Home கட்டுரைகள் அப்துர் ரஹ்மான் உமரி அறிவிற்சிறந்த நபித்தோழர்கள் - 2 (அலீ இப்னு அபீதாலிப் ரழியல்லாஹு அன்ஹு)
அறிவிற்சிறந்த நபித்தோழர்கள் - 2 (அலீ இப்னு அபீதாலிப் ரழியல்லாஹு அன்ஹு) PDF Print E-mail
Sunday, 21 June 2015 21:48
Share

அறிவிற்சிறந்த நபித்தோழர்கள் - 2

அலீ இப்னு அபீதாலிப் ரழியல்லாஹு அன்ஹு

  சையத் அப்துர் ரஹ்மான் உமரி  

பெயரும் வம்சாவழியும்:

அலீ இயற்பெயர் ஆகும். அபு துராப் என்பதும் அபுல் ஹஸன் என்பதும் விளிபெயர்கள் (குன்யத்) ஆகும். ஹைதர் என்பது சிறப்புப் பெயர்.
தந்தையின் பெயர் அபூ தாலிப் தாயின் பெயர் ஃபாதிமா.

வம்சாவழித் தொடர்- அலீ இப்னு அபூ தாலிப் இப்னு அப்துல் முத்தலிப் இப்னு ஹாஷிம் இப்னு அப்து முனாஃப் இப்னு குசை இப்னு கிலாப் இப்னு முர்ரா இப்னு கஅப் இப்னு லுவை.

இஸ்லாமை ஏற்றல்:

அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனின் புறத்திலிருந்து இறைத்தூதராக அறிவிக்கப்படுகையில் அலீ உடைய வயது பத்தே பத்து தான். எந்நேரமும் அண்ணலாரோடு இருப்பது அலீயின் வழக்கம். ஆகையால், முதன்முதலில் இஸ்லாமியக் காட்சிகள் அவருடைய கண்களுக்குத்தான் புலனாயின.

அண்ணலாரும் அண்ணலாருடைய அருமைத் துணைவியார் கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அம்மையார் அவர்களும் இறைவழிபாட்டில் இலயித்திருப்பதை ஒருநாள் ‘இதென்ன இவர்கள் என்ன செய்து கொண்டுள்ளார்கள்?’ ‘தாங்கள் இருவரும் என்ன செய்கிறீர்கள்?’ ஆர்வத்தோடு வினவினார்.

நுபுவ்வத் என்னும் உயர்பொறுப்பைப் பற்றி அண்ணலார் அவருக்கு எடுத்துக் கூறினார்கள். படைத்தவன் ஒருவனிருக்க வேறுவேறு தெய்வங்களையும் சிலைகளையும் வணங்கி வழிபடுகின்ற மடைமையைக் குறித்தும் எடுத்துரைத்தார்கள். ஓரிறைக்கொள்கையைப் பற்றி எடுத்துக்கூறி ஓரிறைவனை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்கள்.

திகைப்பு மேலிட அலீ, ‘நான் எனது தந்தையிடம் இதைப்பற்றி விசாரித்துக் கொள்ளவா?’ என வினவினார்.

அதுவரையிலும் அண்ணலார் யாரிடமும் இதுகுறித்து தெரியப் படுத்தவில்லை. ஆதலால், ‘வேண்டுமென்றால் நீயே இதைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்த்துக்கொள், ஆனால், யாரிடமும் கூறவேண்டாம்’ என சொல்லிவிடடார்கள்.

அண்ணலாரோடு இருந்து அவர்களுடைய பண்புநலன்களைக் கண்ணாரக் கண்டு மனம் ஒன்றிவிட்டிருந்தபடியால் நெடுங்காலம் யோசிக்கவேண்டிய அவசியம் அலீக்கு இருக்கவில்லை. அண்ணலாரின் பயிற்சி முறை அவருடைய அகத்தை சிறப்பாக சீரமைத்திருந்தது. இறைவனின் பேரருட்கொடையை ஏற்பதற்காக அவர் தக்க காலத்தை எதிர்நோக்கி இருக்கவில்லை. மறுநாளே அண்ணலாரின் அவையில் ஆஜராகி தன்னை இஸ்லாமினுள் இணைத்துக் கொண்டார்.

உம்முல் முஃமினீன் அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்குப் பிறகு முஸ்லிமாகியது யார்? என்பது குறித்து பல கருத்துகள் நிலவுகின்றன. அபூபக்கர் ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹுதான் முதன்முதலில் ஈமான் கொண்டவர் என ஒருசிலரும் அலீதான் இஸ்லாமிய வட்டத்திற்குள் முதலில் நுழைந்தவர் என சிலரும் இல்லையில்லை ஜைது இப்னு ஹாரிஸா ரழியல்லாஹு அன்ஹு தான் இஸ்லாமை யாவருக்கும் முன் ஏற்றவர் என ஒருசிலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.

ஆயின், அறிவாராய்ச்சியில் கரைகண்ட அறிஞர் பெருந்தகைகளின் கூற்றுப்படி பெண்களில் முதன்முதலாக இஸ்லாமை ஏற்றவர் அன்னை கதீஜா ஆவார். ஆண்களில் அபூபக்கரும் சிறுவர்களில் அலீ முர்தழாவும், அடிமைகளில் ஜைது இப்னு ஹாரிஸாவும் இஸ்லாமை ஏற்றவர்கள் ஆவர்.

நுபுவ்வத் என்னும் பொறுப்பில் அமர்த்தப்பட்ட பிறகு ஏறக்குறைய பதிமூன்று ஆண்டுகாலம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவைச் சூழவுள்ள பள்ளத் தாக்குகளிலும் மலைத்தொடர்களிலும் தவ்ஹீத் என்னும் ஓரிறைக் கோட்பாட்டைக் குறித்து பிரச்சாரம் செய்து வந்தார்கள். ஆனால், அதற்குப் பதிலாக குரோதம், பகைமை, வெறுப்பு, விரோதம், எதிர்ப்பு போன்றவற்றையே மக்காவாசிகள் பதிலுக்கு அளித்தார்கள்.

அண்ணலாரை இறைத்தூதராக ஏற்றுக்கொண்ட நல்லுல்லங்களுக்கு சொல்லொணா இன்னல்களையும் துன்பங்களையும் வரையறாது

வழங்கினார்கள். தாங்கயியலா துன்பச்சுமையை இறைவனுக்காக ஏற்றுக் கொண்ட அவ்வுள்ளங்கள் படும் பாட்டை எண்ணி எண்ணி அண்ணலார் வருத்தமடைந்தார்கள். ஒருகட்டத்திற்குப்பிறகு அகிலத்திற்கு அருட்கொடையாய் வந்துதித்த அண்ணலார் பெருந்தகை மதீனாவிற்கு புலம் பெயர்ந்து செல்லுமாறு ஸஹாபாக்களுக்கு உணர்த்தினார்கள். அதன்படி ஒருசில தூய ஆத்மாக்களைத் தவிர மற்றெல்லா முஸ்லிம்களும் மதீனாவிற்கு புலம்பெயர்ந்து சென்றார்கள். இதனால் இறைநிராகரிப்பாளர்களின் உள்ளத்தில் கிலி படர்ந்தது. முஸ்லிம்கள் யாவரும் ஊரைத்துறந்து சென்றுவிட்டால் அவர்கள் மீதான் தமது பிடி இற்றுப்போய்விடும் என்பதை அவர்கள் நன்று உணர்ந்து கொண்டார்கள். ஆகையால், இப்பிரச் சனைகளுக்கு எல்லாம் மூலகாரணமான முஹம்மதுவை கொன்றொழிப்பது என்னும் முடிவிற்கு விரைந்து வந்தார்கள்.

முஹம்மது ஊரைக் காலிசெய்து கிளம்பும் முன் அவரை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்பதே அவர்களுடைய திட்டம். ஒருநாள் கூடிப்பேசி இச்செயலை உடனுக்குடன் செய்து முடிப்பது என்னும் தீர்மானத்திற்கு ஆனால், இப்பாருலகில் மீண்டுமொமுறை ஓரிறைக்கொள்கை என்னும் ஒளியால் நிரப்பி வைப்பது எனவும் ஷிர்க் என்னும் காரிருளை அடியோடு ஒருமுறை ஒழிப்பது எனவும் படைத்தவன் தீர்மானித்திருந்தான்.

இறைநிராகரிப்பாளர்களின் சதித்திட்டத்தைக் குறித்து தன்னுடைய தூதருக்கு தக்க தருணத்தில் அவன் அறிவித்தான். மதீனாவிற்கு ஹிஜ்ரத் கிளம்பிச் செல்லுமாறு ஆணை வந்துவிட்டது.

அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடைய படுக்கையில் அலீயை படுத்திருக்குமாறு பணித்தார்கள். இறைநிராகரிப்பாளர்களுக்கு எள்ளளவும் ஐயம் எழவில்லை. அபூபக்கர் அவர்களை அழைத்துக் கொண்டு மதீனாவை நோக்கி பயணமானார்கள். அப்போது அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வயது கிட்டத்தட்ட பனி ரெண்டு. அச்சிறு வயதிலேயே இறைவனின் தூதருக்காக தன்னுடைய இன்னுயிரை பணயம் வைக்க முன்வந்தது சாதாரண செயல் அல்லவே? எங்கும் காணக்கிடைக்கா அற்புத உதாரண மல்லவா அது?

இரவு முழுக்க வெளியே உருவிய வாட்களோடு இறைநிராகரிப்பாளர்கள் காத்துக் கிடக்கிறார்கள். உள்ளே இவ்விளஞ் சிறுவனோ எதுகுறித்தும் கவலைப்படாது ஆனந்தமாக உறங்கிக் கொண்டுள்ளான். இறைநிராகரிப்பாளர்களின் சதித்திட்டத்தை முறியடித்துவிட்டு அவர்களுடைய கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அண்ணலார் மதீனாவிற்கு கிளம்பிச் சென்றுவிட்டார்கள். விடிந்ததும் வெறி கொண்ட வேங்கைகளாய் பகைவர்கள் வீட்டினுள் பாய்ந்தார்கள். முஹம்மதுவின் படுக்கையில் முஹம்மதுவிற்குப் பதிலாக தன் உயிரையே பணயம் வைத்தவாறு அவரை அடிபிற ழாதுபின்பற்றும் இளைஞன் ஒருவன் படுத்துக் கிடப்பதைக் கண்டு பிரமித்துப் போனார்கள், வெட்கித் தலை குனிந்தார்கள். தங்களுடைய அலட்சியத்தை எண்ணி எண்ணி தம்மையே அவர்கள் நொந்துகொண்டார்கள்.

அலீயை அப்படியே விட்டுவிட்டு முஹம்மதுவை தேடிக் கொண்டு கிளம்பினார்கள். அண்ணலார் சென்றபின்பு அலீ மக்காவில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் தஙகியிருந்தார். அண்ணலாரின் உத்தரவுப்படி அண்ணலார் நிறைவேற்ற வேண்டிய காரியங்களையும் கொடுக்கல் வாங்கல்களையும் முடித்துவிட்டு மூன்றாவது அல்லது நான்காவது நாள் மக்காவிற்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு மதீனாவை நோக்கிப் பயணமானார்கள்.

அச்சமயம் அண்ணலார் குல்ஸும் இப்னு ஹதம் ரழியல்லாஹு அன்ஹு என்பார் வீட்டில் விருந்தாளியாகத் தங்கியிருந்தார்கள். ஆகையால், அதே வீட்டில் அலீயும் போய்த் தங்கினார்கள். (தபக்காத் இப்னு சஅத், அலீ பற்றிய குறிப்புகள் பக்கம் 13)

முஹாஜிரீன்களுக்கும் அன்சார்களுக்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்தியபோது அலீ அவர்களை அண்ணலார் தமது சகோதரராக தம்மோடு வைத்துக் கொண்டார்கள். (அதே நூல்)

போர்களில் பங்கேற்பு

உயிருக்கு அஞ்சா தம்முடைய உன்னதத் தோழர்கள் முன்னூறு பேர்களின் துணையோடு அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்போருக்காக மதீனா நகரில் இருந்து வெளிக்கிளம்பினார்கள்.

இஸ்லாமியப் படைக்கு முன்பாக கருநிறக் கொடிகள் இரண்டை இருவர் தாங்கிப் பிடித்தவாறு சென்றார்கள். அவர்களில் அலீயும் ஒருவர்.

பத்ருக் களத்தை அடைந்ததும் ஒருசில வீரமறவர்களை அழைத்து அலீயின் தலைமையில் உளவுபார்க்க அண்ணலார் அனுப்பி வைத்தார்கள். பகைவரின் வருகை, புறப்பாடு, தங்குகை போன்றவற்றை உளவறிந்து வருவது அவர்களுக்கு இடப் பட்ட பணியாகும். மிகச்சிறப்பாக தமக்கிடப்பட்ட பணியை அவர்கள் முடித்துக் கொண்ட வந்தார்கள். பகைவர் வந்து சேருவதற்கு முன்பாக களத்தை அடைந்த முஜாஹிதீன்கள் தக்க இடங்ளை கைவசப்படுத்தி அங்கு கூடாமடித்துத் தங்கினார்கள்.

ஹிஜ்ரீ 2 ஆம் ஆண்டு ரமழான் மாதம் 17ஆம் நாள் ஜும்ஆ நாளன்று இருதரப்பிலும் படையணிகள் அணிவகுத்தன. மரபுப் படி முதலில் இரு புறங்களில் இருந்தும் தனி வீரர்கள் களமிறங்கினார்கள். முதலில் நிராகரிப்பாளர்களின் தரப்பிலிருந்து மூன்று முக்கிய வீரர்கள் களமிறங்கினார்கள். களத்தில் குதித்து, தம் மோடு மல்லுகட்ட வருமாறு முஸ்லிம் முஜாஹிதீன்களை அழைத்தார்கள். அவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாய் மூன்று அன்சாரிகள் ‘லப்பைக்’ என்றவாறு களத்தில் குதித்தார்கள்.

யார் நீங்கள்? உங்களுடைய பெயர்கள் என்ன? எக்குலத்தைச் சார்ந்தவர்கள் நீங்கள்? என்றெல்லாம் குறைஷிகள் அவர்களிடம் விசாரித்தார்கள். அவர்களில் இருவர் யத்ரிப் நகரவாசிகள் எனத் தெரிந்த பிறகு, உஙகளோடு நாங்கள் சண்டையிட மாட்டோம் என நிராகரித்து விட்டார்கள்.முஹம்மதே, எங்களோடு போரிட எங்களுக்கு இணையா னோரை அனுப்பி வையுங்கள் என கூக்குரலிட்டார்கள்.

தமது பரம்பரையைச் சார்ந்த மூன்று நபர்களின் பெயர்களை அண்ணலார் முன்மொழிந்தார்கள். ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹு, அலீ ரழியல்லாஹு அன்ஹு உபைதா ரழியல்லாஹு.

தமது எதிராளிகளை எதிர்கொள்ள இம்மூலரும் களத்தில் இறங்கினர். எடுத்த எடுப்பிலேயே தமது எதிரியான வலீதை, அலீ ரழியல்லாஹு அன்ஹு பந்தாடி வீழ்த்திவிட்டார்கள். அதன்பின்பு தமது பங்காளியான உபைதாவிற்கு உதவச் சென்றார்கள். அவரோடு போரிட்டுக் கொண்டிருந்த ஷைபாவை ஒரே மூச்சில் வெட்டி நரகிற்கு அனுப்பி வைத்தார்கள்.

இக்காட்சியைக் கண்டுகொண்டிருந்த நிராகரிப்பாளர்கள் பொதுத் தாக்குதலுக்கு இறங்கினார்கள். அல்லாஹுஅக்பர் என்னும் முழக்கத்தை

ஓங்கி முழங்கியவாறே முஜாஹிதீன்களும் களத்தில் குதித்தார்க்கள். எதிரிகளின் படையணியை ஊடுருவிக் கொண்டு முன்னேறினார்கள். ஹைதர் ரழியல்லாஹு அன்ஹு எதிரிகளின் படையணிகளை துளைத்துக் கொண்டு சென்று அவர்களை சின்னாபின்னப் படுத்திவிட்டார்கள். இறைவனின் சிம்மம் பகைவரை பந்தாடிக் கொண்டிருந்தது. மின்னல் ஒளியாய்ப் பாய்ந்து பாய்ந்து தாக்கிக் கொண்டிருந் தார்கள். வந்த நோக்கம் நிறைவேறாமல் எண்ணம் ஈடேறாமல் நிராகரிப்பாளர்கள் பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

வெற்றி வீரர்களாக, வீர மறவர்களாக முஸ்லிம்கள் எல்லையில்லா போர்ச்செல்வங்களை அள்ளிக்கொண்டு மதீனா திரும்பினார்கள்.

எழுபதிற்கும் மேற்பட்ட குறைஷியர்களை போர்க்கைதிகளாகப் பிடித்துக் கொண்டு வந்தார்கள்.போர்ச் செல்வங்களில் இருந்து அலீ ரழியல்லாஹு அன்ஹு க்கு ஒரு போர்க் கவசமும் ஒரு ஒட்டகமும் ஒரு வாளும் கிடைத்தன. (இப்னு ஹிஷாம், பத்ருப் போர்)

ஹிஜ்ரீ 2 ஆம் ஆண்டு அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலீ ரழியல்லாஹு அன்ஹுவுக்கு ‘மருமகன்’ என்னும் சிறப்பை வழங்கினார்கள். ஃபாத்தி மா ரழியல்லாஹு அன்ஹாவை திருமணம் முடித்துக்கொள்ளும் எண்ணத்தை முதலில் அபூ பக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும், அதன்பின்பு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் வெளியிட்டார்கள். இருவருக்கும் பதி லளிக்காமல் ஈருலகத் தலைவர் அண்ணலார் மௌனம் காத் தார்கள்.

அதன்பின்பே அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது உள்ளக்கிடக்கை வெளிப்படுத்தினார்கள். மஹராக அளிப்பதற்கு உன்னிடம் என்னவுள்ளது? என அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் வினவினார்கள்.

ஒரு குதிரையையும் ஒரு கவசத்தையும் தவிர வேறெதுவும் இல்லை என ‘குதிரை போருக்குப் பயன்படும். கவசத்தை விற்றுவிடு’ என்றார்கள்

அலீ ரழியல்லாஹு அன்ஹு அக்கவசத்தை உஸ்மான் அவர்களிடம் நானூற்று எண்பது திர்ஹம்களுக்கு விற்றார்கள். அத்தொகையைக் கொண்டு வந்து அண்ணலாரின் சமூகத்தில் ஒப்படைத்தார்கள்.அதனை பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொடுத்து சந்தைக்குச் சென்று நறுமண அத்தர் மற்றுமேனைய பொருள்களை வாங்கி வருமாறு கூறினார்கள். பிறகு, தாமே முன்னின்று குத்பா ஓதினார்கள். தாம் ஒழு செய்த நீர்த்துளிகளை இருவர் (அலீ, ஃபாத்திமா) மீதும் தெளித்து வளத்திற்காக துஆ செய்தார்கள். (ஸர்கானி, பா:3 பக்:4)

ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு சீதனமாக ஒரு கட்டில், ஒரு படுக்கை, ஒரு போர்வை, இரண்டு திருகைகள், ஒரு தோல்பை ஆகிய பொருட்கள் கிடைத்தன.

திருமணமான பத்து அல்லது பனிரெண்டு மாதங்களுக்குப் பிறகு, இல்லற வாழ்வு தொடங்கியது. அதுவரை அலீ ரழியல்லாஹு அன்ஹு அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடுதான் இருந்து வந்தார்கள். ஆகையால், இல்லறத்தைத் தொடங்குகையில் அவரிடம் அண்ணணலார் தனி ஒரு வீடு பார்க்குமாறு கூறினார்கள். அவ்வாறே ஹாரிஸ் இப்னு நுஃமான் உடைய வீடு பெறப்பட்டது. சொர்க்கத்தலைவியை அழைத்துக் கொண்டு அலீ ரழியல்லாஹு அன்ஹு அவ்வீட்டில் குடியேறினார்கள். (இசாபா பா: 8 பக்: 158)

அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் உலகப் பற்றில்லாமல் உலகை நேசிக்காது உலகப் பொருட்களின் மீது அக்கறை செலுத்தாது வாழ்ந்தார்கள். அண்ணல் நபிகளாரோடு வாழ்ந்த காலத்திலேயே அவர்களுக்கு என சொந்தமாக ஒரே ஒரு ஒட்டகைதான் இருந்தது. அந்த ஒட்ட கையின் மூலமாக இத்கிர் என்றொரு வகைப்புல்லை வணிகம் செய்து அதைக்கொண்டு வலீமா நடத்தலாமென எண்ணினார்கள்

ஒருநாள் முழுப்போதையில் அமீர் ஹம்சா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்துகொண்டிருந்தாபர்கள். அதுவரை மது ஹராமாக்கப் படவில்லை. குடிபோதையில் அந்த ஒட்டகத்தை அறுத்து விருந்து படைத்து விட்டார்கள். ஆகையால், கவசம் விற்ற பணத்தைத் தவிர அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வேறு எதுவும் எஞ்சியிருக்க வில்லை. எனவே, அப்பணத்தைக் கொண்டே வலீமா விருந்து ஏற்பாடு செய்தார்கள். அவ்விருந்தில் பேரீச்சம்பழங்கள், கோது மை ரொட்டி, ஒருவகையான ஷேர்வாச் சாறு ஆகியன பரிமாறப்பட்டன.

‘அக்காலத்தில் அதைவிடச் சிறந்த வலீமாவை யாரும் கொடுக்க மாட்டார்கள்’ என அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள். (ஸர்கானி பா: 3 பக்: 8)

ஹிஜ்ரீ 3 ஆம் ஆண்டு உஹதுப்போர் நடைபெற்றது. ஷவ்வால் மாதம் ஒரு சனிக்கிழமை அன்று போர் தொடங்கியது. யுத்தத்தின் தொடக்கத்தில் எண்ணிக்கையில் குறைவாக இருந்தபோதிலும் முஸ்லிம்கள் எதிரிகளை ஓட ஓட விரட்டியடித்தார்க்கள். ஆயினும் அண்ணலாரின் கட்டளையை மீறி வில்லாளர்கள் தமது இடத்தை விட்டு அகன்று போர்க்களத்திற்குள் வந்துவிட்ட படியால், எதிரிகள் அவ்வாய்ப்பை பொன்னான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு பின்புறத்தில் இருந்து திடீரெனத் தாக்கினார்கள். எதிர்பாரா இத்தாக்குதலால் முஸ்லிம்கள் நிலை குலைந்து போனார்கள். அண்ணல் நபிகளார் ஸல்லல்ம்ஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பற்களும் கூட ஷஹீதாகிவிட்டன. அருகிலிருந்த ஒருகுழியில் அண்ணலார் விழுந்து விட்டார்கள். (காண்க ஸஹீஹுல் புகாரி)

அண்ணலாரை நெருங்க இறைநிராகரிப் பாளர்கள் முயன்றார்கள். ஆனால், அவ்வாறு நெருங்கவிடாமல் முஸ்அப் இப்னு உமைர் ரழியல்லாஹு அன்ஹு தடுத்தார். அம்முயற்சியில் அவர் ஷஹீதும் ஆகிவிட்டார்.

அவருக்குப்பின் ஹைதர் ரழியல்லாஹு அன்ஹு முன்னேறி கொடியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார். நிகரற்ற வீரத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் நிராகரிப்பாளனர்களின் கொடியைத் தாங்கியிருந்த அபு சஅத் இப்னு அபீ தல்ஹா முன்னணிக்கு வந்துநின்றவாறு தன்னோடு மல்லுகட்ட யாரேனும் தயாரா? என சவால் விடுத்தார். அச்சவாலை ஏற்று அலீ ரழியல்லாஹு அன்ஹு அவரை எதிர்கொண்டார். ஒரேயடியில் அடித்து வீழ்த்தினார். கீழே விழுந்து அவர் துடிக்கலானார். உயிருக்குப் போராடியவாறு கைகால்களை அடிக்கத் தொடங்கினார். அம்முயற்சியில் அவருடைய ஆடைகள் அனைத்தும் கலைந்துவிட்டன. நிர்வாணமாகிவிட்டார். அவருடைய நிலையைக் கண்டு அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுககு பரிதாபம் மேலிட்டது. அவரை அந்நிலையிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

நிலைமை சற்று சீரானபின், அலீ ரழியல்லாஹு அன்ஹு இன்னும் சில ஸஹாபாக்களை அழைத்துக் கொண்டு அண்ணலாருக்கு அருகே சென்றார். அண்ணல் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அருகிலிருந்த மலைக்குன்றுக்கு அழைத்துச் சென்றார்கள்.

ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அண்ணலாரின் காயங்களைத் துடைத்து மருந்திட்டார். தனது கேடயத்தில் நீரை மொண்டு கொண்டு வந்து அலீ ரழியல்லாஹு அன்ஹு அண்ணலாரின் முகத்தைக் கழுவினார். ஆயினும் வடிகின்ற குருதி நிற்கவேயில்லை. கோரைப்பாய் ஒன்றை எரித்து அதன் சாம்பலை ஃபாத்திமா அண்ணலாரின் காயத்தின் மீது வைத்துக் கட்டினார்கள்.

ஹிஜ்ரீ 5ஆம் ஆண்டு அகழ்ப்போர் நடைபெற்றது. அப்போரின் போது இறைநிராகரிப்பாளர்கள் அவ்வப்போது அகழியில் இறங்கி போரிடுவார்கள். அப்படியொரு முறை எதிரிப்படை யைச்சார்ந்த குதிரை வீரர்கள் அகழியில் இறங்க முயற்சித்தபோது அலீயும் அவருடைய தோழர்களும் துணிச்சலோடு போரிட்டு அவர்களை விரட்டியடித்தார்கள். குதிரை வீரர்களின் தலைவரான அமர் இப்னு அப்துல் வுத் தனித்து தன்னோடு போரிட வருமாறு சவால் விடுத்தார். அச் சவாலை ஏற்று அலீ ரழியல்லாஹு அன்ஹு களத்தில் குதித்தார்.

‘நான் உன்னை கொல்ல விரும்பவில்லை’ என்றார் அப்துல் வுத்.

‘ஆனால், நான் உன்னுடைய கதையை முடிக்க ஆசைப்படுகிறேன்’ என்றார் இறைச்சிம்மம் ஹைதர் ரழியல்லாஹு அன்ஹு.

வெகுண்டு எழுந்த அப்துல் வுத் தனது புரவியிலிருந்து கீழே குதித்தான். இருவருக்கும் இடையே காரசாரமான போர் நிலவியது. இறுதியில் அலீ முர்தழா அவனை வீழ்த்தி கீழே தள்ளினார்கள். ஜஹன்னமிற்கு அனுப்பி வைத்தார்கள். தலைவர் மாண்டதும் மற்ற புரவி வீரர்கள் யாவரும் வெளிறி ஓடிப்போயினர். (இப்னு ஹிஷாம்)

நெடுநாள்கள் நிராகரிப்பாளர்கள் அகழியை முற்றுகையிட்டவாறு இருந்தார்கள். இருப்பினும் முஜாஹிதீன்களை எதிர் கொள்ளவோ அகழியை கடந்துவரவோ அவர்களால் இயலவில்லை. அவர்களுடைய ஊக்கம் குன்றிக் கொண்டே சென்றது. இறுதியில் தோற்றுத் திரும்பினர். இப்போரிலும் இஸ்லாமிய முஜாஹிதீன்கள் பெருவெற்றி பெற்றார்கள். மதீனாவின் புறநகரில் வசித்துவந்த பனூ குறைழா யூதர்கள் முஸ்லிம்களோடு ஒப்பந்தம் செய்திருந்தபோதிலும் மக்கா எதிரிகளுக்கு எல்லாவகையிலும் உதவி ஒத்தாசை செய்து வந்தார்கள். அரபுலகின் மற்ற மற்ற குலத்தினரை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்புவதில் மிக்க முனைப்பு காட்டி வந்தார்கள்.

அகழ்ப் போரில் இருந்து திரும்பியதும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பனூ குறைழாவை நோக்கி கிளம்பினார்கள். இஸ்லாமியக் கொடி அலீ ரழியல்லாஹு அன் ஹுவின் கைகளில் இருந்தது. அண்ணலாரின் உத்தரவுக்கிணங்க பனூ குறைழாவின் கோட்டையைக் கைப்பற்றி அங்கு அசர் தொழுகையைத் தொழுதார்கள்.

ஹுதைபிய்யா உடன்படிக்கை

ஹிஜ்ரீ 6ஆம் ஆண்டு ஏறக்குறைய ஆயிரத்து நானூறு ஸஹா பாக்களோடு மக்காவை தரிசிப்பதற்காக அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிளம்பினார்கள். ஹுதைபிய்யா என்னும் இடத்தை அடைந்தபோது இறை நிராகரிப்பாளர்கள் முஸ்லிம்களை ஊருக்குள் நுழைய விடமாட்டார்கள் என்னும் தகவல் அண்ணலாரை எட்டியது. துன்னூரைன் என விளிக்கப்படும் உஸ்மான் அவர்களை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மக்கா அனுப்பிவைத்தார்கள். நிராகரிப்பாளர்கள் அவரை தடுத்து நிறுத்திக் கொண்டார்கள்.

உஸ்மானை குறைஷிகள் கொன்றுவிட்டார்கள் என்னும் தக வல் முஸ்லிம்களிடையே பரவியது. ஆகையால், அண்ணல் நபிகளார் அனைத்து முஸ்லிம்களிடமும் ஜிஹாதிற்காக பைஅத் தைப் பெற்றார்கள். அலீ (ரழி) அவர்களும் பைஅத் செய்தார்கள்.

அதன்பின்பு இத்தகவல் உண்மையல்ல, வதந்தி என தெரிந்து விட்டது. முஸ்லிம்களுடைய வேகம் சற்றே மட்டுப்பட்டது. இருதரப்பாரும் சமாதானம் செய்துகொள்ள இறங்கி வந்தார்கள்.

சமாதான ஒப்பந்தத்தை எழுதும் பொறுப்பு அலீயிடம் ஒப்ப டைக்கப் பட்டது. முஸ்லிம்களின் மரபுப்படி அலீ (ரழி) ‘ஹாதா மா காழா அலைஹி ரலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ... என எழுதத் தொடங்கினார். நிராகரிப்பாளர்கள் இச்சொற்பிரயோகத்தை ஆட்சேபித்தார்கள்.

‘ரசூலுல்லாஹ்’ என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டால் அப்பு றம் பிரச்சனை எங்கே தோன்றப்போகின்றது?’ என அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.ரசூலுல்லாஹ் என்னும் சொல்லை அழிக்குமாறு அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். ஆனால், ரோஷமிக்க அலீ முர்தழா ரழியல்லாஹு அன்ஹு அதனை அழிக்கயியலாது என மறுத்து விட்டார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அதனை அழிக்க என்னால் இயலாது எனக்கூறிவிட்டார். அச்சொல் உள்ள இடம் எது எனக்கேட்டு அண்ணலார் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே தமது கரத்தால் அதனை அழித்தார்கள். அதன்பின்பே சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. கஅபத்துல்லாஹ்வை தரிசிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனாவிற்கு (ஸஹீஹுல் புகாரி, சமாதான அத்தியாயம், ஸர்கானி, ஹுதைபிய்யா)

ஹிஜ்ரீ 7ஆம் ஆண்டு கைபர் யுத்தம் நடைபெற்றது. இங்கு யூதர்களுடைய வலிமையான பெருங்கோட்டைகள் பல இருந்தன. அவற்றை வெல்வது எளிதான செயலாக இருக்க வில்லை.

முதலில் இப்பணி அபூபக்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரால் இயலவில்லை என்கையில் உமரிடம் ஒப்படைக்கப் பட்டது. அவராலும் வெற்றிபெற இயயலவில்லை.

‘நாளை நான் இஸ்லாமியக் கொடியை வீரமிக்க போராளி ஒருவரின் கையில் அளிப்பேன். அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மிகவும் நேசிக்கிறார்கள். அவருடைய கரங்களில்தான் கைபர் கோட்டை வீழும்’ என அண்ணலார் அறிவித்தார்கள்.

மறுநாள் அதிகாலை விடிந்தபோது, ஸஹாபாக்களில் ஒவ்வொருவரும் கொடி தனது கரங்களில் ஒப்படைக்கப்படக் கூடாதா என்னும் எதிர்பார்ப்புடனேயே விழித்தார்கள். இப்பெருமையும் மதிப்பும் தனக்கே கிடைக்கவேண்டும் என்றே ஒவ்வொருவரும் ஆசைப்பட்டார்கள்.ஆனால், இப்பெருஞ்செல்வம் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கென விதி முன்னமே எழுதி வைத்திருந்தது. பெரும்பெரும் வீரங்குடி கொண்ட ஸஹாபாக்கள் தமது பெயர் அறிவிக்கப்படக் கூடாதா என்னும் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்க, அண்ணலார் அலீயின் பெயரை உச்சரித்தார்கள்.அலீ ரழியல்லாஹு அன்ஹு அங்கு இல்லை. அவருடைய விழிகளில் நோய்த்தொற்று இருந்ததால் வலியாலும் வேதனையாலும் அவதிப்பட்ட அவர் தனியே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அவரை வரவழைத்து தமது வளமிக்க உமிழ்நீரால் அவருடைய விழிகளைத் துடைத்தார்கள். அவருடைய வேதனை விடைபெற்றுச் சென்றது. (கிதாபுல் மகாஸி, கைபர் யுத்தம்)

அதன்பின்பு அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரிடம் கொடியைக் கொடுத்தார்கள். ‘இறைவனின் தூதரே! அவர்களோடு போரிட்டு அவர்கள் யாவரையும் முஸ்லிம்களாக இறைவனுக்குக் கீழ்ப்படியும் மக்களாக மாற்றிவிடட்டுமா?’ என அலீ ரழியல்லாஹு அன்ஹு வினவினார்.

‘இல்லை, அவர்களிடம் இஸ்லாம் பற்றி எடுத்துரையுங்கள் இஸ்லாமிய சட்டதிட்டங்களைப் பற்றி அவர்களிடம் எடுத்துக் கூறுங்கள். ஏனெனில் உங்களுடைய முயற்சியாலும் உழைப்பாலும் ஒரே ஒரு மனிதர் முஸ்லிமாக மாறிவிடுவது கூட பெரும் பெரும் களஞ்சியங்கள் உங்களுக்குக் கிடைப்பதை விட மேன்மையானது’ என்றார்கள் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

ஆனால், தமக்கென அந்த யூதர்கள் இழிவையும் அவமானத் தையும் விரும்பத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். ஆகையால், அவர்கள் அண்ணலாரின் இக்கூற்றுக்கு யாதொரு மதிப்பையும் அளிக்கவில்லை. அவர்களுடைய தலைவரான மர்ஹப் என்ப வர் வெகு ஆராவாரத்தோடும் அட்டகாசத்தோடும் செருக்கோ டும் கீழ்வரும் யாப்புச் செயயுளை படித்தவண்ணம் களத்தில் இறங்கினார்.

قد علمت خيبر اني مرحب يشاكي السلاح بظل مجرب

اذ الحروب اقبلت تهلب

யான் மர்ஹபென்று கைபர் அறியும்
ஆயுதமும் பட்டறியும் பெற்ற வீரனாவேன்
யுத்தகளம் போர்நெருப்பை அள்ளிவீசுகையில்
கைபர் பெருவீரர் இந்த கொக்கரிப்புக்கு பதிலளித்தவராய் முன்னேறினார்.

انا الذي سميتني امي حيدره كليث غابات كريه المنظره

اوفيهم بالصاع كيل السدره

அன்னையால் ஹைதரென பெயரிடப்பட்டவன் யான்
வனம்வசி சிம்மமாய் அச்சத்தையும் திகிலையும் அளிப்பவன்
மின்னலாய்ப் பாய்ந்து வைரிகளை அழித்தொழிப்பவன்
சட்டென நிமிடத்தில் பாய்ந்து அவ்வெதிரியின் கதையை முடி த்துவிட்டார்
அப்பெரு வீரர். (சஹீஹ் புகாரி, பாகம் 2 பக்கம் 103)

அதனைத்தொடர்ந்து ஹைதர் வேகத்தோடும் வீரத்தோடும் போரிட்டார். நிகரற்ற எங்கும் காணயியலா வீரத்தை வெளிப்படுத்தியவாறு கைபரை வென்றெடுத்தார்.

ஹிஜ்ரீ 8ஆம் ஆண்டு மக்காவின் படையெடுப்பதற்கான முன் னேற்பாடுகள் தொடங்கின. முஜாஹிதீன்கள் இன்னும் ஆயத்தமாகவே இல்லை. அதற்குள்ளாக பகைவருக்கு உளவுச்செய்தியை ஒரு பெண் எடுத்துச் செல்கிறாள் என்னும் தகவல் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எட்டியது.

அப்பெண்ணைப் பிடித்துக்கொண்டு வருமாறு அலீ, ஜுபைர், மிக்தாத் ஆகியோரை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுப்பினார்கள். இம்மூவரும் புரவிகளில் ஏறிப் பறந்தார்கள். ஃகாக் என்னுமிடத்தில் அப்பெண்ணைப் பிடித்துவிட்டார்கள். அவளிடமிருந்த கடிதத்தைக் கொடுக்கு மாறு கோரினார்கள். அவளோ தன்னிடம் இல்லவேயில்லை என சாதித்தாள். கடிதத்தைத் தர மறுப்பாயானால் உடைகளை நீக்கி சோதனைபோட வேண்டியிருக்கும் என்றிவர்கள் மிரட்டிய தால் அப்பெண் வேறுவழியின்றி தனது கூந்தலுக்குள் மறைத்து வைத்திருந்த கடிதத்தை எடுத்துக் கொடுத்தாள். கடிதத்தைப் பெற்றுக்கொண்டு அண்ணலாரிடம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திரும்பி வநதார்கள்.

கடிதத்தைத் திறந்து படித்துப் பார்த்தால் புகழ்பெற்ற ஸஹாபி யான ஹாதிப் இப்னு அபீ பல்தஆ ரழியல்லாஹு அன்ஹு மக்கா குரைஷிகளுக்கு அண்ணலாரின் படையெடுப்பைக் குறித்த தகவலை வழங்கி யிருந்தார். ஒருசில முக்கிய ரகசிய தகவல்களையும் அக்கடிதத் தில் அவர் தெரிவித்திருந்தார்.

‘என்ன இது?’ என அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹாதிபிடம் வினவினார்.

‘நான் குற்றவாளியா எனத் தீர்மானிப்பதற்கு முன்னால் எச்சூழ் நிலையில் நான் இக்கடிதத்தை அனுப்பினேன் என்பதைக் கொஞ்சம் கேளுங்கள். எனக்கும் குறைஷியருக்கும் யாதொரு உறவு முறையும் கிடையாது.

நான் அவர்களோடு தொடர்பு கொண்டுள்ள ஒரு கோத்திரத்தைச் சார்ந்தவன். மக்காவைச் சார்ந்த மற்ற மற்ற முஹாஜிரீன்களுக்கு உறவினர்களும் இரத்த பந்துக்களும் மக்காவில் உள்ளார்கள். மக்கா மீதான தாக்குதலின்போது அவர்கள் உதவுவார்கள். அங்குள்ள அவர்தம் உற்றார் உறவினர்களைக் காப்பார்கள். என்னுடைய நெருங்கிய உறவினர்களும் மக்காவில் உள்ளார்கள். ஆனால், அவர்களைக் காப்பாற்றத்தான் ஆள் யாரும் இல்லை. ஆகையால்தான் நான் சாதாரணமான தகவல்களை அவர்களுக்கு வழங்கினேன். அதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் எனது உற்றார்களைப் பாதுகாப்பார்கள் என்னும் எதிர்பார்ப்பில் நான் இவ்வாறு நடந்துகொண்டேன். மற்றபடி காட்டிக்கொடுக்கும் எண்ணம் ஒருசிறிதும் எனக்கு இல்லை. அத்தோடு தாங்கள் இறைனின் தூதராக உள்ளீர்கள். கண்டிப்பாக தங்களுக்கு வெற்றி கிடைத்தே தீரும், என்னுடைய கடித வரிகளால் தங்களுக்கு யாதொரு பாதிப்பும் ஏற்பட்டு விடப் போவ தில்லை’ என்றார் ஹாதிப் ரழியல்லாஹு அன்ஹு.

அவருடைய சமாதானத்தை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏற்றுக் கொண்டார்கள். அவர் சொல்வது உண்மைதான் என்றார்கள். ஆனால், அவருடைய கருத்தை உமர் போன்றோரால் ஏற்கவே இயலவில்லை. ‘அண்ணலாரே அனுமதி கொடுங்கள். நான் இந்த முனாபிஃபிக்கை வெட்டிக் கூறுபோட்டு விடுகிறேன்’ என அவர்

‘உமரே! என்ன சொல்கிறீர்கள்? இவர் யாரென்று தெரியாதா? இவர் பத்ருப் போரில் கலந்து கொண்ட போராளி அல்லவா? பத்ருப்போரில் கலந்து கொண்டோரைக் குறித்து அல்லாஹ் என்ன கூறியுள்ளான் என்பதை மறந்துவிட்டீரா? அவர்தம் குற்றங்கள் யாவற்றையும் மன்னித்துவிட்டென் என அல்லாஹ் கூறியுள்ளான் அல்லவா?’ என்றார்கள் அண்ணலார். (சஹீஹுல் புகாரி, கிதாபுல் மகாஸி, மக்கா வெற்றி)

ஆக, அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம் அவர்கள் ஹிஜ்ரீ 8ஆம் ஆண்டு ரமழான் மாதம் மதீனாவை விட்டுக் கிளம்பினார்கள். மீண்டுமொருமுறை தான் மிகவும் நேசித்த தன்னை வெளியேற்றிய புனித பூமியில் காலடி எடுத்து வைத்தார்கள். அதுவும் எப்படி?

ஆரவாரமில்லாமல், ஆர்ப்பாட் டமில்லாமல் கத்தியின்றி ரத்தமின்றி பெற்ற வெற்றியை அமைதியாக வெளிப்படுத்திய வண்ணம்.இஸ்லாமியப் படையின் கொடியொன்று சஅத் இப்னு உபாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கைகளில். அவரோ வெற்றிப் பாடலை உற்சாகத்தோடு இசைத்துக் கொண்டே வருகிறார்.

الْيَوْمَ يَوْمُ الْمَلْحَمَةِ الْيَوْمَ تُسْتَحَلُّ الْكَعْبَةُ

அல்யவ்மு யவ்முல் மல்ஹமஹ்
அல்யவ்மு தஸ்தஹில்லுல் கஅபஹ்
இன்று கடும்போர்புரியும் நாள்
இன்று போரிடல் கஅபாவிலும் கூடும்
பாடல்வரிகளைப் பற்றிக் கேள்விப்பட்ட அண்ணலார் ஸல் லல்லாஹு
அலைஹி வஸல்லம் வேண்டாம் இங்ஙனம் பாட வேண்டாம். இதற்குப்
பதிலாக இன்று கஅபாவின் மாண்பும் மதிப்பும் உயரும் நாள் எனப்
பாடுங்கள் என்றார்கள். (காண்க ஸஹீஹுல் புகாரி)

يَوْمٌ يُعَظِّمُ اللَّهُ فِيهِ الْكَعْبَةَ وَيَوْمٌ تُكْسَى فِيهِ الْكبَةُ

சஅதிடமிருந்து கொடியை வாங்கிக்கொண்டு படையினரை அழைத்துக் கொண்டு மக்காவில் நுழையுமாறு அலீக்கு ஆணை பிறப்பித்தார்கள். அவ்வாறே அலீ ரழியல்லாஹு அன்ஹு கதாஃ என்னும் இடத்திலிருந்து மக்கா மாநகருக்குள் ஒருதுளி ரத்தமும் சிந்தப்படாமல் மக்கா வெற்றிகொள்ளப்பட்டது.

இறையில்லம் கஅபத்துல்லாஹ்வை அசுத்தமிக்க சிலைகளில் இருந்து தூய்மைப் படுத்த வேண்டிய நாள் இந்நாள். கஅபாவைச் சுற்றி கிட்டத்தட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட சிலைகள் நாறிக் கொண்டு கிடக்கின்றன.முதன்முதலாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

இப்பணியைத் தான் கையில் எடுத்துக் கொண்டார்கள். கஅபத்துல்லாஹ்வைச் சுற்றியுள்ள எல்லா சிலைகளையும் தம் கைத்தடியால் அடித்துக்கொண்டே சென்றார்கள்.

جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا

சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தி யம் அழிந்தே தீரும்

(17/81) என்னும் இறைவசனத்தை ஓதிக் கொண்டே சென்றார்கள். (காண்க ஸஹீஹுல் புகாரி)

அடுத்து கஅபத்துல்லாஹ்வின் உள்ளே வைக்கப்பட்டிருந்த இப்ராஹீம் மற்றும் இஸ்மாஈல் இருவருடைய சிலைகளையும் அகற்றி அப்புறப் படுத்தினார்கள். அதற்கப்புறம் கஅபாவிற்குள்ளே நுழைந்தார்கள்.இவ்வளவு செய்தபிறகும் இன்னும் சிலைகள் எஞ்சியிருந்தன. ஏனெனில் பல சிலைகள் ஆழமாகப் புதைக்கப்ட்டு இருந்தன. எல்லா புறங்களிலும் சிலைகள் நிறுவப்பட்டு இருந்தன. ஆகையால், செம்பாலான பெரிய சிலை ஒன்று அப்படியும் எஞ்சி நின்றது. இரும்புக் கம்பிகளால் அது நிலத்தோடு பிணைக்கப் பட்டிருந்தது.

அது மிகவும் உயரத்தில் இருந்தபடியால் அண்ணலார் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலீயின் முதுகில் ஏறி அச்சிலையை அகற்ற முனைந்தார்கள். ஆனால், அண்ணலாரின் பாரத்தை அலீயால் தாங்க முடியவில்லை. ஆதலால் அலீயை தமது புஜங்களின் மீது ஏற்றினார்கள். அச்சிலையை அகற்றுமாறு பணித்தார்கள். இரும்புக் கம்பிகளில் இருந்து அச்சிலையை அகற்றி கீழே தூக்கி எறிந்தார். அதனை துண்டுதுண்டாக உடைத்தார். இப்படியாக இறையில்லம் கஅபத்துல்லாஹ் மிகத்தூய்மையாக ஆக்கப்பட்டது. (முஸ்தத்ரக் ஹாகிம்)

ஹுனைன் போர்

மக்கா வெற்றிக்குப்பிறகு அதேயாண்டு (ஹிஜ்ரீ 8) ஹுனைன் போர் நடந்தது. இப்போரில் முதலில் முஸ்லிம் முஜாஹிதீன் களுக்கு வெற்றி கிட்டியது. ஆனால், அவர்கள் யாவரும் போர்ச் செல்வங்களை ஈட்டுவதில் முனைந்ததால் பகைவர் மறுபடியும் சுதாகரித்துக் கொண்டு திடீர்த்தாக்குதல் நடத்தினர்.

திடுதிப்பென்று தங்கள் மீதுவிடிந்த இந்த பேராபத்தைக் கண்டு நிலைதடுமாறிப் போன முஜாஹிதீன்கள் கலங்கி நாலா புறங்களிலும் ஓடலாயினர். பன்னிரெண்டாயிரம் போராளிகளுள் கொஞ்சம் பேர்தாம் களத்தில் நிலைத்துநின்றிருந்தனர். அவர்களுள் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்களும் ஒருவர்.

களத்தில் இருந்து புறமுதுகிட்டு ஓடாமல் நிலைத்துநின்றது மட்டுமல்ல, தன்னுடைய நிகரற்ற மறத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தி பற்பல அருஞ் செயல்களையும் அலீ ரழியல்லாஹு அன்ஹு நிகழ்த்திக் காட்டினார். அயராது பகைவரோடு போரிட்டார். முழுக்களத்தையும் கட்டுக்குள் கொண்டுவந்தார். பகைவர் தளபதியின் மீது பாய்ந்து அவனைக் கொன்றுபோட்டார். அதே சமயம் களத்தில் நெஞ்சுரத்தோடு நின்று போராடிய முஜாஹிதீன்களும் தீரத்தோடு போரிட்டதால் எதிரிகள் நிலைகுலைந்து தோற்றுப் பின்வாங்கி ஓடினார்கள். (இப்னு ஹிஷாம், முஸ்தத்ரக் ஹாகிம்)

தபூக் போரின்போது

ஹிஜ்ரீ 9ஆம் ஆண்டில் அண்ணலார் தபூக் யுத்தத்திற்காகக் கிளம்பிச் சென்றார்கள். தமது வீட்டாருக்குப் பாதுகாப்பாக அலீயை விட்டுவிட்டுச் சென்றார்கள். மதீனாவிலேயே தங்கியிருக்குமாறு அவருக்குக் கட்டளையிட்டார்கள்.

ஜிஹாதில் கலந்துகொள்ள முடியவில்லையே என்னும் வருத் தம் ஒருபக்கம். முனாஃபிக்கீன்களின் நையாண்டி இன்னொரு பக்கம் என கலவைகளால் அலீ துவண்டுபோயிருந்தார்.அவருடைய கவலையை அகற்றும் விதத்தில் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அலீயே, மூஸா இல்லாதபோது ஹாரூன் இருந்ததைப் போல எனக்குப் பகரமாக நீங்கள் இருப்பதை நான் விரும்புகிறேன். உங்களுக்கு இதில் ஆர்வமில்லையா?’ எனக் கேட்டார்கள். (புகாரி)

குறிப்பிடத்தக்க அருஞ்செயல்கள்

பலதரப்பட்ட சிக்கல்கள் சோதனைகளுக்கிடையில் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வாழ்க்கை பயணப்பட்ட போதிலும் பற்பல அருஞ்செயல்களை அவர் ஆற்றியுள்ளார்கள். அரசாங்க நிர்வாக விஷயங்களில் தனது முன்னோடியான உமரவர் களைப்பின்பற்றி நடைபோடவே அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எண்ணியிருந்தார்கள். நடைமுறையில் இருந்த மரபுகளில் எத்தகைய மாற்றத்தையும் தோற்றுவிக்க எண்ணவில்லை. ஹிஜாஸ் பகுதியில் வசித்துவந்த யூதர்களை உமரவர்கள் வெளியேற்றி நஜ்ரான் பகுதியில் வசிக்கச் செய்தார். அவர்கள் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்திக்க வந்தார்கள். மறுபடியும் தமது பழைய இருப்பிடங்களுக்கே திரும்பிவிட அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார்கள்.

‘உமரவர்களை விட சூழலைக் கணித்து துல்லியமாக மதிப்பிடக் கூடியவர் யாருள்ளார்?’ எனக் கேட்டவாறு அக்கோரிக்கையை அலீ நிராகரித்து விட்டார்கள். (கிதாபுல் ஃகர்ராஜ், காழி அபூ யூஸுஃப், முசன்னஃப் இப்னு அபூ ஷைபா, அல்கஸ்வாத்)

நாட்டு நிர்வாகத்தை திறம்பட நடத்தவேண்டுமெனில் அதிகாரி களையும் ஆளனர்களையும் திறம்படக் கையாள வேண்டும். கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும். அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இதுவிஷயத்தில் மிகுந்த அக்கறை செலுத்தினார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்கு அதிகாரியை நியமித்து அனுப்பும்போது தக்க ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்குவார்கள். (அல்ஃகர்ராஜ் பக்: 79)

அவ்வப்போது அவர்களை பரிசோதிப்பார்கள். கண்காணிப் பார்கள். ஒருமுறை இப்பணிக்காக கஅப் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை நியமித்தார்கள். அப்போது அவரிடம், ‘உமது தோழர் களை அழைத்துக் கொண்டு இராக் கிளம்பிச் செல்லுங்கள். ஒவ் வொரு பகுதிக்கும் போய் அதிகாரிகளைப் பற்றி மக்களிடம் கருத்துகளை கேட்டு வாருங்கள். ஆய்வு செய்யுங்கள். அதிகாரிகளுடைய நடவடிக்கைகளை உற்று கவனித்து வாருங்கள்’ என வழிகாட்டுதல்களை அளித்து அனுப்பினார்கள். (அல்ஃகர்ராஜ் பக்: 67)

அதிகாரிகளுடைய வீண்செலவுகள், தேவையற்ற செலவுகள் போன்றவற்றை உற்றுக் கண்காணித்து வந்தார்கள. ஒரு தடவை இர்த்ஷேர் உடைய ஆளுநரான முஸ்கலா என்பார் பைத்துல் மால் எனப்படும் பொது நிதியில் இருந்து கடன்வாங்கி 500 அடிமை களையும் அடிமைப் பெண்களையும் விடுதலை செய்தார். ஒரு சில நாட்களுக்குப் பிறகு அதுகுறித்து அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரை கடுமையான விசாரணைக்கு உட்படுத்தினார்கள்.

‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இச்சிறு தொகையை எல்லாம் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பொருட்படுத்தவே மாட்டார்கள். ஆனால், இவரோ ஒவ்வொரு தானியத்திற்கும் கணக்கு கேட்கிறார்’ என்றார் அவர்.அதன்பின்பு வறுமையால் தத்தளித்த அவர், வேறு வழியில்லா மல் அபயம் தேடி முஆவியாவிடம் சென்றுவிட்டார்.

அதன்பின்பு விஷயத்தை அறிந்துகொண்ட அமீர் முஆவியா, ‘இறைவன் உன்னை நாசமாக்கட்டும். பிரபுக்களைப் போன்ற செயலை அவர் செய்தார், ஆனால், பயந்து அடிமையைப் போன்று ஓடிவிட்டார். பாவியைப் போன்று நம்பிக்கைத் துரோகம் செய்தார். இதேயிடத்தில் குடியிருப்பவராக அவர் இருந்தால் அவரைக் கைது செய்துசிறையில் அடைப்பதைவிடக் கொடிய தண்டனை அளித்திருப்பேன். அவரிடம் சொத்துபத்து ஏதேனும் இருந்திருந்தால் ஜப்தி செய்திருப்பேன். இல்லையெனில் அவரை மன்னித்து விட்டிருப்பேன்’ என்றார். (தபரீயின் வரலாற்று நூல், பக்: 3441)

இத்தகைய கடுமையான நடவடிக்கைகளில் இருந்து அவருடைய உற்றார் உறவினர்கள் நெருங்கிய நண்பர்கள் கூட தப் வில்லை. ஒருமுறை அவருடைய நெருங்கிய உறவினரான சிற்றப்பா மகனான அப்துல்லாஹ்

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பைத்துல் மால் பொது நிதியில் இருந்து பெருந்தொகை ஒன்றைப் பெற்றுக் கொண்டார். அவர் அப்போது பசராவின் ஆளுநர் பதவியில் இருந்தார். அவரை அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘எனக்கு உரியதைத்தான் நான் பெற்றுள்ளேன்’ என்றவர் பதிலளித்தார். இருந்தபோதிலும் அவர் மிகவும் பயந்தவராய் பசரா விலிருந்து மக்காவிற்கு கிளம்பி வந்தார். (அல்ஃகர்ராஜ் பக்: 50)

வருவாய்த்துறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் செய்தார்கள். அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் வனங்கள்மீது கூட வரித்தீர்வைகள் வசூலிக்கப்பட்டன.

அண்ணல் நபிகளால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் குதிரைகளின் மீது ஜகாத் வரிவதிக்கப் படவில்லை. ஆனால், உமர் ஃபாரூக் காலத்தில் குதிரைகள் வணிகப் பண்டமாகக் கருதப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டதால் அவர்கள் குதிரைகளுக்கும் ஜகாத் கொடுத்தாக வேண்டும் என சட்டம் இயற்றினார்கள். அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் குதிரைகள் இனப்பெருக்கம் செய்யப்பட்டு அதிகரிக்க வேண்டிய கட்டாயம் நிலவியதால் சமுகத்தேவை போர்த்தேவை போன்ற வற்றைக் கருதி குதிரைகள் மீதான ஜகாத் வரி தள்ளுபடி செய்யப் பட்டது. (அல்ஃகர்ராஜ் 50)

பொதுமக்களைப் பொருத்தவரை அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கருணையின் வடிவாகத் திகழ்ந்தார்கள். பைத்துல்மால் பொதுநிதியின் வாசல்கள் ஏழை எளியோருக்கம் மிஸ்கீன்களுக்கும் எந்நேரமும் திறந்தே இருந்தன. வசூலாகும் நிதியனைத்தையும் வள்ளல் குணத்தோடு அதற்குரியவர்களிடையே பங்கிட்டு வழங்கி விடுவார்கள்.

அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகச்சிறந்த போர்வீரராக விளங்கினார்கள். போர்க்களத் திறமை அவர்களிடம் இயல்பாகவே இருந்தது. ஆகையால், சிரியா மாகாண எல்லையில் திறன்கொண்ட போர்ப் பாசறைகளை நிர்மானித்திருந்தார்கள். ஈரானில் தொடர்ந்து கலவரங்களும் கிளர்ச்சிகளும் மூண்டுகொண்டே இருந்ததால் பைத்துல் மால் பொது நிதியைப் பாதுகாக்கவும் பெண்கள் குழந்தைகளைப் பாதுகாக்கவும் அரண்சூழ்ந்த பெருங்கோட்டைகள் பலவற்றை எழுப்பி இருந்தார்கள். அவ்வகையில் ஃபுராத் ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் குறிப்பிடத் தக்கதாகும.

இஸ்லாமைப் பரப்புவதும் பிரச்சாரப் பணிகளை முடுக்கி விடுவதும் இஸ்லாமிய ஆட்சியாளரின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாகும். அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்பணியை மிகத்திறமையாக செய்துவந்தார்கள். சொல்லப்போனால் அண்ணல் நபிகளார் காலத்தில் இருந்தே இப்பணியை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து வந்தார்கள் எனலாம். இதை மனதிற்கொண்டு தான் அத்தியாயம் அல்பராஅஃ இறக்கியருளப்பட்டபோது அதனை மக்களிடம் பிரச்சாரம் செய்யும் பணியில் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, கடைசி நிமிடம் வரை இப் பொறுப்பை விட்டு கிஞ்சிற்றும் விலகாமல் ஈடுபாட்டோடு செய்து வந்தார்கள். ஈரானிலும் ஆர்மீனியாவிலும் வசித்துவந்த புதிய முஸ்லிம் களில் பலர் முர்தத்துகளாக ஆகிவிட்டபோது அவர்கள் அனைவரையும் மிகக்கடுமையாகப் பிடித்தார்கள். கடுமை தாளாமல் அவர்களில் பலர் பாவமன்னிப்பு கோரி, மீண்டும் முஸ்லிம்களாக மாறிவிட்டார்கள். காரிஜியாக்களையும் ஸபாயியாக்களையும் கடுமையாகத் தண்டித்ததும் அவர்களை அடக்கி ஒடுக்கியதும் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் ஒரு அங்கமே கசையடிக்கும் பணியாளர்களிடம், முகத்தையும் வெட்க ஸ்தலத்தையும்

தவிர பிற இடங்களில் கசை அடிக்கலாம் என உத்தரவு பிறப்பித்தார்கள். பெண்களுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகளை உட்காரவைத்து வழங்கவேண்டும், அவர்களுடைய உறுப்புகள் எதுவும் வெளித்தெரியா வண்ணம் முழுமையாக ஆடை போர்த்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் உத்தரவு களைப் பிறப்பித்திருந்தார்கள்.கூடா உறவின் மூலம் கருவுற்ற பெண்களுக்கு பிரசவம் ஆன பின்புதான் தண்டனை அளிக்கப்பட வேண்டும். ஆகையால், பிரசவ காலத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்க வேண்டும். கருவிலுள் குழந்தைக்கு யாதொரு ஆபத்தும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதொரு காரணம். எப்பாவமும் அறியா சிசுக்களும் தண்டனைக்கு ஆளாகி விடக்கூடமாதல்லவா?

சிறையில் அடைக்கப்படும் பொதுக் கைதிகளுக்கு பைத்துல் மால் பொது நிதியில் இருந்து உணவு வழங்கப்படும். அதே சமயம் வேண்டுமென்றே குற்றச் செயல்களில் ஈடுபட்டுக் கைதானோருக்கும் கடும்பாவிகளுக்கும் அவர்கள் செல்வந்தர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பொது நிதியில் இருந்து உணவு வழங்கப்பட மாட்டாது. தமது பணத்தில் இருந்துதான் அவர்கள் தமது உணவை வரவழைத்துக் கொள்ளவேண்டும். இயலாதோராக இருப்பின் அவர்களுக்கும் பொது நிதியிலிருந்து உணவு வழங்கப்படும். (அல்ஃகர்ராஜ் பக்: 100)

சிறப்புகளும் திறமைகளும்

இளம்பருவத்தில் இருந்தே அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பயிற்சி பெற்று வளர்ந்தவர்கள். வேறுயாருக்கும் கிடைக்காத அரிதான இவ்வாய்ப்பை அவர்கள் பெற்றிருந்தார்கள். கடைசி தருணம் வரை இது அவர்களுக்கு நீடித்தது. நான் தினந்தோறும் அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அவையில் ஆஜராவது வழக்கம். (அல்ஃகர்ராஜ் பக்: 85)

‘அவையில் எனக்கிருக்கும் நெருக்கத்தைப் போன்று வேறு யாருக்கும் இருக்காது’. (பக்கம் 80) என அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

இரவிலும் பகலிலும் இருமுறை இவ்வாய்ப்பு கிடைத்து வந்தது என்பதை வேறோர் அறிவிப்பின் வாயிலாக அறிய முடிகின்றது. (முஸ்னத் அஹ்மத் பக்: 146)

இவ்வாறே பெரும்பாலான பயணங்களிலும் அண்ணலாரோடு அருகிலிருக்கும் வாய்ப்பு கிடைத்து வந்தது. ஆகையால், பயணச் சட்டங்கள் பயண வழிகாட்டுதல்கள் போன்றவற்றை முழுமையாக அறிந்துகொள்ளும் வாய்ப்பும் இயல்பாகவே கிடைத்தது.

ஒருமுறை ஷுரைஹ் இப்னு ஹானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அன்னை ஆயிஷாவிடம் காலுறைகள் மீது மஸஹ் செய்வது (ஈரத்தால் தடவுவது) தொடர்பான ஐயமொன்றை எழுப்பினார். அப்போது அன்னை ஆயிஷா அவர்கள் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய பெயரை சுட்டிக் காட்டினார்கள். காரணத்தை வினவியபோது அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்தாம் அண்ணலாரோடு பெரும்பாலும் பயணங்களில் கூடச் செல்வார்கள் என்றார்கள். (இழாலத்துல் குஃபா, பக்: 83)

அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு நெருக்கம் இருந்த காரணத்தால் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அண்ணலாரே குர்ஆனைக் கற்றுக் கொடுத்து வந்தார்கள். (முஸ்னத் அஹ்மத் பா: 1 பக்: 83) பலசமயங்களில் இறைவசனங் களுக்கான விளக்கங்களையும் கற்றுக் கொடுப்பார்கள். (அதே நூல் பக்: 85)

இளம்பருவத்தில் இருந்தே கல்விச்சூழலில் வளர்ந்து வந்ததாலும் இறைத்தூதரிடமிருந்து நேரிடையாகக் கல்வி பயின்றதாலும் மற்றெல்லா தோழர்களை விட அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கல்வியிலும் கேள்வியிலும் தலைசிறந்து விளங்கினார்கள். ஸஹாபாக்கள் பெருமதிப்போடு அவர்களை விழிகளை உயர்த்திப் பார்த்தார்கள்.

குர்ஆன் விரிவுரை

இஸ்லாமிய ஞானத்தின் கருவாசலாகவும் இஸ்லாமியக் கலைகளின் நதிமூலமாகவும் இறைவேதம் குர்ஆன் திகழுகின்றது. அச்சுனையில் இருந்து முழுப்பயனையும் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பெற் றிருந்தார்கள். அண்ணல் நபிகளார் காலத்திலேயே முழுக்குர் ஆனையும் மனப்பாடம் செய்த கண்ணியம் வாய்ந்த ஸஹாபாப் பெருந்தகைகளுள் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவராவார்.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு குர்ஆன் வசனத்திற்கான விளக்கத்தையும் இறங்கிய காலப் பின்னணியையும் அறிந்திருந் தார்கள். ‘எந்தவொரு ஆயத்தைக் குறித்தும் அது எக்காலத்தில் இறங்கியது, யாரைக் குறித்து இறங்கியது, எதற்காக இறங்கியது என என்னால் கூறமுடியும்’ என ஒருமுறை அலீ அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள். (தபக்காத் இப்னு சஅத் தலைசிறந்த குர்ஆன் விரிவுரையாளர்களுள் ஒருவராக அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மதிக்கப்படுகிறார்கள். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு. அவர்களைத் தவிர இத்துறையில் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு நிகரானோரோ ஈடானோரோ யாரும் கிடையாது.

அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மறைவிற்குப் பின் ஆறுமாத காலம் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனித்திருந்தார்கள். அக்காலத்தில் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் முழுக் குர்ஆனையும் இறங்கிய காலகட்ட வரிசையில் தொகுத்து எழுதினார்கள் என்னும் தகவல் தபக்காத் இப்னு சஅத் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு நதீம் அவர்கள் தமது ‘அல் ஃபெஹர்ஸித்’ நூலில் அவ்வரிசைப் பட்டியலையும் பதிவு செய்துள்ளார்கள்.வான்மறை குர்ஆனில் இருந்து பிரச்சனைகள் சிக்கல்களுக்கான தீர்வுகளைக் கண்டறிவதில் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அபாரப் புலமை பெற்றிருந்தார்கள். நடுவர் தீர்ப்பு நிகழ்வு (ஹகம் சம்பவம்) நடந்தபோது தீர்ப்பளிக்கும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும்தான் உண்டு என காரிஜியாக்கள் வாதிட்டார்கள். தங்களுடைய கூற்றுக்கு ஆதாரமாக ‘இனில் ஹுக்மு இல்லா லில்லாஹ்’ என்னும் இறைவசனத்தை எடுத்துக் காட்டினார்கள். அதுசமயம், அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அனைத்து ஹாஃபிழ்களையும் உலமாக்களையும் ஓரிடத்தில் ஒன்றுதிரட்டி, கணவன் மனைவிக் கிடையே சச்சரவு ஏற்பட்டால் மூன்றாம் ஒருவரை நடுவராக நியமித்து பிணக்கை தீர்த்துக் கொள்ளுமாறு அனுமதி வழங்கியுள்ளான்.

وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ

أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا

கணவன் தரப்பிலிருந்தும் மனைவி தரப்பிலிருந்தும் தலா ஒருவரை நடுவர்களாக நியமித்துக் கொள்ளுங்கள் (அல்குர்ஆன் 4/35)

‘அப்படியிருக்கும்போது உம்மத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை யைத் தீர்ப்பதற்கு நடுவர்களை நியமிப்பதில் என்ன தவறு? முஸ் லிம் உம்மா அல்லாஹ்விடத்தில் ஒரு பெண்ணைவிடவா கேவ லமாகப் போய்விட்டது?’ என்றார்கள். (முஸ்னத் அஹ்மத் பா: 1 பக்: 86)

வான்மறை குர்ஆனின் சில வசனங்கள் சில வசனங்களை தள்ளு படி செய்திருக்கும். அதாவது அவற்றின் கருத்து நடைமுறைப் படுத்தப் படுவதை முடக்கிவிடும். இத்தகு வசனங்கள் நாஸிஃக் - மன்சூஃக் என வழங்கப்படுகின்றன. இந்த ஞானத்தை அழகிய அற்புதமான வடிவில் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பெற்றிருந்தார்கள். அதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார்கள். கூஃபா நகரத்தின் பெரியை பள்ளிவாசவலில் யாரேனும் உரையாற்ற விரும்பினால் அவரிடம் உனக்கு நாஸிஃக் - மன்சூஃக் அறிவுள்ளதா? என விசாரிப்பார்கள். இல்லை என அவர் பதிலளித்தால், அவரைக் கண்டிப்பார்கள். பள்ளியில் உரையாற்றும் தகுதி உனக்கில்லை என இறைவசனங்களுக்கு அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அளித்துள்ள விளக்கங்களை ஒன்றுதொகுத்தால் அதுவே பெரியதொரு நுலாகி விடும். அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலீ ரழியல்லாஹு அன்ஹு.

அவர்களுக்கு ஒருசில தனிப்பட்ட கல்வியைக் கற்றுக் கொடுத்துள்ளார்கள் எனவும் ஒருசாரார் கருதுகிறார்கள். இதை மனதிற்கொண்டே அவருடைய மாணாக்கர்கள் சிலர் அவரிடம், ‘குர்ஆன் அன்றி வேறு ஏதேனும் கல்வி தங்களிடம் உள்ளதா?’ என அவரிடம் வினவினார்கள்.

‘வித்தைப் பிளந்து விருட்சமாக்குபவன் மீது சத்தியமாக, உயிர்ப் பொருட்களை உண்டாக்குபவன் மீது சத்தியமாக, குர்ஆனைத் தவிர என்னிடம் வேறு எதுவுமே இல்லை. இருப்பினும் குர்ஆனை நன்குணரும் அற்புத ஆற்றலை பெருஞ்செல்வத்தை இறைவன் எனக்கு வழங்கியுள்ளான்’ என்றார்கள் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். (சஹீஹ் புகாரி, அத்திய்யாத், முஸ்னத் அஹ்மத் இப்னு ஹன்பல், பா1 பக்: 79, 100)

சிறுவயதிலிருந்து கிட்டத்தட்ட முப்பதாண்டு காலம் அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்க ளின் அண்மையில் கழிக்கக் கூடிய பெரும்பேறு அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கிடைத்திருந்தது. அண்ணலாரின் தோழர்களில் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தவிர்த்து, மற்றெல்லா ஸஹாபாக்களை விட அதிகமாக இஸ்லாமின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பற்றியும் நபிமொழிகளைப் பற்றியும் மிக அதிகமாக அறிந்திருந்தார்கள். அத்தோடு முன்னணி நபித்தோழர்களில் அண்ணலாரின் மறைவிற்குப்பிறகு நெடுங்காலம் உயிர் வாழ்ந்தவர் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மட்டுமே.

முதல் மூன்று கலீஃபாக்களுடைய காலத்திலும் கல்வியூட்டும் பொறுப்பு அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதன்பின்பு அவர்தம் ஆட்சிக் காலத்திலும் இப்பொறுப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார்கள். இதன்காரணமாக, மற்ற மூன்று கலீஃபாக்களைக் காட்டிலும் நபிமொழிகளை அதிகமாக அறிவிப்பதற்குத் தேவையான கால அவகாசம் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கே கிட்டியது. மற்றவர்களைக் காட்டிலும் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களே அதிகமான நபிமொழிகளை அறிவித்திருப்பதைக் காணலாம்.இருந்தபோதிலும் நபிமொழிகளை அறிவிப்பதில் மிகவும் எச்சரிக்கையையும் பேணுதலையும் கடைப்பிடித்தார்கள். இதனாற்றான் அதிகமாக நபிமொழியை அறிவித்தோர் பட்டியலில் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயர் இடம் பெறுவதில்லை. ஒட்டு மொத்தமாக, 586 நபிமொழிகளையைத்தான் அறிவித்துள்ளார்கள். அவற்றுள் 20 ஹதீஸ்களை புகாரியும் முஸ்லிமும் ஒன்று பட்டு பதிவு செய்துள்ளார்கள். 19 ஹதீஸ்கள் புகாரியில் உள்ளன. 10 ஹதீஸ்கள் முஸ்லிமில் உள்ளன. ஆக, ஆதாரப் பூர்வமான இவ்விரு நூற்களிலுமாய் மொத்தம் 39 நபிமொழிகள் பதிவாகியுள்ளன.

தம் காலத்தைச் சார்ந்த பிற ஸஹாபாக்களிடம் இருந்தும அலீ ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் நபிமொழிகளை அறிவித்துள்ளார்கள். அபூபக்கர் ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு உமர் ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹு மிக்தாத் இப்னு அஸ்வத் ரழியல்லாஹு அன்ஹு ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா ஆகியோர் அவர்களில் குறிப்பிடத் தகுந்தோராவார்.

அலீ ரழியல்லாஹு அன்ஹு, அவர்களிடமிருந்து கல்வியைப் பெற்றுக் கொண்டோரின் எண்ணிக்கை மிக அதிகம். அவர்களில் ஒரு சிலரின் பெயர்களை இங்கு குறிப்பிடுகிறோம். ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு, ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு, உமர், ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா, முஹம்மம் இப்னு ஹனஃபிய்யா ரழியல்லாஹு அன்ஹு, முஹம்மத் இப்னு உமர் இப்னு அலீ ரஹ்மத்துலலாஹி அலைஹி, அலீ இப்னு ஹுஸைன் இப்னு அலீ ரழியல்லாஹு அன்ஹு, அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் இப்னு அபீ தாலிப் ரழியல்லாஹு அன்ஹு, ஜுஃதா இப்னு ஹுபைரா மக்சூமி, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, பராஃ இப்னு ஆஸிப் ரழியல்லாஹு அன்ஹு, அபூ ஹுறைறா ரழியல்லாஹு அன்ஹு, அபூ ஸஈத் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, பஷீர் இப்னு ஷுஹைம் கிஃபாரி ரழியல்லாஹு அன்ஹு, ஸைத் இப்னு அர்கம் ரழியல்லாஹு அன்ஹு, ஸஃபீனா ரழியல்லாஹு அன்ஹு, (அண்ணலாரல் விடுதலையளிக்கப்பட்ட அடிமை) ஸுஹைப் ரூமி ரழியல்லாஹு அன்ஹு, அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரழியல்லாஹு அன்ஹு அமர் இப்னு ஹரீஸ் ரழியல்லாஹு அன்ஹு நிஸால் இப்னு ஸப்ரா ரழியல்லாஹு அன்ஹு, பிலால் ரழியல்லாஹு அன்ஹு, ஜாபிர் இப்னு ஸும்ரா ரழியல்லாஹு அன்ஹு ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, அபூ ஹுதைஃபா ரழியல்லாஹு அன்ஹு, அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு, அபூ லைலா அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு, அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு, மஸ்ஊத் இப்னு ஹகம் ரழியல்லாஹு அன்ஹு, அபூத் துஃபைல் ரழியல்லாஹு அன்ஹு, ஆமில் இப்னு வாஸிலா ரழியல்லாஹு அன்ஹு, உபைதுல்லாஹ் இப்னு அபூ ராஃபிஃ ரழியல்லாஹு அன்ஹு, உம்மு மூஸா ரழியல்லாஹு அன்ஹா, ஸர் இப்னு ஹுபைஷ் ரழியல்லாஹு அன்ஹு, ஸைத் இப்னு வஹப் ரழியல்லாஹு அன்ஹு, அபூல் அஸ்வத் துலல்லி ரழியல்லாஹு அன்ஹு, ஹாரிஸ் இப்னு ஸுவைத் அத்துஹைமி ரழியல்லாஹு அன்ஹு, ஹாரிஸ் இப்னு அப்துல்லாஹ் அஃவர் ரழியல்லாஹு அன்ஹு, ஹர்மலா (இப்னு ஸைத் உடைய விடுதலைபெற்ற அடிமை) அபூ ஸாமான் ஹுழைன் இப்னு முன்திர் ரகாஷி ரஹ்மத்துல்லாஹி அலைஹி, ஹுஜைர் இப்னு அப்துல்லாஹ் கன்தீ ரஹ்மத் துல்லாஹி, ரப்ஈ இப்னு ஹராபஷ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, ஷுரைஹ் இப்னு ஹானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி, ஷுரைஹ் இப்னு நுஃமான் அஸ்ஸாமிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி, அபூ வாயில் ஷஃபீக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, ஷீத் இப்னு ரப்ஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி, ஸுவைத் இப்னு ஃகப்லா ரஹ்மத்துல்லாஹி அலைஹி, ஆஸிம் இப்னு ழம்ரா ரஹ் மத்துல்லாஹி அலைஹி, ஆமிர் இப்னு ஷராஹீல் அஷ்ஷஅபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி, அப்துல்லாஹ் இப்னு ஸலமா அல்முராதீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி, அப்துல்லாஹ் இப்னு ஷத்தாத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, அப்துல்லாஹ் இப்னு ஷகீக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, அப்துல்லாஹ் இப்னு மிஅகல் இப்னு முக்ரின் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, அப்து ஃகைர் இப்னு யஸீத் அப்முரானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி, அப்துர்ரஹ்மான் இப்னு அபீ லைலா ரஹ்மத்துல்லாஹி அலைஹி, உபைதா ஸல்மானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி, அல்கமா இப்னு கைஸ் அன்னஃகயீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி, உமைர் இப்னு ஸஈத் அன்னஃகயீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி, கைஸ் இப்னு அப்பாத் அல்பசரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி, மாலிக் இப்னு அவ்ஸ் ரஹ்மத்துல்லாஹி மர்வான் இப்னுல் ஹகம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, மித் ரஃப் இப்னு அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி நாஃபிஃ இப்னு ஜுபைர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, ஹானி இப்னு ஹானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி, யஸீத் இப்னு ஷரீக் அத்தமீமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி, அபூ பர்தா இப்னு அபீ மூஸா அஷ்அரீ, அபூ ஹய்யா தாதஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி, அபூ அல்ஃகலீல் ஹழ்ரமீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி, அபூ ஸாலிஹ் அல்ஹழ்ரமீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி, அபூ ஸாலிஹ் அல்ஹனஃபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி, அபூ அப்துர்ரஹ்மான் அஸ்ஸுல்லமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி, அபூ உபைதா (இப்னு அத்ஹரா-வின் அடிமை) ரஹ்மத்துல்லாஹி அலைஹி, அபூல் ஹய்யாஜ் அல்அஸதீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி. (தஹ்தீபுத் தஹ்தீப்)

‘அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தொழுகை, வேண்டுகோள்கள், பிரார்த்தனைகள், உபரித்தொழுகைகள், உபரி வணக்க வழிபாடுகள் குறித்த பெரும்பாலான அறிவிப்புகள் அலீ வாயிலாகத்தான் பதிவாகியுள்ளன. காரணம் அவர்கள் எந்நேரமும் அண்ணலாரின் அருகி லேயே இருந்ததுதான். அத்தோடு அவர்களுக்கு வணக்க வழி பாடுகளில் அளவுகடந்த ஆர்வம் இருந்தது’ என ஷாஹ் வலியுல்லாஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி குறிப்பிடுகிறார். (இதாழத் துல் )

ஃபிக்ஹும் இஜ்திஹாதும்

ஃபிக்ஹு எனில் இஸ்லாமிய சட்டஞானம். இஜ்திஹாத் எனில் குர்ஆனில் இருந்தும் ஸுன்னாவில் இருந்தும் சட்டங்களைப் பெறுவதற்கான தேடல்.ஃபிக்ஹு, இஜ்திஹாத் என்னும் மேற்கண்ட இரு துறைகளிலும் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அபார புலைமை இருந்தது. நிகரற்ற வல்லமையை இவ்விரு துறைகளிலும் பெற்றிருந்தார்கள். உமர் ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹு மற்றும் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா ஆகியோர் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மாண்பையும் தனிச்சிறப்பு களையும் வியந்து போற்றுகிறார்கள்.

மிகவும் சிக்கலான பிரச்சனைகளுக்கும் எளிதில் தீர்வைக் கண்டறியக் கூடிய அபார ஆற்றலைப் பெற்றிருந்தார்கள். அசாதா ரணமான மதிநுட்பமும் இயல்பலேயே கூர்மதி பெற்றிருப்பதும் எல்லையற்ற சட்ட ஞானப் புலைமை கொண்டிருப்பதும் அதற்கு மிகமிக அவசியம். அல்லாஹ் அவர்களுக்கு இவ்வாற் றலை வழங்கியிருந்தான்.

அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய விஷயங்களை வேகமாகப் புரிந்து கொள்ளும் திறன், ஆழமான ஞானப் புலைமை போன்றவற்றை வெளிப்படுத்தும் பல்வேறு எடுத்துக் காட்டுகளை தமது ‘இதா ழத்துல் குஃபா’ நூலில் ஷாஹ் வலியுல்லாஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் திரட்டி எழுதிமயுள்ளார்கள். உதாரணமாக,ஒருமுறை மனநிலை தவறிய துர்நடத்தையுள்ள பெண் மணியை உமரவர்களுக்கு முன்பாகக் கொண்டுவந்து நிறுத்தினார் கள். அவளுக்கு தண்டனை அளிக்க உமர் ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹு அவர் கள் எண்ணினார்கள். கூடாது, அவளுக்கு மனநிலை சரியில்லை. அவள்மீது சட்டம் செல்லுபடியாகாது என அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தெரிவித்தார்கள். அதுகண்ட உமர் தமது எண்ணத்தைக் கை விட்டார்கள். (முஸ்னத் அஹ்மத் பா: 1 பக்: 140)

ஒருமுறை ஹஜ் காலத்தில் ஒருவர் வேட்டையாடப்பட்ட பிராணியின் மாமிசத்தை சமைத்துக் கொண்டு வந்து வைத்தார். அதைச் சாட்பிடலாமா? கூடாதா? என மக்களிடையே கருத்து வேறுபாடு தோன்றியது. இஹ்ராம் அணிந்தவாறு வேட்டையாடுவது ஹராம், அதேசமயம் இஹ்ராம் அணியாத வேறு யாரேனும் வேட்டையாடிக் கொண்டுவந்தால் உண்ணலாம். அதிலென்ன குற்றம்? என உஸ்மான் கருதினார்கள்.ஆயினும் மக்கள் அவருடைய கருத்தில் முரண்பட்டார்கள். அப்படியெனில் இப்பிரச்சனையில் தெளிவான தீர்ப்பை வழங்குமாறு யாரிடம் முறையிடலாம்? என உஸ்மான் வினவினார்.அலீ என மக்கள் ஒருகுரலில் கூறினார்கள்.

யாரேனும் நான் கூறும் நிகழ்வை அறிந்திருந்தால் முன்வந்து சாட்சியம் அளிக்கலாம். ஒருமுறை அண்ணல் நபிகளாருக்கு முன்பாக காட்டுக்கழுதை வேட்டையாடப்பட்டு கொண்டு வரப்பட்டது. அப்போது அண்ணலார் இஹ்ராமுடைய நிலையில் இருந்தார்கள். நாம் இஹ்ராம் அணிந்தநிலையில் உள்ளோம் என அண்ணலார் மறுத்துவிட்டார்கள். இஹ்ராமை அணிந்திராத மற்ற மக்களுக்கு அளித்துவிடுங்கள் எனக் கூறிவிட்டார்கள் என அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தெரிவித்தார்கள்.

இதனைக்கேட்டு பனிரெண்டு நபித்தோழர்கள் சாட்சியம் அளிக்க அதேபோன்று இன்னொரு நிகழ்வையும் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒருமுறை அண்ணலாலருக்கு இஹ்ராமுடைய நிலையில் ஒருவர் நெருப்புக் கோழியின் முட்டைகளைக் கொண்டுவந்து கொடுத்தார். அதனையேற்காது அண்ணல் நபிகளார் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிராகரித்து விட்டார்கள் என்றார் அலீ ரழியல்லாஹு அன்ஹு.

இந்நிகழ்விற்கும் பலபேர் முன்வந்து சாட்சியம் அளித்தார்கள். இவற்றையெல்லாம் கண்ட உஸ்மானும் அவருடைய தோழர் களும் உணவை உண்ணாது தவிர்த்து விட்டார்கள். (முஸ்னத் அஹ்மத் பா: 1 பக்: )

ஒருமுறை கால்களைக் கழுவியபின் காலுறைகளை அணிந்து கொண்ட பிறகு எத்தனை நாள்கள்வரை அவற்றை அணிந்து தொழுகலாம்? என ஒருவர் அன்னை ஆயிஷாவிடம் வினவினார்.

நீங்கள் சென்று அலீயிடம் இதுகுறித்து கேளுங்கள். ஏனெனில் அவர்தாம் பெரும்பாலும் பயணங்களில் அண்ணலாரோடு கூட இருப்பார்கள். அதுபோன்றே அவர் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் போய் வினவினார்.உள்ளூரில் தங்கியிருப்பவர்கள் ஒரு நாளும் வெளியூர்ப் பய ணம் மேற்கொள்பவர்கள் மூன்று நாள்களும் மூன்று இரவுகளும் மஸஹ் செய்து அணிந்திருக்கலாம் என அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தெரிவித்தார்கள். (முஸ்னத் அஹ்மத் பா: 1 பக்: 96, பா: 6 பக்: 55)

அவருடைய சமகாலத்தில் வாழ்ந்தோர் கூட சிக்கலான தருணங்களில் அவரையே நாடி வருவார்கள் என்பதிலிருந்து அவருடைய கல்விச் சிறப்பையும் அறிவுப் புலைமையையும் அறிந்து கொள்ளலாம்.சிக்கலான பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய வல்லமையை எங்ஙனம் பெற்றார்கள் என்றால், ஒரு விஷயம் தனக்கு விளங்க வில்லை என்றால் அதனை அண்ணலாரிடம் சென்று உடனடியாக கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்.

வெட்கத்தாலும் நாணத்தாலும் ஒருசில கேள்விகளை அண்ணலாரிடம் நேரிடையாகக் கேட்க இயலாது. அத்தகைய கேள்விகளை வேறுயாராவது மூலமாகவோ கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். மதீ எனப்படும் இச்சை நீர் வெளிப்பட்டால் ஒழு முறிந்துவிடும் போன்ற விஷயங்களை இவ்வாறுதான் தெரிந்து தம்முடைய கல்விச்சிறப்பு ஆழ்ந்த புலைமையின் காரணமாக மற்ற ஸஹாபாக்கள் கருத்தொருமித்த பல்வேறு பிரச்சனைகளில் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மாற்றுக் கருத்து கொண்டிருந்தார்கள். சிறப்பாக, உஸ்மான் அவர்களோடு பல பிரச்சனைகளில் கருத்து முரண்பட்டார்கள்.

உதாரணமாக, உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தமத்துஃ ஹஜ்ஜை சரி காணவில்லை. கூடாது என்றார்கள். அண்ணலாரின் காலத்தில் நிலவிய அமைதியற்ற சூழலைக் கருத்தில்கொண்டே அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்ஙனம் செய்தார்கள். இப்போது அப்படிப்பட்ட சூழல் எதுவும் இல் லையாதலால் அவ்வகை ஹஜ்ஜை செய்யக் கூடாது அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் மற்றமற்ற ஸஹாபாக்களும் எல்லா காலங்களிலும் அங்ஙனம் செய்யலாம் எனக் கருதினார்கள்.

இவ்வாறே, இஹ்ராம் நிலையில் திருமணம் முடிப்பது, இத்தா காலத்தில் பெண்ணின் சொத்துரிமை போன்ற இன்னபிற விஷயங்களிலும் கருத்து வேறுபாடு நிலவியது.

அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வாழ்வு முழுக்க மதீனாவிலேயே கழிந்தது. எனினும் கிலாஃபத் ஆட்சிக்காலம் முழுக்க கூஃபா விலேயே கழித்தார்கள். வழக்குகளை விசாரிப்பதற்கும் தீர்ப்பு வழங்குவதற்கும் அதிக தருணங்களோ வாய்ப்புகளோ கிடைக்கவில்லை. இதன்காரணமாக, அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய இஜ்திஹாத்களும் பிரச்சனைகளுக்கு வழங்கிய தீர்வுகளும் இராக்கிலேயே புகழடைந்தன.

ஹனஃபி மத்ஹபுக்கு ஆதாரமாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கருத்துகளே பிரதானமாக திகழுகின்றன. அதனையடுத்து அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கருத்துகளும் தீர்ப்புகளும் ஆதாரமாகத் திகழுகின்றன. அதற்கு இதுவே காரணம்.

ஏறக்குறைய அனைத்து ஸஹாபாக்களும் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய தீர்ப்புகளை மனமொப்பி ஏற்றுக் கொண்டார்கள். ‘தீர்ப்பு வழங்குவதில் எம்மில் சிறந்தவர் அலீயாவார். குர்ஆனிய அறிவில் எம்மில் சிறந்தவர் உபையாவார்’ என உமரவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். (தபக்காத் இப்னு சஅத் பா: 2 பக்: 102)

‘மதீனாவிலேயே மிகச்சிறந்த தீர்ப்பை வழங்கும் திறனுள்ளவர் அலீயே என நாங்கள் கூறுவது வழக்கம்’ என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்வார்கள். (முஸ்தத்ரக் ஹாகிம் பா: 3 பக்: 135)அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலீ ரழியல்லாஹு அன்ஹு  அவர்களுக்கு ‘அக்ழாஹும் அலிய்யுன்’ (அவர்களுள் மீச்சிறந்த தீர்ப்புவழங்குபவர் அலீயாவார்) என் னும் பட்டயத்தை அளித்துள்ளார்கள்.

தீர்ப்பளிக்கும் பணியையும் அண்ணலார் அலீயிடமே ஒப்படைத்தார்கள். யமன்வாசிகள் இஸ்லாமை ஏற்றபோது அப்பகுதியில் தீர்ப்பு வழங்கும் பொறுப்பில் அண்ணலார் அலீயை நியமித்து அனுப்பினார்கள்.

‘இறைவனின் தூதரே! அங்கு புதியபுதிய பிரச்சனைகள் தோன் றக்கூடும், எனக்கோ தீர்ப்பு வழங்கும் ஞானம் இல்லையே’ என அலீ ரழியல்லாஹு அன்ஹு முறையிட்டபோது, ‘வல்ல இறைவன் உங்களுடைய நாவிற்கு வழிதவறா வன்மை யையும் உங்களுடைய உள்ளத்திற்கு உறுதிப்பாட்டையும் வழங்குவான்’ என அண்ணல் நபிகளார் ஸல்லலல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

அதன்பின்பு வழக்குகளைத் தீர்ப்பதில் தனக்கு எத்தகைய தடுமாற்றமும் ஏற்படவில்லை என அலீ தெரிவிக்கிறார்கள். (முஸ் னத் அஹ்மத் பா: 1 பக்: 83, முஸ்தத்ரக் ஹாகிம் பா: 3 பக்: 135)

வழக்குகளைத் தீர்க்கும்போது சாட்சிகளின் தராதரங்களை அலசியறிவதும் அவர்களை குறுக்கு விசாரணை செய்வதும் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய நடைமுறையாக இருந்தது. ஒருமுறை ஒரு பெண்மணி அலீக்கு முன்னால் நின்றவாறு தான் விபச்சாரம் செய்துவிட்டதாகக் கூறினார். பலமுறை மடக்கி மடக்கி அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கேள்விகளை கேட்டார்கள். கடைசிவரை அவள் தான் குற்றவாளியே, தன்னுடைய குற்றத்திற்காக தன்னை தண்டி யுங்கள் என வினவிக்கொண்டபோதுதான் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தண்டனை உத்தரவை பிறப்பித்தார்கள். (அதேநூல்)

திருட்டுக் குற்றத்திற்காக ஒருமுறை ஒருவர் கைதுசெய்யப் பட்டார். அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மன்றத்தில் அவருக்கு எதி ராக இருவர் சாட்சியும் அளித்தார்கள். ‘உங்களுடைய சாட்சியம் மட்டும் பொய்யாகிவிடுமானால் உங்களை மிகக் கடுமையாக தண்டிப்பேன். உங்களோடு மிக மோசமாக நடந்துகொள்வேன்’ என அவர்களை எச்சரித்தார்கள். அதன்பின்பு வேறு ஏதோ அலுவலில் மூழ்கிவிடடார்கள். சற்றுநேரம் சென்றபின்பு பார்த்தால் அவகாசம் கிடைத்ததும் அவர்களிருவரும் ஓடிவிட்டார்கள். குற்றமற்றவர் என அக்கைதியை விடுதலை செய்துவிட்டார்கள். (தாரீக்ஃகுல் கஃபா, மேற்கோள் முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா)

யமன் நாட்டில் விசித்திரமான இரண்டு வழக்குகளை தீர்த்து வைத்தார்கள். யமன் வாசிகள் புதிதாக இஸ்லாமை ஏற்றிருந் தார்கள். பழைய வழக்கங்களும் நடைமுறைகளும் இன்னமும் எஞ்சியிருந்தன. ஒரு பெண்மணியோடு ஒரு மாத காலத்திற்குள் மூன்று நபர்கள் உறவு கொண்டு விட்டார்கள். ஒன்பது மாதம் கழித்து அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இப்போது அந்தக் குழந்தை யாருடையது? என பிரச்சனை கிளம்பிவிட்டது. ஒவ்வொருவரும் அது தன்னுடைய குழந்தையே என சாதித்தார்கள். அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அக்குழந்தைக்கான ஈட்டுத்தொகை யை (திய்யத்) நிர்ணயித்தார்கள். அதை மூன்று பாகங்களாக பங்கிட்டார்கள். அதன்பின்பு சீட்டு குலுக்கிப் போட்டார்கள். யாருக்கு விழுந்ததோ அவரிடம் குழந்தையை ஒப்படைத்தார்கள். மற்ற இருவருக்கும் எஞ்சிய திய்யத்தின் இரு பாகங்களை அவரிடமிருந்து வசூலித்துக் கொடுத்தார்கள். அதாவது குழந்தையை அடிமையோடு ஒப்பிட்டு நோக்கி அதனடிப்படையில் தீர்ப்பு வழங்கினார்கள். அண்ணலாரிடம் பின்பு இதுபற்றி கூறியபோது அண்ணலார் புன்முறுவல் பூத்தார்கள். (முஸ்தத்ரக் ஹாகிம் பா: 3 பக்: 135)

இன்னொரு சம்பவம். சிங்கம் ஒன்றைப் பிடிப்பதற்காக சில பேர் குழியொன்றை வெட்டி வைத்திருந்தார்கள். அதில் சிங்கம் விழுந்துவிட்டது. ஒருசிலர் விழுந்த சிங்கத்தை வேடிக்கை பார்த்தவாறு கைகொட்டி சிரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒருவரையொருவர் விளையாட்டாக தள்ளிவிட்டுக் கொண்டார்கள். அதிலொருவர் திடுமென உள்ளே குழிக்குள் விழுந்து விட்டார். விழவிழ தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர் இன்னொருவரின் இடுப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அவரும் சேர்ந்து உள்ளே விழுந்தார். அவரோ மூன்றாமவரின் இடுப்பை பிடித்துக் கொண்டார். மூன்றாமவரும் உள்ளே விழுந்தார். அவர் நான்காமவரின் இடுப்பைப் பிடித்துக் கொள்ள ஒட்டுமொத்தமாக நால்வரும் உள்ளேபோய் விழுந்தார்கள். கடும் சினத்தில் இருந்த சிங்கம் நால்வரையும் பந்தாடிவிட்டது.கொலையுண்டோரின் வாரிசுகள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளத் தொடங்கினார்கள். அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். ‘இறைவனின் தூதர் உயிரோடு இருக்கை யில் அவருடைய உம்மத்துகள் இப்படி அடித்துக்கொள்வது முறையல்ல’ என்றார்கள். ‘நான் உங்களுடைய வழக்கை தீர்த்து வைக்கிறேன்’ என ‘என்னுடைய தீர்ப்பு பிடிக்கவில்லை எனில், இறைத்தூதரிடம் சென்று முறையிட்டுக் கொள்ளலாம்’ எனவும் கூறினார்கள்.

சரியென மக்களும் ஒப்புக்கொண்டார்கள்.

‘குழியை வெட்டியவர்கள் கீழ்வரும் விகிதப்படி கொலையுண்டோரின் வாரிசுகளுக்கு ஈட்டுத்தொகை வழங்கவேண்டும். முழு ஈட்டுத்தொகை ஒருவருக்கு, மூன்றில் ஒரு பங்கு ஒருவருக்கு, நான்கில் ஒரு பங்கு ஒருவருக்கு, பாதி ஈட்டுத்தொகை ஒருவருக்கு.முதலில் விழுந்து செத்தவரின் வாரிசுகளுக்கு நான்கில் ஒரு பங்கு. இரண்டாவதாக விழுந்து செத்தவரின் வாரிசுகளுக்கு மூன்றில் ஒரு பங்கு. மூன்றாவதாக விழுந்து செத்தவரின் வாரிசு களுக்கு பாதிப் பங்கு. நான்காவதாக விழுந்து செத்தவரின் வாரிசுகளுக்கு முழுத்தொகை என தீர்ப்பளித்தார்கள்’.

இந்த விநோதமான தீர்ப்பை மக்கள் ஏற்கவில்லை. ஹஜ்ஜத் துல் விதா தருணத்தின்போது அண்ணலாரின் சமூகத்தில் ஆஜராகி வழக்கை எடுத்துரைத்தார்கள். அண்ணலார் ஏற்கனவே அலீ கொடுத்த தீர்ப்பை நடைமுறைப் படுத்தினார்கள். (முஸனத் அஹ்மத் பா: 1 பக்: 77)

இப்போது தீர்ப்பின் விளக்க விவரத்தைக் காண்போம். மக்கள் குடியிருப்புக்கு அருகில் குழியை வெட்டியவர்கள்தாம் உண் மையான குற்வாளிகள். தள்ளிவிட்டவர்கள் யாரென்று மிகச் சரியாக அடையாளம் காணப்படாத நிலை, ஆகையால், குழியை வெட்டியவர்கள்தாம் குற்றவாளிகளாகக் கருதப்பட வேண்டும். அவர்களும் அவர்களுடைய கோத்திரமும் குலமும் கொலையுண்டோர்களுக்கான ஈட்டுத்தொகையை வழங்கியாக வேண்டும். முதலில் விழுந்தவர் எதேச்சையாக விழுந்தாலும் இரண்டாவ தாக விழுந்தவரை உள்ளே இழுத்து தள்ளியதில் அவருக்கும் பங்கிருக்கின்றது. யதேச்சையாக விழ அதிக சாத்தியக்கூறும் வேண்டுமென்றே விழ குறைவான சாத்தியக்கூறும் உள்ளதால் அவருக்கு மிகவும் குறைவான ஈட்டுத்தொகையே அதாவது நான்கில் ஒருபாகம் கொடுக்கப்பட முதலாமவர் வேண்டுமென்றேதான் இரண்டாமவரை இழுத் துள்ளார். ஆயினும் என்ன செய்கிறோம் என்றறியாத குழப்பத்தில் இழுத்துள்ளார். தன்னுடைய செயலைக்குறித்து யோசித்துப் பார்க்க அவருக்கு அவகாசம் இல்லை. ஆகையால், இரண்டாமவர் விழுந்ததில் யதேச்சையாக விழ குறைவான சாத்தியக்கூறும் வேண்டுமென்றே விழ அதிக சாத்தியக்கூறும் நிலவியது. ஆகையால், அவருக்கு மூன்றில் இருபாகம் ஈட்டுத்தொகை வழங்கப் பட வேண்டும். மற்ற இருவரோடு ஒப்பிடுகையில் மூன்றாவதாக விழுந்தவர் யோசித்து சுதாகரித்துக் கொள்ள நிறைய அவகாசம் இருந்துள்ளது. அவர் விழுந்ததில் யதேச்சையாக விழ குறைந்த சாத்தியக் கூறும் வேண்டுமென்றே விழ கூடுதல் சாத்தியக்கூறும் உள்ளது, ஆகையால், அவருக்கு பாதி ஈட்டுத்தொகை வழங்கப்பட வேண்டும்.கடைசியாக விழுந்தவரை மூன்றாமவர் இழுத்துள்ளார். ஆனால், அவர் மற்ற யாவரையும் விட வெகுதூரத்தில் இருந்துள்ளார். என்ன நடக்கின்றது என்பதை கண்களுக்கு முன்னால் பார்த்தபின்பு தான் மூன்றாமவர் நான்காமவரை இழுத்துள்ளார். அதாவது, நான்காமவர் முழுக்க முழுக்க வேண்டுமென்றே இழுக்கப்பட்டுள்ளார். மற்றவர்களைப்போல அவர் வேறு யாரையாவது இழுக்கும் குற்றத்தையும் செய்யவில்லை. ஆகை யால், அவருக்கு முழு ஈட்டுத்தொகை வழங்கப்பட வேண்டும். (அல்லஹ்வே மிக அறிந்தவன்).

இன்னொரு வழக்கிலும் மிகவும் சுவாரசியமான தீர்ப்பை அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வழங்கினார்கள். இரண்டு மனிதர்கள் இருந்தார்கள். ஒருவரிடம் ஐந்து ரொட்டிகளும் அடுத்தவரிடம் மூன்று ரொட்டிகளும் இருந்தன. இருவருமாய்ச் சேர்ந்து ஓரிடத்தில் சாப்பிட உட்கார்ந்தார்கள். அப்போது ஒரு மூன்றாம் மனிதனும் வந்துசேர்ந்தான். அவரையும் இவர்கள் சாப்பிட கூப்பிட்டதால் வந்து இவர்களோடு கலந்து கொண்டான். சாப்பிட்டு முடித்ததும் அம்மனிதன் தன்னிடம் இருந்த எட்டு திர்ஹம்களை உணவிற்கு பகரமாகக் கொடுத்துவிட்டு போய்விட்டான்.

ஐந்து ரொட்டிகளை வைத்திருந்தவன் அவனுடைய கணக்கில் பங்குவைத்தான், ஐந்து ரொட்டி என்பதால் ஐந்து திர்ஹம் மூன்று ரொட்டிக் காரனுக்கு மூன்று திர்ஹம் என பங்கிட்டான். ஆனால், இந்தப் பங்கீட்டை ஒப்புக் கொள்ளவில்லை, சரிபாதியாகப் பங்கிட வேண்டும் என வாதிட்டான். இந்த வழக்கு அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்தது. அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இரண்டாம் மனிதனிடம் ‘ஐந்து ரொட்டிக் காரன் கொடுப்பதை வாங்கிக்கொள். அதுதான் உனக்கு நல்லது லாபகரமானது’ என உபதேசித்தார். ஆனால், அவனோ தன்னு டைய கருத்தில் பிடிவாதமாக ‘நியாயமாகத் தீர்ப்பளியுங்கள். அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்’

‘ஐந்து ரொட்டிக்காரனுக்கு ஏழு திர்ஹம்கள். உனக்கோ ஒரே ஒரு திர்ஹம்தான்’ என அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தீர்ப்பு கொடுத்தார்கள். இந்தத் தீர்ப்பைக் கேட்டு அவன் திகைத்துப் போய்விட்டான். காரணத்தை அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் விளக்கினார்கள்.

‘உன்னிடம் மூன்றும் அவனிடம் ஐந்துமாய் மொத்தம் உங்களி டம் எட்டு ரொட்டிகள் இரந்தன. மூன்றாவதாய் ஒருவர் உங்களோடு வந்து சேர்ந்து கொண்டார். இருந்த எட்டு ரொட்டிகளை மூவருமாய் பகிர்ந்து சாப்பிட்டீர்கள். ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று பாகமாய் பிரித்தால் மொத்தம் இருபத்தி நான்கு துண்டுகள். ஆளுக்கு எட்டு துண்டுகள் வீதம் மூவரும் சாப்பிட்டீர்கள்.

நீ உன்னுடைய ஒன்பது ரொட்டித் துண்டுகளில் எட்டை சாப்பிட்டு விடடாய். ஒன்றை அந்த விருந்தாளிக்கு கொடுத்துள்ளாய். அவனோ தன்னுடைய பதினைந்து துண்டுகளில் எட்டை சாப்பிட்டு விட்டு ஏழை, விருந்தாளிக்கு கொடுத்துள்ளான். விருந்தாளி தான் சாப்பிட்ட எட்டு துண்டுகளுக்கு பகரமாக எட்டு திர்ஹம்களைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். நீ விருந்தாளிக்கு கொடுத்தது ஒரு துண்டு. எனவே, உனக்கு ஒரு திர்ஹம். அவன் கொடுத்தது ஏழு துண்டுகள். ஆகையால், அவ னுக்கு ஏழு திர்ஹம்கள்’ என்றார்கள் அலீ ரழியல்லாஹு அன்ஹு (தாரீஃக்குல் குலஃபா, ஸுயூத்தி)

தன்னுடைய தாயை ஒருவர் மானபங்கப்படுத்தி விட்டான் என ஒருவரைக் கொண்டுவந்து இன்னொருவர் வழக்குமன்றத்தில் நிறுத்தினார். அப்படி தான் கனவு கண்டதாகக் கூறினார். குற்றவாளியைக் கொண்டுபோய் வெய்யிலில் நிறுத்துங்கள். அவனுடைய நிழலை கசையால் அடியுங்கள் என அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தீர்ப்பு வழங்கினார்கள். (முஸன்னஃப் இப்னு அபீ ஷைபாவை மேற்கோள் காட்டி மேற்கண்ட அதேநூலில்)

அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தீர்ப்புகள் யாவும் சட்ட முன்மாதிரிகளாக விளங்குகின்றன. ஆகையால், உலமாக்கள் அவற்றை எழுத்து வடிவில் பாதுகாத்து வைத்துள்ளார்கள். ஆயினும் அக்காலத்தில் கருத்து முரண்பாடுகளும் மொதல்களும் தலைதூக்கி விட்டிருந்தன. ஆகையால், அவற்றுள் பல இடைச்செருகல்களும் திரிபுகளும் தோன்றிவிட்டன. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தீர்ப்புகள் அடங்கிய ஒரு தொகுப்பு காண்பிக்கப்பட்டது. அதில் ஒரு பாகத்தை அவர்கள் நிராகரித்து விட்டார்கள். அறிவோடும் தெளிவோடும் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இத்தகைய தீர்ப்புகளை வழங்கியிருக்க வாய்ப்பேயில்லை என காரணத்தையும் கூறினார்கள். (சஹீஹ் முஸ்லிமின்)

ஷரீஆவின் மறைஞானக் கல்வி

இஸ்லாமிய ஞானிகளுள் இருவகை உண்டு. ஒருசாரார் தமது அறிவு, புரிந்துணர்வு, புலைமை, மதிக்கூர்மை போன்றவற்றைப் பயன்படுத்தி இஸ்லமிய ஷரீஆவின் சார்பு அம்சங்களையும் காரண காரியங்களையும் நுட்பங்களையும் அடையாளங்காண்கிறார்கள். எந்நேரமும் இந்த மறைஞானத் தேடலிலேயே காலங்கழிக்கிறார்கள்.இன்னொரு சாரார் இத்தகைய மறைஞானம் நுட்பங்கள் சார்பு அம்சங்கள் போற்வற்றில் எல்லாம் ஆர்வம் காட்டுவதில்லை. ஷரீஆவின் அனைத்து சட்டங்களின் மீதும் ஒரு பொதுப்பார்வையைச் செலுத்தி பொது நியதிகளையும் நெறிமுறைகளையும் வகுத்துக் கொள்கிறார்கள். சட்டதிட்டங்களுக்குள் இறைவன் பொதித்து வைத்துள்ள மறைநுட்பங்களை அறிந்து கொள்ள இத்தகையோர் முனைப்பு காட்டுவதில்லை.

ஸஹாபாப் பெருமக்களில் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் முதல் வகையைச் சார்ந்தவராகவும் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இரண்டாம் வகையைச் சார்ந்தவராகவும் காட்சி தருகிறார்கள். இஸ்லாமிய சட்டதிட்டங்களின் வெளிப்படு தோற்றத்தின் அவர்களின் பார்வை படுவதைவிட ஷரீஆவின் அறிவுப் படலத்தின்மீதுதான் அதிகமாகப் படுகின்றது. எனவே, ஷரீஅத்தின் ஏதேனும் ஒரு சட்டம் மனித அறிவிற்கு புலனாகாததாக தென்பட்டால் அதனை அவர்கள் அவ்ளவாகப் பொருட்படுத்தவில்லை. ஏனெனில் மனித அறிவே குறைபாடுடையது. ஷரீஆ சட்டம் ஒன்றின் நிலை சரியா, தவறா எனத் தீர்மானிக்கும் அளவு துல்லியமானது அன்று.புகாரியின் குறிப்புகளில் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஒரு கூற்று பதிவாகியுள்ளது. ‘மக்களுக்கு எது புரியுமோ அதனை மட்டும் எடுத்துக் கூறுங்கள். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மக்கள் நிராகரிக்கவேண்டும் எனபதை நீங்கள் விரும்புகிறீர்களா?’ (கிதாபுல்)

அதாவது மக்களால் விளங்கிக் கொள்ள இயலாதவற்றை அவர் களுடைய அறிவுக்கு புலப்படாதவற்றை நீங்கள் சொன்னால் தமது குறையறிவின் காரணமாக அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். பின் அறியாமையினால் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து விடுவார்கள். எனவே, மக்களுடைய தராதரத்திற்கேற்ப அவர்களுடைய அறிவுத் தகுதிக்கேற்ப அவர்களிடமும் உரையாட வேண்டும். சொல்லப்படுவது அனைவருக்கும் புரிகிறாற்போல சொல்லப்பட வேண்டும். நபிமொழி ஒன்றில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களுக்கு பல் வேறு பொருள் கொள்ளமுடியுமென்றால் இறைவனின் தூதரின் நிலைக்கும் மாண்பிற்கும் மதிப்பிற்கும் உகந்த பொருளையே கொள்ளவேண்டும் என்பதே அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கருத்தாகும்.

‘உங்களிடம் ஒருவர் நபிமொழி ஒன்றை அறிவித்தால் மிகவும் சிறப்பாக, வழிகாட்டக் கூடிய, மிகவும் பேணுதலோடு இறையச் சத்தை நல்கக்கூடிய, மிகவும் உன்னதமானதையே அதன் பொரு ளாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்றொன்று முஸ்னத் அஹ்மத் இப்னு ஹன்பல் நூலில் பதிவாகியுள்ளது. (பக் 130)

காலுறைகளின் மீது மஸஹ் செய்வது (தடவுவது) அண்ணலாரின் ஸுன்னத். ஆயினும் காலுறைகளுக்குக் கீழாக தடவாமல் மேற்புறமாகத் தடவுவார்கள். அதுகுறித்து கூறுகையில், ‘இஸ்லாமிய சமயம் அறிவார்ந்த ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்திருந்தால் காலுறைகளின் கீழாகத்தான் தடவ வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலுறைகளுக்கு மேற்புறமாகத் தடவி உள்ளார்கள்’ (ஸுனன் அபூ தாவுது, கைஃபல்)

நடப்பதால் கறைகளும் கழிவுகளும் காலுறைகளின் கீழ்ப் பகுதியில் படத்தான் வாய்ப்புகள் அதிகம் ஆகையால், கீழ்ப்பகுதியில் தான் தடவவேண்டும். அறிவு அதைத்தான் சொல்கின்றது. ஆனால், அண்ணலார் காலுறைகளின் மேற்பகுதியில் மஸஹ் செய்துள்ளார்கள். கீழ்ப்பகுதியில் தடவவில்லை. ஆக, ஷரீஅத்தின் சட்டதிட்டங்களின் பின்னணிக் காரணங்களும் நுட்பங்களும் மனித அறிவுக்கு ஏற்புடையதாய் காணப்படுவதில்லை. மனித அறிவுக்கு அங்கு வேலையே இல்லை.ஒருவேளை அண்ணலார் இவ்வாறு தடவுவதை நான் பார்த்திருக்காவிடில் கீழாகத் தடவுவதுதான் உகந்த செயல் என்றெண்ணி அவ்வாறே செய்திருப்பேன் என அவர்கள் கூறியுள்ள ஒரு கூற்றும் முஸ்னத் அஹ்மதில் பதிவாகியுள்ளது. அதாவது கியாஸ் எனப்படும் ஒப்பீட்டாய்வின்படி பார்த்தோமென்றால் இந்த முடிவிற்குத்தான் வரவேண்டியிருக்கும். ஆனால், வெளிப் படையான ஒப்பீடுகளை ஷரீஅத் நம்பியிருப்பதில்லை.

தஸவ்வுஃப் என்னும் ஆன்மீகஞானம்

இஸ்லாமிய சட்டங்கள் குறித்து மறைஞானம் பற்றி அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓர் அபிப்பிராயம் கொண்டிருந்தார்கள். அதன்படி, பொதுமக்களும் பாமரர்களும் இவ்வறிவைப்பெற முனையலா காது. காரணம் என்னவெனில், ஷரீஅத்தின் சட்டதிட்டங்களைப் பின்பற்றும் வேட்கையை விட தவிர்ப்பதற்கான ஆர்வமே பொதுமக்களிடம் மிகைத்துக் காணப்படுகின்றது. அதுதான் அவர்களுடைய இயல்பு. தத்துவார்த்த சாக்குபோக்குகளையும் கார ணங்களையும் கூறியவாறு அவர்கள் அமல்களை அவர்கள் ஒதுக்கி விடுவார்கள்.அறிவாளர்கள் இவ்வேறுபாட்டை நன்கு உணருவார்கள். ஆகையால், அவர்கள்தாம் இதனை அறியவேண்டும்.

இதனை மனதிற்கொண்டுதான், மார்க்கம் சமயநெறி போன்றவற்றின் உயிர்நாடியாகவும் உயிரோட்டமாகவும் திகழுகின்ற தஸவ்வுஃப் உம்மத்தின் சிறப்பாளர்களுக்கான பகுதியாக உள்ளது. அதனுடைய மறைவுண்மை களையும் அறிவுப்பகுதிகளையும் மிகச்சிறப்பாக அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் விளக்கிக் கூறியுள்ளார்கள்.

தஸவ்வுஃப் உடைய ஏறக்குறைய எல்லாத் தொடர்களும் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடமே சென்று முடிகின்றன. ‘நியதிகள் கட்டுப் பாடுகள் சோதனைகள் போன்றவற்றில் எங்களுடைய தலைவர்க் கெல்லாம் தலைவராக அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் திகழுகிறார்கள்’ என ஜுனைத் பக்தாதி அவர்கள் கூறுகிறார்கள்.

‘ஆட்சிப்பொறுப்பேற்பதற்கு முன்னால் இத்துறையில் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அளவுகடந்த ஆரவம் காட்டினார்கள். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற பின் அலுவல்களும் வேலைப் பளுவும் அதிகரித்து விட்டதால் இத்துறையின் விளக்கங்களை அவர் களால் தர இயலவில்லை’ என ஷாஹ் வலியுல்லாஹ் முஹத் திஸ் திஹ்லவி கூறுகிறார். (இதாழத்துல் குஃபா பக்: 274)

ஓர் அறிவிப்பை ஏற்பதா, நிராகரப்பதா என்பதற்கு ஹதீஸ் இய லாளர்கள் பல்வேறு நியதிகளையும் நெறிமுறைகளையும் வகுத்து வைத்துள்ளார்கள். அவற்றை அளவுகோலாகக் கொண்டு பார்த்தால் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய இத்தகு தஸவ்வுஃப் கூற்றுகள் முறைப்படி அவர்களைச் சென்றடைவதில்லை. தஸவ் வுஃப் உடைய வழித் தொடர்களும் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களோடு இணைவதில்லை. ஹஸன் பசரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களோடு நின்றுவிடுகின்றன. அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கற்றவராகவும் பயிற்சி பெற்றவராகவும் அவர் கருதப்படுகிறார். ஆனால், அதனையும் துறையாளர்கள் மறுக்கிறார்கள். அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களோடு ஹஸன் பசரீ அவர்கள் தொடர்பு கொண்டதோ கற்றதோ நிரூபனமாகவில்லை என்பது இமாம் திர்மிதீ அவர்களோ, இடைத்தொடர்பாளர் எவரு மின்றி அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களை ஹஸன் பசரீ சந்திப்பது கூட ஊர் ஜிதமாகவில்லை எனறே ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பாக அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களை மதீனா முனவ்வராவில் ஹஸன் பசரீ அவர்கள் கண்டுள்ளார்கள் என்பது மட்டும் ஊர்ஜிதமாகியுள்ளது. கண்களால் அவர்களைக் கண்டுள்ளார்கள், அச்சமயம் அவர்தம் வயது பதிநான்கு அல்லது பதினைந்து ஆகும்.

ஷஹாதத் என்னும் பெருபேறு

நஹர்வான் நிகழ்விற்குப் பிறகு, ஹஜ் காலத்தில் நான்கு ஃகாரி ஜியாக்கள் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்து நிகழ்கால பிரச்ச னைகள் தொடர்பாக கேள்விகளைத் தொடுத்தார்கள். இறுதியில் அவர்கள் ஒரு முடிவிற்கு வந்தார்கள். அது என்னவெனில், இப் பூவுலகில் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களும், முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அம்ரு இப் னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு உயிரோடு உள்ள காலம்வரை முஸ்லிம்களுக் கிடையிலான உட்சண்டைகள் முடிவிற்கே வராது என்பதே.ஆகையால், இம்மூவரையும் கொன்றொழித்தாக வேண்டும். அதன்படி, அவர்களுள் மூவர் இப்பணிக்கு தயாரானார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு முல்ஜிம் என்பார் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொலைசெய்ய முன்வந்தார்.அவ்வண்ணமே முஆவியாவைக் கொலைசெய்ய நிஸால் என் பாரும் அம்ரு இப்னுல் ஆஸைக் கொலைசெய்ய அப்துல்லாஹ் என்பாரும் முன்வந்தார்கள். தத்தமது பணியைப் புரிவதற்காக இம்மூவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

இப்னு முல்ஜிம் கூஃபா போய்ச் சேர்ந்தார். அங்கு கித்தாம் என்றொரு அழகுமங்கை இருந்தாள். அவள் அவனை மேலும் தூண்டினாள். நீ மட்டும் உன்னுடைய பணியை சிறப்பாக முடித் துவிட்டாயென்றால் நான் உன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறேன் என்றெல்லாம் ஆசை வார்த்தைகளைச் சொன்னாள். தன்னை திருமணம் செய்துகொள்ள அலீ (ரழி) அவர் களின் குருதிதான் மஹர் என நிபந்தனை விதித்தாள்.இப்டியாக, ஹிஜ்ரீ 40ஆம் ஆண்டு ரமழான் மாதத்தின் ஒரு நாளில் மூன்று பேரும் சொல்லிவைத்தாற்போல் மூவரையும் தாக்கினார்கள். முஆவியா அவர்களும் அம்ரு இப்னுல் ஆஸ் அவர்களும் தப்பித்துவிட்டார்கள்.

அலீ (ரழி) அவர்கள் தொழுவதற்காக பள்ளிவாசலுக்கு வந்தார்கள், அப்பள்ளியில் இப்னு முல்ஜிம் தூங்கிக் கொண்டிருந்தான். தொழத் தொடங்கி தமது தலையை ஸஜ்தாவில் வைத்ததுதான் தாமதம், உருவிய வாளை வேகத்தோடு ஓங்கி பலங்கொண்ட மட்டும் விசையோடு செலுத்தினான். வந்தகாரியம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. மக்கள் அவனை பிடித்துக் கொண்டார்கள். (தபரீயின் வரலாற்று நூல் பக்: 2457)

அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹு படுகாயமடைந்தார்கள். உயிர் பிழைப்பதற்கான யாதொரு சாத்தியக்கூறும் இல்லை. தமது மகன்களான ஹஸனையும் ஹுஸைனையும் வரவழைத்து பயன்மிகு உபதேசங்கள் செய்தார்கள். முஹம்மத் இப்னு அல் ஹனஃபிய்யா என்பாரோடு நன்முறையில் நடந்துகொள்ளுமாறு உபதேசித்தார்கள்.

‘அமீருல் முஃமினீன் அவர்களே, தங்களுக்குப் பிறகு நாங்கள் அனைவரும் ஹஸனுடைய கரங்களில் பைஅத் செய்துகொள் ளலாமா?’ என ஜுன்துப் இப்னு அப்தல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வினவினார்கள்.

‘நான் இதைப்பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. நீங்களே இதுபற்றி முடிவு செய்து கொள்ளுங்கள்’. தொடர்ந்து பல நல்லு பதேசங்களைக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். தன்னைக் கொன்றவனைப் பற்றிய பேச்சு வந்தபோது அவனுக்கு சாதாரண தண்டனை அளித்தால் போதும் என சொல்லிவிட்டார்கள். (தபரீ யின் வரலாற்று நூல் பக்: 61,64)

வாள் விஷத்தில் தோய்க்கப்பட்டிருந்தது. செலுத்திய வேகத்தில் விஷம் உடனுக்குடன் உடல் முழுவதும் பரவிவிட்டது. ஹிஜ்ரீ 40ஆம் ஆண்டு ரமழான் மாதம் 20ஆம் நாள் இரவு உலகில் அறிவொளி வீசிக்கொண்டிருந்த இந்த ஞானஞாயிறு மறைவடைந்தது. ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கஃபன் போர்த்தி இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினார்கள். ஜனாஸா தொழுகையையும் நிறை வேற்றினார்கள். கூஃபா மாநகரில் உள்ள உஸ்ஸா என்றோர் இடத்தில் மண்ணோடு மண்ணாக அடக்கம் செய்தார்கள்.

ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்குப் பிறகு அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பல்வேறு பெண்களை மணம் புரிந்தார்கள். அப்பெண்கள் மூலம் நிறைய பிள்ளைகளைப் பெறறார்கள்.

கீழே அவர்களைப் பற்றிய விவரங்கள் உள்ளன.

1. இறைத்தூதரின் மகளான ஃபாத்திமாவின் மூலமாக ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு முஹ்ஸின் ரழியல்லாஹு அன்ஹு மற்றும் ஸைனப் குப்ரா ரழியல்லாஹு அன்ஹா உம்மு குல்ஸூம் ரழியல்லாஹு அன்ஹா ஆகியோர் பிறந்தார்கள். முஹ்ஸின் சிறுவயதிலேயே உலகைப் பிரிந்துவிட்டார்.

2. உம்முந் நபின் பின்த் ஹிஸாம். இவர்மூலம் அப்பாஸ், ஜஅஃபர், அப்தல்லாஹ் மற்றும் உஸ்மான் பிறந்தார்கள். இவர் களுல் அப்பாஸைத் தவிர மற்ற அனைவரும் கர்பலா மைதானத்தில் ஷஹீதாகி விட்டார்கள்.

3. லைலா பின்த் மஸ்ஊத். உபைதுல்லாஹ் மற்றும் அபூ பக்கர் ஆகியோர் இவர் மூலம் பிறந்தார்கள். இவர்கள் இருவரும் ஓர் அறிவிப்பின்படி ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு வோடு ஷஹீதானார்கள்.

4. அஸ்மா பின்த் உமைஸ். இவர் மூலம் யஹ்யாவும் முஹம்மத் அஸ்கரும்

5. ஸுஹ்பாயா உம்மு ஹபீப் பின்த் ரபீஆ. பல பிள்ளைகளுக்கு இவர் தாயாவார். உமரும் ருகைய்யாவும் இவருக்குப் பிறந்தார்கள். உமர் நெடுங்காலம் உயிர் வாழ்ந்தார். ஐம்பது ஆண்டு காலம் உயிர்வாழ்ந்து யன்பூஃ என்னுமிடத்தில் இறப்பெய்தினார்கள்.

6. உமாமா பின்த் அபீல் ஆஸ். இறைத்தூதரின் முதல் மகளான ஸைனப் ரழியல்லாஹு அன்ஹா -க்குப் பிறந்தவர் இவர். இவர் மூலமாக முஹம்மத் அவ்ஸத் பிறந்தார்.

7. ஃகவ்லா பின்த் ஜஅஃபர். இவர் மூலமாக முஹம்மத் இப்னு அலீ பிறந்தார். இவர்தாம் வரலாற்றில் முஹம்மத் இப்னுல் ஹனீஃபிய்யா என அறியப்படுகிறார்.

8. உம்மு ஸஈத் பின்த் உர்வா. இவர் மூலமாக உம்முல் ஹஸன் மற்றும் ரம்லா குப்ரா பிறந்தார்கள்.

9. மிஹ்யாத் பின்த் இம்ரஉல் கைஸ். இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து சிறு வயதிலேயே இறந்துவிட்டது.

இந்த மனைவிகள் அல்லாது பல அடிமைப் பெண்களும் இருந்தார்கள். அவர்களுக்கு கீழ்வரும் பெண்பிள்ளைகள் பிறந் திருந்தார்கள். உம்மு ஹானி, மைமூனா, ஸைனப் ஸுக்ரா, ரம்லா ஸுக்ரா, உம்மு குல்ஸூம் ஸுக்ரா, ஃபாத்திமா, உமாமா, கதீஜா உம்முல் கிராம், உம்மு ஜஅஃபர், ஹிமானா, என்றிவ்வாறாக, அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பதினான்கு ஆண் மகவுகளும் பதினேழு பெண்மகவுகளும் பிறந்தார்கள்.

இவர்களுள் கீழ்வருவோர் வழியாகத்தான் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வம்சாவழி பெருகியது. ஹஸன், ஹுஸைன், முஹம்மது இப்னுல் ஹனஃபிய்யா, உமர் ரழியல்லாஹு அன்ஹு.

-சையத் அப்துர் ரஹ்மான் உமரி

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it