Home குடும்பம் ஆண்கள் ஆண்மைக்கு வேட்டு வைக்கும் சுற்றுச் சூழல்!
ஆண்மைக்கு வேட்டு வைக்கும் சுற்றுச் சூழல்! PDF Print E-mail
Monday, 29 September 2014 06:16
Share

ஆண்மைக்கு வேட்டு வைக்கும் சுற்றுச் சூழல்!

"சுற்றுச்சூழல் இப்படியே கெட்டுப்போய்க் கொண்டே இருந்தால், தந்தையாகும் தகுதியை இழக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்து விடும்'' என்று, ஓர் எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது, கோவை மருத்துவ மையத்தில் இயங்கி வரும் மலட்டுத்தன்மை நீக்குதல் மற்றும் கருத்தரிப்பு மையம். இது தொடர்பாக ஓர் ஆய்வறிக்கையையும் வெளியிட்டு அனைவரையும் அலற வைத்திருக்கிறது.

அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம் என்பது போல, சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும் ஆண்மைத்தன்மைக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி நம் மனதில் மணியடிக்க, கேள்வியை அந்த மையத்தைச் சேர்ந்த டாக்டர் கண்ணகியின் முன்வைத்தோம். அந்தப் பிரச்னைக்குள் கால் எடுத்து வைக்கும் முன்னால், மலட்டுத்தன்மை நீக்குதல் மற்றும் கருத்தரிப்பு மையத்தின் பணிகளை விளக்கி ஒரு முன்னுரையுடன் ஆரம்பித்தார் அவர்.

இங்கே எங்களிடம் சிகிச்சைக்கு வந்தவர்களில் பெரும்பாலும் ஆண்களே மலட்டுத்தன்மையுடன் காணப்பட்டார்கள். இத்தனைக்கும் அவர்கள் எல்லாம் நல்ல கட்டுமஸ்தான, ஆரோக்கியமான ஆண்கள். பொதுவாக ஆண் மலட்டுத்தன்மை என்பது பாரம்பரியமாக வருவது. ஆனால், இந்த ஆண்களைப் பொறுத்தவரை அவர்களின் அப்பா, தாத்தாக்கள் எல்லாம் ஏராளமான குழந்தைகளைப் பெற்றவர்கள். அப்படியிருக்க, இவர்களுக்கு மட்டும் ஏன் இந்தக் குறைபாடு? என்று திகைத்துப் போனோம்.

பொதுவாக ஓர் ஆணின் விந்தில், ஒரு மில்லி கிராமை எடுத்துச் சோதித்தால் அதில் குறைந்தது இருபது மில்லியன் உயிரணுக்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அதில் பாதி அணுக்கள் கூடுதல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது கட்டாயம். அப்போதுதான் அந்த உயிரணுக்கள் பெண்ணின் கருப்பைக்குள் உள்ள திரவத்தில் நீச்சலடித்து சினை முட்டையைச் சுற்றியுள்ள மெல்லிய கடினமான செல்களையும் ஊடுருவி உள்ளே சென்று தங்கி, கருத்தரித்து, குழந்தைப் பாக்கியத்தைக் கொடுக்க முடியும்.

ஆனால், எங்களிடம் வந்த ஆண்களிடம் ஒரு மில்லி கிராம் விந்தில் 24.33 முதல் 115.27 மில்லியன் உயிரணுக்கள் இருந்தன. இப்படி சராசரிக்கு அதிகமாக இருந்தும் அவற்றில் முப்பது சதவிகிதத்திற்கும் குறைவான அணுக்களே உயிரோடு இருந்தன. அவையும் ஆரோக்கியமாக இல்லை. அதேசமயம், பெண்களின் கருப்பைகள் மற்றும் கருமுட்டைகளைப் பரிசோதித்ததில் அவை எழுபது முதல் எண்பது சதவிகிதம் வரை குறைபாடில்லாமல் இருப்பது தெரிய வந்தது.

ஆண்களுக்கு மட்டும் ஏன் இந்தக் கோளாறு? என்று எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி ஆய்வு நடத்தத் திட்டமிட்டோம். பாரதியார் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மையம் இதற்கு ஒத்துழைப்புத் தந்தது. அந்த மையத்தின் பேராசிரியர் டாக்டர் உஷா ராணி, ஆய்வு மாணவி மங்கையர்க்கரசி ஆகியோர் உதவியுடன் இரண்டாண்டு காலம் இந்த ஆய்வில் ஈடுபட்டோம். எங்கள் ஆய்விற்காக கோவையை மையமாக வைத்து இருநூறு கி.மீ. சுற்றளவில் உள்ள ஆண்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். 25 வயது முதல் 40 வயதிலான குழந்தைப் பேறுள்ள, குழந்தைப் பேறில்லா எழுபத்தைந்து ஆண்களை ஆய்வுக்கு ஆட்படுத்தினோம்'' என்ற டாக்டர் கண்ணகி, சற்று நிறுத்திவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

`அந்த எழுபத்தைந்து பேரின் ரத்த மாதிரி, விந்து மாதிரிகளை எடுத்துச் சோதித்தோம். அப்போது அதில் காட்மியம், குரோமியம், நிக்கல் போன்ற உலோக வேதிப்பொருட்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. குழந்தைப் பேறுள்ள ஆண்களுக்கு ஒரு மில்லி கிராம் விந்தணுவில் 1.65 மைக்ரோ கிராம் அளவில் காட்மியம் இருந்தநிலையில், குழந்தைப் பேறில்லா ஆண்களுக்கு அதே அளவு விந்தில் 3.14 மைக்ரோ கிராம் அளவுக்கு காட்மியம் இருந்தது. அதாவது, சாதாரண அளவை விட இவர்களிடம் இரண்டரை மடங்கு அதிகமாக காட்மியம் இருந்தது.

சிகரெட் புகைப்பதால் காட்மியம் வர வாய்ப்புள்ளதால் அதுபற்றி ஆராய்ந்தோம். மலட்டுத்தன்மையுள்ள ஆண்கள் 62 பேரில் வெறும் 22 பேருக்குத்தான் புகைப்பழக்கம் இருப்பது தெரிய வந்தது. அப்படியானால், மற்றவர்களுக்கு காட்மியம் வந்தது எப்படி? இதுபற்றி நாங்கள் மேலும் ஆராய்ந்தபோது, அவர்களில் அநேகமாக எல்லோரும் பவுண்டரி ஒர்க்ஷாப் தொழில்களில் ஈடுபடுபவர்களாகவும், அல்லது பவுண்டரிக்கு அருகில் வசிப்பவர்களாகவும் இருப்பது தெரிய வந்தது. அதன் மூலம் இவர்களுக்குள் காட்மியம் குடிபுகுந்ததையும் கண்டுபிடிக்க முடிந்தது.

சிகரெட், பவுண்டரி மாசு போன்றவற்றால் மட்டுமல்ல, வாகனப்புகையால் கூட ஆண்களின் விந்தணு மற்றும் ரத்தத்தில் காட்மியம் கலக்க வாய்ப்புள்ளது. கோவை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பவுண்டரிகள் உள்ளன. இங்கே மாதந்தோறும் நாற்பதாயிரம் டன் வார்ப்பிரும்பு மற்றும் உலோகம் உருக்கும் வேலைகள் (காஸ்டிங்) நடக்கின்றன. இதனால் ஆண்களின் மலட்டுத்தன்மை, கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இரண்டு மடங்கு அதிகமாகி உள்ளது. இது கோவைப் பகுதிக்கான கணக்கு மட்டும்தான். விரைவில் மற்ற மாவட்டங்களிலும் ஆய்வு நடத்த இருக்கிறோம். இந்தக் குறையைப் போக்க ஒரே வழி சுற்றுச்சூழல் சீர்கேட்டைச் சரி செய்வதுதான்'' என்றார் டாக்டர் கண்ணகி.

தொடர்ந்து பேசிய அவர், ``பொதுவாக செயற்கை முறை கருத்தரிப்பு எனப்படும் டெஸ்ட் டியூப் பேபி முறையில் ஒரு மில்லி கிராம் விந்தில் அரை மில்லியன் உயிரணுக்கள் இருப்பவர்களுக்குக் கூட குழந்தைப் பாக்கியத்தை ஏற்படுத்தித் தர முடியும். ஆனால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் அதே குறைபாடு. அதாவது ஒரு மில்லி கிராம் விந்தில் அரை மில்லியன், கால் மில்லியன் விந்தணுக்களே இருக்க வாய்ப்புண்டு. ஆனால் இப்போதோ, சிலருக்கு உறுப்புகளுக்குள் உட்புகுந்து உயிரணுக்களைத் தேட வேண்டியிருக்கிறது. சுற்றுச்சூழல் சீர்கேட்டை இதே ரீதியில் வளரவிட்டால், இன்னும் நாற்பது ஐம்பது ஆண்டுகளில் ஆண் மலடுகள் தாறுமாறாக அதிகரித்து விடுவார்கள் என்பதுதான் எங்களது ஆய்வு முடிவு. இந்த மாதிரி ஆண்களுக்கு டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெறும் கொடுப்பினை கூட இல்லாமல் போய்விடும் என்பதுதான் கொடுமை.

இரண்டாண்டுகளுக்கு முன், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் நடந்த மருத்துவ வல்லுநர்கள் மாநாட்டில் ஒரு விஞ்ஞானி சமர்ப்பித்த ஆய்வறிக்கை பலரது கவனத்தையும் கவர்ந்தது. அந்த ஆய்வறிக்கையில், `ஒரு குளத்தில் விடப்பட்ட ஆண் முதலைகளின் உறுப்புகள் வழக்கத்திற்கு விரோதமாக சிறுத்து விட்டதை அந்த விஞ்ஞானி சுட்டிக்காட்டி, அதற்குக் காரணம், அந்தக் குளத்தில் வந்து சேர்ந்த சில தொழிற்சாலைக் கழிவு நச்சுப் பொருட்கள்தான் என சுட்டிக்காட்டியிருந்தார். முதலைகளுக்கே இந்தக் கதி என்றால் மனிதர்களைப் பற்றி கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்'' என்ற டாக்டர் கண்ணகியிடம், `சரி! சுற்றுச்சூழல் சீர்கேடு பெண்களின் கருமுட்டைகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லையா?' என்று வினா தொடுத்தோம்.

``அப்படி பாதிப்பு ஏற்படுவதாகத் தெரியவில்லை. நான் முன்பே சொன்னது போல, எங்களிடம் வந்த தம்பதிகளில் பெண்களைப் பொறுத்தவரை பத்துக்கு ஒன்பது பேர் மலட்டுத்தன்மையில்லாமல் நல்ல நிலையிலேயே இருந்தார்கள். எஞ்சிய பெண்ணும் சில சிறிய சிகிச்சைகள் செய்தால் குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலையில்தான் இருந்தார். வேறு சில பெண்கள் கர்ப்பப்பை கோளாறு போன்ற இயல்பான சிறு குறைபாடுகளுடன்தான் காணப்பட்டார்கள்.

பொதுவாக ஒரு பெண்ணிற்கு ஒரு மில்லியன் கருமுட்டைகளில் முந்நூறு முட்டைகள் பக்குவமாக இருந்தால்கூட அவளால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். அதுவும் மாதத்திற்கு ஒருமுறை அவளுக்கு கருமுட்டைகள் புதிதாக உருவாகி முழு வளர்ச்சியடைந்து, மறுபடி மாதவிடாயின் போது வெளியேற்றப்பட்டு, மீண்டும் புதிய கருமுட்டைகள் உற்பத்தியாகி விடும். எனவே, அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆண்களின் உயிரணுக்களில்தான் இப்போது பிரச்னை. அதனால்தான் அதை மட்டுமே நாங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம்'' என்றார் டாக்டர் கண்ணகி.

சுற்றுச்சூழல் சீர்கேடு ஆண்களின் ஆண்மைத் தன்மையையே அரோகராவாக்கி விடும் என்ற அதிர்ச்சியில் இருந்து விடுபடாமலேயே அவரிடம் இருந்து நாம் விடைபெற்றோம்.

-குமுதம்