Home கட்டுரைகள் விஞ்ஞானம் நானோ தொழில்நுட்பம் எனும் சுனாமி
நானோ தொழில்நுட்பம் எனும் சுனாமி PDF Print E-mail
Thursday, 04 September 2014 06:10
Share

[ நானோ என்றால் என்ன? ஒரு மீட்டரை 100 கோடிப் பகுதிகளாகப் பிரித்தால் அதில் ஒரு பகுதிதான் நானோ மீட்டர்.

மனிதரின் ஒரு தலைமுடியின் தடிமன் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் நானோ மீட்டர். சிகரெட் புகையின் ஒரு சின்னத்துணுக்கை அளந்தார்கள். அது 10 நானோமீட்டர்கள் அளவில் இருந்துள்ளது.

வெறும் கண்களால் பார்க்க முடியாத அணுக்களில் ஒரு 8 முதல் 10 - ஐ எடுத்து நானோ மீட்டர் ஸ்கேலில் உட்காரவைத்தால் அவை ஒரு நானோ மீட்டர் நீளத்துக்கு இருக்கும்.

100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளில் சின்னதாக பொருள்களைத் தயாரிப்பதும், அப்படிச் சின்னதாக இருந்தாலும் அவற்றின் பண்புகள் வீரியமானதாகவும் இருக்குமாறும் செய்வதே நானோ தொழில்நுட்பம்.]

நானோ தொழில்நுட்பம் எனும் சுனாமி

  த.நீதிராஜன் 

நானோ தொழில்நுட்பம் என்ற புதிய தலைமுறை தொழில்நுட்பம் ஒரு பெரும் சுனாமி போலத் தயாராகி வருகிறது.

ரிச்சர்டு ஃபெயின்மான்

நானோ தொழில்நுட்பம் பற்றி முதலில் பேசியவராக நோபல் பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானி ரிச்சர்டு ஃபெயின்மான் கருதப்படுகிறார்.அவர் 1959 டிசம்பர் 29- ல் “There's Plenty of Room at the Bottom,” (கீழே ஏராளமாக இடம் உள்ளது) என்ற தலைப்பில் ஒரு உரையாற்றினார்.

அதுவே நானோ தொழில்நுட்பம் பற்றிய முதல் உரையாகக் கருதப்படுகிறது. அதில் அவர் “அணுக்களை மாற்றி அமைத்து அவற்றில் நாம் தலையிடுவதன் மூலம் புதிய வகையான பொருள்களை உருவாக்கலாம். அதே தொழில்நுட்பத்திலேயே சின்ன இயந்திரங்களை உருவாக்கி, அவற்றின் மூலமே அணுக்களை மாற்றியமைத்து அந்தப்பணியையும் யந்திரமயமாக்கலாம்.

எதிர்காலத்தில் டாக்டர்களை நாம் விழுங்குவோம். அறுவை சிகிச்சை செய்ய சின்ன ரோபாட்களை நமது உடலுக்கு உள்ளே அனுப்புவோம். பொருள்கள் சின்னதாக மாறுவதால் புவியீர்ப்பு விசை செயலிழந்து போகும் நிலை வரலாம். வேறு சில விசைகளும் வருங்காலத்தில் முக்கியத்துவம் பெறும்” என்றார்.

அவரது கருத்துக்களின் விளைவாக இன்று அணுக்களை ஆராயும் மிக நுண்ணிய நவீன கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஜப்பான் விஞ்ஞானி பேராசிரியர் நொரியோ தனிகுச்சிதான் நானோ தொழில் நுட்பம் என்ற சொல்லை 1974- ல் முதல் முதலில் அறிமுகப்படுத்தினார். 1980 களில் அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் எரிக் டிரெக்ஸ்லர் என்பவராலும் இந்தக் கருத்து மேலும் வளர்க்கப்பட்டது.

நானோ என்றால்.....

ஒரு மீட்டரை 100 கோடிப் பகுதிகளாகப் பிரித்தால் அதில் ஒரு பகுதிதான் நானோ மீட்டர். மனிதரின் ஒரு தலைமுடியின் தடிமன் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் நானோ மீட்டர். சிகரெட் புகையின் ஒரு சின்னத்துணுக்கை அளந்தார்கள். அது 10 நானோமீட்டர்கள் அளவில் இருந்துள்ளது.

வெறும் கண்களால் பார்க்க முடியாத அணுக்களில் ஒரு 8 முதல் 10 - ஐ எடுத்து நானோ மீட்டர் ஸ்கேலில் உட்காரவைத்தால் அவை ஒரு நானோ மீட்டர் நீளத்துக்கு இருக்கும். 100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளில் சின்னதாக பொருள்களைத் தயாரிப்பதும், அப்படிச் சின்னதாக இருந்தாலும் அவற்றின் பண்புகள் வீரியமானதாகவும் இருக்குமாறும் செய்வதே நானோ தொழில்நுட்பம்.

பல்துறைத் தாக்கம்

இது பல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, ஏற்படுத்திவரும் ஒரு நுட்பம். ஆகையால் நானோ தொழில்நுட்பங்கள் என்று பன்மையிலும் அழைக்கலாம். நானோ தொழில் நுட்பம் ஒரு தனிப்பட்ட துறையில் மட்டும் செல்வாக்கு செலுத்த தொடங்கவில்லை. உயிரியல், வேதியியல், இயற்பியல், மின்னியல், மருத்துவம், பொறியியல் என்று பலதுறைகளில் தாக்கம் செலுத்திவருகி்றது.

வரையறை

1 முதல் 100 நானோ மீட்டர் அளவிலான பொருளின் இயல்புகளை அறிந்து கட்டுப்படுத்தி, அவற்றின் தனிச்சிறப்பால் நிகழும் புது விளைவுகளின் அடிப்படையில் புதுப் பயன்பாடுகளுக்கு வழி வகுப்பது என்று நானோ தொழில்நுட்பத்தை அமெரிக்காவின் நேஷனல் நானோ டெக்னாலஜி இனிசியேட்டிவ் நிறுவனம் வரையறை செய்கிறது. நானோ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் பிரதான மூலகம் கார்பன் என்கிற கரிதான்.

கரி, நிலக்கரி, வைரம் என கார்பன் பல வடிவங்களில் இருக்கிறது. அதேபோல கார்பனில் இருந்து புளோரின் எனும் கரி வடிவம் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதைக்கொண்டு சில நானோ கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த ஆராய்ச்சி தற்போது நடைபெறுகிறது. இது அடுத்த தலைமுறையின் தொழில்நுட்பம் என்பதால் ஆராய்ச்சிகள் மிக ரகசியமாக நடைபெறுகின்றன.

-தி இந்து, September 1, 2014