Home குடும்பம் பெண்கள் பெண்ணுடல் மீதான வன்முறை
பெண்ணுடல் மீதான வன்முறை PDF Print E-mail
Friday, 26 September 2014 17:35
Share

பெண்ணுடல் மீதான வன்முறை

  எச்.பீர்முஹம்மது  

பெண்ணுடல் மீதான ஆணின் கண்காணிப்பும், அதனை தொடர்ந்த பலாத்காரமும், பாலியல் வதையும் இந்தியாவில் சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன.

ஆதி மனித சமூகம் தாய்வழி சமூக கட்டமைப்பிலிருந்து தந்தை வழி சமூக கட்டமைப்பிற்கு மாறிய நிலையில் இதற்கான தொடக்கம் குறிக்கப்பட்டு விடுகிறது. நிலப்பிரபுத்துவ சமூக கட்டமைப்பில் தான் பெண்கள் அதிகம் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டார்கள். அதற்கு முந்தைய அடிமை முறை சமூகத்தில் பெண்கள் அடிமைகளாக மாற்றப்பட்டு வன்புணர்விற்கு பிறகு கொல்லப்பட்டார்கள்.

வரலாற்றில் தந்தைவழி சமூக மாறுதலுக்கு பிந்தைய எல்லா சமூக கட்டமைப்பிலும் பெண்களின் உடல் என்பது ஆணின் அதிகாரத்திற்கு உட்பட்டது தான். இதன் தொடர்ச்சியில் இன்றைய நவீன காலகட்டத்தில் அதன் வடிவம் மாறியிருக்கிறது. அதே நேரத்தில் பெண்களின் சமூக இருப்பும் மாற்றமடைந்திருக்கிறது.

இன்று சராசரி இந்திய பெண் எதிர்கொள்ளும் முக்கிய சவால் என்பதே தன் மீதான ஆணின் அதிகாரத்தை வெல்வது தான். சராசரி ஆண் போல் பெண்களுக்கு 24X7 நடமாடும் சுதந்திரம் (Freedom of Mobility) என்பது ஆபத்தானதாகவும், நிச்சயமற்றதாகவும் இருக்கிறது.

சூரிய மறைவிற்கு பின் நடமாடுவது என்பதே இந்தியாவின் பெரு நகரங்கள் தொடங்கி சிறு கிராமங்கள் வரை பெண்களுக்கு மிக பாதுகாப்பற்றதாக இருக்கிறது. பல இரவு நேர பாலியல் வன்முறை சம்பவங்கள் மிக இயல்பான ஒன்றாக மாறி விட்டன.

இந்தியாவில் பாலியல் வன்முறை என்பது அசாதாரண நிலையிலிருந்து சாதாரண நிலைக்கு மாற்றமடைந்து வருகிறது. இந்நிலையில் இதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதைப்பற்றி சமீபத்தில் ஐ.நா சபையின் சார்பில் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் ஆண்களிடம் சர்வே ஒன்று நடத்தப்பட்டது.

அதில் பாலியல் வன்முறைக்கான காரணம் என்பதை குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் 70 -80 சதவீத ஆண்கள் பாலியல் வன்முறைக்கான காரணம் குறித்து பின்வருமாறு தெரிவித்தார்கள். முதலாவது ஆண்கள் தங்களுக்கு பெண்களின் ஒப்புதல் இல்லாமலேயே அவர்கள் மீது பலாத்காரம் செய்ய உரிமை இருப்பதாக நம்புகின்றனர்.

இரண்டாவது வெறும் வேடிக்கை, கோபம் அல்லது அவர்களுக்கான தண்டனை என்பதாக கருதுகின்றனர். இதில் மது உட்கொள்ளல் என்பது ஒரு சிறு காரணம் மட்டுமே.

மேலும் பல பெண்களுடன் உறவு,பாலியல் தொழிலாளர்களுடன் உறவு, மனைவி மீதான உடலியல் வன்முறை போன்றவையும் இதற்கான கூடுதல் காரணங்கள் என்று அறியப்பட்டன.

மேலும் ஆண்மையை நிரூபிக்கும் சோதனைக்கூடமாக பெண்ணின் உடலை வக்கிர ஆண்களில் ஒருபகுதியினர் கருதுகின்றனர்.

இதன் நீட்சியில் மற்றுமொரு முக்கிய காரணமாக குழந்தை பருவத்தில் குடும்பத்தால், சமூகத்தால் தாங்கள் உளவியல் மற்றும் உடலியல் சித்திரவதைக்கு உள்ளானதன் பழிவாங்கும் செயல்முறை தான் இந்த பலாத்காரம் என்கின்றனர். அவர்களுக்கு ஆரம்பக்கல்வி மறுக்கப்படுவது கூட இதனை நோக்கி அவர்களை நகர்த்துகின்றது. மேலும் முக்கியமான ஒன்றாக பெரும்பாலான பாலியல் பலாத்காரங்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அறிமுகமான நபர்களாலே நிகழ்த்தப்படுகின்றன. இந்தியாவில் பாதிக்கப்படும் பெண்களில் நான்கில் மூன்று பேர் பாலியல் குற்றவாளிகளை சரியான அடையாளம் காண்கின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு நடந்த சம்பவம் குறித்து வெளிப்படுத்துவதில்லை. காவல்துறையில் புகார் அளிக்க முன்வருவதில்லை. மருத்துவ பரிசோதனைக்கும் அவர்கள் தயாரில்லை. காரணம் இந்திய சமூகம் காலங்காலமாக கட்டமைத்து அசைக்காமல் வைத்திருக்கும் பெண்ணிற்கு எதிரான ஆதிக்க மதிப்பீடு தான். இதனால் தங்களின் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்று அவர்கள் அச்சங்கொள்கின்றனர். குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படும் போது போதுமான சாட்சியங்களுடன், மருத்துவ அறிக்கையும் அவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க ஆதார மூலங்களாக தேவைப்படுகின்றன.

ஆனால் பாதிக்கப்படும் பெண்கள் தங்களின் எதிர்காலம் கருதி சுய ஆதாரங்களை அழித்து விட்டு உடலை சுத்தம் செய்து விடுவதால் சில சமயங்களில் குற்றத்தை நிரூபிக்க ஆதார பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது. இதுவும் இன்றைய இந்தியாவில் பாலியல் வன்முறை வழக்குகளின் பலவீனத்திற்கு காரணமாகி விடுகிறது. பல சமயங்களில் குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள். இந்தியாவில் கிரிமினல் சட்ட நடைமுறைகளில் உள்ள பலவீனம் கூட ஒருவகையில் இப்படியான வன்முறைகள் திரும்ப திரும்ப நிகழ்வதற்கு காரணமாகி விடுகின்றன. குற்றத்திற்கான தண்டனை உறுதியாக, விரைவாக கிடைக்கும் என்ற நிச்சயமற்ற சூழல் பலருக்கு சிறைச்சாலை குறித்த அசட்டுத்தைரியத்தை கொடுக்கின்றன. நடைமுறை இவ்வாறு இருக்க ஆண் பெண் இணைந்த சமூகத்தில் இதற்கான தீர்வு குறித்து ஆராய வேண்டியதிருக்கிறது.

இந்தியாவின் சமூக கட்டமைப்பில் ஆண் பெண் உறவு குறித்த மதிப்பீடுகள், பெண் உடல் மற்றும் உடை ஆகியவற்றின் மறுசிந்தனை அவசியமாகிறது. கல்விமுறையில் மாற்றம் என்பது இதன் சிறுபகுதியே. குறிப்பாக பாலியல் குறித்த அறிவியல் பூர்வமான ஊட்டத்தை இளந்தலைமுறையினர் மத்தியில் அளிப்பது இன்றைய சூழலில் மிக அவசியமான ஒன்று. அதாவது அதனை பாலியல் கல்வியாக கல்விநிலையங்களில் போதிக்க வேண்டும். இதற்கான குரல்கள் பல காலமாக இந்தியா முழுவதும் எழுந்து வருகின்றன.

உலகில் பாலியல் குறித்தும், பாம்பு குறித்தும் தான் அதிகமான தவறான நம்பிக்கைகள் (Myth)நிலவுகின்றன. அறிவியல் பூர்வமான பாலியல் கல்வி முறை இதனை போக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பு. அதாவது இருபாலர் இணைந்த கல்விக்கூடங்களில் இதனை தனித்தனியாகவோ அல்லது சூழலை பொறுத்து இருவருக்கும் சேர்த்தோ நடத்தலாம். இதன் மூலம் பெண் குறித்த ஆணின் பல தவறான பிம்பங்கள் உடைய வாய்ப்பிருக்கிறது. மேலும் ஆண் பெண் உறவு குறித்த முறையியல், மதிப்பீடுகள், வரைமுறைகள் மாற வேண்டும்.

இருபாலர் கல்வி மற்றும் இருபாலரும் இணைந்த பணி முறை ஆகியவை இம்மாதிரியான மதிப்பீடுகளை ஓரளவிற்கு மாற்றி இருக்கின்றன. ஆனால் இன்றைய நிலையில் ஒரு பெண் மற்றொரு பெண்ணுடனோ அல்லது ஓர் ஆண் மற்றொரு ஆணுடனோ தொடர்பு கொண்டால் அது நட்பாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஓர் ஆண் மற்றொரு பெண்ணுடனோ அல்லது ஒரு பெண் மற்றொரு ஆணுடனோ தொடர்பு கொண்டால் அது நட்பிற்கு அப்பால் கவர்ச்சியாக , உடலியல் ரீதியான தொடர்பாக பார்க்கும் மனோபாவம் நிலவுகிறது. இந்த தவறான மனோபாவம் கண்டிப்பாக மாற வேண்டியது அவசியம்.

நட்பு என்பது பரஸ்பர அறிமுகம் கொண்ட, உரையாடல் கொண்ட ஓர் ஆத்மார்த்த உளவியல் கூறே. இதன் எதார்த்த அர்த்தம் மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும். மேலும் பெண்ணுடல் குறித்த ஆணின் பார்வையாக இன்றைய நிலையில் பெண் அணியும் உடை முன்வைக்கப்படுகிறது. இனக்குழு சமூக காலகட்டத்தில் ஆணும் பெண்ணும் இடுப்புக்கு கீழே உடை அணிந்த காலத்தில் அது மேலும் பரிணாம வளர்ச்சி பெற்று உடல் முழுவதையும் மறைக்கும் ஒன்றாக மாறியது. நவீன சமூகம் உடையை தேர்வு செய்ய காலநிலை, உடல்பொருத்தம் மற்றும் சௌகரியம் போன்ற பல வரைமுறைகளை வகுத்துக்கொண்டு செயல்படுகிறது.

மேற்குலகை பொறுத்தவரை இது ஓரளவிற்கு சரியாக கடைபிடிக்கப்படுகிறது. அங்கு உடை ஒரு பெரும் விவாதப்பொருளே அல்ல. மாறாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உடை என்பது மேற்கண்ட வரைமுறைகளை தாண்டி நாகரீகம் மற்றும் தன்னை வெளிப்படுத்தல் என்ற அம்சங்களாக பார்க்கப்படுகிறது. அழகு சாதன பொருட்களுக்கு உலகில் இந்தியா மிகப்பெரும் சந்தை என்பதும் இதனோடு சேர்த்து கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.

உலகமயமாக்கலுக்கு பிறகு ஆடை சந்தைகளில் பெண்களுக்காக விதவிதமான வடிவங்களில், நிறங்களில், வகைகளில் உடைகள் வந்திறங்குகின்றன. இங்கு எல்லாவித உடைகளும் ஆணின் கண்காணிப்பிற்கும், கவனத்திற்கும் உட்பட்ட ஒன்றாகவே இருக்கின்றன. பெண்கள் தலைமுதல் கால் வரை முழுவதுமாக தங்களை மூடிக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் பிற்போக்கு ஆண்களும், உங்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறோம் என்று விதவிதமான வடிவங்களில் உடைகளை தயாரித்து பெண்களுக்கு வழங்கும் ஆண்களும் தங்கள் நோக்கத்தில் ஒன்றுபட தான் செய்கின்றனர்.

பெண்ணின் உடல் என்ற நோக்கம் தான் அது. ஆனால் இன்றைய இந்தியாவில் எல்லாவிதமான உடைகளும் பெண்களுக்கு சவாலாக தான் இருக்கின்றன.

நன்றி - எச்.பீர்முஹம்மது

source: http://www.penniyam.com/2014/09/blog-post_22.html