Home குடும்பம் பெற்றோர்-உறவினர் உறவுகளே! உறவுகளுக்கு என்ன செய்தீர்கள்....
உறவுகளே! உறவுகளுக்கு என்ன செய்தீர்கள்.... PDF Print E-mail
Wednesday, 15 April 2015 06:26
Share

உறவுகளே! உறவுகளுக்கு என்ன செய்தீர்கள்...?

  சமூகநீதி முரசு   

தாய் தந்தையர்களை, இரத்த பந்தங்களை, உறவு முறைகளை, இனபந்துக்களை துண்டித்து தூரமாகி வாழ்பவர்களுக்கு சுவர்க்கம் கிடையாது, அவர்களது நல்ல அமல்கள், வணக்க வழிபாடுகள் எவையும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா என இஸ்லாம் கூறுகிறது.

வேகமான உலகில் பொருளாதார பிரானியாகிவிட்ட மனிதன் உறவுகளைப் பேணி வாழ்வதில் கரிசனை கொள்வதில்லை, அன்புக்காக ஏங்கி நிற்கும் தாய் தந்தையர்கள், முதியவர்களை கண்டு கொள்வதில்லை, காலை மாலை விடுமுறை நாட்களில் மேலதிக வகுப்புக்கள் என பிள்ளைகளை உறவுகளோடு அறிமுகம் செய்து வைக்க அவகாசம் இல்லை, நோய், துக்கம், சுகம் விசாரிப்புக்கள் என எல்லாம் கால் அட்டவனையில் அகப்படுவதில்லை.

உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியாத உறவுகள் மன அழுத்தத்தால் அவதிப்படுகின்றார்கள், எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவர்களாகி வாழ்வை தொலைத்துக் கொள்கின்றார்கள்.

கல்யாணம் மரணம் சுகம் துக்கம் எல்லாம் ஒருசில மணி நேர சந்திப்புக்களோடு நிறைவடைந்து விடுகின்றன, குழந்தை குட்டிகள் சிறுவர் பெரியவர் என எல்லோரும் கையில் தொலைபேசியும், டேப்புமாக அடுத்தவரை அணுசரிக்க நேரமில்லாமல் சைபர் உலகில் சஞ்சாரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

"சைபர் உலகில் வாழ்க்கை ஸைபர் ஆகிக் கொண்டிருக்கிறது"

ஒருவர் தம் உணவு (வாழ்வாதாரம்) தமக்கு அதிகரிக்கப்படவும், தம் ஆயுள் தமக்கு நீட்டிக்கப்படவும் விரும்பினால் அவர் தம் உறவினரை இணைத்து வாழட்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, புகாரீ, முஸ்லிம்)

பிரதி உபகாரம் (உதவிக்கு உதவி) என வாழ்பவர், உறவை இணைத்து வாழ்பவர் அல்லர். எனினும் தன் உறவினர் தம்மைத் துண்டித்தாலும், இணைத்து வாழ்பவரே உறவை இணைத்து வாழ்பவர் ஆவார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு, புகாரீ)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! சொர்க்கத்தில் என்னை நுழையச் செய்கின்ற, நரகத்திலிருந்து என்னைத் தூரமாக்கிவிடுகின்ற ஒரு செயலை என்னிடம் கூறுங்கள் என்று ஒருவர் கேட்டார். நீர் அல்லாஹ்வை வணங்குவீர்; எதையும் அவனுக்கு இணையாக்காதீர்; தொழுகையைப் பேணுவீர்; ஸகாத்தைக் கொடுப்பீர்; உறவினரை இணைத்து வாழ்வீர் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: காலித் இப்னு ஸைத் அல்அன்ஸாரீ ரளியல்லாஹு அன்ஹு, புகாரீ, முஸ்லிம்)

உங்களுள் ஒருவர் நோன்பு துறந்தால், ஒரு பேரீத்தம் பழத்தால் நோன்பைத் துறக்கட்டும். அதுவே அபிவிருத்தி தரும். ஒரு பேரீத்தம் பழம் இல்லையென்றால், தண்ணீர் (மூலம் நோன்பு துறக்கட்டும்); அதுவே சுகாதாரமாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிவிட்டு, ஏழைக்குத் தர்மம் தருவது, ஒரு தர்ம(க் கூலி)தான். உறவினருக்குத் தர்மம் வழங்குவது இரண்டு (கூலி)களாகும். ஒன்று தர்மம்; மற்றொன்று உறவை இணைத்து வாழ்தல் என்றும் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: சல்மான் இப்னு ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு, திர்மிதீ)

நிச்சயமாக அல்லாஹ், படைப்புகளைப் படைத்து முடித்தபோது `உறவு எழுந்து நின்றது. (என்னைத்) துண்டித்துக் கொள்வதைவிட்டு உன்னிடம் பாதுகாப்புக் கோரும் இடம் இது என்று கூறியது. ஆம் உன்னைச் சேர்த்துக்கொள்பவனை நானும் சேர்ப்பேன். உன்னைத் துண்டிப்பவனை நானும் துண்டிப்பேன் என்பதை நீ திருப்தியுறவில்லையா? என்று அல்லாஹ் கேட்டான். திருப்திதான் என உறவு கூறியதும், உனக்கு அது உண்டு என்று அல்லாஹ் கூறினான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிவிட்டு, பின்பு, நீங்கள் விரும்பினால் (பின்வரும்) இறைவசனத்தை ஓதுங்கள் என்றும் கூறினார்கள்.

நீங்கள் பொறுப்பாளர்களாக வந்துவிட்டால் பூமியில் நீங்கள் குழப்பம் செய்திடவும், உங்களின் இரத்தத் தொடர்புடையவர்களை நீங்கள் துண்டித்துக் கொள்ளவும் விரும்புகிறீர்களா? (துண்டிக்கும்) அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான். அவர்களைச் செவிடாக்கிவிட்டான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கி விட்டான். (47: 22-23) அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரீ, முஸ்லிம்)

உறவு என்பது, அர்ஷைப் பிடித்துக்கொண்டு, என்னை இணைத்து வாழ்பவரை அல்லாஹ் இணைத்துக்கொள்வான். என்னைப் பிரித்துவிடுபவரை அல்லாஹ்வும் பிரித்துவிடுவான் என்று கூறும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, புகாரீ, முஸ்லிம்)

இரத்த உறவுகளை, அண்டை அயலவர்களை இணைத்து வாழ்கின்ற சந்திப்புக்களை, சுற்றுலாக்களை விடுமுறை நாட்களில் ஒழுங்கு செய்வதும் அந்த நாட்களில் போன்களுக்கும், டேப்புகளுக்கும் ஓய்வு கொடுப்பதும் காலத்தின் தேவையாகிறது.

உறவுகளை சந்திக்கவும், பிள்ளைகளுக்கு அவர்களது உறவு முறைகளை அறிமுகம் செய்யவும் அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டவும், உதவி ஒத்தாசை செய்து கொள்ளவும் கூடி ஓடியாடி விளையாடவும் சந்தர்ப்பங்களை குறிப்பாக இந்த கோடைகால விடுமுறையில் ஏற்படுத்திக் கொடுப்பது, முதன்மையான வாழ்வியல் அம்சமாகும்.

சூழ் நிலைகளின் கைதிகளாக வாழாது, நமது சுற்றம், நட்புகளை அன்பால் கைது செய்து வாழ்வை வளமாக்குவோம்..!

source: http://www.samooganeethi.org/