Home கட்டுரைகள் எச்சரிக்கை! போதை விபத்துகளில் முதலிடம்!
போதை விபத்துகளில் முதலிடம்! PDF Print E-mail
Sunday, 26 October 2014 05:44
Share

போதை விபத்துகளில் முதலிடம்!

  டி.எல். சஞ்சீவிகுமார்  

[ ஒருவரின் மூளைக்குள் மது சென்றவுடன் அது, ‘டெட்ராஹைட்ரோஐசோகுயினோலின்’ (Tetrahydroisoquinoline) என்கிற வேதிப்பொருளாக மாறுகிறது. இது மொத்த மூளையையும் கட்டுப்பாடு இழக்கச் செய்கிறது. ஒருவர் அதிகமாக மது அருந்துவதால் அல்லது அவசரமாகக் குறைந்த நிமிடங்களில் ஒரே மூச்சாக அதிக அளவு மது அருந்துவதால் மிதமிஞ்சிய போதை ஏற்படுகிறது.

அப்போது சிறுமூளை பெருமூளையின் கட்டளைக்குக் கீழ்படிவதில்லை. அல்லது பெருமூளை சிறுமூளையைக் கட்டுப்படுத்தும் தன்மையை இழக்கிறது. ‘என்னை யார் கேட்பது? எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்’, ‘என்னதான் ஆகிவிடும் பார்ப்போமே’ என்கிற பயங்கர, அதீத எதிர்மறை உணர்ச்சி நிலை மேலோங்கும். பக்கத்தில் இருப்பவர் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். சுயமாகவும் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது. வெறிபிடித்த மனநிலை அது.

கொண்டாட்டமும் வெறுப்பின் உச்சமும் சோகங்களும் கைகோத்த வன்முறை மனநிலை அது. எங்கேயோ வாங்கிய அடிக்கு யாரையோ பழிவாங்க நினைக்கத் துடிக்கும் மனநிலை அது. இயல்புக்கு மாறாக, பயங்கரமாக ஒன்றை நிகழ்த்தாமல் ஓயாது அது.

நடுவே மயக்கம் அடைந்து ஓய்ந்தால்தான் உண்டு. அப்போது நடப்பவைதான் இதுபோன்ற விபத்துரீதியிலான கொலைகள், கூட்டுப் பாலியல் வன்முறைகள், இன்னபிற. அதாவது, திட்டமிட்டு நடத்தியிருக்க மாட்டார்கள். ஆனால், மதுவின் ‘மிதமிஞ்சிய ஆதிக்கம்’ அவர்களை அப்படிச் செய்ய வைத்திருக்கும்.]

சராசரியாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சாலையோரம் படுத்திருப்பவர்களை கார் ஏற்றிக் கொல்கிறார்கள் போதை ஓட்டுநர்கள். சமீபத்தில் சென்னையில் எழும்பூர் சம்பவம், பின்பு சூளை, இப்போது வேளச்சேரி.

காவல்துறை நண்பரிடம் பேசியபோது, “மூன்று மாத இடைவெளியெல்லாம் இல்லை. இங்கே மாதத்துக்கு மூன்று விபத்துகள் இப்படி நடக்கின்றன. பெரும்பாலும் பெரிய இடத்து ஆட்களாக இருப்பதால், வழக்கை வேறு மாதிரியாக முடிக்க வேண்டியிருக்கிறது” என்றார் வேதனையும் வெறுப்புமாக.

“இரவில் எத்தனையோ சரக்கு வாகனங்கள், போக்குவரத்து வாகனங்கள் செல்கின்றன. அவை பெரும்பாலும் சாலையோரம் படுத்திருப்பவர்கள் மீது தறிகெட்டு ஏறுவது இல்லை. ஆனால், நடிகர் சல்மான் கானில் ஆரம்பித்து, இப்போது வேளச்சேரி இளைஞர்கள் வரை ஏன் போதையில் கார் ஏற்றி ஆட்களைக் கொல்கிறார்கள்?” என்று டாக்டரிடம் கேட்டேன்.

வெறிபிடிக்க வைக்கும் நடத்தைக் கோளாறு!

“ஆட்களைக் கொல்கிறார்கள் என்பதுடன் மட்டும் அசம்பாவிதங்களைச் சுருக்கிக்கொள்ள வேண்டாம். என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதே உண்மை. நீங்கள் கேட்கும், கார் ஏற்றிக் கொல்லும் சம்பவங்களுக்கு வருவோம். அவற்றை வெறும் விபத்தாக மட்டுமே பார்ப்பது அபத்தம். அடிப்படையில் ஏதோ ஒரு நடத்தைக் கோளாறு அவர்களுக்கு இருந்திருக்கும். மது அருந்தியவுடன் முழு வேகத்தில் அது வெளியே வரத் தொடங்கும். தொடர்ந்து மது அருந்துவதால் இந்த மனக்கோளாறுகள் ஏற்பட நிறையவே வாய்ப்புண்டு.

ஒரு விஷயம். இங்கு 100% சரியான நபர் என்று யாரும் இல்லவே இல்லை. நீங்கள், நான், இதைப் படிப்பவர் என எல்லோருக்கும் அடிப்படையில், மனதின் ஆழத்தில் சிறியதாகவும் பெரியதாகவும் சில முரண்பாடுகள் இருக்கும். இது இயல்பு. இதைத்தான் நாம் முன்கோபி, உணர்வுபூர்வமானவர், குழந்தை மாதிரி, அப்பாவி, முரடன், ஜொள்ளு பார்ட்டி என்று பலவிதமாக அழைக்கிறோம். அவரவரின் தன்மையைப் பொறுத்து இந்த உணர்ச்சிகளின் அளவு மாறலாம். இதுபோன்ற நடத்தைக் கோளாறுகளும், ஏன் மோசமான பாதிப்பான ‘இருதுருவ மனநிலைக் கோளாறு’ (Bipolar mental disorder) போன்றவையும்கூட ஒரு மனிதனின் ஆழ்மனதில் உறங்கிக்கிடக்கும். இப்படி ஒருவரின் ஆழ்மனதில் உறங்கிக்கிடக்கும் உளவியல் கோளாறுகளை உலுக்கி எழுப்பிவிடும் தன்மை மதுவுக்கு உண்டு.

ஒருவரின் மூளைக்குள் மது சென்றவுடன் அது, ‘டெட்ராஹைட்ரோஐசோகுயினோலின்’ (Tetrahydroisoquinoline) என்கிற வேதிப்பொருளாக மாறுகிறது. இது மொத்த மூளையையும் கட்டுப்பாடு இழக்கச் செய்கிறது. ஒருவர் அதிகமாக மது அருந்துவதால் அல்லது அவசரமாகக் குறைந்த நிமிடங்களில் ஒரே மூச்சாக அதிக அளவு மது அருந்துவதால் மிதமிஞ்சிய போதை ஏற்படுகிறது.

அப்போது சிறுமூளை பெருமூளையின் கட்டளைக்குக் கீழ்படிவதில்லை. அல்லது பெருமூளை சிறுமூளையைக் கட்டுப்படுத்தும் தன்மையை இழக்கிறது. ‘என்னை யார் கேட்பது? எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்’, ‘என்னதான் ஆகிவிடும் பார்ப்போமே’ என்கிற பயங்கர, அதீத எதிர்மறை உணர்ச்சி நிலை மேலோங்கும். பக்கத்தில் இருப்பவர் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். சுயமாகவும் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது. வெறிபிடித்த மனநிலை அது. கொண்டாட்டமும் வெறுப்பின் உச்சமும் சோகங்களும் கைகோத்த வன்முறை மனநிலை அது. எங்கேயோ வாங்கிய அடிக்கு யாரையோ பழிவாங்க நினைக்கத் துடிக்கும் மனநிலை அது. இயல்புக்கு மாறாக, பயங்கரமாக ஒன்றை நிகழ்த்தாமல் ஓயாது அது. நடுவே மயக்கம் அடைந்து ஓய்ந்தால்தான் உண்டு. அப்போது நடப்பவைதான் இதுபோன்ற விபத்துரீதியிலான கொலைகள், கூட்டுப் பாலியல் வன்முறைகள், இன்னபிற. அதாவது, திட்டமிட்டு நடத்தியிருக்க மாட்டார்கள். ஆனால், மதுவின் ‘மிதமிஞ்சிய ஆதிக்கம்’ அவர்களை அப்படிச் செய்ய வைத்திருக்கும்.

அதிகரிக்கும் இருதுருவ மனநிலைக் கோளாறு!

இங்கு மதுவின் போதை என்பதையும் மிதமிஞ்சிய ஆதிக்கம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஒருவர் தனக்கான மதுவின் அளவுடன் நிறுத்திக்கொண்டால் அது போதை. தன்னிச்சையாக வண்டியை ஸ்டார்ட் செய்வார். கியர் போடுவார். செக்கு மாடுபோல எங்கும் முட்டாமல் வண்டி வீடு சென்று சேரும். இடையே சில அசந்தர்ப்பங்களும் நேரிடலாம். ஆனால், நாம் பெரும்பான்மை விஷயங்களைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், மது அருந்த இதையே சாதகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்த போதைதான் இருதுருவ மனநிலைக் கோளாறு வரை கொண்டுசென்றுவிடுகிறது. இப்போதெல்லாம் 20 முதல் 35 வயதுக்குள்ளாகவே இருதுருவ மனநிலைக் கோளாறுகளுடன் சிகிச்சை பெறவரும் இளைஞர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் கவலையாக இருக்கிறது” என்றார் டாக்டர்.

போதை விபத்துகளில் தமிழகம் முதலிடம்!

டாக்டர் சொல்வது உண்மைதான். மதுபோதையில் நடக்கும் அசம்பாவித சம்பவங்கள் செய்தித்தாள்களில் இடம்பெறாத நாட்களே இல்லை. அதுவும் தமிழகத்தின் நிலைமை முன்னெப்போதையும்விடக் கவலையளிக்கிறது. சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் முதல் இடத்தில் இருக்கிறது தமிழகம். கடந்த 2013-ம் ஆண்டு நடந்த 14,504 விபத்துகளில் 15,563 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதில் 70% மதுபோதையால் நடந்த விபத்துகள். குறிப்பாக, 2002 முதல் 2012-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மிக மோசமாக மதுபோதை விபத்துகளால் பாதிக்கப்பட்டது என்கிறது மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்துக்கான பன்னாட்டு ஆய்விதழ். இதுமட்டுமல்ல, 2013-ம் ஆண்டு மட்டும் மதுவருந்திய போதை ஓட்டுநர்களால் தமிழகத்தில் 718 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்கிறது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுச்சாலைத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரம் ஒன்று.

- டி.எல். சஞ்சீவிகுமார்,