Home இஸ்லாம் கட்டுரைகள் நவீன வீடும் நாகரீகமில்லா மனிதர்களும்
நவீன வீடும் நாகரீகமில்லா மனிதர்களும் PDF Print E-mail
Sunday, 17 August 2008 13:39
Share

நவீன வீடும் நாகரீகமில்லா மனிதர்களும்

(எனக்கும், ஏனைய நபிமார்களுக்கும் உள்ள உவமையாவது செல்வந்தன் ஒருவன் ஒருமாளிகையை எழுப்பி முழுமைப்படுத்தினான் ஒரு செங்கள் இடத்தைத் தவிர, அதை அழகுற அமைத்தான். அந்த வீட்டில் நுழைந்த மக்கள் அதன் அழகையும், கலையுணர்வையும் கண்டு அதிசயித்தார்கள்.

ஒரு செங்கல் மட்டும் குறையுள்ளதே அதுவும் இருந்தால் முழமைப் பெற்றிருக்குமே.. எனக்கூறினார்கள். அந்தக்கல் நான்தான்;. (என் மூலமாக அல்லாஹ் அந்த வீட்டை- இஸ்லாத்தை-முழமைப்படுத்தி விட்டான்). (அபுஹ¤ரைரா, ஜாபிர் பின் அப்தல்லாஹ், உபை, ஆகிய தோழர்கள் அறிவிக்கும் இந்நபிமொழி புகாரி, முஸ்லிம், திர்மிதி ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.)

நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடைய வருகையை நபிமார்களின் முடிவுரையை - இப்படி உவமையாக கூறியுள்ளார்கள். நபித்துவ முழுமைக்காக இந்த உவமை கூறப்பட்டாலும் இங்கு சொல்லப்பட்ட வார்த்தைகளை ஆழ்ந்து சிந்திக்கும்போது நிறைய படிப்பினைகள் இருக்கின்றன.

நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் தம் பிரச்சாரத்தை துவங்கும்போது அந்த பாலைவனம் வரண்டு கிடந்தது என்னவோ உண்மைதான், இருந்தாலும் அங்கு வாழ்ந்த மக்களிடம் மூடநம்பிக்கைகள் மிக செழுமையாக தழைத் தோங்கி வளர்ந்திருந்தன.

குலம், மொழி, இருப்பிடம், உடற்கூறுகள் என்று அறியாமை வாதங்கள் இருந்ததுபோலவே அவர்களின் 'ஆன்மீக பாதை" முழுதும் மூட முட்கள் பரப்பப்பட்டிருந்தன. வான வெளியில் நடக்கும் யதார்த்த நிகழ்வுகளுக்கெல்லாம் மூட காரணங்கள் கற்பித்தார்கள். புகாரி, முஸ்லிம், நஸயி, திர்மிதி போன்ற வரலாற்று நபிவழி நூல்களில், எம்மக்களை நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் திருத்தினார்களோ அம்மக்களின் பழைய நிலைப்பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட மக்களிடம்தான் நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாத்தை அதன் பழமையான - பகுத்தறிவு எழுச்சிமிக்க - வடிவில் போதித்தார்கள். குர்ஆனுடைய வாதங்களும் நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களுடைய சொல்வீச்சும், அம் மக்களிடம் இருந்த கலப்படமான ஆன்மீக நம்பிக்கைகளையும், ஏற்றி போற்றப்பட்ட மூட வாதங்களையும் தவிடுபொடியாக்கின.

கணக்கிலடங்கா மிகப்பெரிய செல்வந்தனான அல்லாஹ் கட்டிய பெரும் இந்த இஸ்லாமிய மாளிகையை நோக்கி அதன் அழைப்பாளராக ஏவப்பட்ட நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களின் அழைப்பை ஏற்று அந்த இல்லத்தில் நுழைந்தவர்கள் அங்குள்ள வசதி வாய்ப்பையும், கலையழகையும் கண்டு வாய் பிளந்து வியந்துதான் போனார்கள்.

இந்த வியப்பின் தாக்கம் இத்தாலியையும், பாரசீகத்தையும், இந்தியாவையும் கூட குறுகிய காலத்தில் எட்டியது. மக்காவில் அஸ்திவாரம் போடப்பட்ட இந்த இஸ்லாமிய வீட்டின் வசதி அன்றைய உலகில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் உலகலாவிய அளவிற்கு அந்த வீடு விஸ்தீரணபடுத்தப்பட்டது.

வீட்டின் அவசியத்தை உணராத, அது தேவையில்லை என்று சொல்லக்கூடிய ஒரே ஒரு மனிதரைக்கூட நாம் உலகில் பார்க்க முடியாது.

செல்லுலர், இன்டர்நெட் என்று உலக பொருளாதார பெருக்கு சாதனங்களை கையில் வைத்துக்கொண்டு பணம் பண்ணும் பில்லியனர்கள் முதல் அன்றாட காய்ச்சிகள் வரை எல்லோருக்கும் மிக அவசிய தேவை வீடு. 'எவ்வளவு தான் நாம் போகுமிடங்களில் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் திரும்பியதும் நம், நம்வீட்டில் கிடைக்கக்கூடிய அமைதியும், சுகமும் வேறெங்கே இருக்கு.." என்ற அந்த உள்ளப்பூர்வமான வார்த்தைகள் - அவர்கள் வாழ்வது குடிசை வீடாக இருந்தாலும்-வீட்டின் அவசியத்தை உணர்த்துகிறது. மனித வாழ்க்கையிலிருந்து தவிர்க்க முடியாத வாழ்வாதார இடமாகிய வீட்டை,தாம்போதித்த வாழ்வாதார கொள்கைக்கு நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் உதாரணமாக கூறுகிறார்கள்.

மழை, வெய்யில், புயல், பனி, கடும்காற்று என்று இயற்கை சீற்றங்களிலிருந்து வீடு மனிதனை எப்படி பாதுகாக்கிறதோ அதேபோன்று ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, ஜாதி இழிவு, பாலியல் கொடுமைகள், மான பறிப்பு போன்ற மனித விரோத சீற்றங்களிலிருந்து ஒருவன் - ஒருவள் பாதுகாப்புப் பெறவேண்டுமானால் இஸ்லாமிய வீட்டில் குடியேறுவதைத்தவிர, இஸ்லாத்தை தம் சொந்த வீடாக்கிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.

இந்த வீட்டுடைய ஒளி அமைப்பை பற்றி நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கும் போது 'நான் வெள்ளை வெளேர் என்ற நிலையில் இந்த மார்க்கத்தை விட்டு செல்கிறேன்.இதன் இரவுகூட பகலைப்போன்றது.." (நூல்,முஸ்லிம்)என்று கூறியுள்ளார்கள்.

நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களின் விருந்தழைப்பை ஏற்று அன்று இந்த வீட்டில் நுழைந்தவர்கள் உலகை, அதன் மக்களை புதிய புத்துணர்ச்சியுடன் உருவாக்கமுடிந்தது. மனிதன் மீது மனிதன் செலுத்தும் ஆளுமைகளெல்லாம் அறுத்தெறியப்பட்டு மனிதனை விட கீழான படைப்புகளெல்லாம் அவனை ஆட்டிப்படைத்த அடிமைத்தலைகள் கிழித்தெறியப்பட்டு புதியதோர் உலகைப்படைக்க முடிந்தது.

மாறாத, மங்காத அதே ஒளி வெள்ளத்தில் மிதக்கும் அந்த வீட்டுக்கு சொந்தம் கொண்டாடும் இன்றைய மக்கள் - முஸ்லிம்களின் - நிலை பரிதாபம்.

நெஞ்சில் நிறைந்த முஸ்லிம் சகோதர, சகோதரிகளே...

அறிவுப்பூர்வமாக இஸ்லாத்தை விளங்கி வாழும் முஸ்லிம்களான நம் வாழ்க்கையை மாற்றுவோம்;.

இஸ்லாத்தை நமது செயல்பாட்டின் மூலமாகவும், பிரசாரத்தின் மூலமாகவும் பிறருக்கு எடுத்து சொல்ல தயாராகுவோம்.

இறைவன்மீது நம்பிக்கை வைத்து,இறைவனுக்கு பயந்து, இறைவனையே சார்ந்து நின்று, இறைவனுக்காகவே வாழ்வோம்.

இறைவன் பெரும் பாதுகாவலன், பெரும் கொடையாளன் என்பதை நினைவில் நிறுத்துவோம்.