Home குடும்பம் பெண்கள் தீபிகாவின் MY CHOICE - ஆண்களுக்கான CHOICE
தீபிகாவின் MY CHOICE - ஆண்களுக்கான CHOICE PDF Print E-mail
Thursday, 16 April 2015 06:53
Share

தீபிகாவின் MY CHOICE - ஆண்களுக்கான CHOICE

பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்திய "பெண்ணியம்", "பெண்ணியவாதி" ஆகிய பதத்திற்கு உண்மையான அர்த்தத்தை வெளியுலகிற்கு படம் போட்டு காட்டிய "மை சாய்ஸ்"க்கு கோடான கோடி நன்றிகள்.

வாட் ஏ வீடியோ, இந்த நூற்றாண்டின் சிறந்த பெண்களுக்கான புரட்சி வீடியோ! (மை சாய்ஸ்).

பெண்ணியம் என்றால் என்வென்று யாராவது இனி கேட்டால், இந்த கலாச்சார, பண்பாட்டு வீடியோவை காட்டினால் போதும். ஒரு நொடியில்  புரிந்துக்கொள்வார்கள், பக்கம் பக்கமா விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. 

இதை பார்த்துவிட்டு பெண்ணியம் பற்றி நான் புரிந்துக்கொண்ட  விஷயம் என்னவென்றால்? பெண்கள் எல்லாமே அவர்களின்  இஷ்டத்திற்கு தான் செய்வார்களாம், செய்யட்டும்... எவரும்  கேள்வி கேட்க கூடாதாம். ஆகட்டும்... என்ன செய்தாலும் சரியே... ஆனால், தான் என்னென்னெல்லாம் செய்வேன் என தீபிகா சொன்ன விஷயங்களில் தான் பெண்ணியத்தின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது.

கவர்ச்சிகரமான ஒளி ஒலி கோர்வை, திமிர்த்தனமான பதில்கள் எளிதில் பெண் சமூகத்தை கவர்ந்திழுக்கும் தான். ஆனால் இதன் விளைவுகளையெல்லாம் தீபிகா படுகோன்கள் அறிய முற்படுவதில்லை. ஒரு காலத்தில்  ஆண்களுக்கு அடங்கி கிடந்தனர் பெண்கள். கல்வியிலும் முன்னேற்றத்திலும் உரிமை மறுக்கப்பட்டு வந்த நிலையில் போராடி நம் உரிமையை நிலைநாட்டி நின்றோமே அது தான் உண்மையான பெண்ணியமே அன்றி ஆண்களை பார்த்து “எனக்கு அடங்கி கிட” என சொல்வதல்ல. இன்றைய தீபிகாபடுகோன்கள் அறிமுகப்படுத்தும் உலகம் எவ்வளவு ஆபத்தானது, குழப்பமானது? சிந்திக்க  கடமைப்பட்டுள்ளோம்.

இந்த வீடியோவில் வரும் வசனங்கள் சிலவற்றை பார்ப்போம்.

"நான் திருமணம் செய்வேன் அல்லது செய்யாமலும் இருப்பேன்" -  என்னோட தேர்வு. (my Choice)

இப்படி சொல்லிவிட்டு அடுத்ததாக,

"திருமணத்திற்கு முன்பு உறவு வைத்து கொள்வேன், திருமணம் முடிந்தபிறகு  திருமண உறவில் இருந்துக்கொண்டே வேறு ஆணுடன் தொடர்பில் இருப்பேன் அல்லது உறவே வைத்துக்கொள்ளாமலும் இருப்பேன்" - என்னோட தேர்வு (my choice).

இதற்கு திருமணம் செய்யாமலே இருந்துவிடலாம், பாவம் அந்த ஆணாவது மானத்தோடு வாழ்வான் இல்லையா? அப்பட்டமான விபச்சாரத்திற்கு உட்படுத்துதல் தான் இவர்கள் சொல்லும் பெண்ணியமா? நிச்சயம் இப்படியான பெண்ணியவாதிகளை திருமணம் செய்ய ஆண்களுக்கு மிகப்பெரும் மனதிடம் வேண்டும் தான். அழகான குருவிக் கூட்டை சிதைக்கும் முயற்சி அல்லவா?

இதில்  விஷத்தனமான ஒரு கருத்தை ஆழமாக பெண்கள் மனதில் பதிய வைக்கிறார்கள் . என்னவெனில், "Living Together" திருமணம் செய்யாமல் அன்னிய ஆண்களோடு வாழ்வது தவறில்லை ; கல்யாணத்திற்கு முன்பு குழந்தை பெற்றுக் கொள்வது தவறில்லை :  கல்யாணத்திற்கு முன்பு உறவு வைத்துக் கொள்வது தவறில்லை.

இது தான் பெண்ணுரிமை, இது தான் இந்த பெண்ணியவாதிகள் வைக்கும் பெண்ணுரிமை புரட்சி.

திருமணம் பற்றி புரட்சிகரமாக சொல்லிவிட்டு அடுத்து சொல்கிறார்,
"நான் தற்காலிகமாக விரும்புவேன் அல்லது காமத்திற்காக நிரந்தரமாகவும் விரும்புவேன்" - என்னுடைய தேர்வு (மை சாய்ஸ்).

"ஆண்களையோ, பெண்களையோ அல்லது இருவரையுமோ விரும்புவேன்" - என்னோட தேர்வு (மை சாய்ஸ்).

ஒரு ஆணும் இந்த மனநிலை கொண்டு  ஒரு பெண்ணை எப்போது வேண்டுமென்றாலும் காதலிப்பதற்கோ கை விடுவதற்கோ எனக்கு உரிமை உண்டு என சொன்னால் ஏற்றுக்கொள்வோமா? காமத்திற்காக, இச்சைக்காக நிரந்தரமாய் விரும்புவேன் என இதே வார்த்தையை ஆண்கள் சொன்னாலும் இந்த பெண்ணியவாதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதானே தர்மம்? பெண்களை பெண்களே இழிவுபடுத்த போதுமானவர்கள். அடிமைப்பட்டு கிடந்த காலத்திலும் கூட, இன்றைய காலம் வரை பெண்கள் மீது இயல்பாகவே பெரும்பான்மையினருக்கு நன்மதிப்பு உண்டு. தயவு செய்து கெடுத்து விடாதீர்கள்.  தாம்பத்தியமும் குடும்ப அமைப்பும் ஆத்மார்த்தமானது. இச்சைக்காக என சொல்லி கேவலப்படுத்தாதீர்கள்.

அடுத்ததாக ஆண்களை நோக்கி சொல்கிறார்,

“விடியற்காலை 4 மணிக்கு நான் வீட்டிற்கு வந்தால்  வருத்தப்படாதே, மாலை 6 மணிக்கு வந்தால் நல்லவள் என்றும் நம்பி முட்டாள் ஆகிவிடாதே. என்னுடைய காதல் உனக்காக அல்ல, என்னுடைய தேர்வு ஒரு புதையல் மாதிரி.  நெற்றியிலிருக்கும் குங்குமம், விரலில் போடும் மோதிரம், என் பெயருக்கு பின்னால் உன் பெயர் அனைத்தும் அணிகலன் போலவே தான். எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்வேன்”

“உன்னுடைய குழந்தையை நான் வைத்து இருப்பது என்னுடைய தேர்வு, 700 கோடி பேரில் உன்னை ஒருவனாய் தேர்வு செய்வதும் என்னுடைய தேர்வு.

“உன்னுடைய குழந்தையை நான் வைத்து இருப்பதும் இருக்காததும் என்னுடைய தேர்வு”,

"ஞாபகம் இருக்கட்டும், நான் உன்னை தேர்ந்தெடுத்துள்ளேன், நீ ஒன்றும் எனக்கு சலுகை கொடுக்கவில்லை".

இது குடும்ப அமைப்பை சீரழிக்கும் விசயமல்லவா? இப்போது புரிகிறதா? இவர்கள் அறிமுகபடுத்தும் உலகம்? இதுவரை நீங்கள் படித்தவற்றையெல்லாம் கொஞ்சமாக  சிந்தித்து பாருங்கள். இதுதான்  பெண்ணியமா? பெண்ணுரிமையா? பெண்கள், தான் விரும்பியவற்றை செய்யும் முழு உரிமையும் பெறவேண்டும் என்பதில் மாற்று கருத்து ஏதுமில்லை. ஆண்களுக்கு நிகராக சமூகத்தில் உயர்ந்திருப்பதும், வேலை,  அரசியல், சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை எக்ஸட்ரா எக்ஸட்ரா முன்னேறுவதும் போற்றத்தக்க விஷயமே. ஆனால் விரும்பியவை எவை? செய்ய போகின்ற செயல் எது? இது தான் இங்கு மில்லியன் டாலர் கேள்வி? ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்திலும் சாதிக்க வேண்டும் என்று பெண்ணியம் பேசிவிட்டு, ஆண்கள் கூட நேரடியாக செய்ய துணியாத, செய்ய நினைக்காத காரியத்தை அல்லவா தான் செய்வேன் என காட்டுகிறார்கள்.

மேலே சொன்ன செயல்களுக்காக தான் பெண்களுக்கு உரிமை வேண்டுமா?

மேலே சொன்ன செயல்களுக்காக தான் பெண்களுக்கு சுதந்திரம் வேண்டுமா?

எனில் இதில் நஷ்டவாளி இவர்களே தான்! சிந்தித்து பாருங்கள்... உண்மை விளங்கும்.

இன்று நடு இரவில் கிளப்புக்கு சென்று வருவது ஒரு பெண்ணின் உரிமை என்றால் அவளை கற்பழிப்பது ஒரு ஆணின் உரிமை என்று பேசிய  முகேஷ் சிங் போன்ற ஆண்களுக்கு உங்களின் "மை சாய்ஸ்" ஒரு பெஸ்ட் சாய்ஸ்.. ஆம்!!! உங்களுக்கு உங்கள் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பது உங்கள் விருப்பம் என்றால் அதே போல் ஆண்களுக்கும் அவர்கள் விருப்பப்படி நடந்துக்கொள்வது அவர்கள் விருப்பம் தானே!!! அவ்வாறு ஒரு ஆண் விருப்பபட்டு உங்களை அழைக்கும் போது உங்களுக்கு விருப்பமே இல்லையென்றாலும் அவனது விருப்பத்திற்கு கட்டுப்படுவது "ஹிஸ் சாய்ஸ்" அது உங்களின் "மை சாயிஸ்-லிருந்து பிறந்ததே".. உங்கள் புண்ணியத்தில் உருவாகட்டும் முகேஷ்கள்!

பெண்களை காமவெறிகொண்டு பார்க்கும் இழிவான கடைந்தெடுத்த சில இழிபிறவி ஆண்களுக்கு எதிரான மனநிலையை கொண்டிருப்பது தவறல்ல. ஒட்டுமொத்த ஆண்களையும்  கை நீட்டுவது   கவர்ச்சிக்காக மட்டுமே.  இன்றைய தீபிகாக்கள் முன் வைக்கும் பெண்ணியவாதிகளின் உலகில்  அநாதையாக விடபட்டது குழந்தைகளின் நிலை தான். பாவம் பெண்ணியத்திற்கும் ஆணாதிக்கத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார்கள்.  இரு போட்டியாளர்களுக்கு மத்தியிலுள்ள இந்த குழந்தை வர்க்கத்துக்கு இவர்கள் முன்வைக்கும் தீர்வு என்ன?

இவர்கள் காட்டும் உலகில் ஆண்களுக்கு மறைமுகமாக லாபம் கொடுப்பதை இவர்கள் அறிவார்களா? உதாரணத்திற்கு தீபிகா ரன்பிரை காதலித்தார், அதன் பின் சித்தார்த் மல்லையாவை காதலித்தார். இது தீபிகாவின் சாய்ஸ் தான். இதில் யாருக்கு லாபம் ??? ஹாஹாஹா தன் கற்பு உறிஞ்சப்படுவதை கூட சிந்திக்க முடியாத அளவுக்கு கார்ப்பரேட் இயக்கும் பெண்ணியவாதிகளாக இவர்கள் மாறிவருவதை நினைத்து நிச்சயம் பரிதாபமே மிஞ்சுகிறது. எத்தனை ஆண்களுடன் திருமணத்துக்கு முன் வாழ்ந்தாலும், திருமணத்திற்கு பின் வாழ்ந்தாலும் லாபம் என்னவோ  ஆண்களுக்கு தான். நிச்சயம் இத்தகைய ஆண்களுக்கு உங்கள் வாக்குமூலம் உற்சாகத்தை விதைக்கவே செய்யும். உரிமை என்பது உடையில் மட்டுமே என நினைத்தவர்கள் கொஞ்சம் முன்னேறி கற்பு பகிர்தலில் வந்து நிற்கிறார்கள். அந்தோ பரிதாபம்! அனைத்தும் குறுகிய வட்டம். தீர்வில்லாத திட்டம்.

பெண்ணியவாதிகள் எழுப்பும் அவர்களின் சாய்ஸ்கள் எல்லாம், ஆண்களாலும் சொல்ல முடியும் என்பதே நிதர்சனம். இருவரும் இவ்வாறு முரண்டு பிடிப்பது ஒரு வாகனத்திற்கு இரு ஓட்டுநர்கள் இரு பக்கமும் இயக்க அடம்பிடிப்பது போன்றது.

பெண்களை போகப் பொருளாக  ஆண்கள்  காட்டுகின்றனர் என  கூப்பாடு போட்டுவிட்டு , இந்த வீடியோவில் பெண்களை மிக கேவலமாக காண்பித்து இருக்கின்றார்களே?? ஓஹ், இதுதான் பெண்ணியமா?  பெண் தான் இதை செய்ய வேண்டும், ஆண்கள் செய்ய கூடாது. காரணம், இது என்னுடைய தேர்வு (மை சாய்ஸ்). நான் இதை செய்தால் பெண்ணுரிமை, ஆண் இதை செய்தால் ஆணாதிக்கம் - இவர்களின் இலக்கணம் நகைப்புக்குரியது.  பெண்ணியம் பெண்ணுரிமை குறித்து தெளிவான சிந்தனை பெண்களிடத்திலேயே இல்லை என்பது தான் இந்த குறும்படம் காட்டும் உண்மை.  ஆடையை அவிழ்த்தலும்  இவர்களின் விருப்பமெனில் லாபம் என்னவோ விருந்தாக போகும் ஆணின் கண்களுக்கு தான்.

உன்னால் முறைதவறி என்னை பயன்படுத்த முடியாது என்பது பெண்ணுரிமையா ? அல்லது கற்பை பகிர்வது பெண்ணுரிமையா ?

என் அங்கங்களை உன்னால் பார்க்க முடியாது என்பது பெண்ணுரிமையா? அல்லது அரைகுறையாடையுடன் வலம் வருதல் பெண்ணுரிமையா?

என்னை பிடிக்கவில்லை என்றால்/ எனக்கு   பிடிக்கவில்லை என்றால்  விவாகரத்து வாங்கி தகுதியான நபருடன் திருமணம் செய்வேன் என்பது பெண்ணுரிமையா? கணவனை தண்டிக்க பல ஆண்களுடன் என்னை பகிர்வேன் என்பது பெண்ணுரிமையா?

என் வயிற்றில் உருவாகிய கருவை பாதுகாப்பேன் என்பது மனிதாபிமானமா? அல்லது எப்படிவேண்டுமென்றாலும் அதை பயன்படுத்துவேன் என்பது பெண்ணுரிமையா?

சமூகம் என்பது ஆணாலும் பெண்ணாலும் சரிசமமாய் கட்டெழுப்பப்படுவது தான். ஒருவரை ஒருவர் புறக்கணித்து செயல்படுவது இயற்கைக்கு எதிரானது. ஆண் இல்லாமல் பெண்ணால் வாழ முடியாது என ஆணின் திமிர்தனமான பேச்சும் உண்மை தான். அதே சமயம் பெண் இல்லாத உலகம் ஆண்களுக்கு நரகமானது என்பதும் உண்மைதான். ஒருவரை விடுத்து இன்னொருவரால் சாதிக்க முடியாது என்பதே உண்மை.  பெண்களை இழிவாக நடத்தும் ஆணாதிக்கம் ஒழியட்டும்.  ஆபத்தை பரிந்துரைக்கும் பெண்ணியமும் அழியட்டும். சமூகத்தை நன்முறையில் செதுக்கும் மனிதம் மலரட்டும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லையை அழகாக வகுத்து கொடுத்து படைத்து இருக்கிறான் இறைவன். அவனுக்கு தெரியும் எது யாருக்கு பெஸ்ட் சாய்ஸ், வொர்ஸ்ட் சாய்ஸ்  என்று . மை சாய்ஸ் என்று  சொல்லிக்கொண்டு  இதுபோல் தான்தோன்றித்தனமாக,  அறிவுக்கு ஒவ்வாத வாழ்வை  வாழ்வதை விடுத்து , இறைவன் வகுத்து கொடுத்த பெஸ்ட் சாய்ஸ்-ல் பண்பாட்டோடு பாதுகாப்பாக வாழ முற்படுவோம். இதுதான் பாதுகாப்பான , நாகரிகமான, குழப்பமற்ற கேடயமாக இருக்கும். இதை தவிர பெரிய  உரிமையை எவராலும் பெண்களுக்கு வழங்கிவிட முடியாது.  புரிந்தவர்கள் புத்திசாலிகள்... புரியாதவர்கள் ஏமாந்தவர்கள்!  pity on you Feminist

உங்கள் சகோதரி,
ஆமினா முஹம்மத்.

source: http://www.islamiyapenmani.com/2015/04/my-choice-choice.html