ஜமீலா PDF Print E-mail
Tuesday, 21 July 2015 08:09
Share

ஜமீலா

     ராபியா குமாரன்     

ஜன்னல் வழியாக அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஜமீலாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து நின்றது.  கண்ணீரை அடக்கத் தெரிந்தவளுக்கு ஏங்கி நிற்கும் மனதை அடக்கும் வித்தை  தெரியாமல்தான் அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
நிறைந்த வயிறோடும், கை நிறைய வளையல்களோடும் ஆபிதா நடந்து வந்தாள். ஜமீலாவும், ஆபிதாவும்தான் அத்தெருவில்  ரொம்ப காலமாக திருமணம் ஆகாமல் இருந்தனர். சென்ற வருடம் ஷவ்வால் பிறையில் ஆபிதாவுக்கும் திருமணமாகி விட்டது. இத்தனைக்கும் ஜமீலாவை விட ஆபிதா இரண்டு வயது சிறியவள்தான். திருமணமான ஒரே வருடத்தில் குழந்தை பாக்கியம் பெற்று இதோ.. தலைப் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கும் வந்து விட்டாள்.
 
ஆபிதாவை அழைத்து வந்த பெண்கள் கூட்டம் ஜமீலாவின் வீட்டைக் கடந்து செல்லும் போது ஜமீலா தன்னையும் அறியாது கண்ணீர் சிந்தத் தொடங்கினாள். அவளுக்கு கதறி அழ வேண்டும் போல் இருந்தது. ஆயினும் தான் அழுவது அம்மாவிற்குத் தெரிந்தால் இன்னும் நொடிந்து போவாள் என்று எண்ணி பல்லைக் கடித்துக் கொண்டு அழுதாள். அவள் கை, கால்களின் விரல்கள் தானாக இறுகி அழுகையின் வீரியத்தைக் கூட்டியது.   
 
காட்டுப் பள்ளியிலிருந்து மக்ஃரிப் தொழுகைக்கான பாங்கு ஒலிக்க ஆரம்பித்தது. வாசலில் இருந்த சுபைதா எழுந்து வீட்டிற்குள் வந்தாள். அம்மா வருவதைக் கண்டதும் கூடத்தில் இருந்த ஜமீலா எழுந்து உள்ளே சென்றாள். கண்ணீரைத் துடைத்திருந்தாலும் வாடியிருந்த முகம் ஜமீலா  அழுதிருக்கிறாள் என்பதை அவள் அம்மாவிற்குக் காட்டியது.
 
'யா ரப்பே... இன்னும் என்ன கொடுமையெல்லாம் பாக்கணும்னு என்னப் போட்டிருக்க..." என்று சொல்லிக் கொண்டே உ@ செய்யச் சென்றாள் சுபைதா.

மஃரிப் தொழுதுவிட்டு, திக்ரு செய்து கொண்டிருந்தவளின் உள்ளத்தில் தனது மகளைப் பற்றிய எண்ணமே நிரம்பி இருந்தது. அடுத்த மாசம் மௌலுது பிறை வந்தா ஜமீலாவுக்கு முப்பது வயசு முடியப் போவுது. அவளுக்குப் பிறகு பொறந்ததுலாம் கைல ஒண்ணு, இடுப்புல ஒண்ணுமா இருக்குது... இந்தப் பாவி மக என்ன விதி வாங்கி வந்தாலோ... ஏ வயத்துல வந்து பொறந்து இந்தக் கெதில நிக்குறா... என்று வழக்கம்போல் தனது மகளைப் பற்றியே உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.
 
ஜமீலாவிற்கு எந்தக் குறையும் இல்லை. திருமணம் அழகைக் கொண்டு நிச்சயிக்கப்பட்டிருந்தால் அவள் வயதொத்த பெண்களில் ஜமீலாவிற்கே முதலில் திருமணம் ஆகியிருக்கும். சிறுவயதில் அவளைப் பார்க்கும் பலர் 'ஜமீலா" என்று பொருத்தமாகத்தான் பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று சொல்வதுண்டு.

அறிவைக் கொண்டு நிச்சயிக்கப்பட்டிருந்தாலும் ஜமீலாவிற்குத்தான் முதலிடம். படிப்பிலும், அறிவிலும் படுசுட்டி. ஆயினும் பாழாய்ப்போன வறுமை அவளது திருமணத்தை மட்டும் பாதிக்கவில்லை. அவள் படிப்பையும்தான் பாதித்திருந்தது. பிளஸ் டூ தேர்வில் தைக்கா பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் முதல் மாணவியாக ஜமீலாவே தேறியிருந்தாள். 'நல்லா படிக்கிற பொண்ணுமா.. அடுத்து காலேஜ்லையும் படிக்க வைங்க.. படிப்ப இத்தோட நிறுத்திடாதீங்க.." என்று அவளுக்கு வகுப்பெடுத்த அத்தனை டீச்சரும் சொன்னார்கள்.
 
ஆனால் நோட்டு, புத்தகம் வாங்கக்கூட பணம் இல்லாமல் ஜமீலாவின் படிப்பு  எட்டாம் வகுப்போடு தடைப்பட்டது. இயக்கத்தினர் நோட்டு, புத்தகம் வாங்கித் தருவதாகக் கூறியதால் மேற்கொண்டு பிளஸ் டூ வரை படிப்பைத் தொடர முடிந்தது.
 
கல்லூரிப் படிப்பிற்கான செலவையும் இயக்கத்தினர் ஏற்றுக் கொள்ள முன்வந்தனர். ஆனால் 'இன்னொருத்தங்க கைய நம்பி மேற்கொண்டு காலேஜீல சேத்துலாம் படிக்க வைக்க முடியாது..." என்று எண்ணிய சுபைதா தனது மகளை மேற்கொண்டு படிக்க வைக்காமல் வீட்டிலேயே வைத்திருந்தாள். 'ரெண்டு வருஷத்துக்குள்ள ஒருத்தன் கையில புடுச்சுக் கொடுத்துட்டா நிம்மதியா கண்ண மூடலாம்..." என்று எண்ணியிருந்தவளுக்கு பத்து வருடங்களுக்கு மேல் ஆகியும் அந்த எண்ணம் ஈடேறவில்லை என்பதுதான் வேதனையின் உச்சம்.
.
 
ஜமீலாவிற்கு ஆபிதாவைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. இப்போது அவள் வீட்டில் நிறைய சொந்தக்காரர்கள் இருப்பார்கள். அக்கம் பக்கத்தினரும் இருப்பார்கள். இந்த நேரத்தில் போனால் நம்மைப் பற்றி ஏதாவது கேட்பார்கள். கல்யாணத்தைப் பற்றி விசாரிப்பார்கள். என்ன பதில் சொல்வது? என்ற ஐயத்தில் போகாமலேயே இருந்தாள்.
 
இரண்டு நாள் கழித்தே ஆபிதாவின் வீட்டிற்குப் பேனாள். 
 
அவளைப் பார்த்ததும், 'வாடி.. எப்பிடி இருக்க.. நல்லா இருக்கியா.." என்று ஆபிதா பாசத்தோடு கேட்டாள்.
 
'ம்.. நல்லா இருக்கேன்.. நீ எப்பிடி இருக்கே.."
 
'நல்லா இருக்கேன்டி..." என இருவரும் ரொம்ப நேரம் அளவளாவிக் கொண்டிருந்தனர். பேசிக் கொண்டிருக்கும்போது பெண்மையின் பூரணத்தை அடைந்து நிற்கும் ஆபிதாவின் வயிற்றை தொட்டுப் பார்க்க வேண்டும் போல் இருந்தது ஜமீலாவிற்கு. இன்னும் கொஞ்ச நாளில் ஆபிதாவை, 'அம்மா.." என்று அழைக்கக் காத்திருக்கும் அந்த ஜீவனைத் தொட்டுப் பார்க்கத் துடித்தாள். கருவில் இருக்கும் குழந்தை தன் பிஞ்சுக் கால்களால் உதைக்கும் இன்பத்தை ஜமீலா அனுபவிக்காவிட்டாலும், அந்த உணர்வு எப்படி இருக்கும் என்று அவளால் யூகிக்க முடிந்தது. குழந்தையைப் பெற்றெடுக்காவிட்டாலும் அதற்குத் தகுதியுடைய பெண்தானே அவள்...?
 
தனக்கும் திருமணமாகி, தாய்மைப்பேறு அடைந்து ஒரு குழந்தையை பெற்றெடுத்து, நல்ல முறையில் வளர்ப்பது வரை அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பாள். நிஜத்தில் தடைப்பட்டு வந்த அவளது திருமணம் கற்பனையில் ஜாம், ஜாமென்று நடந்தது. வரதட்சணையாக ஒரு பைசாக்கூட வேண்டாம் என்று கூறிய மாப்பிள்ளை ஜமீலாவற்குக் கிடைத்தான். மகளைப்போல் பார்த்துக் கொள்ளும் மாமியார், தன் மனம் அறிந்து நடந்து கொள்ளும் அன்பான கணவன் என ஜமீலாவின் கற்பனை உலகம் சந்தோஷங்களால் மட்டுமே கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இவையெல்லாம் நிஜ வாழ்விலும் நடக்கும் என்ற நம்பிக்கையை ஜமீலா என்றோ இழந்திருந்தாள் என்பதுதான் யதார்த்தமான உண்மை.
 
தன் வயிற்றின் மீது கைவைத்தவாறு எதையோ நினைத்துக் கொண்டிருந்த ஜமீலாவின் தோளை உலுக்கி, 'என்னத்தடி நெனச்சுக்கிட்டு இருக்க..." என்று ஆபிதா கேட்டாள்.
 
'ஒண்ணுமில்லடி... சும்மாதான்.."
 
'ஆமா... கீழத் தெரு மும்தாஜ் மகன் முஹைதீனுக்காக வேண்டி உன்னையப் பொண்ணு பாத்துட்டுப்போனதாக் கேள்விப்பட்டேன்.. அது என்னடி ஆச்சு.. அந்தப் பையன்கூட வரதட்சணை ஏதும் வேண்டாமுனு சொன்னதாச் சொன்னாங்களே.." என்றாள் ஆபிதா.
 
'ம்.. பாத்துட்டுப் போயிருக்காங்கடி.. இன்னும் சேதி ஏதும் வரல.. நாளைக்கு மாப்பிள்ளையோட அம்மா வீட்டுக்கு வரதா சொல்லியிருக்காங்க.. நாளைக்கு அவங்க வந்தாதான் தெரியும் என்ன? ஏதுனு?..." கவலை தோய்ந்த குரலில் சொன்னாள் ஜமீலா.
 
'கவலப்படாதடி.. கண்டிப்பா உனக்கு இந்த வரன் நல்லபடியா முடியும்.. நான் துஆ செய்றேன்.." என்று ஆபிதா கூறியதற்கு, 'சரிடி, நீ துஆசெய் எனக்காக.. நான் போயிட்டுவாரேன்... நேரமாச்சு அம்மா தேடும்..." என்று ஜமீலா தன் வீட்டிற்குப் புறப்பட்டாள்.
.
மறுநாள் காலை பஜ்ர் தொழுகையை முடித்த கையோடு கண்ணீர் மல்க இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள் சுபைதா. கண்களில் கண்ணீர் வழிந்தோட, முணுமுணுத்த குரலில்  சுபைதா தனது இயலாமையை இறைவன் முன் வைத்துக் கொண்டிருந்த காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது. அதனைக் கண்ட ஜமீலாவும் கண்கலங்க ஆரம்பித்தாள். தன்னை நினைத்து தன் தாய் படும் வேதனையை எண்ணி மிகவும் வருந்தினாள். மாப்பிள்ளை வரதட்சணை ஏதும் வேண்டாம் என்று கூறியதால் தனக்கு இந்த வரன் கண்டிப்பாக முடியும் என ஜமீலா பெரிதும் நம்பிக் கொண்டிருந்தாள்.
 
காலை பத்து மணி இருக்கும். கீழத்தெரு மும்தாஜ் ஜமீலாவின் வீட்டிற்கு வந்தாள். 'வாங்க.. அஸ்ஸலாமு அலைக்கும்..." என்று கூறிய ஜமீலா,  பாயை எடுத்து தரையில் விரித்து விட்டு அடுப்படிக்குள் போய் நின்றாள். சுபைதாவும் ஸலாம் கூறி வரவேற்று மும்தாஜோடு தரையில் அமர்ந்தாள்.
 
'அல்லாஹ்வே... எல்லாம் நல்ல செய்தியா இருக்கணும்..." என தாயும், மகளும் மனதிற்குள் துஆ செய்து  கொண்டிருந்தார்கள். மும்தாஜ் பேச ஆரம்பித்தாள்.
 
'ஏ மகன் வரதட்சணையா ஒரு பைசாக்கூட வாங்கக் கூடாது, அதையும் மீறி நான் ஏதும் வரதட்சணை கேட்டா எங்கிட்ட பேச மாட்டேனு கண்டிப்போட சொல்லிட்டான்.. அதனால வரதட்சணையா நீங்க எந்தப் பணமும் தர வேண்டாம்..." என மும்தாஜ் சொன்னதைக் கேட்டு ஜமீலாவும், சுபைதாவும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜமீலாவின் முகத்தில் அரும்பிய அந்தப் புன்னகை அரை நொடி கூட நீடிக்கவில்லை. மும்தாஜ் கூறிய அடுத்த செய்தி ஜமீலாவின் தலையில் இடியாய் வந்து இறங்கியது.
 
'நாங்க பொண்ணு பாக்க வந்த அன்னக்கி பொண்ணு கழுத்துல போட்ருந்த நகை இருபது பவுண் இருக்குமுனு நெனைக்கிறேன்... அந்த நகையோட உங்க மகளை அனுப்பி வச்சாப்போதும்.. எங்களுக்கு பணமா எந்த வரதட்சணையும் வேண்டாம்..." என்று மும்தாஜ் கூறியதைக் கேட்டு சுபைதாவும் அதிர்ச்சியில் உறைந்தாள். தொண்டைக் குழியிலிருந்து வார்த்தைகள் வர மறுத்தது.
 
பக்கத்து வீட்டிற்கு புதிதாக திருமணமாகி வந்த ஆயிஷா, 'பொண்ணு பார்க்க வரும்போது வெறும் கழுத்தோட இருக்கக் கூடாது..." என்று தன்னுடைய நகைகளை ஜமீலாவிற்கு போட்டிவிட்டிருந்தாள். ஜமீலா இதெல்லாம் வேண்டாம் என எவ்வளவோ மறுத்தும்,  ஆயிஷாதான் விடாப்பிடியாக  தனது நகைகளை போட்டுவிட்டாhள். அந்த நகைகள் எல்லாம் ஜமீலாவின் நகைகள் என்று எண்ணிய மாப்பிள்ளையின் அம்மா இப்படிக் கேட்பார் என ஜமீலாவும், சுபைதாவும் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.
 
'அந்த நகைங்க எம் பொண்ணோடது இல்லம்மா.. பக்கத்து வீட்டுப் பொண்ணு போட்டு விட்டது. ஜமீலாவுக்குனு இருக்குறது ஒரு கம்மலும், ஒரு செயினும்தாமா... அதுவும் ரெண்டு பவுணுக்குள்ளதான் வரும்.." என்று சுபைதா சொன்னதைக் கேட்ட மும்தாஜின் பேச்சு மாறத் தொடங்கியது.
 
'ஏமா... நீ சொல்றது உனக்கே நியாயமா இருக்க..? இந்தக் காலத்துல ஒரு லட்சம், ரெண்டு லட்சமுனு ரொக்கமும், அம்பது பவுணு, எம்பது பவுணு நகையும்னு வரதட்சணை வாங்கிகிட்டு இருக்காங்க... ஏ மகன் சொன்னதுனாலதான்  வரதட்சணையா பணம் ஏதும் வேண்டாமுனு சொன்னேன். இப்ப இருபது பவுண் நகைகூட இல்லனா? உங்க பொண்ண சும்மா கட்டிட்டு போகச் சொல்றீங்களா? என மும்தாஜ் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தலைகுனிந்தவாறே சுபைதா அமர்ந்திருந்தாள்.
 
'நான் கேட்டுக்கிட்டே இருக்கேன். நீங்க அமைதியா இருந்தா என்னமா அர்த்தம்? முடிவா சொல்றேன். இருபது பவுண் நகையாவது போட்டாதான் இந்த கல்யாணம் நடக்கும். இல்லன்னா சொல்லுங்க நான் ஏ பையனுக்கு வேற இடம் பாத்துக்குறேன்... ஏ புள்ளைக்கு என்ன குறைச்சல்... அவனுக்கு என்ன பொண்ணா கிடைக்காது?" என மும்தாஜ் கத்திப் பேசிக் கொண்டிருந்தாள்.
 
'இல்லம்மா... அந்த ரெண்டு பவுணு நகையைத் தவிர எங்கிட்ட ஒரு குண்டு மணி தங்கம் கூட கிடையாது" என தழுதழுத்த குரலில் சுபைதா கூறியது அவளது ஏழ்மையை எடுத்துக் காட்டியது.
 
அந்த ஏழைத் தாயின் இயலாமையை சிறிதும் உணராத மும்தாஜ், 'வக்கில்லாதவங்க எதுக்கு ஓசி நகைய வாங்கிப் போட்டுக்கிட்டு பகுமானம் பண்ணனும்"  என்று சொல்லி வெடுக்கென எழுந்து சென்றாள்.
 
அடுப்படியில் இருந்த ஜமீலா அதனைக் கேட்டு தரையில் விழுந்த மீனாய்த் துடித்தாள். பெரிதும் நம்பிக் கொண்டிருந்த இந்த வரனும் இப்படி ஆனது ஜமீலாவிற்கு மிகப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது. என்ன சொல்லி ஆறுதல் கூறுவது என்று தெரியாத சுபைதா ஜமீலாவை தேற்ற முயற்சிக்கவில்லை. நீண்ட நேரமாக சுபைதா வெளியிலும், ஜமீலா அடுப்படியிலும் சுருண்டு கிடந்தனர். கண்களில் கண்ணீர் காலியாகும் வரை அழுது முடித்து இருவரும் சுயமாக ஆறுதல் அடைந்தனர்.
 
அன்று முழுவதும் இருவரும் சாப்பிடவில்லை. சாப்பிடாமலேயே படுக்கச் சென்றனர். மனம் முழுவதும் வேதனை நிரம்பியிருக்கும் தருணத்தில் உண்ணும் உணவு எப்படி தொண்டைக் குழியில் இறங்கும்? சமூகத்தில் பணத்திறகும், தங்கத்திற்கும் இருக்கும் மதிப்பு ஒரு பெண்ணிற்கும், அவளது குணத்திற்கும் இல்லை என்பதை அன்றுதான் கண்கூடாகப் பார்த்தாள். அன்று நடந்த நிகழ்வு ஜமீலாவின் மனதை மிகவும் பாதித்திருந்தது. எவ்வளவோ முயற்சித்தும் 'வக்கத்தவங்க...." என்று மும்தாஜ் கேட்ட வார்த்தையை ஜமீலாவால் மறக்கவே முடியவில்லை. ஒரு புறம் தன்; தாயைப் பற்றிய கவலை, மறுபுறம் 'வக்கத்தவங்க...." என்ற  வார்த்தை இவ்விரண்டும்  சேர்ந்து ஜமீலாவிற்கு  மிகுந்த  வேதனையைக் கொடுத்தது.
 
தனக்கு திருமணம் ஆகாமல் இருப்பதுகூட ஜமீலாவிற்கு பெரிய கவலையாக இல்லை. தன் தலைவிதி இதுவென எண்ணி மீதிக் காலத்தையும் கழிக்கத் தயாராக இருந்தாள். ஆனால் தன்னை எண்ணி தனது தாய் அடையும் மன வருத்தம் தான் ஜமீலாவிற்கு மிகப்பெரிய கவலையாக இருந்தது. 
 
இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் தன்னை  எண்ணி  தன் தாய் வேதனை அடைந்து கொண்டிருப்பாள் என்ற கேள்வி ஜமீலாவின் மனதில் அலை மோதிக் கொண்டிருந்தது. அக்கேள்விக்கு பதில் தர எண்ணியவள் அருகில் படுத்திருக்கும் சுபைதாவைக் கவனித்தாள். கண்களில் கண்ணீர் வழிந்து உறைந்திருந்த நிலையில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். படுக்கையிலிருந்து எழுந்த ஜமீலா மெதுவாக  அடுப்படிக்குள் சென்றாள்.
 
அதிகாலை ஃபஜர் தொழுகைக்கான பாங்கு ஒலித்தது. படுக்கையிலிருந்து எழுந்த சுபைதா உ@ செய்வதற்காக எழுந்து வந்தாள். அடுப்படி லைட் சுவிட்சை போட்டவளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இத்தனை வருடம் கஷ்டப்பட்டு வளர்த்த தன் அருமை மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த காட்சி சுபைதாவின் மனதை சுக்கு நூறாக நொறுக்கியது.  ஓ...வென்று கதறியவளின் அழுகுரல் கேட்டு பக்கத்து வீட்டு இப்ராஹீம் ஓடிவந்தார்.
 
ஃபஜ்ர் தொழுகைக்கு சென்று கொண்டிருந்த இன்னும் சிலரும் ஒடிவர, எல்லோரும் சேர்ந்து  ஜமீலாவின் உடலை இறக்கினர். அக்கம் பக்கத்து பெண்கள் சுபைதாவை தேற்றிக் கொண்டிருந்தனர். ஜமீலா தற்கொலை செய்து கொண்ட செய்தி ஊருக்குள்  வேகமாய்ப் பரவ, அனைவரும் மையத்தைப் பார்க்க வந்த வண்ணம் இருந்தனர். சமீபத்தில் எந்த மையத்திற்கும் இவ்வளவு கூட்டம் வந்ததில்லை.  செய்தி கேட்டு சுபைதாவின் பெரியம்மா மகள் ஒருவர்  சென்னையிலிருந்து வருவதாகப் பேசிக்  கொண்டார்கள்.  லுஹர் தொழுகையைக் கடந்தும் கூட்டம் குறைந்தபாடில்லை. 
.
'சென்னைல இருந்து வர ரொம்ப நேரம் ஆகும்.. மையத்த ரொம்ப நேரம் போட்டிருக்க வேண்டாம். சீக்கிரம் எடுத்துடுலாம்... வெளியில தெருஞ்சா ஏதும் போலீஸ் கேஸ் ஆயிடப் போகுது.." என்று  சிலர்  இப்ராஹீமிடம் ஆலோசனை சொன்னார்கள்.

இப்ராஹீமிற்கும் அவர்கள் சொன்னது சரியெனப் பட்டது. மஃரிப்புக்கு எடுத்துடலாம். 'குழி வெட்ட ஆளுங்கள அனுப்பிடுங்க.. ஓலைப் பாய், கஃபன் துணி எல்லாம் வாங்கிட்டு வந்துடுங்க..." என்று இப்ராஹீம் ஆளாளுக்கு ஒரு வேலையைக் கொடுத்தனுப்பினார்.
 
அஸர் தொழுகை முடிந்த கையோடு சந்தூக்கையும் தூக்கி வந்திருந்தனர். சற்று நேரத்தில் மையத்தைக் குளிப்பாட்டுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.  குளிப்பாட்டுவதற்காக வேண்டி சந்தனம், சோப்பு, சீயக்காய் என மூன்று வகையான கரைசல்கள் கரைக்கப்பட்டு தயாராக இருந்தன. வெந்நீரும் தயாராகி இருந்தது. வீட்டினுள் பெண்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சுபைதாவின் அழுகுரல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. தண்ணீர், காபி, அன்னப்பால் கஞ்சி என எதையெல்லாமோ கொடுக்க முயற்சித்தனர்.  ஆனால் சுபைதாவின் கிறுக்குப்பிடியால்  ஒரு சொட்டு தண்ணீரைக்கூட அவளுக்கு ஊட்ட முடியவில்லை. கதறி அழுது, அழுது அவளது  தொண்டையும் வறண்டு போயிருந்தது.

இன்னும் நிறையப் பெண்களும், ஆண்களும் மையத்தைப் பார்க்க வந்த வண்ணம் இருந்தனர். பெண்கள் எப்படியோ கூட்டத்தில் நுழைந்து உள்ளே சென்று மையத்தைப் பார்த்தனர். ஆண்களால் உள்ளே போக முடியாமல்  வீட்டிற்கு வெளியிலேயே நின்று கொண்டிருந்தனர்.

இளமையின் கனவுகளோடு சஞ்சாரித்துக் கொண்டிருந்த  ஆன்மாவொன்று எந்தச் சலனமும் இன்றி மரக் கட்டிலில் கிடந்தது. ஜமீலாவின் இந்த முடிவுக்கு ஒருவகையில் அங்கு கூடியிருந்த எல்லோரும்தான் பொறுப்பு. ஆனால் எவரது மனதிலும் அதற்கான குற்ற உணர்வு இருந்ததாகத் தெரியவில்லை. 'பாவம்.. கல்யாணம் பண்ணி வைக்க வசதி இல்லாம இப்படி ஆயிருச்சு.." 'வாழ வேண்டிய பொண்ணு..." என்றெல்லாம் ஆளாளுக்கு பரிதாபப் பட்டுக்கொண்டிருந்தனர்.  யாராவது ஒருவர் அவளது அழகையோ, அறிவையோ, குணத்தையோ பார்த்து மணமுடிக்க முன்வந்திருந்தால் இப்படியான முடிவு ஏற்பட்டிருக்காது என்பதை யாரும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.   
 
மையத்தைக் குளிப்பாட்டி, கஃபன் துணி போர்த்தி வெளியே எடுத்துப் போவதைக் கண்ட சுபைதா 'எங்கனியே... ஜமீலா..." என்று உரக்கக் கத்தினாள். சுபைதாவின் அழுகுரல் வீட்டின் மேற்கூரையை முட்டி சட்டென அடங்கியது. சத்தம் அடங்கிய அடுத்த நொடியில் ஜீவனற்று தரையில் சாய்ந்தாள். எல்லோரும் பதறிப் போய் அவளைத் தூக்கி உலுக்கினர்.
 
'வழிவிடுங்கம்மா.. காத்து வரட்டும், வழி விடுங்க... வழி விடுங்க..." என்ற குரல் மாறி மாறி வந்தது. நிற்கக் கூட இடம் இல்லாமல் கூடிநிற்பவர்கள் எங்கு ஒதுங்கி நின்று வழிவிட முடியும்? ஒரு டம்ளரில்  தண்ணீர் கொண்டு வந்து சுபைதாவின்  முகத்தில் அடித்ததும் கண்களைச் சுருக்கி மூச்சுவிட ஆரம்பித்தாள்.  நிதானம் வந்ததும் மீண்டும் கதறி அழத் தொடங்கினாள்.
 
கலிமா சஹாதத் சொல்லி சந்தூக்கை தூக்கிக் கொண்டு ஆண்கள் பள்ளியை நோக்கி நடந்தார்கள்;. இருக்கும் போது ஜமீலாவிற்குத் துணையாக யாரும் வரவில்லை. ஆனால் அவரது இறுதி ஊர்வலத்தில் நிறையப்பேர் பங்கெடுத்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாகவே இருந்தனர். மையத்தின் பின்னாடி நடந்து சென்றவர்களில் ஒருவன் தன் நண்பனிடம், 'நீங்க போயிக்கிட்டு இருங்க... நான் போயி ஒரு தடவ மீட்டிங்கப் பத்தி அறிவிப்பு செஞ்சுட்டு வந்துட்றேன்.." என்று கூறிச் சென்றான்.
 
ஜமீலாவின் வீட்டுத் திண்ணையில் கூடியிருந்த பெண்கள் கூட்டத்தில் இருந்த ஒரு பெண், 'பாவி மக இத்தாப் பெரிய குமரிக்கு நாண்டுக்குட்டு நிக்கிறது பாவம்... அல்லா சேத்துக்க மாட்டானு கூடவா தெரியாது... இப்படிப் பண்ணிட்டாளே..." என்று கூறி தனது தாடையில் கை வைத்தாள்.
 
மேல முக்கு மைதானத்தில் போடப்பட்;டிருந்த மேடையிலிருந்து செய்த அறிவிப்பு காற்றில் மிதந்து வந்தது. 'இன்ஷா அல்லாஹ்;;... மஃரிப் தொழுகைக்குப் பிறகு சரியாக ஏழு மணியளவில் மாபெரும் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம் நடைபெறும். அனைவரும் அலைகடலெனத் திரண்டு வாரீர் வாரீர் என அன்புடன் அழைக்கிறோம். இவண்........!"

- ராபியா குமாரன்

சமரசம்