Home கட்டுரைகள் குண நலம் என் தாய் என்னை வளர்த்த முறை!
என் தாய் என்னை வளர்த்த முறை! PDF Print E-mail
Wednesday, 29 April 2015 06:19
Share

என் தாய் என்னை வளர்த்த முறை!

அப்துர் ரஹ்மான் என்ற வியாபாரி மதுரைக்கு பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் காலின் கீழே மணிபர்ஸ் ஒன்று கிடந்தது. அதைப் பார்த்த அவர் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு நைஸாக அதை எடுத்து தனது கைப்பையில் மறைத்துக் கொண்டார்.

வீட்டிற்கு சென்று பார்த்தார். அதில் ரூ.500/- தாள்கள் பன்னிரெண்டும், சில்லரை தாள்களும் இருந்தன. அத்துடன் அதில் ஒருவரின் பெயரும், செல் நம்பரும் இருந்தது.

இந்தப் பணம் ரூ.6170/- நமக்கு உரிமையானது அல்லவே, அடுத்தவர் பணமாச்சே, அந்த பணத்தை உரியவரிடம் சேர்க்கலாமே? என்று அவரின் தூய மனம் எண்ணினாலும் ஆசை அவரை வழிகெடுத்துவிட்டது. அதனால் பணத்தை தனதாக்கிக்கொண்டார்.

ஒரு மாதம் கடந்தது. வியாபாரி மணிபர்ஸைப்பற்றி மறந்தே போனார். ஒருநாள் காலை நேரத்தில் வியாபாரியின் சட்டைப் பையில் இருந்த ரூ.500/- தாள் ஒன்று காணாமல் போய்விட்டது. அதை பல வகையிலும் அவர் தேடிப்ப்பார்த்தும் அந்த பணம் கிடைக்கவில்லை.

எப்படி பணம் காணாமல் போனது என்று அவர் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போது வீடு பெருக்கும் காமிலா என்ற வேலைக்கார பெண்மணி, "முதலாளி! உங்க கட்டிலுக்கடியில் பெருக்கும்போது இந்த ஐநூறு ரூபாய் கிடைத்தது. அது உங்களிடமிருந்து தவறி கீழே விழுந்திருக்கும் என்று நினைக்கின்றேன், இந்தாங்க!" என்று வியாபாரியிடம் பணத்தை கொடுத்தாள்.

அப்துர்ர ஹ்மானுக்கு பஸ்ஸில் பயணம் செய்த நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது. எவரோ, அவரை சாட்டையால் அடிப்பது போன்று உணர்ந்தார்.

ஒரு வேலைக்காரப் பெண்மணியிடம் இருக்கும் நேர்மை, உண்மை நம்மிடம் இல்லாமல் போய்விட்டதே என்று எண்ணி மனம் வருந்தினார். இறைவனிடம் மனமுருகி தவ்பா செய்தார்.

வேலைக்காரப் பெண்ணை அழைத்து, "காமிலா! கீழே கிடந்த ஐநூறு ரூபாயை நீயே எடுத்துக் கொண்டாலும் யாருக்கும் தெரியாதே! அப்படியிருக்கும்போது நீ அதை மறைக்காமல் எப்படி என்னிடம் திரும்ப தந்தாய்? எனக்கு ஆச்சரியமாக உள்ளது!" என்றார்.

அதற்கு அந்த  பெண்மணி, "போங்க முதலாளி, இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது! எனது தாய் நான் சின்னப் பிள்ளையாக இருக்கும்போது நல்ல பழக்க வழக்கங்களை அடிக்கடி கூறி, என்னை வளர்த்த முறை அப்படி! அதில் ஒன்று, மற்றவர்கள் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது. அடுத்தவரின் பணத்தையோ, சொத்தையோ, பொருளையோ அபகரிக்க எண்ணக்கூடாது. உரிமையானவர் சம்மதம் இல்லாமல் எதையும் உரிமையாக்கிக் கொள்ளக்கூடாது. உழைத்து வாழ வேண்டும். திருடக் கூடாது. நீ நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் அவைகளை நம்மைப் படைத்த இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான். 'மகளே! இதனை உயிர் உள்ளவரை மறக்காமல் கடைப்பிடித்து வாழ் வேண்டும்' என்று புத்திமதி கூறி என்னை வளர்த்தார்கள். நானும் சிறு வயது முதல் இன்றுவரை அல்லாஹ்வுக்கு பயந்து முறையாக வாழ பழகிக்கொண்டேன்" என்றாள்.

வியாபாரி, வேலைக்காரப் பெண்மணி சொன்னதை கேட்டு வெட்கித் தலை குனிந்து, இனி இறை அச்சத்தோடு, முறையாக வாழவும், வியாபாரம் செய்யவும் உறுதிபூண்டார்.

முதல் பயணமாக மணிபர்ஸுக்கு உரிய நபரிடம் செல்போனில் பேசி, அவர் முகவரி அறிந்து பஸ்ஸில் கண்டெடுத்த ரூ.6170/-யும் மணிபர்ஸையும் நேரில் சென்று அவரிடம் ஒப்படைத்தார். நடந்த விபரங்களை அவரிடம் கூறி காலதாமதத்திற்கு வருத்தம் தெரிவித்தார். இப்போதுதான் அவருக்கு நிம்மதி. அல்ஹம்துலில்லாஹ்.

-எஸ்.செய்யிது அலீ, தொண்டி, 'ரஹ்மத்' மாத இதழ், மார்ச் 2015