Home இஸ்லாம் வரலாறு வாழப்பிறந்த நாட்டிலிருந்து அகதியாகத் துரத்தப்பட்டவர், ஆளப்பிறந்த அதிபதியாக ஆனார்கள்!
வாழப்பிறந்த நாட்டிலிருந்து அகதியாகத் துரத்தப்பட்டவர், ஆளப்பிறந்த அதிபதியாக ஆனார்கள்! PDF Print E-mail
Thursday, 25 December 2014 11:05
Share

வாழப்பிறந்த நாட்டிலிருந்து அகதியாகத் துரத்தப்பட்டவர், ஆளப்பிறந்த அதிபதியாக ஆனார்கள்!

  கே கமருன்னிசா அப்துல்லாஹ்  

[ கொடியவர்கள் கொடுவாளினை எடுத்தபோதும், கொடுமைகளை புரிந்தபோதும், கல்லாலடித்த்போதும், குறுநகையாடி, வசைப்பாடிக் களித்தபோதும், அளப்பரிய பொறுமையைக் கடைபிடித்தார்கள்.

பகைவருக்கும் இரங்கும்  பண்பாளராக, பெருங்கருணைப் பெரியோனாகிய இறைவனிடம் அருள் வேண்டி நின்றார்கள்.

சாதிகளைச் செய்தவர்களைச் சபித்தார்களில்லை.

கண்டித்தவர்களைத் தண்டித்தார்களில்லை.

தம்மை வஞ்சித்தவர்களையும், வதைத்தவர்களையும், விரட்டியவர்களையும், வெருட்டியவர்களையும் உளம் நெகிழ்ந்து மனதார மன்னித்தார்கள்.

தம் தலையை விலை பெசியவர்களைத் தன்மானத்தோடு வாழ வைத்தார்கள்.

தம் உறவினரின் உயிருக்கு ஊரு செய்தவர்களையும், உலை வைத்தவர்களையும் புகளிடந்தந்து  புனித வாழ்வு வாழச் செய்தார்கள்.]

வாழப் பிறந்த நாட்டிலிருந்து அகதியாகத் துரத்தப்பட்டவர், ஆளப் பிறந்த அதிபதியாக ஆனார்கள். மலர்க் கிரீடம் அணிந்து மாண்பு மிகு பட்டங்கள் சூடி, மன்னர் மன்னராய் மாளிகை வாசம் செய்திருக்க வேண்டிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மண் குடிசையில் வாழ்ந்தார்கள்.

ஏழையினும் ஏழையாக எளிமையை மேற்கொண்டார்கள். தான் வாழ விரும்பாவிடினும், தன் நெருங்கிய உறவினரை, மனைவி - மக்களை உல்லாச புரியில் உலா வரச் செய்யலாமே! தம் ஈரல் குலையான இனிய மகள் - பெருமானாரின் பிரிய மகளார் பாத்திமா நாச்சியாரையுமா ஏழையாக, அடிமையின் அடிமையாக வாழச் செய்ய வேண்டும்? அது மட்டுமா! வறியவர்கள் சில வேளைகளில் கனவுகள் காண்பதுண்டு. நனவு வாழ்க்கையிலே செல்வர்களாக மாற முடியாவிட்டாலும், கனவு வாழ்க்கையிலாவது சுகபோகம் துய்ப்பது போலவும் கனவு காண்பார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கனவுலக வாழ்க்கையிலும் எளிமையே நிழலாடுகிறது. எழிலாடுகிறது.

அரசியலில் மேம்பாடு அடைந்துவிட்ட தலைவர்களின் உதட்டில் எளிமை இருந்தால், உள்ளத்தில் எளிமை இருக்காது. உடையில் எளிமை இருந்தால், உள்ளத்தில் எளிமை இருக்காது. உடையில் எளிமை இருந்தால் உணவில் ஒரு சுவைக்கு பதில் அறுசுவை நிறைந்திருக்கும். உறைவதில் எளிமையிருந்தால், உறவினரிடத்தில் செல்வம் போய்க் குவியும். இவர்கள் உலகை ஏமாற்றும் எளிய நடிகர்கள். ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கனவிலும், நனவிலும், உணவிலும், உடையிலும், நடையிலும், இல்லத்திலும், உள்ளத்திலும் எளிமையே அணி செய்தது.

செல்வச்  சீமாட்டி கதீஜா நாச்சியாரை (ரளியல்லாஹு அன்ஹா) மணந்த செம்மல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செல்வராகவில்லை. இரவலர்களின் இல்லாமையைப் போக்க கையேந்திக் கேட்டு வந்த ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க, கதீஜாவின் கனகச் சுற்றத்தை- பொற்குவியலை - முழுதும் கரைத்து அப்பெரு மகளாரையும் எளிய வாழ்வை உவந்து ஏற்றுக் கொள்ளச் செய்த பெருமை வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே உரியதாகும். சிந்தனை செய்யும் சிற்பிகளுக்கு இது விந்தையாகத்தானே இருக்கும்.

அண்ணல் காந்தியார் அஹிம்சைக்கு இலக்கணம் கூறுகிறார், 'குட்டக் குட்டக் குனிவது அஹிம்சை ஆகாது. திருப்பித் தாக்கும் திறனும் உரமும் படைத்த ஒரு வீரனிடத்தில்தான் அஹிம்சை குடி குள்ளவியலும்' என்று, கலங்கள் பல கண்டவராக, வெஞ்சமர்கள் பல வென்றவராக, பாருலகம் காணாப் போர்வீரராகிய பெருமானார்,

கொடியவர்கள் கொடுவாளினை எடுத்தபோதும், கொடுமைகளை புரிந்தபோதும், கல்லாலடித்த்போதும், குறுநகையாடி, வசைப்பாடிக் களித்தபோதும், அளப்பரிய பொறுமையைக் கடைபிடித்தார்கள்.

பகைவருக்கும் இரங்கும்  பண்பாளராக, பெருங்கருணைப் பெரியோனாகிய இறைவனிடம் அருள் வேண்டி நின்றார்கள்.

சாதிகளைச் செய்தவர்களைச் சபித்தார்களில்லை.

கண்டித்தவர்களைத் தண்டித்தார்களில்லை.

தம்மை வஞ்சித்தவர்களையும், வதைத்தவர்களையும், விரட்டியவர்களையும், வெருட்டியவர்களையும் உளம் நெகிழ்ந்து மனதார மன்னித்தார்கள்.

தம் தலையை விலை பெசியவர்களைத் தன்மானத்தோடு வாழ வைத்தார்கள்.

தம் உறவினரின் உயிருக்கு ஊரு செய்தவர்களையும், உலை வைத்தவர்களையும் புகளிடந்தந்து புனித வாழ்வு வாழச் செய்தார்கள்.

ஒரு கட்சி மாறி, மற்றொரு கட்சி ஆட்சி அரியணை ஏறும் பொழுது நடைபெறுகின்ற பழிவாங்கும்பண்பாடு மலிந்து விட்ட உலகில், மாநபியின் மனவளத்தை, உளப்பண்பை ஆயிகின்ற மேதைகள் தம்மை மறந்து பாராட்டுவதில் வியப்பில்லையன்றோ!

காயிதே ஆஜம் மர்ஹூம் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் சட்டம் பயிலும் திட்டத்தோடு இங்கிலாந்திற்கு சென்றார். இலண்டன் மாநகரில் இறங்கி தாம் சேர்ந்து பயிலவேண்டிய சட்டக் கல்லூரியைத் தேர்ந்தரியும் முயற்சியில் ஈடுபட்டு, ஒவ்வொரு கல்லூரியாக ஆராய்ந்து வரலானார். அப்போது Lincolns inn என்ற கல்லூரிக்குச் செல்லும்போது நுழை வாயில் அருக சலவைக்கல்லில் அழகாகச் செதுக்கப்பட்ட பெயர் பட்டிலைக் கண்டார்கள். உலகிற்குச் சிறந்த சட்டங்களை வழங்கியுள்ள சட்ட வல்லுனர்கள் எனும் தலைப்பில் பல பெயர்கள் காணப்பட்டன. அவற்றுள் முதலாவது பெயர் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடையதாக இருந்தது. இந்த வாசகம் ஜனாப் ஜின்னாவைப் பெரிதும் கவர்ந்ததால் அக்கல்லுரியிலேயே சேர்ந்து பயின்று சட்ட மேதையாக உயர்ந்து புகழ் பரப்பினார்கள்.

எந்தச் சட்டக் கல்லூரியிலும் சேர்ந்து கல்வி கற்றற்றரியாத காருண்யா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், சட்ட வல்லுநர் பட்டியலில் இடம் பெற்ற விந்தையையும், நொடிக்கு நொடி மாறி வரும் உலகில் மாறாப் புகழ் வாய்ந்த இஸ்லாமியச் சட்டங்கள் இன்றளவும் நின்று நிலவி மனித வாழ்வைப் புனிதமாக்கி வருவதையும் கண்டு மகிழாதார் யார்? புகழாதார் யார்?

காலமெல்லாம் ஆராய்ந்தாலும் இனிக்கும் கருத்துக்களைச் சுரக்கும் அமுத சுரபியாகத் திகழும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்னான வரலாற்றைப் படித்து வியப்போடு அமையாமல் வாழ்ந்து பயன் பெறுவோமாக!

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

நன்றி: கே கமருன்னிசா அப்துல்லாஹ்

நன்றி: நர்கிஸ்

source: http://islam-bdmhaja.blogspot.in/2014/12/blog-post_24.html