Home இஸ்லாம் கட்டுரைகள் இஸ்லாம் மனிதனுடைய உடம்பை விட உள்ளத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது
இஸ்லாம் மனிதனுடைய உடம்பை விட உள்ளத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது PDF Print E-mail
Monday, 19 May 2014 06:38
Share

இஸ்லாம் மனிதனுடைய உடம்பை விட உள்ளத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது

  அகார் முஹம்மத்   

இஸ்லாம் மனிதனுடைய உடம்பை விட உள்ளத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது யதார்த்தமானது.

இஸ்லாத்தின் பார்வையில் மனிதன் பிரதானமாக இரண்டு கூறுகளைக் கொண்டவன். உள்ளம், உடல், என்பனவே அவை. இதனை இன்னுமொரு வார்த்தையில் சொல்வதாயின் மனிதன் சூட்சும உடலையும் (Spritual body), பௌதிக உடலையும் (Physical body) கொண்டவன். இதில் அவனுடைய வாழ்க்கையின் ஓட்டமும், வெற்றியும் சூட்சும உடலின் ஆரோக்கியத்தில்தான் தங்கியிருக்கிறது.

சூட்சும உடல் எனும்போது அது மனதை மையப்படுத்தியதாகும். குறிப்பாக மறைமனம், ஆழ்மனம், அதீத மனம், பிரபஞ்ச மனம் ஆகிய மனங்களை உள்ளடக்கியதாகும். இவைதான் மனித மனதில் முக்கியமான இயக்கக் கூறுகள். இவை சேர்ந்து ஒழுங்கான அமைப்பில் செயற்படும்போதே மனித மூளை ஆரோக்கியமான முறையில் இயங்கும். மூளை ஆரோக்கியமாக இயங்கும்போதே மனித உடல் சரியாக செயற்படும். எனவேதான் இஸ்லாமும் உள்ளத்துக்கு அதிகமான முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றது.

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், 'மனித உடலில் ஒரு தசைப்பிண்டம் இருக்கிறது, அது சீர்பெற்றுவிட்டால் முழு உடலும் சீர்பெற்றுவிடும். அது சீர்கெட்டுவிட்டால் முழு உடலும் சீர்கெட்டுவிடும். அதுதான் மனித உள்ளமாகும்' என்ற கருத்தைக் குறிப்பிட்டார்கள்.

அல்லாஹுத் தஆலாவும் மனிதனுடைய உடம்பையோ, வெளித் தோற்றத்தையோ கவனிப்பதில்லை. மனித உள்ளத்தையே கவனிக்கிறான். தவிரவும் அல்குர்ஆன்கூட நபியவர்களுக்கு உள்ளத்துக்கு இறக்கப்பட்டதாகவே இறைவன் குறிப்பிடுகிறான்.

எனவே இஸ்லாத்தின் பார்வையிலும் மனம்தான் முக்கியமானது. அதனுடைய வளர்ச்சியும், செழுமையும்தான் மனித வாழ்வையும் வெற்றிபெறச் செய்யக்கூடியது. எனவேதான் இன்றைய நவீனயுகத்திலும் Mind Science என்ற ஒரு கலை துரித வளர்ச்சியடைந்து வருவதைக் காணலாம்.

ஒரு மனிதன் மோசமான சிந்தனை, பொறாமை, குரோதம், வெறுப்பு போன்ற மன உணர்வுகளுக்கு ஆட்படும்போது அவனுடைய மூளையில் அதிக அதிர்வுகள் ஏற்படுகிறன. மனித மூளையின் Beta, Alpha, Theta, Delta ஆகிய நான்கு நிலைகள் இருக்கின்றன. இவை கெட்ட எண்ணங்களின்போது மோசமான சிந்தனைகளின்போது அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக மனித மூளையில் 3000 கோடி கலங்கள் இருக்கின்றன. இவ்வாறான மோசமான உள அதிர்வுகளின்போது அவை இறக்கின்றன. உடம்பில் இருக்கின்ற கலங்கள் இறந்தால் அவை மீண்டும் உயிர்பெறும் ஆனால் மூளைக் கலங்கள் இறந்தால் அவை மீண்டும் உயிர்பெற வாய்ப்பில்லை. எனவேதான் நவீன விஞ்ஞானத்தின் பின்னணியுடன் நோக்கினாலும் இஸ்லாம் உள்ளத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததற்கான காரணத்தை, யதார்த்தத்தை தெளிவாக உணரக்கூடியதாக இருக்கும்.

இஸ்லாம் என்பதே உள்ளத்தை வளப்படுத்துவதுதான். அது மனித மனதுக்கு சாந்தி, சமாதானம், நிம்மதி என்பவற்றை ஏற்படுத்துவதற்காகவே இவ்வுலக மக்களுக்கு வழங்கப்பட்டது.

ரஸூல் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களும், 'நான் மக்களுக்கு ஒரு போதகராகவே அனுப்பப்பட்டுள்ளேன்' என கூறினார்கள். அதாவது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான் உலகிற்கு அனுப்பப்பட்ட முதலாவது கவுன்செலர் என்ற கருத்தை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்தி நிற்கிறது. அதேநேரம் அல்குர்ஆனில் நபியவர்கள் இச்சமூகத்திற்கு இறக்கப்பட்டதன் நோக்கத்தை குறிப்பிடும்போதும் அல்குர்ஆன், சுன்னா என்பவற்றைக் கற்றுக்கொடுப்பதற்கும், உள்ளத்தை வளப்படுத்துவதற்குமே (தஸ்கியதுன் நப்ஸ்) அனுப்பப்பட்டதாக இறைவன் குறிப்பிடுகிறான்.

இஸ்லாமிய வரலாற்றிலிருந்து இறைதூதருடைய வாழ்க்கையில் இடம்பெற்றதோர் உளவள ஆலோசனை நிகழ்வொன்றை சொல்வதாயின், ஹிராக் குகையிலிருந்த ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து வஹி இறங்கியபோது, அச்சத்துடனும், பீதியுடனும் தூதரவர்கள் வீட்டையடைந்தார்கள். அப்போது நிலமையைப் புரிந்துகொண்ட கதீஜா நாயகி அவர்கள், இறைதூதருடன் பேசிய வார்த்தைகள், கூறிய ஆலோசனைகள் மற்றும் மேற்கொண்ட பணிகள் அனைத்தும் உளவள சிகிச்சைக்கான ஒரு அழகிய முன்மாதிரியாகும். எனவேதான் இஸ்லாமியப் பணியில் ஈடுபடுகின்ற அழைப்பாளன், கதீப், முரப்பி, ஆசிரியன் அனைவருமே தங்களுடைய பேச்சு, உரையாடல், சிரிப்பு, பார்வை என்பவற்றினூடாக இந்த கவுன்செலிங் பணியைச் செய்கின்றனர். ஏன் எமது சமூகத்திலிருந்து வருகின்ற பத்திரிகைகள்கூட இப்பணியைத்தான் செய்துவருகின்றன.

source: http://www.sheikhagar.org/ulavala-aalosanai