வங்கத்தில் இந்துக்களும், கிழக்கு வங்கத்தில் முசுலீம்களும் பெரும்பான்மையாக இருந்தாலும், இரு மதத்தைச் சேர்ந்தோரும் கணிசமான அளவில் இரு பகுதிகளிலும் வாழ்கின்றனர். வங்கதேசிய இனம் இந்தியாவின் வளர்ச்சியடைந்த ஒருசில தேசிய இனங்களில் ஒன்றாகும். அதனால் இம்மக்களது நெருக்கமான உறவு பற்றி அதிகம் விளக்காமலேயே புரிந்து கொள்ள முடியும்.

காலனிய ஆட்சியின்போது 1905-இல் கர்சன் பிரபு என்ற ஆங்கிலேய வைசிராய் வங்கத்தை மேற்கு, கிழக்கு என மதத்தை அடிப்படையாக வைத்துப் பிரித்தான். ஆயினும் வெள்ளையர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை அன்றைய வங்கத்து மக்கள் தீரத்துடன் போரிட்டு முறியடித்தார்கள். மதவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு வங்காளிகள் என்ற முறையில் அவர்களால் நடத்தப்பட்ட இப்போராட்டம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வாகும். ஆயினும் அதன்பிறகு நாட்டு விடுதலைப் போராட்டம் இந்து மதச்சார்பை எடுத்ததும் அதை வெள்ளையர்கள் ஆதரித்ததும், எதிர் விளைவாக முசுலீம் லீக் தோற்றமும் இறுதியில் வங்கம் மதத்தால் பிளவுண்டு போகக் காரணமாய் அமைந்தன.

கிழக்கு பாகிஸ்தான் என்றழைக்கப்பட்ட வங்கதேசம், பாகிஸ்தானின் ஒடுக்கு முறையிலிருந்து பிரிந்து வந்தாலும், வறுமையிலிருந்து விடுதலையடையவில்லை. இந்தியாவைவிடப் பின்தங்கியிருக்கும் வங்கதேசம் எவ்விதப் பொருளாதார முன்னேற்றமும் இல்லாத ஒரு வறிய நாடாகும். ஏற்கனவே துணைக் கண்டத்துடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த வங்கத்து மக்களில் ஆகக் கடையரான ஏழைகள் பஞ்சம் பிழைக்க கல்கத்தா, டெல்லி, பம்பாய் நகரங்களுக்கு வருகின்றனர். இப்படி இந்தியாவின் வறிய பகுதிகளிலிலிருந்து பிழைப்புத் தேடி பெரு நகரங்களுக்குக் குடிபெயர்வது என்பது இந்நூற்றாண்டு முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சியாகும். வங்க தேசத்திலிருந்து இந்தியா வந்து ரூ.20, ரூ.30 என கூலிக்கு வேலை செய்யும் இந்த ஏழைகளை முசுலீம்கள் என்ற ஒரே காரணத்தினால், விரட்டி அடிக்க வேண்டும் என்று இந்து மத வெறியர்கள் கூப்பாடு போடுகின்றனர்.

அகதிகள் பிரச்சினை என்பது ஆர்.எஸ்.எஸ். கூறுவது போல உலக அதிசயமல்ல. காலனிய நாடுகளை அடக்கி ஆளும் ஏதாதிபத்தியம் தோன்றியதிலிருந்து, நாடுவிட்டு நாடு போகும் அகதிகள் பிரச்சினையும் துவங்கிவிட்டது. அரசியல், பொருளாதார, மத, பண்பாட்டுக் காரணங்களினால் தன் நாட்டில் வாழ வழியின்றி அடைக்கலம் தேடி ஓடுவது என்பது இன்றைய உலகமாயக்கத்தின் வளர்ந்து வரும் பிரச்சினையாகும். இதற்குக் காரணமான வல்லரசு நாடுகளே இதற்குத் தீர்வு சொல்ல முடியாத நெருக்கடியில் சிக்கியிருக்கின்றனர்.

இந்தியாவிலிருந்து மலேசியா-சிங்கப்பூருக்கும், வளைகுடாவிற்கும் விசா இல்லாமல் போவது, மத்திய – தென் அமெரிக்கா நாடுகளிலிருந்து, அமெரிக்க – ஐக்கிய நாட்டிற்குப் (யு.எஸ்.) போவது, மத்திய தரைக்கடல் – ஆப்பிரிக்க ஏழை நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்குப் போவது, தெற்காசிய நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குச் செல்வது, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குச் செல்வது என வேலை – வாழ்க்கை தேடி ஓடும் ‘சட்ட விரோத அகதிகளின்’ இடமாற்றம் உலகெங்கும் நடந்து வருவதுதான்.

இன்னும் போஸ்னியா, குர்திஸ்தான், செசன்யா, கிழக்கு திமோர், ஆப்கான், ஈழம், காசுமீர் போன்ற அரசியல் அகதிகள் பிரச்சினையும் உலகெங்கும் உள்ளதுதான். இப்படி நாடு விட்டு நாடு போகும் இத்தகைய அகதிகளை அந்தந்த நாட்டு முதலாளிகள் குறைந்த கூலி கொடுத்து சக்கையாய்ப் பிழிந்து சுரண்டியும் வருகின்றனர். இத்தகைய மலிவான உழைப்புச் சுரண்டலுக்காக பல நாடுகள் சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கண்டும் காணாமல் அனுமதிக்கின்றனர்.

அதேசயம் இந்த அகதிகள் அரசியல் ரீதியாக ஒன்று சேர்வதைத் தடுத்து மிரட்டுவதற்காக உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு அகதிகளைக் காரணம் காட்டி அந்நாட்டு இளைஞர்களை உசுப்பி விடுவது என்ற தந்திரத்தை இந்நாட்டு அரசுகள் பின்பற்றி வருகின்றன. பிரிட்டனில் ஆசிய நாட்டவரைத் தாக்குவது – அல்ஜீரியர்களை பிரான்சில் தாக்குவது, தென் அமெரிக்கர்களை மிரட்டுவது, ஈழ அகதிகளை ஜெர்மனியில் அடிப்பது, ஆஸ்திரேலியாவில் தெற்காசியைரைத் தாக்குவது, இவை சில எடுத்துக்காட்டுக்கள். இந்நிகழ்ச்சிப் போக்கிலிருந்தே உலகெங்கும் பாசிச இனவெறிக் குழுக்கள் தோன்றியுள்ளன. உலகளாவிய இந்த பாசிசக் கூட்டணியின் இந்தியப் பிரதிநிதிகளான ஆர்.எஸ்.எஸ்.கூட்டம் வங்கதேச அகதிகளை அடித்து விரட்டுகிறது.

எனவே அகதிகளுக்காகக் கண்ணீர் விடுவதும், அவர்கள் உழைப்பைச் சுரண்டுவதும், அவர்களை அடித்து விரட்டுவதும் , ஏகாதிபத்தியத்தின் இரட்டை முகங்ககளாகும். ஐ.நா.சபையின் மனித உரிமை சாசனம் வகுத்திருக்கும் அகதிகளின் உரிமைகள் உண்மையில் ஒரு கேலிக்கூத்தாக மாறிவிட்டன. வல்லரசு நாடுகளின் அரசியல் ஆதாயத்துக்காகப் பந்தாடப்படும் அகதிகளின் அவலம இக்கணம்வரை அதிகரித்தே வருகிறது. இந்தியாவிலும் அப்படித்தான்.

அமெரிக்க – ஐரோப்பிய, ஜப்பான் நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் இந்தியாவைக் கூறுபோடடு விற்கும் பா.ஜ.க., இந்து மத வெறிக் கும்பல், ரிக்ஷா இழுத்தும் மூட்டை தூக்கியும் தெருவில் வாழும் வங்கதேசத்து ஏழைகளை தேச விரோதிகள் என்று கூசாமல் கூறுகிறது. முசுலீம் மக்களை ஐ.எஸ்.ஐ ஏஜெண்டு – அகதி என்று மிரட்டுவதற்கான துருப்புச் சீட்டுதான் இந்த அகதி பிரச்சாரம்.

source: http://www.vinavu.com/2012/08/16/conversion-21/