Home இஸ்லாம் கட்டுரைகள் மக்கள் நடமாடும் பகுதிகளில்...
மக்கள் நடமாடும் பகுதிகளில்... PDF Print E-mail
Saturday, 18 April 2009 14:38
Share

மக்கள் நடமாடும் பகுதிகளில்...

(ஒரு முறை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிர்த்து விடுங்கள்'' என்று கூறினார்கள். அப்போது மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. அங்கு (அமர்ந்துதான் பல விஷயங்களை) நாங்கள் பேசிக்கொள்கிறோம்'' என்றார்கள்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், '(அங்கு) நீங்கள் அமர்ந்துதான் ஆகவேண்டும் என்றிருந்தால், சாலைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், 'சாலையின் உரிமை என்ன? இறைத்தூதர் அவர்களே!'' என்று வினவினர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், '(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும் படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்'' என்று பதிலளித்தார்கள். ஆதார நூல்: புகாரி 6229, அறிவிப்பாளர்: அபூ ஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.

அந்நியப் பெண்களைப் பார்க்காமல் பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும்,

பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ துன்பம் தராமலிருப்பதும்,

ஸலாமுக்கு பதிலுரைப்பதும்,

நன்மை புரியும் படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் அதன் உரிமைகளாகும்.

மேற்காணும் பெருமானாரின் நான்கு கட்டளைகளைப் பின்பற்ற முடியுமென்றால் மக்கள் நடமாடும் பகுதிகளில் அமர்ந்துப் பேசுவதை இஸ்லாம் தடை செய்யவில்லை.

மேற்கானும் பெருமானாரின் நான்கு கட்டளைகளைப் பின்பற்ற முடியாதென்றால் மக்கள் நடமாடும் பகுதிகளில் அமர்ந்துப் பேசுவதிலிருந்து ஒவ்வொருவரும் தவிர்ந்து கொள்ளுதல் நல்லது.

காரணம்

இன்று அதிகமான பிரச்சனைகள் குழப்பங்கள், பெண்களுக்கெதிரான அநீதிகள், போன்றவைகள் உருவாவதற்கு பெரும்பாலும் சாலை ஓரங்களில் நின்று கொண்டும், குறுகலான சாலைகளின் சிறிய பாலங்களின் மீது அமர்ந்து கொண்டும், டீ கடை, பெட்டிக்கடை வாசல்களில் நின்று கொண்டும் அரட்டைகளிலும் , வீண் விவாதங்களிலும் ஈடுபடுவதே முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.

அரசியலைப் பற்றியோ, அல்லது ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பற்றியோ, புதிதாக ரிலீசானப் படத்தைப் பற்றியோ, ஊருக்குள் விமர்சனத்திற்குள்ளான சில குடும்பத்தவர்களைப் பற்ற்pயோ, காரசாரமாக பேசிக் கொண்டிருக்கையில் ஒவ்வொருவரும் தனது வாதம் வெல்ல வெண்டும் என்று கருத்துகளை எடுத்து வைப்பார்கள் இதுவே இறுதியில் அவர்களுடைய மத்தியில் கலகம் வெடித்து சண்டை மூண்டு விடும். அதன் பிறகு அது குடும்பச் சண்டையாக மாறும்.

வேலை வெட்டி இல்லாத இவர்களால் உருவான இந்தச் சண்டை அன்றாடம் கஸ்டப் பட்டு குடும்பத்தை காப்பாற்றும் பெரியவர்களுக்கு மத்தியில் பெரிய பிரச்சனையாக உருமாறி இறுதியில் அது அவர்களை ஜென்ம விரோதிகளாக மாற்றி விடும்.

இது ஒரு புறம்.

அடுத்தது பாதசாரிகளுக்கு இவர்களுடைய அரட்டைகளால் பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தும்

எவ்வாறு ?

பேச்சு ஒருப் பக்கம் நடந்து கொண்டிருக்கும்போதே அந்த வழியாக ஒருப் பெண் செல்ல நேரிட்டால் அந்தப்பெண் அவர்களை கடப்பதற்குள் அச்சத்தால் நடு நடுங்கி வியர்வையில் குளித்தவளாக அவர்களைக் கடந்து ஒருப் பெருமூச்சு விடுவாள். காரணம் இப்பெண்ணைக் கண்டதும் அவர்கள் பேசிக் கொண்டிருந்த டாப்பிக்கிலிருந்து மாறி இப்பெண்ணுடைய நடை உடை பாவனையை கிண்டலடிக்க ஆரம்பித்து விடுவார்கள் ஒருப் பெண் வீதியில் வந்து விட்டாலே எதையாவது கமென்ட் அடிக்க வேண்டும், அல்லது குறைந்தது விரசமாகப் பார்க்க வேண்டும் என்பது ஆண்களுடைய தார்மீக உரிமை போல் நிணைத்துக் கொண்டு பாதசாரிப் பெண்களை நிலைகுலையச் செய்து விடுகின்றனர் .

அந்நியப் பெண்களைப் பார்க்காமல் பார்வையைத் தாழ்த்திக் கொள்வது

மக்கள் நடமாடும் பொது வழிகளில் அமர்ந்து தான் ஆகவேண்டும் எனும் நிலை வந்தால் அமரும் அந்த இடத்திற்கான உரிமைகளில் ஒன்றாக அந்நியப் பெண்களைப் பார்க்காமல் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும் அல்லாஹ்வின் சட்டத்தை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடமையாக்கினார்கள்.

எல்லாம் அறிந்த அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் ரப்புல் ஆலமீன் 1400 வருடங்களுக்கு முன்பே ஆண்களைப் போல் பெண்களும் சுதந்திரமாக வீதியில் நடப்பதற்காக பெண்களை நோக்கும் ஆண்களுடையப் விரசப் பார்வையை தடைசெய்தான். இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய எண்ணற்ற சமஉரிமைகளில் இதுவும் போற்றத் தக்க உரிமையாகும்.

24:30. (முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

24:31. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! ....

பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ துன்பம் தராமலிருப்பது

மேற்குறிப்பிட்ட பொதுவழிகளில் ஒரு டாப்பிக் நடந்து கொண்டிருக்கம் போது அதிலிருப்பவருக்கு பிடிக்காத ஒருவர் அவ்வழியே செல்ல நேரிட்டால் அவரைப் பார்த்ததும் இவர் தனது மனதில் அவர் மீது உள்ள வெறுப்பைக் கொட்டுவதற்கு நண்பர்களுடனான தெரு வீதி அரட்டையை சாதகமாக்கிக் கொள்வார் அது இவரைப் பிடிக்காத அந்த பாதசாரிக்கு நெருடலை ஏற்படுத்தும் பலர் முன்னிலையில் சங்கட்டப்படுவார். இதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது அதனால் சொல்லால், செயலால் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாமலிருக்க வேண்டும் என்று சாலைகளில் அமரும்போது பிறர் கண்ணியம் கருதி பேணச் சொல்கிறது இஸ்லாம்.

ஸலாமுக்கு பதிலுரைப்பது

பாதசாரிகளுக்கு சொல்லால் செயலால் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாமல் பொதுவழிகளில் இருந்து பேசவேண்டும் என்றால் அங்கு அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது போகின்ற வருகின்றவர்கள் கூறும் ஸலாமுக்கு அமர்நிதிருப்பவர்கள் பதில் ''ஸலாம்'' சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்று பெருமானார்(ஸல்) அவர்கள் கட்டளைப் பிறப்பித்தார்கள் காரணம் படுஜோராக விவாதம் சூடுபிடித்துக் கொண்டிருக்கும்போது எதிரில் யாராவது '' ஸலாம் '' சொன்னால் பதில் ஸலாம் சொல்ல முடியாத அளவுக்கு விவேகமாக விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள் பதில் சொல்ல விடாமல் ஷைத்தான் தடுப்பான். இதன் மூலமாக பாதசாரிகளுக்கும் அங்கு கூடிநின்று அரட்டையில் ஈடுபடுபவர்களுக்கும் மத்தியில் பிணக்கு ஏற்படும்.

ஸலாம் சகோதரத்துவத்தை இணைக்கும் பாலமாகும். ஸலாம் இல்லை என்றால் சகோதரத்துவம் முறிந்து விடும் அதனால் '' ஸலாம் '' என்ற '' அமைதி '' அமர்ந்திருப்பவர்கள் மீதும், பாதசாரிகளின் மீதும் பரஸ்பரம் தவழும் போது தாமாகப் பிரச்சனைகளும், பிணக்குகளும் பறந்து விடும்.

நன்மை புரியும் படி கட்டளையிடுவதும்,

தீமையிலிருந்து தடுப்பதும் அதன் உரிமைகளாகும்.

இவ்வுலகில் ஒருவர் வாழ்ந்த காலத்தில் அவரால் இன்னொருவர் பலனடைந்ததாக இருக்க வேண்டும்

.... மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.;....22:40

என்ற மேற்கானும் திருமறைவசனத்தின் படி நன்மையை ஏவித்தீமையைத் தடுக்கும் ஒருக் கூட்டத்தினர் உலகில் இல்லாவிடில் தீமைகள் மேலோங்கி விடும் இறைவன் கூறியதுப்போன்று மத பாகுபாடின்றி அனைத்து வழிபாட்டுத் தலங்களும் அகற்றப்பட்டு இறைமறுப்பாளர்கள் மட்டும் எஞ்சி இருப்பர். அவர்கள் மக்களை கற்காலத்திற்கு அனுப்பி விடுவர் மனிதனை மனிதன் அடித்து உண்ணும் காலம் வந்துவிடும். அதனால் ஓரிடத்தில் குழுவாக சிலர் அமர்ந்து விட்டால் அவ்விடத்தில் தங்களுக்கும் பிற மக்களுக்கும் பலன் தரக்கூடிய நல்ல விஷயங்களை, ஆன்மீக செய்திகளை அதிகமாகப் பேசவேண்டும் இதனால் நம்மைப் போன்றே பிறரும் நல்லறங்கள் புரிவதற்கு அது வழிகோலும். அதுப்போன்று நல்ல விஷயங்களை உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தால் சில செய்திகளை தாங்களும் செவியுறுவதற்காக பாதசாரிகளும் உட்கார்ந்து விடுவார்கள்.

மேற்காணும் பெருமானாரின் நான்கு கட்டளைகளைப் பின்பற்ற முடியுமென்றால் மக்கள் நடமாடும் பகுதிகளில் அமர்ந்துப் பேசுவதை இஸ்லாம் தடை செய்யவில்லை.

மேற்கானும் பெருமானாரின் நான்கு கட்டளைகளைப் பின்பற்ற முடியாதென்றால் மக்கள் நடமாடும் பகுதிகளில் அமர்ந்துப் பேசுவதிலிருந்து ஒவ்வொருவரும் தவிர்ந்து கொள்ளுதல் நல்லது.

அத்துடன் இது தேர்தல் நேரம் என்பதால் மிகவும் ஜாக்ரதையாக நடந்து கொள்ளுங்கள் வேட்பாளர்கள் என்று தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றவர்களை நம்பாதீர்கள் அவர்களுக்காக வக்காலத்து வாங்கிப் பேசாதீர்கள் வேட்பாளர்கள் அனைவரும் வேடதாரிகள்.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

''Jazaakallaahu khairan'' அதிரை ஏ.எம்.பாரூக்