Home கட்டுரைகள் Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) எத்தனை நாள் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!
எத்தனை நாள் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! PDF Print E-mail
Thursday, 27 November 2014 06:30
Share

எத்தனை நாள் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!

  Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) 

இந்திய நாட்டில் நலிவடைந்த, பிற்படுத்தப்பட்ட  சமூதாயத்தின் மக்களை ஏமாற்றி தங்களைக் கடவுளின் மறு அவதாரம் என்று கூறிக்கொண்டு, மழைக் காலத்தில் முளைக்கும் காளான்கள் போல போலி பகவான்கள் உருவாகுவதிற்கு அரசுகளின் விஞ்ஞான முறையான அணுகுமுறை குறைவாக இருப்பதே காரணம் என்று சமீப கால சம்பவங்கள் உணர்த்துகின்றன.

ஒரு நாட்டின் உயர் பதவி வகித்த ஜனாதியான அப்துல் கலாம், உச்சநீதி மன்ற நீதிபதி பகவதி போன்றோர் புட்டபர்த்தி சாமியார் ஆசிரமம் சென்று சாமியார் அரியணையில் அமர்ந்திருக்கும் போது முக்கிய பிரமுகர்கள் அவர்முன் தரையில் பய பக்தியுடன் அமர்ந்து இருப்பது போன்ற படங்களும், மத்திய- மாநில மந்திரிகள் தேர்தல் நேரத்தில் அவர்களிடம் சென்று ஆசி பெறுவதும் பத்திக்கைகள் படம்போட்டுக் காட்டுகின்றன.

அந்த பகவான்கள் ஆசிரமங்களில் சில சட்டத்திற்கு புறம்பான சம்பவங்கள் நடக்கும்போது அப்படிப்பட்ட முக்கியப் பிரமுகர்கள் மக்களிடையே தவறான பேச்சுக்கு ஆளாக வேண்டியுள்ளது.

சாதாரண பாமரனும் முக்கிய பிரமுகர்களே அப்படிப் பட்ட பகவான்களை  தரிசனம் செய்யும் போது  அவர்களிடம் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக எண்ணி அவனும் அந்த சாமியார்களுக்கு அடிமையாகி விடுகிறான்.

அந்த பகவான்களும் சாமானியர்களிடம் இருப்பதினை எல்லாம் கறந்து படோபடமாக வாழ்வதோடு சில சட்டத்திற்கு புறம்பான காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள் என்பதினை சில சம்பவங்கள் மூலம் உங்கள் முன் வைக்கலாம் என எண்ணுகிறேன்.

1) முன்னாள் பிரதம மந்திரிகள் நரசிம்ம ராவ் மற்றும் அவரது மந்திரி சகாபாக்கள் மற்றும் முன்னால் பிரதமர் சந்திர சேகர் ஆகியோர்களுக்கு மிக நெருக்கமாக சந்திரசாமி  என்ற சாமியார் இருந்ததினை பலர் அறிந்து இருப்பீர்கள். 1994 ஆம் ஆண்டு சந்திராசாமி பிறந்த தின விழாவிற்கு நரசிம்ம ராவ் மற்றும் பெரும்பாலான மத்திய மந்திரிகள் அவருடைய ஆசிரமத்தில் ஆஜரானார்கள். அதன் பின்பு அவர் அரசு பவர் புரோக்கராகி ஆயித பேர ஊழலில் ‘அதான் கஸ்ரோகிக்கு’ உதவி செய்ததாகவும், லண்டன் தொழில் அதிபர் ‘பதக்’ இந்தியாவில் தொழில் சம்பந்தமாக சந்திராசாமியினை அணுகி ரூ 6/ கோடி கையூட்டு கொடுத்ததாகவும் அப்போது புகார் கொடுத்து, சந்திராசாமி ஜெயிலுக்குச் சென்றதும், அந்த வழக்கு   உச்ச்சமன்றத்திற்கும் சென்றது உங்கள் பலருக்குத் தெரிந்து இருக்கும்.

2) மகராஷ்டிரா மாநிலம் நாக்பூர் என்ற இடத்தில் ஆசிரம் நடத்தி கற்பழிப்பு, வன்கொடுமை மூலம் 170 பேர்கள் காணாமல் போனது குறித்தக் குற்றச் சாட்டுக்கு ஆளான ‘கிரிப்பால் மகாராஜ்’ என்ற பகவான் அந்த வழக்குகள் சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை என்றுக் கேள்விப்பட்டதும் தலைமறைவானவர் இன்றுவரை என்னானார் என்று தெரியவில்லை.

3) இலங்கை அகதி 'பிரேம்குமார்' என்ற பிரேமானந்தா திருச்சி-புதுக்கோட்டை எல்லை அருகில் உள்ள விராலிமலை ஓரம் ஆசிரம் அமைத்து, ஆதரவு தேடி வந்த சிறுமிகளையும், பெண்களையும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதகவும், அதனைப் பார்த்த ஒரு இளைஞரை கொலை செய்ததாகவும் குற்றம் சுமத்தப் பட்டு இரட்டை ஆயுள் தண்டனை அனுபவிக்கும்போது ஜெயிலில் இறந்தது அனைவரும் அறிந்ததே! அதோடு  மட்டுமல்லாது தமிழக  பதவியில் இருந்த ஆட்சியாளர்களும் அவரிடம் ஆசி வாங்கியது பத்திரிக்கைகள் படம் போட்டுக் காட்டின.

4) 1980-1984 ஆண்டுகளில் பஞ்சாபிற்கு தனி மாநிலம் வேண்டும் என்று கோஷமிட்டு, சீக்கியர் பொற்கோவில் வளாகத்தினையும் கோட்டையாக அமைத்து, காலிஸ்தான் என்ற படையினை அமைத்துப் இந்திய ராணுவத்தினையே எதிர்த்துப் போரிட்டு மடிந்த, 'பிந்தரன்வாலா' போன்றோரையும் சில சீக்கிய மக்கள் தியாகி என்று போற்றுகின்றனர். சீக்கிய மத குரு 'லோங்கோவால்' கூட ஆரம்பத்தில் 'பிந்தரன்வாலாவினை' ஒரு 'ஸ்கௌன்றல்' (போக்கிரி) என்றவர்  பிற்காலத்தில் அவரே 'பிந்தரன்வாலே ஒரு 'ஞானி' என்று அழைத்தார் என்றால் பாருங்களேன்.

5) பஞ்சாப்-ஹரியானா மாநிலங்களில் 'தேரா சச்சா' என்ற அமைப்பினை ஏற்படுத்தி ராமும், ரஹீமும் ஒன்றுதான் என்ற கோசத்தினை எழுப்பி மக்களைக் கவர்ந்து அவர்கள் தங்கள் கொள்கைக்காக வாளும், துப்பாக்கியும் ஏந்தி மற்ற சீக்கியர்களுடன் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சண்டையிட்டது நீங்கள் தொலைக்கட்சியில் பார்த்தும், பத்திரிக்கையில் படித்தும் இருப்பீர்கள். அதன் தலைவர் 'குர்மீத்' பத்திர்க்கையாளர் ராமச்சந்ராவினை கொலை செய்தது சம்பந்தமாக, 'தெகல்கா மற்றும் 'இந்தியா டி.வி.' சேகரித்த ரகசிய தகவல்கள் மூலம் வெளியிட்டது.

6) 6) 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பரபரப்பாக பேசப் பட்டவர் 'ராம்பால்' என்ற பகவான். இவர் இன்ஜினியரிங் டிப்ளமா பட்டதாரி. ஹரியானா மாநிலம் நீர்பாசான துறையில் பணியாற்றி முறைகேட்டால் பணி நீக்கம் செய்யப் பட்டவர். ஹிசார் என்ற இடத்தில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு அனுமதியில்லாத ஆசிரமம், 30 உயரம் கொண்ட கோட்டை போன்ற சுற்றுசுவர் எழுப்பி 'ராம்-ரஹீம்' என்ற கோசத்தின் மூலம் பாமரர்களை ஏமாற்றி ஹரியானா அரசுக்கே ஒரு சவாலாக இருந்தது உங்களுக்குத் தெரியும். இவ்வளவிற்கும் அவர் மீது ஒரு கொலைவழக்கு நீதி மன்றத்தில் 2006 ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருப்பதும், உயர் நீதி மன்றம் அவரை ஆஜராகும்படி 48 தடவை உத்திரவிட்டும் அவர் ஆஜராகாததால் அவரை ஆஜர் படுத்தும் படி காவலர்களுக்கு கட்டளை இட்டும், அவரது தனிப்பட்ட பாதுகாவலர்கள் அதனை துப்பாக்கி, பெட்ரோல் எறிகுண்டுகள் மூலம் எதிர்கொண்டு, பின்பு ஆறுபேர்கள் இறப்பிற்குப் பின்பு அவரை கைது செய்ய முடிந்தது என்றால் என்ன தைரியம் என்று நீங்கள் கேட்கலாம். சமீபத்தில் அந்த மாநிலத்தில் நடந்த தேர்தலில் அரசியல் பிரபலங்கள் தங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற அந்த பகவானிடம் ஆசி பெற்றதனால் அவர்கள் காப்பற்றுவார்கள் என்ற எண்ணத்தில்  அந்த பகவானின் கமாண்டோக்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று சொல்லப் படுகிறது.

7) புது டெல்லி அருகில் ரிசர்வ் பாரஸ்ட் இடத்தில் ஆக்கிரமித்து ஆசிரம் அமைத்து பக்தர்களைக் கவர்ந்த 72 வயது 'ஆசாராம் பாப்பு' என்ற பகவான் தற்போது கற்பழிப்புக் குற்றச் சாட்டிற்கு ஆளாகி சிறையில் இருக்கிறார். அப்படி ஆக்கிரமித்த இடத்தினை இடிக்கும்படி, 'தேசிய பசுமை ஆணையம்' கட்டளையிட்டும் இன்றும் கூட இடிக்கவில்லை.

இவையெல்லாம்  எதைக் காட்டுகின்றது என்றால் நலிவடைந்த பிற்பட்ட மக்கள் ஏழ்மையில் வாடும்போது ஏதாவது ஒரு வழிமூலம் ஏழ்மைக்கு விடிவெள்ளி கிடைக்காதா என்ற ஏக்கம் ஒரு புறம் இருந்தாலும், அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய பிரமுகர்கள் அப்படிப் பட்ட பகவாங்களிடம் ஆசி பெற வரும்போது நாமும் அவர்களை ஏன் பின்பற்றக் கூடாது என்ற எண்ணம் தான் அவர்களிடம் மேலோங்கி உள்ளது என்றால் மிகையாகாது.

21.11.2014 தேதியிட்ட ஹிந்து நாளிதழில் ஒரு செய்தியினை வெளியிட்டுள்ளார்கள். அதில் 'சில மாதங்களுக்குமுன்பு  பிரதமர் நரேந்தர மோடி அவர்கள் மும்பையில் நடந்த விஞ்ஞானிகள் கருத்தரங்கில்  பேசும்போது, 'இந்திய நாட்டில் உள்ள விநாயகர் என்ற கணேச பெருமான் தலை தும்பிக்கையுடன் கொண்ட யானை முகம் மனித உருவத்தில் உள்ளதால், அந்தக் காலத்தே மனித உடலில் யானை முகத்தினைப் பொருத்தும் பிளாஸ்டிக் சர்ஜெரி விஞ்ஞானிகள் இருந்ததினால் தான் அதுபோன்ற சாதனை நிகழ்த்த முடிந்திருக்கின்றது' என்று சொன்னதினை சுட்டிக் காட்டி மத நம்பிக்கை வேறு, விஞ்ஞானம் வேறு, அப்படி இருக்கும்போது மத நம்பிக்கையினை விஞ்ஞானிகள் கருத்தரங்கில் பேசியது தவறான முன் உதாரணம் ஆகிவிடும் என்று ஹிந்துப் பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளது எதனை காட்டுகின்றது என்றால் பதவியில் இருப்பவர்களும், படித்தவர்களும் பாமர மக்களுக்குப் அறிவுப் பூர்வமாக பாது காப்பு கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஏழை எளிய பிற்படுத்தப் பட்ட மக்கள் மோசடி பகவான்களிடம் தஞ்சம் அடைவதினைத் தடுக்க முடியாதல்லவா?

மோசடி பகவான்கள் ஒரு மதத்திற்கு மட்டும் சொந்தமில்லை. எல்லா மதத்திலும், ஏன் சில சீர் திர்த்த மார்க்கங்களிலும்  இருக்கின்றார்கள். அவர்கள் தான் பில்லி, சூனியம், காற்று, கருப்பு, அதனை விரட்ட தாயத்து, பல நிறங்களில்  கயிறுகள்,விற்றும், பேய் விரட்டும் தந்திரங்கள் கையாண்டும், களிப்பு எடுக்க வேண்டும், ஆவி விரட்ட வேண்டியும் என்ற புருடா விட்டும், நரபலி கொடுக்கச் சொல்லியும் இளகிய மனங்களை மேலும்  பலவீனப் படுத்தி நாலு காசு சம்பாதித்து தங்களை சீமான்களாக மேம்படுத்தி, நம்பிய மக்களை மூடர்களாக்கும்  பகவான்கள் நம்மிடையே பலர் உள்ளனர். அவர்கள் முகத்திரையினைக் கிழிப்பது ஒவ்வொரு படித்த, பகுத்தறிவாளர் கடமையல்லவா?
 
AP,Mohamed Ali