Home கட்டுரைகள் குண நலம் இறைநம்பிக்கைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு
இறைநம்பிக்கைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு PDF Print E-mail
Friday, 22 May 2009 07:08
Share

இறைநம்பிக்கைக்கு இது ஓர்  எடுத்துக்காட்டு

உங்களில் முன் வாழ்ந்த மக்களில் மூவர் தூர பயணத்தில் இருக்கும் போது இரவாகி விட்டது ஒரு குகையில் இரவைக் கழிக்க நாடி அதில் நுழைந்தார்கள். அப்பொழுது ஒரு பாறாங்கல் உருண்டோடி வந்து அக்குகையின் வாசலை அடைத்து விட்டது. அல்லாஹ்விடம் பிரார்ப்பிப்பதைத் தவிர வேறுவழி இல்லை என்கிற முடிவுக்கு அவர்கள் வந்தனர்

அவர்களில் ஒருவர்    "இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர் அவ்விருவருக்கும் முன்பதாக நானோ, எனது மனைவி பிள்ளகளோ, எனது அடிமைகளோ உண்ண மாட்டோம். ஒரு நாள் நான் விறகைத் தேடி வெகுதூரம் சென்;று விட்டேன் நான் திரும்பி வருவதற்குள் அவர்கள் இருவரும் உறங்கி விட்டனர்

அவர்களுக்காக பாலைக் கறந்தேன் அவர்களை எழுப்புவதை, அல்லது அவர்களுக்கு முன்பதாக நாங்கள் அருந்துவதை விரும்பாமல் எனது பெற்றோர் விழிக்கும் வரை (வைகறை வரை) காத்திருந்தேன் அவர்கள் விழித்ததும் அவர்களுக்கு புகட்டினேன் அதன் பிறகே நாங்கள் அருந்தினோம். இறiவா! இதனை நான் உனது திருப்பொருத்தத்தை நாடி செய்திருந்தால் இந்த பாறாங்கல்லை எங்களை விட்டும் அகற்றுவாயாக!" எனக்கூறியதும் பாறாங்கல் ஓரளவு நகர்ந்தது,

இரண்டாமவர் கூறினார்    "இறைவா! எனது உறவுக்காறப் பெண்ணொருத்தி அவள் எனக்கு மிகப்பிரியமானவளாக இருந்தாள். ஆண்கள் பெண்களை நேசிப்பதில் மிக அதிகமாக அவளை நான் நேசித்தேன் பின்னர் நான் அவளை எனது இச்சைக்காக நாடினேன். எனினும் அவள்(எனது ஆசைக்கு இணங்க) மறுத்து விட்டாள். பின்னர் பஞ்சமான ஓர் ஆண்டு வந்தது அப்பொழுது அவள் என்னிடம் வந்து பொருளாதார உதவிக் கோரினாள்.

அப்பொழுது அவள் எனக்கு விதித்த தடையை நீக்கி விட வேண்டும் எனக் கூறி அவளுக்கு 120 பொற்காசுகளைக் கொடுத்தேன். அவளும் சம்மதித்து பெற்றுக்கொண்டால் அவளை நெருங்கும் பொழுது "அல்லாஹ்வை பயந்து கொள்! முத்திரையை அதற்குரிய உரிமையின்றி உடைத்து விடாதே! எனக்கூறினாள் அல்லாஹ்வுக்கு பயந்துகொள்" என்று சொன்ன மாத்திரத்திலேயே நான் விலகி விட்டேன் அத்துடன் அவளிடம் கொடுத்த பொற்காசுகளையும் அவளிடமே விட்டும் விட்டேன் இதை நான் உன் திருப்பொருத்தத்தை நாடி செய்திருந்தால் இந்த பாறாங்கல்லை விலகச் செய்திடுவாயாக!" எனக் கூறியதும் மீண்டும் ஓரளவு விலகியது.

மூன்றாமவர் கூறினார் "இறைவா! நான் பல வேலையாட்களை வைத்து வேலை வாங்கினேன் அதில் ஒருவர் மட்டும் அவருடைய கூலியை வாங்காமல் சென்று விட்டார் எனினும் அவரது கூலியை எனது பண்ணையில் தனியாக முதலீடு செய்து அதனுடைய வரவு செலவை பாதுகாத்து வந்தேன். அதிலிருந்து பல செல்வங்கள் பெருகி வந்தன.

சில காலத்துக்குப் பிறகு அந்த வேலையால் என்னிடம் வந்து ஓ இறை அடியாரே! எனது கூலியை நிறைவேற்றுவீராக! என்று கூறினார் அதற்கு நான் நீர் பார்க்கும் இந்த ஒட்டகைகள், மாடுகள், ஆடுகள் அடிமைகள் அனைத்தும் உனது சொத்துக்கள் தான் என்றேன். அதற்கவர் ஓ இறை அடியாரே என்னை நீர் கேலி செய்கிறீரா? என்றார் அதற்கு நான் உம்மை கேலி செய்யவில்லை உண்மையைத்தான் சொல்கிறேன் என்றேன். பிறகு நான் கூறியபடியே அவரது எல்லாப்பொருள்களையும் எடுத்து சென்றார் அதில் அவர் எந்தப் பொருளையும் விட்டு செல்லவில்லை.

இறைவா! இதை நான் உன் திருப்பொருத்தத்தை நாடி செய்திருந்தால் எங்களுக்கு ஏற்ப்பட்டிருக்கும் நெருக்கடியான நிலையை எங்களை விட்டு அகற்றுவாயாக! என்றதும் பாறை முழுமையாக நகர்ந்தது அவர்கள் அனைவரும் அக்குகையிலிருந்து அல்லாஹ்வை தியானம் செய்தவர்களாக வெளியேறினர்.' அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற கேட்டதாக உமர் ரளியல்லாஹு அன்ஹு, அவர்களின் மகனார் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல்: புகாரி, முஸ்லிம்

இறைவன் நாடினாலன்றி இதிலிருந்து மீள முடியாது என்ற முடிவுக்கு வந்த அம்மூவரும் இறைதிருப்தியை மட்டும் நோக்கமாகக் கொண்டு உலகில் செய்த நற்செயல்கைளைக் கூறி ஏகஇறைவனிடம் பிரார்த்திக்கத் தொடங்கினர் அவ்வாறு பிரார்த்திக்கத் தொடங்கியதும் ஏகஇறைவன் தனது கருணையால் அவர்களை சூழ்ந்து கொண்டு மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து மீட்டுகிறான்.

முதல் நபர்: தன் வயதான தாய், தந்தையரை சாப்பிட செய்தப் பிறகே அவரும் அவரது மனைவிப் பிள்ளைகளும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தாலும் வெளியிலிருந்து தாமதித்து வந்த அன்றைய ஒரு நாளாவது தானும், தனது குழந்தைகளும் சாப்பிட்டிருந்திருக்கலாம் ஒரு நாள் என்பது அது வாடிக்கையாகி விடக்கூடாது என்றுக் கருதியவர் தன்னிடத்தில் இருக்கும் அந்த நற்செயலை விட்டு விடாமல் அன்றைய தினம் பட்டினியாகவே உறங்கி விடுகிறார் இந்த நற்செயல் அல்லாஹ்வுக்குப் பிடித்திருந்தது,

மூன்றாமவர்: தன்னிடம் கூலி பெறாமல் சென்ற தொழிலாளியுடைய கூலியை அடைய நினைக்காமல் அந்தப் பணத்தை தனியே ஒதுக்கியும் வைக்காமல் தன் நிருவனத்திலேயே முதலீடாக்கி அது பல்கி பெருகிய பின் அத்தொழிலாளி வந்து முறையிட்டதும் குறைந்த பட்சம் லாபங்களைப் பெற்றுக் கொண்டு கூலியை மட்டுமாவது கொடுத்தனுப்பி இருக்கலாம். அதை மட்டுமே அவரும் கேட்டிருந்தார் ஆனாலும் அவருடைய கூலியில் முதலீடு செய்து தான் இந்த மந்தையை உருவாக்கினார் என்பதை அத்தொழிலாளி அறிந்திருக்க வில்லை. ஆனால் அல்லாஹ் அறிந்திருந்தான் என்பதால் அல்லாஹ்வை முறையாக பயந்தவர் அனைத்தையும் அப்படியே அத்தொழிலாளியிடம் கொடுத்தனுப்பி விடுகிறார் இந்த நற்செயல் அல்லாஹ்வுக்குப் பிடித்திருந்தது.

இரண்டாவது நபர்: தனது நேசத்துக்குரியப் பெண் நீண்ட நாட்களுக்குப் பின் கிடைத்த பொழுது அதற்காக அதிக விலை கொடுத்திருந்த போதிலும் அப்பெண்ணை அடைவதற்காக நெருங்கிய பொழுது அல்லாஹ்வை பயந்து கொள் முத்திரையை அதற்குரிய உரிமையின்றி உடைத்து விடாதே! என்று அப்பெண் கூறியதும் அவர் விலகிக் கொண்ட நற்செயல் அல்லாஹ்வுக்குப் பிடித்திருந்தது.

மேற்காணும் முதல் நபர், மற்றும் மூன்றாவது நபருடைய நற்செயல்கள் மனமிருநதால் யார் வேண்டுமானால் இறையருளுக்காக செய்து விட முடியும். ஆனால் இரண்டாவது நபருடைய நற்செயல் என்பது அந்த இறுதிக் கட்டத்தில் தடுத்துக் கொள்வது மிகக் கடினமானதாகும்.

தான் நேசிக்கும் விருப்பமானப் பெண்ணை அடையக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தால் யாரும் நழுவ விடவே மாட்டார்கள். அதிலும் தான் ஒரு வசதிப் படைத்தவராக இருந்து அல்லது வசதிப் படைத்தவருடைய மகனாக இருந்து அதிலும் பொருளாதாரத் தேவையை நிறைவு செய்து கொள்வதற்காக அந்தப் பெண்ணே தன்னை நாடி வந்தால் இன்னும் சொல்ல வேண்டிய தேவையே இருக்காது தான் விரித்த வலையில் தாமாக வந்து வீழ்ந்த புள்ளி மான் எனக் கருதி அவர் நினைத்ததை சாதித்துக் கொள்வார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பலப்பெண்கள் இவ்வாறே அதிகபட்சம் பணக்காரர்களால் சீரழிக்கப்படுவதை இன்றுப் பார்க்கிறோம். இங்கும் அதே நிலை உருவாவதுடன் ஒப்பந்தமும் இருவரால் போடப்பட்டு விடுகிறது. ஆனாலும் இறைபக்தியாளரான அப்பெண் இறுதியாக அல்லாஹ்வை பயந்து கொள் முத்திரையை அதற்குரிய உரிமையின்றி உடைத்து விடாதே! என்று இறைவனை முன்னிலைப் படுத்தி முயற்சி செய்கின்றார்.

பொதுவாகவே வறுமை வந்து விட்டால் அதிகமான மக்களுக்கு இறைவன் மீது அதிருப்தி ஏற்பட்டு விடும் அதிலும் பஞ்சகாலத்தில் சிக்கிக் கொண்டால் சொல்லவேத் தேவை இல்லை பக்கத்தில் உள்ள செழிப்பான நாட்டைப் பார்த்து இன்னும் அதிகமாக இறைவன் மீது அதிருப்தி அடைவார்கள்.

ஆனால் பஞ்சத்தில் அடிப்பட்ட இப்பெண்மனி அவ்வாறு இறைவன் மீது அதிருப்தி அடையாமல் இறுதிவரை இறைவன் உதவுவான் என்ற உறுதியான இறைநம்பிக்கையில் இருந்தார் அதனால் இறைவன் அவரை பாவத்திலிருந்தும் மீட்டான் வறுமையையும் துடைத்தான்.

அவரும் இறைநம்பிக்கையாளரே

தனது பஞ்சத்திற்கு உதவித் தேடி அவரை நாடுவதென முடிவு செய்வதற்கு முன்னர் தன்னை அடைய வேண்டும் என்ற ஆவல் அவருக்கு இருந்தது என்பது அப்பெண்ணுக்கு நன்றாகவேத் தெரியும்.

பல வருடங்கள் கடந்து விட்டதால் அவருடைய மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்திருப்பார், அத்துடன் அவர் உறவுக்காரர் என்பதாலும், வசதிப் படைத்தவர் என்பதாலும் வேறு வழியின்றியே உரிமையுடன் அவரை நாடுவதென முடிவு செய்திருப்பார்.

ஆனால் அவருடைய மனநிலையில் மாற்றமில்லை என்பதை அவரை அணுகியப் பின்னர் உறுதியாகத் தெரிய வருகிறது ஆனாலும் தனக்கு கொடுக்கப்படுவதாக வாக்களித்த 120 பொற்காசுகள் தன்னுடைய பஞ்சத்தை மொத்தமாக துடைத்தெறிவதற்கு போதுமானதாக அமைந்திருந்தது.

ஓருபக்கம் பஞ்சத்தின் கோரப் பிடி,

மற்றொரு பக்கம் இறையச்சம்,

இந்த நெருக்கடியான நேரத்திலும் அவர் இறைவனுடைய பாதுகாப்பைக் கோரினார்.

அப்பெண் கூறிய சிந்தனையைத் தூண்டும் அந்த இரண்டு வார்த்தைகளை செவியுற்று சுதாரித்துக் கொண்டவர் ஆசையைக் கட்டுப்படுத்திக் கொண்டு அல்லாஹ்வுக்காக எழுந்து விடுகிறார்.

இது எழுதுவதற்கோ, பேசுவதற்கோ எளிதாக இருக்கலாம் ஆனால் நடைமுறையில் சாத்தியமா ? என்ற சிந்தனை வரலாம்.

இறைநம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக சாத்தியமே!

இறைமறுப்பாளர்களுக்கு அல்லது இறைபக்தியாளர் போன்று வேடமிடுபவர்களுக்கு சாத்தியமாகாது !

120 பொற்காசுகளைக் கொடுத்து ஒப்பந்தம் செய்தப் பின்னரே அப்பெண்ணிடம் அவர் நெருங்குகிறார் இந்த நேரத்தில் அல்லாஹ்வை பயந்துகொள் என்றுக்கூறுவதால் ? அவர் இறைமறுப்பாளராக அல்லது வேடதாரியாக இருந்திருந்தால் அப்பெண்ணின் மீது அவருக்குக் கோபம் தான் வரும், கைநீட்டிப் பணம் வாங்கும்போது இறையச்சத்தையும், இது அடுத்தவனுக்கு உரிமையானது என்பதையும் தெரிந்திருக்க வேண்டாமா ? இப்பொழுது என்ன உனக்கு ஞானோதயம் பிறந்து விட்டது என்றுக் கூறி எளிதாக அடைய நினைத்ததை பலவந்தப் படுத்தி அடைவார். இறுதியில் இளம்பெண் கற்பழித்துக் கொலை என்று ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வெளிவரும்.

ஆனால் இவருக்கோ கோபத்திற்கு பதிலாக அவ்விரு வார்த்தைகளால் இயைச்சம் மேலிடுகிறது அதனால் அதிலிருந்து விலகி விடுகிறார் அத்துடன் அதற்கு பகரமாக கொடுத்த 120 பொற்காசுகளையும் திரும்பப் பெறாமல் அப்பெண்ணிடமே விட்டு விடுகிறார். அவர் இறைநம்பிக்கையாளராக இருந்தக் காரணத்தினால் தான் இது சாத்தியப்பட்டது.

அடுத்தவனுக்குரியதை அடைய நினைப்பது

இறைவனை அஞ்சக் கூடிய மக்களாக இருந்தால் அவர்களிடம் அடுத்தவனுக்குரியதை அடைய நினைக்கும் சிந்தனை அறவே வராது.

அடுத்தவனுக்குரியது என்றதும் நம்மில் பலருக்கு அடுத்தவனுடைய பொருளாதாரத்தை சூறையாடுவது மட்டுமே என்று நினைத்து வைத்திருக்கின்றனர்,.

அது மட்டுமல்ல,

அடுத்தவனுக்கு சொந்தமானவளை அடைய நினைப்பதும் வடிகட்டிய அமானித மோசடியாகும்.

தாமாக முயற்சித்தாலும் சரி,

தாமே வலிய வந்து ஒப்படைத்தாலும் சரி,

இரண்டில் எதுவாக இருந்தாலும்,

அவளுடைய கற்பு அடுத்தவனுக்குரியது என்ற சிந்தனை இருபாலாருக்கும் வரவேண்டும்.

உயிருக்கு உயியாய், இடுகாடு வரை உற்ற துணையாய் வருகின்ற துணைவனுக்கு உரிமையானதை உரிமையற்றவனுடைய பசப்பு வார்த்தைகளில் மயங்கி அர்ப்பணித்து விடக்கூடாது.

கற்பை பேணிப பாதுகாத்துக் கொள்ள வேண்டும், இது தனது துணைவனுக்கு மட்டும் உரிமையானது என்ற உறுதியுடன் இருந்ததால் தான் பஞ்சத்திற்கு பணம் கொடுத்துதவியவனுக்குக் கூட தனது கற்பை அர்ப்பணிக்க மனமின்றி இறைவனிடம் பாதுகாப்புக் கோரி தன்னுடைய கற்பை பாதுகாத்துக் கொண்ட இப்பெண்மனியுடைய செயல் மிகப் பெரிய எடுத்துக் காட்டாகும்.

இப்பெண்மனியுடைய தூய எண்ணம் காரணமாகவே இவரை பலவருடங்களாக அடையத் துடித்தவருடைய மனநிலையில் இறைவன் மாற்றத்தைப் போட்டு அப்பெண்ணை பாதுகாத்தான்.

உறுதியான இறை நம்பிக்கை வேண்டும்.

வறுமையின் காரணத்தால் வசதி படைத்தோரின் ஆளுமைக்கும், அத்துமீறலுக்கும் அடிபணிந்திடாது இறைவனின் பேராற்றலின் மீது நம்பிக்கை கொண்டு மனம் தளராமல் இறுதிவரை அவனிடம் பாதுகாப்புக் கோர வேண்டும் என்பதற்கு பஞ்ச காலத்தில் ஏற்பட்ட வறுமை நிலையிலும் இறைவனின் பேராற்றல் மீது அவநம்பிக்கை அடைந்து விடாமல் உறுதியான நம்பிக்கையில் இருந்த அப்பெண்ணுடைய இறைநம்பிக்கையும், நெருக்கடியான நேரத்தில் எதிரியுடைய சிந்தனையை திசை திருப்பும் திறமையான நாவண்மையும் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்.

இறைநம்பிக்கையளர்கள் மட்டுமே இன்பத்திலும், துன்பத்திலும் இறைவனை நிணைவு கூறுவார்கள். இப்படிப்பட்ட இறைநம்பிக்கைளர்களை இறைவன் ஒருப்போதும் கைவிட மாட்டான் என்பதற்கு மேற்காணும் இருவரையும் பாவக்கரைப் படிவதற்கு முன் காப்பாற்றி விட்டது எடுத்துக் காட்டாகும். .....அநீதி இழைத்தோர் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். (தன்னை) அஞ்சியோருக்கு அல்லாஹ் பொறுப்பாளன். திருக்குர்ஆன் 45:19.

ஷைத்தான் மனிதர்களை வழி கெடுத்துக் கொண்டே தான் இருப்பான், ''என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்'' என்று கூறினான்.26 திருக்குர்ஆன் . 15: 39, 40.

அவர்களும் மனிதர்கள் என்கின்ற ரீதியில் அவனது வலையில் வீழ்வதற்கு இருந்தனர் ஆனாலும் அவர்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தக் காரணத்தால் அவர்களை இறைவன் பாதுகாத்தான். எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை. திருக்குர்ஆன். 15: 42

இறைநம்பிக்கையாளர்களை ஷைத்தானின் வழிகேட்டிலிருந்து பாதுகாப்பது இறைவன் பொறுப்பில் உள்ளதாகும் என்பதால் இவ்வுலகில் நாம் வாழுகின்ற காலத்தில் உறுதியான இறைநம்பிக்கையாளர்களாக வாழ முயற்சித்தால் நாமும் மனிதர்கள் என்கின்ற ரீதியில் எபபொழுதாவது ஷைத்தானின் தூண்டுதலால் வழி சருக்க நேரிட்டால் அதிலிருந்து இறைவன் நம்மைப் பாதுகாத்து விடுவான் என்பதற்கு மேற்காணும் இரண்டு இறைநம்பிககையாளர்களை இறைவன் பாதுகாத்த சம்பவம் நமககுப் பெரியப் படிப்பினையாகும்.

- அதிரை ஏ.எம்.ஃபாரூக்