Home கட்டுரைகள் குண நலம் இரட்டை வேடம் வேண்டாம்!
இரட்டை வேடம் வேண்டாம்! PDF Print E-mail
Tuesday, 25 November 2014 06:52
Share

இரட்டை வேடம் வேண்டாம்!

அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்; 'உலகில் இரட்டை முகம் உடையவராக எவர் இருக்கின்றாரோ, அவருக்கு கியாமத் நாளில் தீ நாக்கு காத்திருக்கிறது.' (ஆதாரம்: தராமீ)

நண்பர்களாக இருந்தாலும் சரி, பகைவர்களாக இருந்தாலும் சரி எவரின் மனதையும் புண்படுத்திவிடாதபடி நெளிவு சுளிவுடன் நடந்து கொள்வதற்கு நடைமுறையில் 'பாலிஸி' இங்கிதம் என்கிறார்கள்.

தம்மைப் பிடிக்காதவர் அல்லது தமக்குப் பிடிக்காதவர் மீது கடுஞ்சினம் காட்டி நடக்கும் சிடுமூஞ்சிகள், வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. ஒருவர் வாழும் பொழுதும், மறைந்த பின்னும், அவர் மீது அனைத்து சாராரும் அனுதாபம் கொண்டிருந்தார்கள் என்றால், அவர்தான் இடம், பொருள், ஏவலறிந்து இங்கிதம் நடந்தவராவார்.

ஆண்டாண்டு காலமாக அஞ்ஞானத்தின் உச்சத்தில் ஆர்ப்பரித்திருந்த அரபு மண்ணை, அருமை தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் காலெடுத்து வைத்த ஒரு சில ஆண்டுகளிலேயே, கல்வி, கண்ணியம், கட்டுப்பாடு நிறைந்த புண்ணிய பூமியாக மாற்றிக் காட்டினார்கள் என்றால், அதன் காரணம் அந்நாட்டு குடிமக்கள் ஒவ்வொருவரின் மன ஓட்டத்தையும் அளந்தறிந்து, அவரவர் மன நிலைக்குத் தக்கவாறு உண்மையின் நிலையின் பக்கம் அழைத்துச் சென்றார்கள் என்பதாகத்தான் இருக்க முடியும்.

எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மக்களிடம் இவ்வாறெல்லாம் பண்புடனும், பாசத்துடனும் பழகிய காரணம் அம்மக்களிடம் குவிந்து கிடந்த செல்வத்துக்கு ஆசைப்பட்டோ அல்லது பதவி பவிசின் மீது கண்வைத்தோ அல்ல . மாறாக இஸ்லாமிய நண்பராக இருந்தால், அவரது இஸ்லாத்தை வளர்த்து பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், தீயவராக இருந்தால், அவரை எப்படியாயினும் கொள்ளை, சூது, காமம் போன்ற கொடிய நோயிகளிளிருந்து காப்பற்றி, அன்பு, அறம், பாச-நேசம் சூழ்ந்து அறநெறிப் பாதையில் அழைத்துச் சென்று விட வேண்டும் என்பதர்காகவுதான் இப்படி நெளிவு- சுளிவுடன் நடந்தார்கள்.

ஏமனில் உள்ள நஜ்ரான் மாவட்டப் பகுதியிலிருந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை  பேட்டி கண்டு, இஸ்லாமிய மதபோதனையை அறிந்து கொள்ளும் முகமாக கிருத்தவ பாதிரிகள் சிலர் நபி சமூகம் வந்திருந்தனர். பேட்டியினிடையே  பாதிரிகள் அவர்களது மத ஆச்சாரப்படி இறைவனை வணங்கும் நேரம் வரவே, தாம் தொழ வேண்டும், அதற்கு வசதி செய்து தர வேண்டும்  என்று வேண்டுகிறார்கள் .

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உடனே தமது மஸ்ஜிதுன் நபவியில் ஒரு இடத்தை கொடுத்து, அவர்களை அவர்களது முறைப்படி வணங்கியொழுக அனுமதிக்கின்றார்கள். இச்சம்பவம் நமக்கு எதை உணர்த்துகிறது...?

திருமறை வேதத்தையும், தமது நபித்துவத்தையும், நிலை நிறுத்த வந்த நபியவர்கள், மாற்று மதத்தாரை அவர்களது மதக் கொள்கைப்படி நடக்க, தமது பள்ளியில்  ஒரு பகுதியையே ஒதுக்கிதருகிறார்கள் என்றால், இது எவ்வளவு சிறப்பிற்குரிய பண்பாடு என்பதை யோசிக்க வேண்டும். மாற்றுமத நண்பர்களுடன் இங்கிதமாக நடந்து, அவர்களது உள்ளத்தில் உயர்ந்து நின்ற அந்த பூமான்  நபி வாழ்க்கை, இன்று மதவெறி கொண்டு மாற்று மத அப்பாவி மக்களின் இரத்தத்தை குடிக்க அலையும் காடேரிகளுக்கு சிறந்த பாடமாகும்.

அதே போல், ஒரு பிரச்சனையில் இக்கட்டான சூழ்நிலை நிலவியபோது அப்பிரச்சனையில், சமந்தப்பட்டுள்ள இரு அணியினரும் திருப்திப்படும் வகையில் அவர்களது உணர்வுகளைப் புரிந்து நடந்து கொண்டார்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

போரில் கிடைக்கும் பொருட்களை, புதிதாக இஸ்லாத்தில் சேர்ந்தோருக்கு சற்று அதிகமாகப் பிரித்துக்கொடுக்கும் பழக்கம் நபிகளாரிடம் இருந்தது. பெருமானாரின் இன்னடைமுறையில், ஒரு முறை சர்ச்சை உருவாகியது. புதிதாக இஸ்லாத்தைத்  தழுவியோர், தமது உற்றார் சுற்றாரைத் துறந்து மனக்கவலையில் இருப்பர்  என்பதால், அவர்களது உள்ளங்களை இஸ்லாமிய கொள்கைகளில் இறுக்கம் பெறச் செய்ய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். கையாண்ட இந்த நடைமுறையை சரிவரப் புரிந்து கொள்ளாததால்தான் இச்சர்ச்சை.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

source: http://islam-bdmhaja.blogspot.in/2014/11/blog-post_16.html