Home குடும்பம் இல்லறம் வரன் தேடுவதில் உள்ள சிக்கல்கள் - ஒரு ''சூடான'' நேர்காணல்

இஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari

வரன் தேடுவதில் உள்ள சிக்கல்கள் - ஒரு ''சூடான'' நேர்காணல் PDF Print E-mail
Thursday, 18 December 2014 07:25
Share

நெட்டை - குட்டை! பருமன் - ஒல்லி! பட்டம் - வயது!

[ இது "திருமணம் முடித்து வைக்கும் இடைநிற்பவர்" ஒருவரின் ''வரன் தேடுவதில் உள்ள சிக்கல்கள்'' பற்றிய ''சூடான'' நேர்காணலின் சுருக்கமாகும்.]

30 ஆண்டுகளுக்கு முன்பு எளிதாக நடந்தன திருமணங்கள். இன்று அவ்வாறு நடக்கவில்லை. வடக்கயிறு கட்டி வராத ஒரு பொருளை இழுப்பது போன்று இழுக்க வேண்டியுள்ளது.

எங்கள் காலத்தில் 6 அடி ஆண், ஐந்து அடி பெண்களை மணமுடிப்பது சர்வ சாதாரணம். சில இடங்களில் 6 அடிப் பெண்களை மணந்த 5 அடி ஆண்களும் உண்டு. மலையளவு பருமனான பெண்ணைக் கட்டிய ஒல்லி மாப்பிள்ளைகளும் உண்டு.

சிவந்த அழகான ஆண், கருத்த பெண்ணை தாய், தந்தை சொல்லுக்குக் கட்டுப்பட்டு திருமணம் முடித்து பேரன் பேத்திகள் காலம் வரை சிறப்பாக வாழ்ந்தது உண்டு.

இன்று நிலைமை தலைகீழ். ஒரு இஞ்ச் பெண் உயரமாக இருந்தால் ஆண் கட்ட மறுகின்றார். ஆண் ஒரு இஞ்ச் குறைவாக இருந்தால் பெண் கட்ட மறுக்கின்றார். பருமனான ஆண் பெண் ஏறிட்டுப் பார்க்கப்படுவதில்லை. இது மட்டுமின்றி ஒரே வயதுடைய ஆணும், பெண்ணும் ஒரு வயசு, இரண்டு வயசு வித்தியாசமிருந்தாலும் திருமணம் முடிக்கத் தயங்குகின்றனர்.

முஸ்லிம் சமூகத்தில் 70 சதம் பெண்கள் படித்து விட்டனர். 30 சதம் படிக்காதோர் உள்ளனர். பெண்ணுக்கு ஏற்ற படிப்பு அல்லது மேல்படிப்பு ஆணுக்கு இல்லையென்றால் வேண்டாமென்கின்றனர்.

ஆண்கள் வீட்டார் பலர், பெண் வேலைக்குச் செல்லக்கூடாது ஆனால், இரண்டு டிகிரி அல்லது ஒரு டிகிரியாவது வேண்டும் என்கின்றனர். வேலையை விடுவதற்கு சிலர் ஒப்புக்கொள்கின்றனர், பலர் மறுக்கின்றனர்.

B.E. படித்த 32 வயது ஆண் MNC பணியில் இருப்பவர். 3 வருடமாகப் பெண் தேடுகிறார். எந்த போட்டோ காண்பித்தாலும் பிடிக்கவில்லை என்கிறார். அவரது தம்பி திருமணம் முடித்து மூன்று குழந்தைகளுக்கு தகப்பன் ஆகிவிட்டார்.

B.Com. படித்த 30 வயது நபர். 6 அடி உயரத்தில் அழகான பெண் வேண்டுமென்கிறார். எங்கே போய்த் தேடுவது? செஞ்சுதான் தரணும்!

வங்கி அதிகாரி மகன். B.E. படித்தவர். வேலை செய்யும் பெண் அழகாக வேண்டுமென்கிறார். அவருக்கு வயதோ முப்பதைத் தாண்டிவிட்டது.

29 வயது பெண். 100 சவரன் நகை போடுவோம். வரும் ஆணுக்கு சென்னையில் சொந்த வீடு இருக்கணும். படித்திருக்கணும், பணியில் இருக்கணும் என்கிறார். இவர் கேட்கும் எல்லாமும் இருக்கும் நபரோ இவரைப் பிடிக்கவில்லை என்கிறார்.

27 வயதுள்ள 6 அடி உயரப் பெண், தாய், தந்தை மளிகைக் கடை, இவர் MNC வேலை. இவருக்கு மாப்பிள்ளை பார்த்துப் பார்த்து ஓய்ந்து போன தாய், தந்தை, ஏண்டா படிக்க வெச்சோம் என்ற மனநிலைக்கு வந்து விட்டனர். 40 ஆயிரம் சம்பாதிக்கும் அவர் வேலையை விடமுடியாது என்கிறார். சமீபத்தில் வேறு ஒரு புரோக்கர் மூலமாகப் பார்த்த மாப்பிள்ளைக்கு பேசி முடித்து மண்டபம் பிடித்து, அழைப்பிதழ் எல்லாம் அடிச்சு வழங்கிய பிறகு திருமணம் நின்று போயிருக்கிறது. மனம் உடைந்து போயுள்ளனர்.

6 வயது சிறுவனை வைத்துள்ள 30 வயது பெண் குலா வாங்கியவர். அழகாக இருப்பார். கண்ணிப்பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க சினிமாவில் கட்டளை இடுவது போன்று அவர் அம்மா கட்டளை இடுகின்றார். அம்மாவும் குலா வாங்கியவராக இருக்கின்றார்.

3 வயது, 6 வயது, 8 வயது, 10 வயது குழந்தை ஒன்றிரண்டை கைகளில் வைத்துக் கொண்டு வேலைக்குச் செல்லும், செல்லாத, குலா, தலாக் பெண்கள் சமூகத்தில் நிரம்ப உள்ளனர். தலாக்கான ஆண்கள், குழந்தையுடன் இவர்களை ஏற்க மறுப்பதால் தேங்கியிருக்கின்றனர். இரண்டாம் தாரமாகச் சம்மதிப்பதில்லை. சமூக நிலை தெரியாமல் இவர்கள் "இப்படி பாருங்கள், அப்படி பாருங்கள்" என்று கூறி புகைப்படம் தருகின்றனர்.

டபுள் டிகிரி ஆண்கள் வேண்டும் என்று பல குடும்பங்கள் காத்திருக்கின்றனர். MBA படிச்ச சில பையன்கள் வேலை கிடைக்காமல், படிப்புக்கேற்ற தகுதி அவர்களுக்கு இல்லாமல் சுற்றி வருகின்றனர். B.E. படிச்ச பையன்கள் 8,000 ரூபாய்க்கு கால் சென்டருக்குப் போகின்றனர். திருச்சி காலேஜ்ல M.Sc. படித்தவர் 8,000க்கு வேலைக்குப் போகிறார். M.E. படிச்ச ஒரு பையன் 10,000 ரூபாய் சம்பளத்துக்கு போகிறார்.

டிகிரிக்கும், சம்பளத்துக்கும், டிகிரிக்கும், திறமைக்கும் சம்பந்தமே இல்லை. ஒரு டிகிரி முடிச்ச பசங்க தங்களது திறமையால் சென்னையிலேயே 30 ஆயிரம் வாங்குறாங்க. அனுபவம் வெறும் இரண்டு வருடம் தான்.

10 ஆம் வகுப்பு தேர்வில் வெறும் 360 மார்க் எடுத்த பையன் மேற்கொண்டு படிக்கவில்லை. 6 வருட அனுபவத்தில் இணைய வடிவமைப்பாளராக 40,000 சம்பாதிக்கின்றார். இவர்கள் போன்று பலர் இருக்கின்றனர்.

எந்தப் படிப்பும் படிக்காமல் ஸ்கூலோடு அரை குறையாக முடித்துக் கொண்ட பலபேர் கை நிரைய சம்பாதிச்சு சமூகத்துல மதிப்போடு இருக்காங்க.

பெண், மாப்பிள்ளை பார்ப்போர், குணம் பார்க்கலாம், குடும்பம் பார்க்கலாம். குடும்ப ஒழுக்கம், திறமை பார்க்கலாம். நல்லா சம்பாதிக்கிற மாப்பிள்ளையா, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத பையனா, ஒழுக்கமான பெண்ணா என்று பார்க்கலாம். இவைகள் தான் வாழ்க்கையை கொண்டு செலுத்தும். டிகிரியோ, பணமோ கொண்டு செலுத்தாது. இலட்சம் இலட்சமாக சம்பாதிக்குற ஆம்பளைய மணமுடிச்சு அவருக்கு குணம் சரியில்லாம இருந்தா என்ன செய்வது? இப்படித்தான் பல பேரு கிட்ட பல பெண்கள் மாட்டிக்கிட்டு சித்திரவதை அனும்பைக்குதுக. அதே போல பணக்காரப் பொண்ணுங்க கிட்ட சிக்கிக்கிட்டு இருக்கிற ஆண்களும் உண்டு. பெத்தவங்க சிந்திக்கணும்.

கலரா பொண்ணு வேணுமுன்னு கட்டிக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு அலையுறவைகளை பார்க்கிறேன். கருப்பா இருந்தாலும் பரவாயில்லைன்னு கட்டிக்கிட்டவுக ஜம்முன்னு வாழுறதையும் பார்த்திட்டேன். என்னோட அனுபவத்தை சொன்னேன். கேக்குறதும், கேட்காததும் உங்க இஷ்டம்.

தற்காலத்தில் குலா அதிகமாக நடைபெறுகிறது. காதல், ஆண்மை இல்லாதது, தாம்பத்ய குறைபாடுகள் காரணமா சொல்லப்படுது. பெண்ணை பிடிக்கலையா உடனே தலாக் சொல்லி வேற பெண்ணை கட்டிக்க, ஆணைப் பிடிக்கலையா குலா கேளு" என்று ஒரு குரூப் செய்யும் பிரச்சாரத்தால் இன்று தலாக்கும், குலாவும் பெருகிக்கிட்டு இருக்கு. எந்த ஜமாஅத்தும் எனக்குத்தெரிஞ்சு இந்த பஞ்சாயத்துகளில் ஈடுபடுறதில்லை.

இன்னொன்னும் நான் சொல்லியாகணும். இராவுத்தர் ஹனஃபியாகவுக ஆண், பெண் திருமணத்துக்கு அதே இனத்தில் வரன் கேக்குறாங்க. அதே போல ஷாஃபி லெப்பை காரவுகாளும் தங்களோட இனத்துலதான் வரன் வேணும்னு அடம்பிடிக்கிறாங்க. ஊரை விட்டு பிழைக்க வந்தவுகளும் இப்படி கேக்குறதை கை விடல.

காலையில் எழுந்தால் சட்டென்று இரவு வந்து விடுகிறது. நாளும், பொழுதும், மாதமும், வருடமும் வேகமாக ஓடிக்கிட்டிருக்கு. அந்தக் காலத்துல ஆணுக்கும், பெண்ணுக்கும் ஐம்பது வருடம் வாழ்க்கை கிடைத்தது. இப்பொழுது 20 வருடங்கள் கிடைப்பதே பெரிய சமாச்சாரம். இந்த குறுகிய கால வாழ்க்கையில் பங்களா வேணும், பண வசதி வேணும். மத்ஹபு பார்ப்போம். நெட்டை, குட்டை, மோட்டா, ஒல்லி, படிப்பு, வயது பார்த்துத்தான் முடிப்போம் அப்படின்னா ஒன்னும் நடக்கப்போறதில்ல. அல்லாஹ் தான் அவர்களுக்கு ஹிதாயத் தரணும்.

சும்மாவாவது நபி வழி, நபி வழின்னு சொல்லிக்கிட்டு திரியுறாங்க. 25, 30 வயசுள்ள எந்த ஆணாவது நாற்பது வயசு விதவையை, ரெண்டு பிள்ளை உள்ள பெண்ணை கட்டுவாங்களா? இல்ல, ரெண்டு பிள்ளைய வச்சிருக்கிற 35 வயசு பெண்ணுக 50 வயசு ஆண்களுக்கு ரெண்டாம் தாரமா வாக்கப்பட சம்மதிப்பாங்களா? இஸ்லாத்துக்கு மாற்றமானது இல்லையே இது. ஹலால் தானே!

நான் சொல்ல வருவது என்னான்னா... எல்லாம் சினிமா, சீரியல் பார்த்தும், மேலை நாடுகள்ல நடக்கிறதை பார்த்தும் கனவு கண்டுகிட்டு இருக்காங்க. இவுங்க நனவு உலகத்துக்கு வரணும். விட்டுக்கொடுக்கும் மனப்பானமை ரெண்டு பக்கமும் வளர்த்துக்கிட்டா சமூகத்தில ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் ஆகாம எஞ்சியிருக்கமாட்டாங்க.

-முஹம்மது

( இது "திருமணம் முடித்து வைக்கும் இடைநிற்பவர்" ஒருவரின் நேர்காணலின் சுருக்கமாகும். முழு நேர்காணலுக்கு இம்மாத (டிசம்பர் 2014) 'முஸ்லிம் முரசு' 5 முதல் 9 பக்கம் வரை)

www.nidur.info