இறுதியும் - உறுதியும் |
![]() |
![]() |
![]() |
Tuesday, 08 April 2014 06:45 | |||
இறுதியும் - உறுதியும்
எததனை காலம் வாழப்போகிறாய் மனிதா? நீ எத்தனை காலம் வாழப்போகிறாய்? நீ வந்த பாதையை விட போகும் பாதையே வெகு அருகே ஆனாலும் அது பற்றி நீ கவலை கொள்ளவில்லை.
எப்படியோ வாழ்கிறாய். அது ஒரு குறுகிய காலமே. ஆனால் நீ செல்லவிருக்கும் ஊரோ புது யுகமே. சென்றவர் அதுபற்றி உனக்கு எச்சரிக்கவில்லை. வந்தவருக்கோ அது பற்றி தெரிய நியாயமில்லை. உதித்ததை உதிர்த்தால்? உறைக்கவில்லை,
உனக்குள்ள சொத்துக்கள் ஏழு தலைமுறைக்கு உள்ளதாம் !!! ஆனால் நீயோ? உன் தலைமுறையில் குறுகிய கால வயதுக்காரன் !!! முடிவு எப்படியிருந்தாலும், முடிவு, முடிவுக்கு வரும்போது, எல்லாம் முடிந்துவிடுகின்றது. ஊண், உறக்கம், ஓய்வு, தனிமை, இனிமை, என வாழ்வின் எல்லா பரிமாணங்களை, யாருக்காக இழக்கிறாய்? உனக்கென்றால் அது ஒட்டாது,ஊருக்கென்றால் அது நிலைக்காது, பிள்ளைகளுக்கென்றால் அது போதாது,
சில்லறையாய் சேர்த்த பணம்.சீர்கேடு விளிம்பில். அனுபவிக்கவோ நீயில்லை.உறவினர் சோக விளிம்பில். எதிர்பாராதது நடக்கும்போதுதானே திகில். ஆம் நீ நினைக்காததே நடந்தது. மதம் மீறி நம்பும் ஒன்று மரணம்,அதில் எல்லாமே சரணம்.
சேர்த்தவைகளை அனுபவிக்காத நிலை ஒரு கொடுமை, போகும் இடத்துக்கு சேர்க்காததோ அதைவிட கொடுமை. சேர்க்கும்போதே தெரியாதா அனுபவிக்கமாட்டோம் என்று. இறக்கும்போது தெரியாதா கொண்டுபோகமாட்டோம் என்று.
பலரின் உரிமைகளை, உடமைகளை, உணர்வுகளை, வளங்களை, வாழ்வுகளை, வசதிகளை, வாழும்காலத்தில் உனதாக்கிக்கொண்டாய். ஆனால் நீ?? கல்லறையின் மண்ணாகிப்போனாய்.
வாழும்போது மனித உருவின் மிருகமாய், இறக்கும்போது மனித எண்ணங்களின் இறுக்கமாய்.
வங்கியில் உன் கணக்கில் ஏராளம், மறுமையில் உன் கணக்கில் பாதாளம்.
அரசர்கள் முதற்கொண்டு ஆண்டிகள் வரையும், மன்னர்கள் முதற்கொண்டு மண்ணாங்கட்டி வரையும், மரணம் யாரை விட்டதப்பா?
உலகின் மூவர் மட்டுமே இறப்பை கண்டு அஞ்சுவதில்லை. லட்சிய போர்வீரன், உலகம் சேர்க்காதவன், மறுமைக்காக சேர்த்தவன் இந்த பட்டியலில் ஒன்றில் கூட நீ இல்லை.
பதவியில் உள்ளவர் இருந்தால் ராணுவ அணிவகுப்பு. வசதியில் உள்ளவர் இறந்தால் ஊரார் அணிவகுக்ப்பு, வறுமையில் உள்ளவர் இறந்தால் சிலரால் அணிவகுப்பு, உன்னை விட்டு செல்வதில் அனைவரும் அணிவகுப்பு.
வாழ்ந்தோம் இறந்தோம் என்பது மிருகமப்பா, வாழ்வோர் மனத்தில் இருத்தலென்பது மனிதனப்பா. அறுபது எழுபது ஆண்டுக்கால வாழ்வு நிலையல்லவே, ஆயுள்முடிவுவில் ஈமான் இல்லையேல் நிறைவில்லையே.
சாணில் சாணக்கியனாய், முழத்தில் முட்டாளாய், முயற்சிக்கு முற்றுவை. படித்தது அறிவாயினும் பட்டதே மேன்மையானது. பட்டதை பகர்வதும், படிப்பினை பெறுவதும் மனித இயல்பு. எண்ணத்தை அழகாக்கு,எண்ணியதை எழுத்தாக்கு. எண்ணமும் எழுத்தும்:- தூது ஆன்லைன் வலைப்பூ ஆசிரியர். source: http://tamilhome.blogspot.in/
|