Home கட்டுரைகள் பொது வணிகர்களின் உலகில்... கிராமம்
வணிகர்களின் உலகில்... கிராமம் PDF Print E-mail
Friday, 12 December 2014 07:11
Share

வணிகர்களின் உலகில்... கிராமம்

  ந.முருகேசபாண்டியன்    

[ யோசித்துப் பார்க்கையில் பல்வேறுபட்ட மக்களும் ஏதோ ஒருவகையில் பொருட்களை விற்கும் வியாபாரியாக வாழ்ந்து வருவதனை அறியலாம்.

வியாபாரம் என்பது ஏதோ ஒரு சாதியினருக்கு மட்டும் உரியது என்று பொதுவாக பலரும் நம்புகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல.

வயல்வெளியில், ஆற்றங்கரையோரம் தானாக முளைத்துக் கிடக்கும் பொன்னாங்கன்னிக் கீரை, குமட்டிக் கீரை போன்றவற்றைப் பறித்து வந்து கிராமத்தில் ஐந்து காசுக்கு விற்கும் மூதாட்டியை எந்தக் கணக்கில் சேர்ப்பது? அவருக்கு வெற்றிலை, பாக்கு போடுவதற்கான காசை, அந்தக் கீரை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.

வணிகம் என்பது ஒருவகையில் பரிமாற்றம் அல்லது பண்டமாற்று. ஒருவரிடம் இருக்கும் பொருளை இன்னொருவருக்குத் தந்துவிட்டு, அதற்குப் பதிலாகப் பொருள் அல்லது பணம் பெற்றுக் கொள்வதுதான். சமூகமாகக் கூடி வாழத் தொடங்கிய மனித வாழ்க்கையில், எல்லாப் பொருட்களுக்கும் ‘மதிப்பு’ ஏற்பட்ட நிலையில் வாய்ப்புக் கிடைத்தால் எல்லோரும் வியாபாரிகள்தான்.]

வணிகர்களின் உலகில்... கிராமம்

‘வைத்தியனுக்குக் கொடுப்பதை வணிகனுக்குக் கொடு’ கிராமத்தில் புழங்கும் முக்கியமான பழமொழி. நல்லது கெட்டது எதையும் தின்னாமல், இறுக்கி வைத்துக் கடைசியில் நோய் வந்து வைத்தியனிடம் போய் பணத்தைச் செலவழிப்பது வீண் வேலை. ஓரளவு பெரிய கிராமமான சமயநல்லூரில்கூட மொத்தம் பத்துக் கடைகளும் இரு உணவகங்களும்தான் இருந்தன. சிறிய காய்கறிக் கடைதான் இருந்தது. மற்றபடி பெரும்பாலான பொருட்கள் தலைச் சுமையாகவேதான் ஊருக்குள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படும். எங்கள் ஊருக்குத் தெற்கே நீண்டு கிடக்கும் நாகமலையில் இருந்து வெட்டப்பட்ட விறகுக் கம்புகளை கட்டுகளாகக் கட்டி, பெரிய கட்டினைத் தலையில் வைத்துக் கொண்டு ஊர் முழுக்கச் சுற்றி யாராவது விலைக்கு வாங்க மாட்டார்களா எனக் கெஞ்சும் பெண்கள் தினமும் குறைந்தது ஆறேழு மைல் தொலைவு நடப்பார்கள். விறகு விற்ற காசில் பலசரக்கு சாமான்கள், அரிசிக் குருணை வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் போகும் பெண்கள் இயற்கையாகவே கடும் உழைப்பாளிகள்.

வெள்ளரிக்காய் காய்க்கும் காலத்தில் அதிகாலையில் கண்மாய்க்குப் போய் காய்களை வாங்கி வந்து விற்கும் பெண்கள், திடீரென வெள்ளரிப் பழம், வாழைப்பூ, மிதி பாகற்காய், நாவற்பழம், மாம்பழம் எனப் பருவத்திற்கேற்ப விற்பனை செய்வார்கள். இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் கூடுதலாகக் கோடையில் ‘எலுமிச்சை‘ விற்கும் பெண்ணை எனக்குத் தெரியும். வேகாத வெயிலில் சலிப்பு எதுவுமில்லாமல், தலையில் கூடை நிறைய எலுமிச்சையுடன் அலையும் அந்த அக்காவின் வருவாயில்தான் குடும்பம் வாழும்.

மழைக்காலத்தில் கண்மாய்கள் நிரம்பி, நீர் கலிங்கு போகும் காலத்தில் பழைய மாடல் குழல் துப்பாக்கியுடன் வேட்டைக்குப் போகிற வேட்டைக்காரர் உற்சாகமாகிவிடுவார். அவர் மாலையில் ஊருக்குள் வரும்போது, நாரை, சிறகி, உள்ளான், கொக்கு போன்ற பறவைகளுடன் இருப்பார். சிறிய அலுமினிய ரவைகள் தாக்கியதால் மாண்ட பறவைகளைப் பார்க்கப் பாவமாக இருக்கும். டஜன் கணக்கில் ‘உள்ளான்’ பறவையை வாங்கி, மிளகுத்தூள் அதிகம் போட்டு, வெள்ளப் பூண்டு மணக்க, உறைப்பு தூக்கலாகக் கொதிக்கும் குழம்பைச் சோற்றில் ஊற்றிப் பிசைந்து சாப்பிடும்போது, கண்களில் நீர் கொட்டும்.

ஊருக்கு வெளியே இருக்கும் புஞ்சை நிலம் அல்லது மலையடிவாரத்தில் விரிக்கப்பட்ட கண்ணியில் சிக்கிய முயலின் கழுத்து வெட்டப்பட்டிருக்கும் என்றாலும் முயல் உயிரோடு இருக்கும். பளபளக்கும் கண்களுடனான காட்டு முயலைக் கடைவீதிக்குக் கொண்டு வந்து விற்கிறவர் சொல்கிற விலையைக் கேட்டு எல்லோரும் தயங்குவார்கள். கடைசியில் எப்படியோ பேரம் படிந்து முயலை வாங்கி வீட்டிற்குக் கொண்டு போய், அதன் தோலை உரித்துப் பார்த்தால், அதன் உடலமைப்பு பச்சிளம் குழந்தையைப் போல இருக்கும். முயல் கறி கவிச்சியடிக்கும்.

வான்கோழியில் சேவல் ஏழெட்டுக் கிலோ கனமிருக்கும். எனவே வான்கோழியை வெட்டி, அதன் உரிமையாளருடைய வீட்டினர் மட்டும் சாப்பிட்டாலும் தீராது. எனவே அக்கம் பக்கத்திலுள்ள வீட்டினரிடம் குறிப்பிட்ட நாளில் வான்கோழியை வெட்டப் போகிறேன், உங்களுக்கு எத்தனை கிலோ கறி வேண்டும் எனக் கேட்டு, பின்னர்தான் வெட்டுவார்கள். தராசில் நிறுக்கப்பட்ட கறியைத் தந்து பணத்தை வாங்கிக் கொள்வார்கள்.

வீட்டிற்கு முன்னர் தெருவில் வளர்க்கப்பட்டிருக்கும் முருங்கை மரத்தின் காய்கள் மலிவான விலையில் விற்கப்படும். திடீரென மரத்தின் பெரிய கிளைகள் ஒடிந்து கீழே விழுந்துவிட்டால், இலையைக் காம்புடன் ஆய்ந்து கட்டுகளாகக் கட்டி, இரண்டு பைசாவிற்கு ஒரு கட்டு என வீட்டு வாசலில் வைத்து விற்கப்படும்.

அரைக் கீரை எனப்படும் கீரையானது நல்ல நீர்வளம் மிக்க பகுதிகளில் பாத்திகளில் வளர்க்கப்படும். ஓரளவு செடி வளர்ந்தவுடன், தூர்ப் பகுதியை விட்டுவிட்டு, மேலாக அரிந்து, சாக்கு மூட்டைகளில் பொதிந்து மொட்டை மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு வருவார்கள். ஊர் மந்தையில் அல்லது தெருமுனைகளில் நிறுத்தப்படும் வண்டியிலிருக்கும் கீரையை இரண்டு கைகளாலும் அள்ளி வஞ்சனை இல்லாமல் போடுவோர் கீரைக்காரர். இரண்டு காசைக் கொடுத்துவிட்டு, ‘இன்னும் ரெண்டு கீரை போடுங்க’ என்று சொன்னாலும், மறுப்புச் சொல்லாமல், சிறிது கீரையை அள்ளிப் போடுவார். வண்டி கொஞ்ச நேரத்தில் காலியாகி விடும். இந்த மாதிரி வியாபாரம் மூலம் கீரைக்காரருக்கு என்ன பெரிய வருமானம் வரும் என்று எனது பள்ளிப் பருவத்திலேயே யோசித்திருக்கிறேன்.

எங்கள் ஊரில் பிரபலமான வெற்றிலைக் கொடிக்காலில் கிள்ளப்படும் வெற்றிலைகள் கவுளிகளாகக் கட்டப்பட்டு வாழை மட்டையில் அழகாகப் பொதிந்து விற்பனைக்காக மாட்டு வண்டியில் மதுரைக்குக் கொண்டு செல்லப்படும்; உள்ளுர்த் தேவைகளுக்கும் வெற்றிலை விலைக்குக் கிடைக்கும். கொடிக்காலில் வெற்றிலைக் கொடி படருவதற்காக நடப்பட்டிருக்கும் அகத்தி மரத்தின் கீரைகளை நீளமான வாங்கறுவாளினால் வெட்டி, கட்டுகளாகக் கட்டி விற்பார்கள். முற்றிய அகத்திக் கீரையை ஆடு, மாடுகளும், இளங்கீரையைச் சமைத்து மனிதர்களும் சாப்பிடுவார்கள். கொடிக்காலில் மட்டும் விளையும் சிறிய மிளகாய்ச் செடியின் வெள்ளை மிளகாய் ‘பால் மிளகாய்’ எனப்பட்டது. சாதாரண மிளகாயைவிடக் காரமாக இருக்கும் பால் மிளகாயை ஊறுகாயினுள் போட்டு ஊற வைத்து, சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வார்கள். கொடிக்காலில் கிடைக்கும் வள்ளிக் கிழங்கையும் அந்த விவசாயிகளின் வீட்டுப் பெண்கள் விற்பனை செய்வார்கள்.

வீட்டுக்கு முன்னர், பயிர்க்குழியில் அவரை, புடலை, பீர்க்கங்காய் போன்ற விதைகளை நட்டு, பந்தலிட்டு, அதில் காய்த்துக் கிடக்கும் காய்களைத் தனது வீட்டு உபயோகத்துக்கு வைத்துக் கொண்டு, மீதியை விற்கும் பெண்கள் எங்கள் ஊரில் இருந்தனர்.

விவசாயம் மூலம் கிடைக்கும் நெல், தேங்காய், புளி, கேழ்வரகு, சோளம், பருத்தி போன்றவற்றை விற்கும் சம்சாரிகளும் கூலி விவசாயிகளும் எங்குமிருந்தனர். தேங்காய் வெட்டிற்குப் போகும் மரமேறிகளும், தேங்காயைப் பொறுக்கும் பெண்களும், தங்கள் பங்கிற்குக் கிடைக்கும் வெட்டுக் காய்களைப் பிறரிடம் விற்றனர்.

ஆடு வளர்த்து விற்றல் என்பது சில குடும்பங்களில் தொடர்ந்து நடைபெற்றது. ஏழெட்டுப் பொட்டை ஆடுகளும், ஒரு கிடாவும் வாங்கி ஊருக்கு வெளியே மேய்த்து, மலையில் வீட்டிற்கு ஓட்டி வருகிறவர்களின் ஆடுகள் மூன்று ஆண்டுகளில் பல்கிப் பெருகும். அவ்வப்போது ஆடுகளை விற்றுக் கைச் செலவுக்கு வைத்துக் கொள்வார்கள். ஆட்டு மந்தையிலிருந்து கிடைக்கும் வருவாயை நம்பி வாழும் குடும்பங்கள் எங்கள் ஊரில் இருந்தன.

பசு மாடு, எருமை மாடு போன்ற பால்தரும் மாடுகளை வளர்த்து, பால் விற்றுப் பிழைக்கும் குடும்பத்தினர் இருந்தனர். மாட்டிற்குப் பருத்திக் கொட்டை, பிண்ணாக்கு, வைக்கோல் தந்து, அதனால் ஆகின்ற செலவையும், பால் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் கூடுதலாக இருந்தது. தாய்ப்பால் போதுமான அளவு சுரக்காத உடல் வாகுடைய பெண்கள், காசு கொடுத்து பசும்பாலை வாங்கிக் குழந்தைக்குப் புகட்டினர்.

செக்கடித்தெரு என்ற பெயரில் எங்கள் ஊரில் பிரபலமான தெரு இன்றும் உள்ளது. ஆனால் செக்குத்தான் இன்று இல்லை. எண்பதுகளில்கூட மரச் செக்கினை இழுத்துக் கொண்டு மாடுகள் சுற்றின. எள்ளை மர உலக்கையினால் தொடர்ந்து நசுக்கும்போது நல்லெண்ணெய் வெளிப்பட்டது. அந்த எண்ணெய் விற்கப்பட்டது. கிராமத்தினர் சமையலுக்காக எண்ணெயை வாங்கிக் கொண்டு போயினர்.

ஆமணக்கு விதைகளை நீரில் ஊறவைத்து ஆட்டிக் காய்ச்சி விளக்கெண்ணெய் தயாரிப்பது எங்கள் உறவினர் வீட்டில் நடைபெற்றது. விளக்கெண்ணெய் மருந்துப் பொருளாகப் பயன்பட்டது. சுத்தமான முறையில் வீட்டில் தயாரிக்கப்படும் விளக்கெண்ணெய் வாங்கிட சுற்றியிருக்கும் கிராமத்து ஜனங்கள் வருவார்கள்.

ஆட்டுரலில் அரிசி, உளுந்தை ஆட்டி, தினமும் காலை வேளையில் வீட்டிற்கு முன்னர் இட்லி, பனியாரம் சுட்டு விற்கும் பெண்கள் சிலர் எங்கள் ஊரில் இருந்தனர். குட்டிப் பிள்ளைகள் அம்மாவிடம் கெஞ்சி காசைப் பெற்றுக் கொண்டு போய் கருப்பட்டியில் செய்த பணியாரத்தை வாங்கித் தின்னுவார்கள். தண்ணீரான சாம்பார், மிளகாய்ச் சட்னியுடன் இட்லி வியாபாரம் மும்முரமாக நடைபெறும். காலையில் பத்து மணிக்குள் முடிந்துவிடும் இட்லி வியாபாரம் மூலம், ஒரு குடும்பத்தின் தேவைகள் நிறைவேற்றப்பட்டன.

யோசித்துப் பார்க்கையில் பல்வேறுபட்ட மக்களும் ஏதோ ஒருவகையில் பொருட்களை விற்கும் வியாபாரியாக வாழ்ந்து வருவதனை அறியலாம். வியாபாரம் என்பது ஏதோ ஒரு சாதியினருக்கு மட்டும் உரியது என்று பொதுவாக பலரும் நம்புகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. வயல்வெளியில், ஆற்றங்கரையோரம் தானாக முளைத்துக் கிடக்கும் பொன்னாங்கன்னிக் கீரை, குமட்டிக் கீரை போன்றவற்றைப் பறித்து வந்து கிராமத்தில் ஐந்து காசுக்கு விற்கும் மூதாட்டியை எந்தக் கணக்கில் சேர்ப்பது? அவருக்கு வெற்றிலை, பாக்கு போடுவதற்கான காசை, அந்தக் கீரை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. வணிகம் என்பது ஒருவகையில் பரிமாற்றம் அல்லது பண்டமாற்று. ஒருவரிடம் இருக்கும் பொருளை இன்னொருவருக்குத் தந்துவிட்டு, அதற்குப் பதிலாகப் பொருள் அல்லது பணம் பெற்றுக் கொள்வதுதான். சமூகமாகக் கூடி வாழத் தொடங்கிய மனித வாழ்க்கையில், எல்லாப் பொருட்களுக்கும் ‘மதிப்பு’ ஏற்பட்ட நிலையில் வாய்ப்புக் கிடைத்தால் எல்லோரும் வியாபாரிகள்தான்.

கிராமங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்காக வெளியூரிலிருந்து வருகின்றவர்கள் பல்வேறு வகைப்பட்டவர்கள். கிராமத்தில் கிடைக்காத பொருட்களை அறிமுகப்படுத்தவோ, விற்பனை செய்யவோ வருகின்றவர்கள்தான் நுண்ணிய அளவில் கிராம வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றனர். மிகச் சிறிய அளவில் வரையறுக்கப்பட்ட தேவைகளுடன் வாழ்கின்ற கிராமத்தினரிடையே, நுகர்பொருள் பண்பாட்டினை அறிமுகப்படுத்துகிறவர்கள் வெளியிலிருந்து வரும் வியாபாரிகள்தான். குளிப்பதற்கு சோப் பயன்படுத்துவது என்பது ஆடம்பரமான விஷயமாக இருந்த காலக்கட்டத்தில், மாலை 7-00 மணிக்கு ஊர் மந்தைக்கு வரும் லைபாய் சோப் கம்பெனி வேனில் காட்டப்படும் பொம்மைப் படத்தைப் பார்க்கக்கூடும் மக்கள், சோப் பற்றிய துண்டு விளம்பரப் படத்தையும் பார்க்க நேரிடும்.

5 பூ மார்க் பீடி, மலபார் பீடி, சிப்பி பீடிக் கம்பெனிகளின் வண்டிகளும் ஊருக்குள் வந்து பொம்மைப் படம் காட்டும். குறிப்பிட்ட கம்பெனி பீடியைப் புகைப்பவனால், எந்தவொரு பயில்வானையும் வீழ்த்த முடியும் என்ற விளம்பரத் துண்டுப்படம் திரையில் ஒளிரும். காட்சி நடந்து கொண்டிருக்கும்போது கம்பெனி ஆட்கள் பெரியவர்களுக்கு இலவசமாகப் பீடிகளை வழங்குவார்கள். எந்தப் பழக்கமும் இல்லாமல், கிராமத்தில் ஒதுங்கி வாழும் ஆண்களைப் புகைத்துப்பார் எனத் தூண்டுவது இத்தகைய விளம்பரங்களே.

போர்ன்விடாவைப் பாலில் கலந்து இன்று உணவகங்களில் ரூ.15/- என ஒரு கோப்பை விற்கப்படுகிறது. இதே பானம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, மதுரை டவுன் ஹால் ரோட்டில் பெரிய சில்வர் கேனில் நிரப்பப்பட்ட போர்ன்விடா பாலை தெருவில் நடந்து செல்கின்றவர்களுக்கு பிளாஸ்டிக் கப்புகளில் இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தனர். பொருட்காட்சியில் உள்ள போர்ன்விடா ஸ்டாலில், வந்திருந்த அனைவருக்கும் இலவசமாக கப்புகளில் வழங்கப்பட்டது பானம் என்றால் நம்புவது சிரமம்தான்.
 
எங்கள் ஊரில் மாலை வேளையில் கடைவீதியில் வட்டமாகக் கூட்டம் கூடி நின்றால், அங்கு பெரும்பாலும் வல்லாரை லேகியம் விற்கப்படுவதாக இருக்கும். பெரும்பாலும் லேகியம் விற்கிறவர் சிறிய இரும்புப் பெட்டி மேல் அமர்ந்து இருப்பார். அவருக்கு முன்னால் வட்டவடிவில் பல்வேறு மூலிகைகள், கடைச் சரக்குகள் சிறிய பாத்திரங்களில் வைக்கப்பட்டுப் பரப்பப்பட்டிருக்கும். சிலர் ஆண் பெண் உடலமைப்பு, நரம்பு மண்டலம், எலும்பு அமைப்பு போன்றவற்றைக் காட்டும் படங்களை நிறுத்தி வைத்திருப்பார்கள். லேகியம் விற்கிறவர்கள் தங்களைப் பரம்பரை வைத்தியர் என்று கூறுவார்கள். ஏதோ கம்பெனி விளம்பரத்திற்காக வந்திருப்பதாகவும், சிலருக்கு மட்டும்தான் மருந்து கிடைக்கும் என்று ஆர்வத்தைக் கிளப்புவார்கள். இரவானதும் நடுவில் பெட்ரோமாக்ஸ் விளக்கு சீறலுடன் ஒளிர்ந்து கொண்டிருக்கும். சிலர் கையில் 64 முறைகளை விளக்கும் கொக்கோ சாஸ்திரப் படங்கள் இருப்பதாகவும் அதைக் காட்டப் போவதாகவும் சொல்வார்கள். கெட்டி அட்டை போட்ட பெரிய புத்தகத்தைப் பிரித்துக் காட்டுவது மாதிரி ‘பாவனை’ செய்து கொண்டிருப்பார்கள்.

ஆண்மைக் குறைவுக்கு ஒரு மண்டலம் லேகியம் வாங்கிச் சாப்பிட்டால் ‘கம்பி’ மாதிரி நிற்கும் என்று ஓரடி நீளமான கெட்டியான இரும்புக் கம்பியை எடுத்துக் காட்டும்போது, கூட்டத்தினரின் முகத்தில் சிரிப்பு மலரும். எந்தவொரு பொருளுக்கும் Spare உண்டு... இதுக்கு மட்டும் Spare கிடையாது என்று சொல்லி, சாதாரணமான விஷயத்தை மிகைப்படுத்தியவுடன் கூட்டத்தினரில் சிலருக்கு பயமேற்படும். ஒரு துளி விந்து என்பது அறுபது சொட்டு ரத்தம் என்ற கணக்கைச் சொல்லி ‘சுய இன்பம்’ அனுபவித்தவரின் குடும்ப வாழ்க்கை நாசமாகப் போய்விட்டது. இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி தினமும் இரவு படுக்கப் போகும்போது சிறிய நெல்லிக்காய் அளவு லேகியம் சாப்பிடுவதுதான் என்று பயமுறுத்துவார். அதே லேகியத்தைச் சாப்பிட்டால், மலச்சிக்கல் நீங்கி, ‘களகள’வென வெளிக்கிப் போகும் என்று சொல்லுவார். ‘உடலை வளர்க்க குடலைக் கழுவு’ அதுக்கு ‘வீரகேசரி வல்லாரை லேகியம்’ ஒன்றுதான் தீர்வு என விவரிக்கும் பேச்சு பெரும்பாலும் நகைச்சுவை சார்ந்து இருக்கும். ஓரளவு பாலியல் கலந்த கிண்டல் இருக்கும். சிறுவர்கள் நின்றால் "போ... போ" என விரட்டி விடுவார்கள்.

ஆண்மைக் குறைவைப் போக்கும் லேகியத்தை நல்ல திடகாத்திரமான உடல் நலத்திற்கு ஆண், பெண் இருவரும் சாப்பிடலாம் என முடியும் லேகியக்காரனின் பேச்சைக் கேட்டு யாரும் குழம்பமாட்டார்கள். பேச்சின் துவக்கத்தில் அரை நெல்லிக்காய் அளவு லேகியத்தை சிறிய உருண்டையாக உருட்டி கூட்டத்தில் சிலருக்குத் தருவார்கள். பதினெட்டு மூலிகைகள், அறுபத்து நான்கு கடைச் சரக்குகள், நெய், தேன் என விரியும் பேச்சில் மூலிகை, கடைச் சரக்கு ஒவ்வொன்றையும் மூச்சு விடாமல் விவரிக்கும் லேகியக்காரரின் நினைவாற்றலைக் கண்டு கூட்டத்தினர் மயங்கி நிற்பார்கள்.

நார்ச் சத்து, பழங்கள் சாப்பிடும் பழக்கமற்ற கிராமத்தினர் பெரும்பாலும் மலச்சிக்கலினால் சிரமப்பட்டனர். எனவே மலத்தை இளக்கிடும் பேதி மருந்து கலந்த லேகியங்கள் கிராமப்புறங்களில் நன்கு விற்பனையாகின. பாலியல் பற்றிய வெளிப்படையான பேச்சு, சந்தேகங்களுக்கு விளக்கம் பெறமுடியாத சூழலில் வாழும் நடுத்தர வயதுக் கிராமத்தினருக்கு, ஆண்மையைப் பெருக்கும் என்று விற்கப்படும் லேகியத்தின்மீது ஆர்வம் ஏற்படுவது இயற்கைதானே. வாய்ப்பேச்சு ஒன்றையே மூலதனமாகக் கொண்டு, ஊர் ஊராகப் போய் லேகியம் விற்கிறவர்கள் எழுபதுகளில்கூட நிரம்ப இருந்தனர்.

எழுபதுகளின் இறுதியில் நான்கைந்து மலையாளிகள் ஊருக்கு வந்தனர். மந்தையில் பெரிய கொட்டகை போட்டு பல்வேறு பலசரக்குச் சாமான்கள், மூலிகைகள் போன்றவற்றைப் பெரிய அளவில் குவித்தனர். இரண்டு பெரிய கருங்குரங்குகளை கொட்டகையில் முன்புற மூங்கிலில் கட்டிப் போட்டனர். ஒலி பெருக்கிக் குழாய்களின் வழியே மலையாளம் கலந்த தமிழில் பேசினர். பல்வேறு மூலிகைகள், பொருட்களை ஊரார் முன்னிலையில் இடித்துப் புடம் போட்டு லேகியமாக்கி அதில் கருங்குரங்குக் கறியையும் போட்டு வேக வைத்து லேகியம் விற்கப் போவதாகக் கூறினர். ஹார்லிக்ஸ் பாட்டில் அளவு லேகியம் அறுபது ரூபாய் என்றும், முன்கூட்டியே பணம் கட்டி டோக்கன் வாங்கியவருக்கு மட்டும் தரப்படும் என்றனர். லேகியம் தயாராக நான்கு நாட்கள் ஆகும் என்று கூறினர். நான்கைந்து உள்ளூர் ஆட்கள் இரும்பு உரலில் மூலிகைகளை இடித்தல், சலித்தல், வெயிலில் காய வைத்தல் என மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். கருங்குரங்குகள் இரண்டும் அங்குமிங்கும் குதித்துக் கொண்டிருந்தன. சிறுவர்கள் குரங்குகளைச் சீண்டினர். முதல் நாளில் டோக்கன் வாங்க யாரும் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. திடீரென ஊருக்குள் ஒரு பேச்சு கிளம்பியது. "கருங்குரங்கு லேகியம் சாப்பிட்டால் ஆண்மை/ பெண்மை விருத்தியாகும். அதிலும் அரைமணி நேரம் கூட மனைவியுடன் கூடி இருக்கலாம்" என்று. அப்புறம் வீட்டிற்கு இரண்டு டோக்கன்கள் வாங்கினர் பலர். மூன்றாம்நாள் மாலை வேளையில் இரு கருங்குரங்குகளும் கொல்லப்பட்டுத் தோலுரிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட இறைச்சியை வேகவைத்து, ஏற்கனவே காலையில் இருந்து பல்வேறு மூலிகைகள், சரக்குச் சாமான்கள் சேர்ந்து அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் பெரிய அண்டாவினுள் போடப்பட்டன. ஊரார் எல்லோரின் மனத்தாலும் கருங்குரங்கு கொல்லப்பட்டது திகிலையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இன்னொரு நிலையில் கருங்குரங்கு இறைச்சி உடல்நலத்திற்கு அருமையானது என்று மூடத்தனமாக நம்பினர். இரு பெரிய அண்டாக்களில் கிளறப்பட்ட லேகியம் நான்காம் நாள் காலையில் அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கப்பட்டன. பின்னர் நூற்றுக்கணக்கான ஹார்லிக்ஸ் பாட்டில்களில் அடைக்கப்பட்ட லேகியம், டோக்கன்களுக்குப் பதிலாகத் தரப்பட்டன. அதை வாங்கியவர்களின் கண்கள் பிரகாசித்தன. ஏதோ அற்புதமான மருந்துபோல மகிழ்வுடன் வீட்டை நோக்கி நடந்தனர். மறுநாள் காலையில் மந்தையில் கொட்டகையைக் காணவில்லை. மலையாளிகளும் மறைந்து விட்டனர். அந்த லேகியத்தை நம்பிக்கையுடன் சாப்பிட்டவர்களுக்கு ஏதாவது பலன் கிடைத்திருக்கலாம். எங்கள் ஊரில் பஞ்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளி ஒருவர், "என்ன சொல்லுங்க தம்பி, இம்புட்டு சாமான்கள் லேகியத்தில் சேர்த்திருக்கான். அப்புறம் கருங்குரங்கு... இதுல ஏதாவது ஒன்று உடம்புக்கு நல்லது செய்யாதா" என்று என்னிடம் சொன்னார். நான் தலையை ஆட்டினேன். இப்பவும் தாது புஷ்டிக்கு லேகியம் சாப்பிடுகிறவர்கள் பலர் இருக்கின்றனர். தமிழ்ப் பத்திரிகைகளில் கடந்த நூறாண்டுகளுக்கும் கூடுதலாக வெளிவரும் ஒரே விளம்பரம் தாது புஷ்டி விளம்பரம்தான்.

கிராமப்புறங்களில் பெரும்பாலானவர்கள் மூன்று அல்லது நான்கு ஆடைகள்தான் வைத்திருப்பார்கள். ஆற்றில் குளித்துவிட்டுத் துணியை நீரில் அலசிப் பிழிந்து அதை அப்படியே போட்டுக் கொள்கிறவர்கள் இருந்தனர். துணிமணி எடுக்கப் பலரும் மதுரை எழுகடல் அக்ரஹாரம் தெருவிலுள்ள சிறிய கடைகளுக்குப் போவார்கள். அங்குதான் பேரம் பேசி சல்லிசாக வாங்க முடியும். இந்நிலையில் தலையில் சுமையாக முப்பது சேலைகள், ஜாக்கெட் துணிகளை எடுத்துக் கொண்டு, வியாபாரம் செய்ய வரும் வியாபாரிகள் இருந்தனர். வீட்டுத் திண்ணைகளில் துணி மூட்டையை இறக்கி வைத்து, ஒவ்வொரு சேலையாகப் பொறுமையாக எடுத்துக் காட்டுவார். வியாபாரி சொல்லும் விலைக்கும், பேரத்தில் பெண்கள் கேட்கும் விலைக்கும் சம்பந்தமிருக்காது. எனினும் வியாபாரி துணியின் விலையைக் குறைக்க, வாங்க விரும்புகிறவர் விலையைக் கூட்ட, இறுதியில் எப்படியோ பேரம் படியும்.

கிராமத்துத் தெரு முக்குகள் அல்லது மந்தையில் இரவானதும் சீமத்தண்ணீர் எனப்படும் கிரசினில் எரியும் காடா விளக்கு புகையுடன் பற்றி எரியும். விளக்கிற்குச் சற்றுப் பின்னர் கனத்த ஆள் ஒருவர், ‘ஏலம் ஐயா, ஏலம்.... கேட்பாரில்லை’ என்று உரத்த குரலில் கூவுவார். கூட்டம் கூடிவிடும். போர்வை, சமுக்காளம், துண்டு, வேட்டி எனப் பலதரப்பட்ட துணிகளை உதறி, விளக்கு வெளிச்சத்தில் காட்டுவார். அவர் ‘முப்பது ரூபாய்’ பெறுமானமுள்ள சமுக்காளத்தை கம்பெனி ஏலம் ‘ஐந்து ரூபாய்’ என்பார். கூடியிருப்போர் ஒவ்வொருவராக தங்களுக்குத் தோன்றும் விலையைச் சொல்வார்கள். ஏலம் முடியப் போகும்போது, ‘ஒரு தரம், ரெண்டு தரம், மூன்று தரம்’ என்று சொல்வார். ஏலம் விடுகிறவர்க்குக் கட்டுபடியாகிற விலையெனில், துணி ஏலம் கேட்டவருக்குத் தரப்படும். இல்லையெனில் ரூபாய்க்கு ஒரு கமிஷன் என்ற கணக்கில் ஏலம் கேட்டவருக்குச் சில்லறைக் காசுகள் கிடைக்கும். ஜவுளிக்கடைகளில் விற்பனையாகாத துணிகள், சாயம் போகும் உருப்படிகள், தவறாகப் பிரிண்ட் செய்யப்பட்ட ஆடைகள், ஓட்டை விழுந்த துணிகள் போன்றவற்றை மலிவாக வாங்கி வரும் ஏலம் விடுகிறவர், இருட்டிய பிறகு காடா விளக்கு ஒளியில்தான் ஏலம் விடுவார். அப்பொழுதுதான் துணியிலுள்ள குறைகள் யாருடைய கண்களுக்கும் தெரியாது. செகண்ட் குவாலிட்டி எனப்படும் இரண்டாந்தரமான துணிகள் விற்கப்படுகின்றன என்பது அன்றைய காலக்கட்டத்தில் கிராமத்தினரின் புத்திக்கு அப்பாற்பட்டது.

அறுபதுகளின் இறுதியில் ஏலக் கம்பெனி எங்கள் ஊருக்கு வந்தது. தர்பார் ஏலக் கம்பெனி என்ற பெயரில் ஊர் முழுக்க விளம்பரம் செய்யப்பட்டது. நெடுஞ்சாலையில் ஒரு பெரிய கடையை வாடகைக்குப் பிடித்து ஒரு மாதம் முழுக்கத் தினசரி இரவு வேளையில் கண்ணாடியிலிருந்து பீரோ வரை பல்வேறுபட்ட பொருட்களை ஏலம் விட்டனர். கடைக்கு முன்னர் அமைக்கப்பட்ட 60’ x 60’ அளவிலான மரமேடையில் நின்று ஏலம் விடுகின்றவர், சாமான் பெயரைக் கூவி ஏலம் விடுவார். ஏலம் இறுதியானால் தலைக்கு மேல் தொங்கும் பெரிய பித்தளை மணியின் நாக்கில் கட்டப்பட்டுள்ள கயிற்றை இழுத்து அடித்து ஒரு தரம் என்பார். மூன்றாவது மணி ஒலித்தவுடன் ஏலம் கேட்ட தொகை கம்பெனிக்குக் கட்டுபடியானால், அப்பொருள் ஏலம் கேட்டவருக்குத் தரப்படும். இல்லாவிடில் வெறும் கமிஷன் தொகை அன்பளிப்பாகக் கிடைக்கும். தினசரி 100 வாட்ஸ் பல்ப் ஒளியில் நடைபெற்ற ஏலத்தில் கலந்து கொண்டு பொருட்களை வாங்கிடப் பக்கத்து ஊரிலிருந்தும் ஆட்கள் வந்தனர். ஏலம் விடுகின்றவர், பொருளின் மதிப்பிற்குக் குறைத்துப் பொருளைத் தரப் போவதில்லை என்பதை நன்கு அறிந்தும், ‘ஏலமிடுதலில்’ நிகழ்கலையாகக் கருதி எல்லோரும் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.

கிராமத்தில் பொருட்களை விற்க வருகின்ற பல்வேறு பட்ட வியாபாரிகளில் வித்தியாசமானவர் மாடுகளுக்கான மருந்து விற்கிறவர். நல்ல உச்சி வெயிலில் ‘குதிரை மசால்... தண்ணீர் குடிக்காத மாட்டுக்குக் குதிரை மசால்’ என்ற குரல் சத்தமாகக் கேட்கும். கூன் விழுந்த வயதானவர் பெரிய கள்ளி மரப் பெட்டியைத் தூக்கி வைத்துக் கொண்டு தெருவில் வந்து கொண்டிருப்பார். பெரும்பாலும் காளை மாடுகள் ‘ஊறல் தண்ணீர்’ குடிக்காமல் நோய் வயப்பட்டிருக்கும். இத்தகைய காளைகளின் நாக்கைப் பிடித்து இழுத்து வைக்கும் பெரியவர், தனது பெட்டியிலிருந்து இலுமிச்சை அளவிலான உருண்டைகள் இரண்டை எடுத்து நாக்கில் கரகரவெனத் தேய்ப்பார். பின்னர் மருந்தை விழுங்குமாறு மாட்டின் தலையை உயர்த்திப் பிடிப்பார். இரண்டு மணி நேரம் கட்டிப் போட்டுவிட்டு, அப்புறம் அவிழ்த்து விட்டால், குழுதாடித் தண்ணிரை முழுக்க மாடு உறிஞ்சிக் குடித்துவிடும். ‘குதிரை மசால்’ எனப்படும் மருந்தில் மிளகாய்ப் பொடி கலந்திருக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

கிராமத்துத் தெருக்களில் பெரிதும் விற்பனைக்கு வரும் பொருட்கள் உணவு, உடை, மருந்து சம்பந்தப்பட்ட பொருட்களாகத்தானிருக்கும். அலங்காரமான ஆடம்பரப் பொருட்களை வாங்குவோர் அங்கு யாருமில்லை. வருவாய் குறைந்த நிலையில், இருக்கிறதில் அட்ஜெஸ்ட் செய்து கொண்டு வாழப் பழகிக் கொண்ட மனநிலைதான் பலருக்கும் வாய்த்திருந்தது. தேவையோ தேவை இல்லையோ மாபெரும் ஷாப்பிங் மாலில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் விதவிதமான பொருட்களைப் பார்க்கும்போது, இவையெல்லாம் எதற்கு என்று தோன்றும். என்றாலும் அவை யாருக்கோ தேவைப்படுகின்றன. வயலில் விளைந்த பொருட்களை விற்பது தொடங்கி, எல்லோரும் விற்பனையாளராக அறுபதுகளில் இருந்தனர். வாழ்வதற்கு அடிப்படையான பொருட்கள் மட்டும் விற்பதும், வாங்குவதும் நிகழ்ந்த அன்றைய காலக்கட்டத்தில் ‘நுகர்பொருள்’ என்பது பெரும்பாலானோர் அறியாத சொல்.

source: http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=1376