Home செய்திகள் இந்தியா திண்டுக்கல் அருகே கோர விபத்து: ஆலிம்கள் உள்பட 9 பேர் பலி!
திண்டுக்கல் அருகே கோர விபத்து: ஆலிம்கள் உள்பட 9 பேர் பலி! PDF Print E-mail
Saturday, 04 April 2015 10:27
Share

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

திண்டுக்கல் அருகே கோர விபத்து: ஆலிம்கள் உள்பட 9 பேர் பலி!

திண்டுக்கல் அருகே நேற்று அதி காலை பால் டேங்கர் லாரியும், காரும் நேருக்கு மோதியதில் அரபிக் கல்லூரிப் பேராசிரியர்கள் 7 பேர் உட்பட 9 பேர் உடல் நசுங்கி இறந்தனர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த இப்ராகிம் மகன் பஜிருல்லா (32). இவர் பள்ளப் பட்டி மக்துமியா அரபிக் கல்லூரி பேராசிரியராக பணிபுரிகிறார். இவரது தாய் மாமா சதக் அப்துல்லா கொடைக்கானலில் பங்களா ஒன்று கட்டியுள்ளார். இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் காலை நடைபெற்றது.

பங்களா திறப்பு விழாவில் துவா ஓதுவதற்காக பஜிருல்லா, தன்னுடன் பேராசிரியராகப் பணிபுரியும் 8 உலமாக்கள், தம்பி வலியுல்லா(25) ஆகியோரை கொடைக்கானலுக்கு நேற்று முன்தினம் காரில் அழைத்துச் சென்றார்.

அங்கு புது பங்களாவில் நேற்று காலை துவா ஓதினர். பொதுவாக உலமாக்கள் சொந்த ஊர்களில் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவார்கள். அன்று வெளியூரில் இருக்கமாட்டார்கள்.

அதனால், திறப்பு விழா முடிந்ததும் பஜிருல்லா, அவருடன் வந்த உலமாக்கள் கொடைக்கானலில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் காரில் பள்ளப்பட்டிக்கு புறப்பட்டுச் சென்றனர். காரை அரவாக்குறிச்சி குமரண்ட வலசை சேர்ந்த டிரைவர் மோகன் ஓட்டியுள்ளார்.

திண்டுக்கல் அருகே சித்தையன் கோட்டை சேடப்பட்டி பிரிவு சாலை யில் நேற்று அதிகாலை 2.15 மணி அளவில் கார் சென்று கொண்டி ருந்தது. அப்போது முன்னாள் சென்ற மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல கார் டிரைவர் மோகன் முயற்சி செய்துள்ளார்.

அதே சமயம் எதிரே துறையூரில் இருந்து கேரளாவுக்கு பால் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் காரும், பால் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. பால் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

காரில் பயணம் செய்த பஜிருல்லா, அவரது தம்பி வலியுல்லா(25), அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் (உலமாக்கள்) அப்துர் ரகுமான்(35), தமீமுல் அன்சாரி, சையது இப்ராகிம் (25), பஜுருல்லா(32), பொள்ளாச்சியைச் சேர்ந்த அபுசாலி(25), வேடசந்தூ ரைச் சேர்ந்த அப்துல் ரகீம்(30), அரபிக் கல்லூரி மாணவர் அலிபா(20) ஆகிய 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.

காரில் சென்ற பேராசிரியர் கலீல் ரகுமான் மட்டும் இடிபாடு களில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

செம்பட்டி போலீஸார், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் ஆகியோர் கடப்பாரை, கம்பியால் காரை உடைத்து கலீல் ரகுமானை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

டிரைவர் மோகன் தவிர மற்றவர் கள் அனைவரும் உலமாக்கள். இவர்கள் அரபிக் கல்லூரியில் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பது மட்டுமின்றி மசூதிகளில் தொழுகை நடத்துவது, புது வீடுகளில் துவா ஓதும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

விபத்து குறித்து செம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான பால் டேங்கர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

விபத்து நடைபெற்ற இடத்தில் சடலங்களை மீட்டு மருத் துவமனைக்கு கொண்டு செல்ல தமுமுக நிர்வாகிகள் உதவி செய்தனர். அப்போது இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல்கூற மின்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், எம்பி உதயகுமார், திண்டுக்கல் மேயர் மருதராஜ் ஆகியோர் வந்தனர். அவர்களிடம் தமுமுக செயலாளர் சாருக் அப்துல்லா மற்றும் நிர்வாகிகள், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அதற்கான நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

‘இரவு நேரத்தில் போகாதீர்கள்..’

விபத்தில் இறந்த பஜிருல்லாவின் உறவினர் முகமது ஹாருன் கூறியதாவது: கொடைக்கானலில் இரவு கிளம்பும்போது, பஜிருல்லாவின் உறவினர் சதக் அப்துல்லா, `இரவு நேரத்தில் போகாதீர்கள், தூங்கி விட்டு காலையில் செல்லுங்கள்' என அனைவரையும் வற்புறுத்தியுள்ளார். மீறி அவர்கள் புறப்பட்ட போது, வலியுல்லாவை அவர் பிடித்துவைத்துக் கொண்டு ‘விட மாட்டேன்’ எனக் கட்டாயப்படுத்தி தங்க வைக்க முயன்றுள்ளார். இருப்பினும் அவசரமாக போக வேண்டும் என்று கூறி அவர்கள் புறப்பட்டுச் சென்றனர் அவர்கள் இரவு புறப்படாமல் இருந்திருந்தால் விபத்தில் சிக்கி இறந்திருக்க மாட்டார்கள். நேரம் அவர்களை இழுத்துச் சென்று விட்டது'' எனக் கூறி கண் கலங்கினார்.

திருமணமான 40-வது நாளில் பலி

விபத்தில் இறந்த பள்ளப்பட்டியை சேர்ந்த பிச்சை முகமது மகன் தமீமுல் அன்சாரிக்கு 40 நாளுக்கு முன் திருமணம் நடை பெற்றது. தற்போதுதான் முதல்முறையாக மனைவியைப் பிரிந்து வெளியூர் வந்துள்ளார். வந்த இடத்தில் அவர் இறந்துள்ளார்.

அதேபோல், டிரைவர் மோகனின் மனைவி 9 மாதம் முன்தான் இறந்துள்ளார். மனைவி இறந்த சோகத்தில் இருந்த அவரை அவரது கார் உரிமையாளர் அப்துல் ஜபார் ஆறுதல்கூறி மீண்டும் திருமணத்துக்கு சம்மதிக்க வைத்து கடந்த வாரம்தான் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. “மோகன் 25 ஆண்டு களாக காரை ஓட்டியுள்ளார். இதுவரை ஒரு விபத்துகூட இவர் ஏற்படுத்தவில்லை'' என்றார் அப்துல் ஜபார்.

அரேபியாவில் இருந்து..

முகமது ஹாருன் கூறுகை யில், `பஜிருல்லா, அவரது தம்பி வலியுல்லா குடும்பத்தினர், 6 தலைமுறைக்கு முன் சவுதி அரேபியாவில் இருந்து வந்தவர்கள். பள்ளப்பட்டிக்கு வந்து தலைமுறை தலைமுறை யாக அரபி கல்லூரியில் படித்து உலமாக்களாக இறை பணி செய்தனர். அதனாலே, இவர்கள் குடும்பத்தினரை பள்ளப்பட்டி அரபி அஜ்ரத் குடும்பத்தினர் என்று அழைப் பார்கள். பஜிருல்லாவின் தந்தை 3 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்’ என்றார்.

source: http://tamil.thehindu.com/tamilnadu.