Home கட்டுரைகள் பொது ஆதாமின்டே மகன் அபு: மனித நேயம் என்னும் பெருங்கனவு
ஆதாமின்டே மகன் அபு: மனித நேயம் என்னும் பெருங்கனவு PDF Print E-mail
Monday, 09 June 2014 05:59
Share

ஆதாமின்டே மகன் அபு: மனித நேயம் என்னும் பெருங்கனவு

2012-ம் ஆண்டில் இந்தியா சார்பில், சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்துக்கான பிரிவின் கீழ் ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு அதிகாரபூர்வமாகத் தேர்வுசெய்து அனுப்பப்பட்ட மலையாளப் படம் ‘ஆதாமின்டே மகன் அபு’.

ஆஸ்கர் ஜூரிகள் அதிகம் பேருக்குத் திரையிட்டு, அவர்களது கவனத்தைக் கவர முடியாத பொருளாதாரக் கஷ்டத்தில் மாட்டிக்கொண்டார் அந்தப் படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான சலீம் அகமது. ஆஸ்கர் கிடைக்காவிட்டாலும் சிறந்த படத்துக்கான நான்கு தேசிய விருதுகள், நான்கு மாநில விருதுகள், பல்வேறு உலகப் பட விழாக்களில் 30 உயரிய விருதுகள் ஆகியவற்றைக் கடந்த இரண்டு ஆண்டுகளில் அள்ளிவந்திருக்கிறது இந்தப் படம்.

பணமில்லாததால் ஆஸ்கர் போட்டியில் இந்தப் படத்தைப் பிரபலப்படுத்த முடியாமல் திண்டாடியதில் ஒரு பொருத்தம் இருக்கிறது. எதிர்பார்த்த இடத்தில் காலத்தே கிடைத்திருக்க வேண்டிய பண உதவி ஒரு குடும்பத்துக்குத் தாமதமாகக் கிடைக்கிறது. அந்தப் பணத்தை ஒட்டி அவர்களுக்குப் பல கனவுகள். தாமதமாகக் கைக்கு வரும் பணத்தால் அந்தக் கனவுகளை நிறைவேற்ற முடிந்ததா என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

அந்தக் கனவு....

மலபார். பள்ளி வாசல் திண்ணையில் அமர்ந்து அத்தர், மிஸ்வாக் குச்சி, தஸ்பீஹ் மணிகள், மார்க்க நூல்கள் விற்கும் 75 வயதான முதியவர் அபுவுக்குள் இருப்பது ஒரேயொரு கனவுதான். 65 வயதான தன் மனைவியை அழைத்துக்கொண்டு எப்படியாவது ஹஜ் புனிதப் பயணம் சென்றுவிட வேண்டும். மெக்காவை அடைந்ததும் “இறைவா நான் உன் அடிமை என இருவரும் உரக்கக் கூவ வேண்டும்.” வாழ்வின் அஸ்தமனத்தில் வாழும் எல்லா இஸ்லாமிய முதியவர்களின் புனிதக் கனவும் இதுதான். ஆனால் அபு போன்ற ஏழை இஸ்லாமியன் ஹஜ் பயணக் கனவு காண முடியுமா? அபுவின் கனவு என்னவாகிறது என்பதை யதார்த்தம் முகத்தில் அறையச் சித்தரிக்கிறது ஆதாமின்டே மகன் அபு.

அபு என்கிற இந்த எளிய மனிதருக்கு நல்ல ஊதியம் பெறும் ஒரு மகன் வெளிநாட்டில் இருக்கிறான். ஆனால் தனது முதிய பெற்றோர் குறித்த சிந்தனையோ, இரக்கமோ இல்லாமல் தனது வாழ்வு பற்றிய கவனத்தில் அவன் குறியாக இருப்பதை இயல்பாய்ச் சித்தரித்தபடி நகர்கிறது படம். அந்த முதிய தம்பதிக்குச் சொந்தமான சிறிய தோட்டத்தில் பெற்ற பிள்ளைபோல் கனி தருகிறது ஒரு பலா மரம். துள்ளித் திரியும் கன்று ஒன்றினை ஈன்று நிற்கிறது ஒரு பசு. இவற்றோடு மனைவியிடம் இருக்கும் ஒரே தங்க நகையான மூன்று பவுன் தோடு என எல்லாவற்றையும் விற்று ஹஜ் பயணக் கட்டணத்தைச் செலுத்துகிறார்.

ஆனால் ஹஜ் பயணத்துக்கு அத்தனை எளிதாக விசா கிடைத்துவிடவில்லை. எத்தனை போராட்டம், எத்தனை அலைச்சல்? ஆபு பாஸ்போர்ட் பெற உறுதுணையாக இருக்கிறார் இந்துப் பள்ளியாசிரியர் ஒருவர். லாபம் கிடைக்கிறதோ இல்லையோ அபுவின் பலா மரத்தை வாங்கிக்கொள்வதன் மூலம் அவருக்கு உதவ முன்வருகிறார் ஜான்சன் என்கிற கிறிஸ்தவ வியாபாரி. பற்றாக்குறை பணத்திற்கு நானே பொறுப்பேற்கிறேன் என்கிறார் ஹஜ் டிராவல் நிறுவனத்தின் மேலாளர்.

அபுவை இத்தனை பேர் புரிந்துகொண்டு அவருக்கு நேசரக் கரம் நீட்டியும் அவரது ஹஜ் பயணம் நிறைவேறுகிறதா? இறுதிக் காட்சியில் மொத்தத் திரையரங்கிலும் அடர்த்தியான மௌனம் படர்கிறது. திரளும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கனத்த இதயத்தோடு கலைந்துபோகிறார்கள் பார்வையாளர்கள்.

அபுவின் கனவு நிறைவேறியதா என்பதுதான் படத்தின் ஆதாரமான கேள்வி. ஆனால் படம் தரும் அனுபவம் இந்தக் கேள்வியைத் தாண்டிப் பயணிக்கிறது. சக மனிதர்கள் மீதான சமயம் தாண்டிய நேயமும் சகோதர உணர்வும் இந்த மண்ணில் இன்னும் வற்றிவிடவில்லை என்பதைக் காட்டுகிறது.

இயக்குநர் சலீம் அகமதுக்கு இது புதிய அனுபவக் களம். இந்தப் படத்தை உருவாக்கப் பத்தாண்டுகள் தவம் இருந்திருக்கிறார். ஒரு மேடை நாடகக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கியவர் இவர். டிராவல்ஸ் கம்பெனியில் பணிபுரிந்த அனுபவமே இந்தக் கதைக் களத்தை உருவாக்கித் தந்தது என்கிறார் சலீம் அகமது.

அபுவாக வரும் சலீம் குமார் கேரளத் திரையின் சிறந்த கலைஞர்களில் ஒருவர். உயிருள்ள பாத்திரமாகக் கூடு பாய்ந்திருக்கிறார். இவரது மனைவியாக நடித்திருக்கும் ஜரினா வஹாப் நிஜமான மலபார் முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்தவர். படத்தின்

ஒவ்வொரு காட்சியும் வாழ்க்கைக்கும் திரைப்படத்துக்குமான இடைவெளியைக் குறைத்து விடுகின்றன. ஜோடனைகளோ உத்திகளோ இல்லாத மது அம்பட்டின் இயற்கை ஒளியில் அமைந்த ஒளிப்பதிவும், பாத்திரங்களின் உணர்ச்சியைத் தேவையற்றுப் பிழியாமல், இயல்பு மீறாமல் நேர்த்தியாக ஒலிக்கும் ஐசக் தாமஸ், கொடுக்காபளி ஆகியோரின் பின்னணி இசையும் பார்வை யாளர்களைக் கதைக்குள் மூழ்கடித்து விடுகின்றன.

உண்மையான மனித நேயத்தையும் சகோதரத்துவத்தையும் பார்வையாளர் உள்ளத்தில் ஓர் அனுபவமாய் மாற்றிவிடுகிறது இந்த அபூர்வத் திரை முயற்சி. கேரளம் உச்சி முகர்ந்து கொண்டாடிய இந்தப் படம் தற்போது ‘ஆதாமின் மகன் அபு’ என்ற பெயரில் தமிழில் வெளியாக இருக்கிறது. தவறவிடாதீர்கள்.

- திரைபாரதி

இந்த படம் சினிமா துரையில் ஒரு சிறந்த அம்சங்களை கொண்ட அற்புதமான் திரை கதையாக இருந்தாலும் கதையின் மையா கருத்து இஸ்லாமிய சிந்தனைக்கு சற்று மாறு படுகிறது ஹஜ் கடமை இஸ்லாத்தின் கடமைக்ளில் ஓன்றாக இருதாலும் அது உடல் ஆரோக்கியமும் தன் தேவைக்கு போக அதிக பொருளாதார வசதி படைத்தோருக்கு தான் கட்டாய கடமையாக் உள்ள்து நகை பலாமரம் பசுமாடு போன்ற வாழ்வாதாங்களை இழந்து ஹஜ் எனும் புனித பயணத்தை மேற் கொள்ளூம்படி இறைவன் நிர்பந்திக்கவில்லை. இஸ்லாம் மனித் சக்திக்கு மிறி எதையும் நிர்ப்திப்பதில்லை.]

source: http://tamil.thehindu.com/cinema/cinema