Home இஸ்லாம் கட்டுரைகள் அநாதைகளின் மார்க்கம் இஸ்லாம்!
அநாதைகளின் மார்க்கம் இஸ்லாம்! PDF Print E-mail
Thursday, 27 March 2014 06:23
Share

அநாதைகளின் மார்க்கம் இஸ்லாம்!

  பேராசிரியர் கே. தாஜுத்தீன் 

இன்றைய அநாதைகளின் நிலை...

2 நிமிடத்திற்கு ஒரு அநாதை போதிய ஊட்டச் சத்தின்றியும், பராமரிப்பின்றியும் இறக்கின்றது. 14.4 கோடி அநாதைகள் உலகில் இன்று இருக்கின்றனர். ஆசியாக் கண்டத்தில் மாத்திரம் 8.76 கோடி அநாதைகள் வாழ்கின்றனர்.

எய்ட்ஸ் என்ற கொடிய நோயினால் ஒவ்வொரு நாளும் 6,000 குழந்தைகள் அநாதைகளாகின்றனர். ஒவ்வொரு 14 வது நொடியிலும் ஒரு புது அநாதைக் குழைந்தை உருவாகிறது.

50 சதவீத அநாதைகளின் இறப்புகள் ஊட்டச் சத்து குறைபாட்டினால் நிகழ்கின்றன. ஐந்து வயதுக்கும் குறைவான 50 லட்சம் அநாதைக் குழந்தைகள் இவ்வகையில் இறக்கின்றன.

2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி ஈராக்கில் மட்டும் 45 லட்சம் அநாதைகள் உள்ளனர். அவர்களில் 600,000 அநாதைகள் ஈராக்கின் தெருவோரங்களில் வாழ்கின்றனர். 740,000 பேர்கள் ஈராக்கில் 20 வருட போரினால் விதவைகளாக்கப்பட்டனர்.

நம் நெஞ்சங்களை உலுக்கி ஈரமாக்க இந்த புள்ளி விபரங்கள் அதிகமானவையே.

மனிதர்கள் மீது அன்பு, இரக்கம், கருணை கொள்ளுதல்:

‘மக்களிடம் ஒருவன் இரக்கம் காட்டவில்லையானால், அவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம்)

‘தனக்கு விரும்பியதை தன் சகோதரனுக்கும் விரும்பும் வரை உங்களில் ஒருவர் இறைவிசுவாசியாக ஆக மாட்டார்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம்)

‘பூமியிலுள்ளவர்களின் மீது கருணை காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்’. (திர்மிதீ, அபூதாவூது)

‘மார்க்கம் என்பதே பிறர் நலன் நாடுவதுதான்’; என்றும் கூறினார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். (அறிவிப்பாளர்: தமீம் இப்னு அவுஸ் அத்தாரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், அஹ்மத், நஸாஈ, அபூதாவூத்)

ஐந்தறிவு உயிர்கள் மீதும் அன்பு காட்டுங்கள் என்பதற்கு சில நபிமொழிகள்கூட சான்றாய் திகழ்கின்றன. தாகித்த நாய்க்கு தண்ணீர் புகட்டியதற்காக ஒருவர் மன்னிக்கப்டுகிறார்; என்றும், பூனை ஒன்றை நீர், உணவின்றி கொடுமைப்படுத்தியவள் கடும் தண்டனை பெறுகிறாள் என்றும் அவற்றில் நாம் அறிகின்றோம்.

ஆக, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் எல்லாமும் பெற்று வாழ்ந்திட வேண்டும் என்பதுதான் இஸ்லாத்தின் நோக்கமாகும். அதன் பரந்துபட்ட அறிவுரைகளின் அடி நாதமே மனித நேயம், இணக்கம், அமைதிதான். எந்த விதத்திலும் எவரும் எவருடைய எந்த உரிமையையும் பறித்திட இஸ்லாம் அனுமதிக்கவில்லை. மாறாக அடுத்தவரின் உரிமையை வழங்குவது வணக்கமாகவும், மறுப்பது தண்டனைக்குரியதாகவும் ஆக்கியிருக்கிறது இஸ்லாம்.

அந்த வகையில் அநாதைகள் விஷயமாக இஸ்லாத்தின் வழிகாட்டல்களை இங்கு சுருக்கமாகத் தொகுத்தளிக்கப் படுகின்றன:

குர்ஆனில் அநாதை என்ற வார்த்தை..!

12 அத்தியாயங்களில் 23 இடங்களில் இவ்வார்தை;தை இடம் பெறுகிறது.

யார் அநாதை?

பிறப்பதற்கு முன்போ அல்லது பிறந்து பருவ வயதை அடைவதற்கு முன்போ தந்தையை இழந்துவிடும் நிலைக்கு ஆளாகும் குழந்தையே அநாதை என்ற இலக்கணத்திற்குள் வருகின்றது.

பேரருளாக, பாக்கியமாக கருதப்பட வேண்டியவர்கள் அநாதைகள்:

அகிலத்தின் அருட்கொடையன அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு அநாதையாகத்தான் துவங்கியது.

அவர்களின் செவிலித்தாய் ஹலீமா சஅதிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இது பற்றி கூறுவதைக் கேட்போம்:

நான் எனது கணவர் மற்றும் கைக் குழந்தையுடன் ஸஅது கிளையைச் சேர்ந்த சில பெண்களோடு பால் குடிக்கும் குழந்தைகளைத் தேடி வெளியில் புறப்பட்டோம். அது கடுமையான பஞ்ச காலம். நான் எனது வெள்ளைக் கழுமையில் அமர்ந்து பயணித்தேன். எங்களுடன் ஒரு கிழப்பெண் ஒட்டகம் இருந்தது. அதில் ஒரு சொட்டு பால்கூட கறக்க முடியாது. எங்களது குழந்தை பசியால் அழுது கொண்டிருந்ததால் இரவு முழுவதும் எங்களால் உறங்க முடியவில்லை. எனது மார்பில் அக்குழந்தையின் பசி தீர்க்கும் அளவு பாலும் இல்லை. எங்களது ஒட்டகையிலும் பாலில்லை. எனினும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து என் சிரமத்திற்காக விடிவையும் அவனது அருளையும் பெரிதும் எதிர்பார்த்திருந்தேன். நான் வாகனித்த பெண் கழுதை பலவீனத்துடன் மெதுவாகவே சென்றது. இது என்னுடன் வந்த குழுவினருக்கு பெரும் சிரமத்தை அளித்தது.

ஒரு வழியாக மக்காவை அடைந்து பால்குடிக் குழந்தைகளைத் தேடி அலைந்தோம். எங்களுடன் சென்ற அனைத்துப் பெண்களிடமு; அல்லாஹ்வின் தூதரை காட்டப்பட்டது. எனினும் அக்குழந்தை அநாதை என்று கூறப்பட்டதால் அனைவரும் அதனை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.

ஏனெனில் குழந்தையின் தந்தையிடமிருந்தே நாங்கள் ஊதியம் பெறமுடியும். இவர்கள் அநாதை என்பதால் தாய் அல்லது பாட்டனார் எங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்? என எங்களுக்குள் பேசிக் கொண்டோம். எனவே அல்லாஹ்வின் தூதரை எடுத்துச் செல்ல எங்களில் எவரும் விரும்பவில்லை.

என்னைத்தவிர என்னுடன் வந்த அனைத்து;ப் பெண்களுக்கும் குழந்தைகள் கிடைத்தனர். அனைவரும் திரும்பிச் செல்லத் தொடங்கியபோது நான் எனது கணவரிடம், ‘அனைவரும் குழந்தையுடன் திரும்புகையில் நான் வெறுங்கையுடன் செல்வதில் எனக்குச் சிறிதும் சம்மதமில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அந்த அநாதைக் குழந்தையை பெற்று வருகிறேன்’ என்று கூறியதற்கு அவர் ‘தாராளமாகச் செய்யலாமே! அக்குழந்தையின் மூலம் அல்லாஹ் நமக்கு பரகத் செய்யலாம்’ என்றார். நான் அங்கு சென்று குழந்தையை வாங்கி வந்தேன். எனக்கு வேறு எந்தக் குழந்தையும் கிட்டவில்லை என்ற காரணத்தினால் மட்டுமே நான் அக்குழந்தையை வாங்கிக் கொண்டேன்.

நான் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பினேன். அக்குழந்தையை எனது மடியில் வைத்தவுடன் எனது மார்புகளில் பால் சுரந்தது. அக்குழந்தை வயிறு நிரம்ப பால் அருந்தியது. அதன் சகோதரராகிய (எனது குழந்தையும்) பாலருந்தியது. பிறகு இருவரும் உறங்கிவிட்டனர். அதற்கு முன் நாங்கள் எங்களது குழந்தையுடன் உறங்க முடிந்ததே இல்லை. எனது கணவர் எங்களது கிழ ஒட்டகையை நோக்கிச் சென்றார். அதன் மடி பாலால் நிரம்பியிருந்தது. அதைக் கறந்து நானும் எனது கணவரும் பசிதீரக் குடித்தோம். அன்றிரவை நிம்மதியாக கழித்தோம். காலையில் எனது கணவர் ‘ஹலீமவே அல்லாஹ்வின் மீதானையாக நீ மிகவும் பரக்கத் பொருந்திய ஒரு குழந்தையை அடைந்திருக்கிறாய்’ என்றார். அதற்கு நான் ‘அப்படித்தான் நானும் நம்புகிறேன்’ என்றேன்.

பிறகு நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். எனது பெண் கழுதையில் அக்குழந்தையையும் அமர்த்திக் கொண்டேன். எனது பெண் கழுதை என்னுடன் வந்த குழுவினர் அனைவரின் கழுதைகளையும் முந்திக் கொண்டு சென்றது. அப்பெண்கள் என்னை நோக்கி; அபூ துவைபின் மகளே! உனக்கு என்ன நேர்ந்தது. எங்களடன் மெதுவாகச் செல்! நீ வரும்போது வாகனித்து வந்த கழுதைதானா இது’? என்றனர். ‘நான் அல்லாஹ்வின் மீதானையாக! அதுதான் இது’ என்றேன். அவர்கள் ‘நிச்சயமாக என்னவோ நேர்ந்துவிட்டது’ என்றனர்.

எங்களது ஊருக்குத் திரும்பினோம். அல்லாஹ்வின் பூமியல் எங்களது பகுதியைப் போன்றதொரு வறண்ட பூமியை நான் கண்டதில்லை. ஆனால், மேய்ச்சலுக்கு செல்லும் எனது ஆடுகள் மாலையில் வீடு திரும்பும் போது கொழுத்து மடி சுரந்து திரும்பும். அதை கறந்து அருந்துவோம். எங்களைத் தவிர வேறு எவரும் தங்களது ஆடுகளில் ஒரு துளிப் பால்கூட கறக்க முடியாது. அவர்களது ஆடுகளின் மடிகள் வரண்டிருந்தன. எங்கள் சமூகத்தில் அனைவரும் தங்களது இடையர்களிடம் உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஹலீமாவின் இடையர் மேய்க்கும் பகுதிகளுக்குச் சென்று மேய்த்து வாருங்கள்’ என்று சொல்வார்கள். இருப்பினும் எனது ஆடு வயிறு நிரம்பி மடி சுரந்து வரும்போது அவர்களுடைய ஆடுகள் வயிறுகள் ஒட்டிப் போய் காய்ந்த மடியுடன் திரும்பி வந்தன.

இவ்வாறு அக்குழந்தை பால்குடி மறக்கடிக்கும் வரையிலான இரண்டு வருடங்கள் வரை அல்லாஹ்விடமிருந்து பல நன்மைகளையும் வளங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தோம். இரண்டு வயதில் ஏனைய குழந்தைகளைவிட மிக உறுதியாகவும் வலிமையாகவும் அக்குழந்தை வளர்ந்திருந்தது. அவரிடமிருந்து ஏராளமான நன்மைகளை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருந்ததால் அவரை எங்களுடன் தங்க வைத்துக் கொள்ள மிகுந்த ஆவல் கொண்டோம். எனினும், தவணை முடிந்து விட்டமையால் அவரது தாயாரிடம் அழைத்துச் சென்றோம். அவரது தாயாரிடம் ‘இந்த அருமைக் குழந்தை இன்னும் திடகாத்தரமாக வளரும் வரை என்னிடம் விட்டுவிடுங்கள். மக்காவில் ஏதேனும் நோய் அவரைப் பீடித்த விடுமென நான் அஞ்சுகிறேன்’ என்ற கூறினேன். எனது தொடர்ச்சியான வற்புறுத்தலால் குழந்தையை என்னிடமே ஒப்படைத்து விட்டார். (இப்னு ஹிஷாம்)

‘எந்த வீட்டில் ஓர் அநாதை இருந்து, அவனுடன் நல்லவிதமாக நடந்துக்கொள்ளப்படுகிறதோ அந்த வீடே முஸ்லிம்களின் வீடுகளிலேயே மிகச் சிறந்த வீடாகும். எந்த வீட்டில் ஓர் அநாதை இருந்து, அவனுடன் மோசமாக நடந்துக்கொள்ளப்படுகின்றதோ அந்த வீடுதான் முஸ்லிம்களின் வீடுகளிலேயே மிகக் கெட்ட வீடாகும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னு மாஜா)

சொர்க்கமே பரிசு....

‘நானும் – அநாதையைப் பராமரிப்பவனும் மற்ற தேவைகள் உடையோரைப் பராமரிப்பவனும் சுவனத்தில் இப்படி இருப்போம்’ இதைச் சொல்லிவிட்டு நபியவர்கள் நடுவிரலைiயும், சுட்டுவிரலையும் காட்டினார்கள். இரு விரல்களுக்கிடையேயும் சிறிது இடைவெளி விட்டிருந்தார்கள். (அறிவிப்பாளர்: ஸஹல் பின் ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)

‘விதவைகளுக்காவும், வறியவர்களுக்காகவும் பாடுபடுபவர் இறைவழியில் போர் புரிபவரைப் போன்றவர். மேலும், அவர் இரவு முழுக்க இறைவனின் சந்நிதியில் நின்று களைப்படையாமல் வணங்கினன் கொண்டிப் பவரைப் போன்றவர். புகலில் உண்ணாமல் தொடர்ந்து நோன்பு நோற்ற வண்ணமிருக்கும் நோன்பாளி போன்றவர்’ என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி, முஸ்லிம்)

அநாதைகளை விரட்ட வேண்டாம் :

‘கொடுப்பதற்கு எரிந்துபோன குளம்பைத்தவிர (சூப்) வேறு ஏதுமில்லாவிட்டாலும் சரியே, யாசிக்க(அநாதை) வந்தவனின் கையில் நீ அதையாவது கொடுத்துவிடு!’ என்றார்கள் நபியவர்கள். (அறிவிப்பாளர்: உம்மு ஜுனைத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத்)

‘மறுமையில் நற்கூலி – தண்டனை கொடுக்கப்படுவதை பொய்யென்று கூறுபவனை நீர் பார்திருக்கிறீரா? அவன்தான் அநாதையை மிரட்டி விரட்டுகின்றான். (அல்மாவூன்: 107:1-2)

அநாதைகளைப் பராமரிப்பதும் அவர்களை நல்ல முறையில் நடத்துவதும் :

‘;;..அல்லாஹ்வோடு எதனையும் இணையாக்காதீர்கள். தாய் தந்தையரிடம் நல்ல விதமாக அன்புடன் நடந்து கொள்ளுங்கள்! மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள் ஆகியோருடனும் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். மேலும் உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டாh, பக்கத்திலிருக்கும் நண்பர், மற்றும் வழிப்போக்கர், உங்கள் கைவசத்திலுள்ள அடிமைகள் ஆகியோருடனும் நயமாக நடந்த கொள்ளுங்கள்! திண்ணமாக, அறிந்து கொள்ளுங்கள்: வீண் பெருமையிலும், கர்வத்திலும் உழல்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை’. (அந்நிஸா: 4: 36)

‘அநாதைகளைப் பற்றியும் உம்மிடம் வினவுகின்றனர். நீர் கூறுவீராக: ‘ அவர்களுக்கு நன்மை பயக்கக் கூடிய செயல்முறையை மேற்கொள்வதே உத்தமமாகும். நீங்களும், அவர்களும் சேர்ந்து வாழ்வதில் (உணவு, உறைவிடம் போன்றவைகளுக்குக் கூட்டாக செலவு செய்வதில்) குற்றமேதுமில்லை. ஏனென்றால், அவர்கள் உங்கள் சகோதரர்களாவர், தீமை செய்பவர்களையும் நன்மை செய்பவர்களையும் அல்லாஹ் நன்கு அறிந்திருக்கின்றான். அல்லாஹ் நாடியிருந்தால் (இவ்விஷயத்தை) உங்களுக்குக் கடின மாக்கியிருப்பான், ஆனால் அல்லாஹ் பேராற்றலுள்ளவனனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்’ (அல்பகரா: 2:220)

அநாதைகளுக்கு அள்ளி வழங்குங்கள் :

‘தாம் என்ன செலவு செய்ய வேண்டும் என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். சொல்வீராக! ‘நீங்கள் எந்த ஒரு நல்ல பொருளையும் செலவு செய்யுங்கள், அதனை உங்கள் பெற்றோருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிNபோக்கர்களுக்கும் செலவழியுங்கள்! மேலும் நீங்கள் எந்த நன்மை செய்தாலும் அதனைத் திண்ணமாக அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான்’. (அல்பகரா: 2: 215)

வாரிசு அல்லாத அநாதைக்குக்கும் வழங்குக:

‘மேலும், பங்கீடு செய்யும்போது (வாரிசு அல்லாத) உறவினர்களோ, அநாதைகளோ, வறியவர்களோ வந்தால் அச்சொத்திலிருந்து அவர்களுக்கும் சிறது வழங்குங்கள்! மேலும், அவர்களிடம் கனிவாகப் பேசுங்கள்’. (அந்நிஸா: 4:8)

அநாதைகள் விஷயத்தில் நீதியை கடைபிடியுங்கள்:

‘அந்த அநாதைப் பெண்கள் பற்றிய சட்டங்களையும் மற்றும் பலவீனமான குழந்தைகள் பற்றிய சட்டங் களையம் (உங்களுக்கு நினைவுபடுத்துகிறான்). மேலும். அநாதைகள் விஷயத்தில் நீதியை கடைபிடியுங்கள் என்றும் அல்லாஹ் உங்களுக்கு ஏவுரை வழங்குகின்றான். மேலும், நீங்கள் செய்யும் எந்த ஒரு நன்மையையும் திண்ணமாக அல்லாஹ் நன்கு அறிந்தே இருக்கின்றான்’. (அந்நிஸா: 4:127)

இறையச்சமுடையவர்களின் நற்செயல்கள்..

‘இவர்கள் எத்தகையவர்கள் என்றால், (இந்த உலகத்தில்) நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொண்டும் அனைத்துத் திசைகளிலும் துன்பங்கள் பரவக்கூடிய அந்த மறுமை நாளினைக் குறித்து அஞ்சிக் கொண்டுமிருப்பார்கள். மேலும், அல்லாஹ்வின் மீதுள்ள அன்பினால் வறியவருக்கும், அநாதைக்கும், கைதிக்கும் உணவளிக்கன்றார்கள். (மேலும். அவர்களிடம் கூறுகின்றார்கள்) ‘நாங்கள் அல்லாஹ்வுக்காவே உங்களுக்கு உணவளிக்கின்றோம். நாங்கள் உங்களிடமிருந்து எந்தப் பிரதிபலனையும். நன்றியையும் எதிர்பார்க்கவில்லை. நீண்ட, சுடும் துன்பத்திற்குரிய ஒரு நாளின் வேதனையைக் குறித்துதான் எங்கள் இறைவனிடம் நாங்கள் அஞ்சுகின்றோம்.’ (அத்தஹ்ர்: 76:7-10)

மனம் அமைதி பெற:

ஒரு மனிதர் நபியவர்களிடம் தன் கல்நெஞ்சம் பற்றி முறையிட்டார். நபியவர்கள், ‘அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள், ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்’ என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத்)

அநாதைகளின் உரிமைகள்:

‘அவர்கள் (அநாதைகள்) பெரியவர்களாகி (த் தங்களினன் உரிமைகளைக் கேட்டு) விடுவார்களென அஞ்சி அந்த உடமைகளை நீதிக்குப் புறம்பாக வீண் விரயமாக, அவசரமாக விழுங்கி விடாதீர்கள். அநாதைகளைப் பராமரிப்பவர் செல்வந்தராக இருந்தால், அவர் அநாதைகளின் சொத்துக்களிலிருந்து உண்பதைத் தவிர்த்துக் கொள்ளட்டும். அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவோடு உண்ணவும்’ (அந்நிஸா 4:6)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘என் இறiவா! நான் இரு பலவீனர்களின் உரிமையை கண்ணியத்திற் குரியதாய்க் கருதுகின்றேன். 1. அநாதையின் உரிமை 2. மனைவியின் உரிமை. (அறிவிப்பாளர்: குவைலித் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸாஈ)

நான் நபியவர்களிடம் வினவினேன்: ‘என் பராமரிப்பில் இருக்கும் அநாதையை எந்தெந்த காரணய்களுக்காக நான் அடிக்கலாம்?’ நபியவர்கள் கூறினார்கள்: ‘எந்தக் காரணங்களுக்காக உம் சொந்தக் குழந்தைகளை அடிப்பீரோ அந்தக் காரணங்களுக்காக மட்டுமே அவர்களை நீ அடிக்கலாம். எச்சரிக்கை! உம் செல்வத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அநாதையின் செல்வத்தை அழிக்கக் கூடாது. அநாதையின் செல்வத்தில் உம் சொத்தைப் பெருக்கிக் கொள்ளக்கூடாது’. என பதிலளித்தார்கள் நபியவர்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: தபரானி)

அநாதைகளின் பொருளை அபகரித்தல் பெரும் பாவம்:

‘அநாதைகளின் சொத்துக்களை யார் அநியாயமாக உண்கிறார்களோ, அவர்கள் உண்மையில் தங்கள் வயிறுகளில் நெருப்பைத்தான் நிரப்பிக் கொள்கிறார்கள். மேலும் அதிவிரைவில் அவர்கள் கொழுந்து விட்டெரியும் நரக நெரப்பில் வீசி எறியப்படுவார்கள்’. (அந்நிஸா: 4:10)

அழித்தொழிக்கும் 7 பாவங்களில் இருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள் என ஒரு சமயம் இறைத்தூதர் அவர்கள் கூறியபோது, கூடியிருந்த தோழர்கள் அவை யாவை என வினவினார்கள். அதற்கு நபியவர்கள்; இறைவனுக்கு இணை கற்பித்தால்;, அநியாயமாக ஒருவரைக் கொலை செய்தல், வட்டி வாங்குதல், அநாதைகளின் பொருளை அபகரித்தல், அறப்போராட்டத்தின் போது போர்க்களத்திலிருந்து பின்வாங்கி ஓடுதல், கற்புள்ள ஒரு அபலைப் பெண் மீது அவதூறு சுமத்துதல் ஆகியவை எனப் பதிலுரைத்தார்கள். (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: புகாரி, முஸ்லிம்.)

அநாதைகளின் சொத்துரிமையை பேணுதல்:

‘அநாதைகளின் செல்வத்தை அவர்கள் பருவ வயதினை அடையும்வரை – நியாயமான முறையில் அன்றி நெருங்காதீர்கள்! (அல்அன்ஆனம் 6:152)

அநாதைகளின் உடமைகளை அவர்களிடமே ஒப்படைந்துவிடுங்கள்:

‘அநாதைகளுக்கு அவர்களுடைய உடைமைகளைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள். நல்ல பொருளுக்குப் பதிலாக தீய பொருளை மாற்றாதீர்கள். மேலும், அவர்களின் பொருள்களை உங்களின் பொருள்களோடு கலந்து உண்ணாதீர்கள், திண்ணமாக இது பெரும் பாவமாகும்’. (அந்நிஸா: 4:2)

அநாதைகளின் சொத்துக்களை எப்போது அவர்களிடம் ஒப்படைத்தல் வேண்டும்?

‘அநாதைகளை அவர்கள் திருமணப் பருவத்தை அடையும் வரை சோதித்து வாருங்கள். அவர்களிடம் (பகுத்துணரும்) தகுதியை நீங்கள் கண்டால், அவர்களுக்குரிய உடைமைகளை அவர்களிடமே ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் பெரியவர்களாகி (த் தங்களின் உரிமைகளைக் கேட்டு) விடுவார்களென அஞ்சி அந்த உடைமைகளை நீதிக்குப் புறம்பாக, வீண் விரயமாக, அவசரமாக விழுங்கி விடாதீர்கள்! அநாதைகளைப் பராமரிப்பவர் செல்வந்தராக இருந்தால், அவர் அநாதைகளின் சொத்துக்களிலிருந்து உண்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவோடு உண்ணலாம். அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அதற்குச் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் கணக்கு கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்’. (அந்நிஸா:4:6)

மனிதன் சோதிக்கப்படுகிறான் :

‘ஆனால், மனிதனின் நிலை எப்படி இருக்கின்றதெனில், அவனுடைய இறைவன் அவனைச் சோதிக்க நாடி – அவனை கண்ணியப்படுத்தி, அருட்கொடைகளையும் வழங்கினால், ‘என்னுடைய இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான்’ என்று கூறுகின்றான். மேலும், அவனைச் சோதிக்க நாடி – அவனடைய வாழ்க்கை வசதிகளைச் குறைத்து விட்டால் ‘என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான்’ என்று கூறுகின்றான். ஒருபோதும் இல்லை! ஆனால், அநாதையுடன் கண்ணியமாய் நீங்கள் நடந்துகொள்வதில்லை, மேலும், வறியவர்க்கு உணவளிக்க ஒருவரையொருவர் தூண்டுவதுமில்லை! (அல்ஃபஜ்ர்: 89:15-18)

நற்செயல் என்பதே....

‘நற்செயல் என்பது உங்களுடைய முகங்களைக் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல! மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் ஒருவன் முழுமையாக நம்புவதும் – மேலும் (அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்தின் காரணமாகத்) தமக்கு விருப்பமான பொருளை உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும். வறியவர்களுக்ம், வழிப்போக்கருக்கும். யாசிப்போருக்கும், அடிமைகைள மீட்பதற்கும் வழங்குவதும், மேலும் தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தைக் கொடுத்து வருவதுமே நற்செயலாகும்.

மேலும், வாக்குறுதி அளித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களும், வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும். அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்களுமே புண்ணியவான்கள் ஆவர். இவர்களே உண்மையாளர்கள், மேலும் இவர்களே இறையச்சமுடையவர்கள்’. (அல்பகரா: 2:177)

தமிழகத்தின் பல பகுதிகளில் பல முஸ்லிம் அநாதை இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. சிற்சில குறைபாடுகள் உண்டென்றாலும் பொதுவாக அவைகள் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றன. அவைகளில் அநாதை சிறுவர்களுக்கு தேவையான உணவு, உடை, உறையுள், கல்வி, சுகாதார உதவி வழங்கப்படுகின்றன. அவைகளின் ஊழியர்கள் அனைவருக்கும் சமுதாயத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, இந்த சீறிய சேவையை அல்லாஹ் அங்கீகரிக்கவும், சிறப்பான இப்பணி தொய்வின்றி தொடர்ந்திடவும் இரு கரமேந்தி பிரார்த்தனை புரிந்திடுவோம்.

அநாதைகளை – அவர்கள் எங்கிருந்தாலும் – ஆதரிப்பதில் வரும் நாள்களில் நம்முடைய பொருளாதார பங்களிப்பை அதிகப்படுத்திட வேண்டும். குறைந்தபட்சம் ஒரு அநாதைச் சிறுவனின் முழுத் தேவையையாவது பூர்த்தி செய்திடும் விதத்தில் நம்முடைய திட்டமும் செயல்பாடும் அமையுமானால் அது ஒன்றே சொர்க்கத்திற்கு – அதுவும் அதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகாமையில் அமர்ந்திட – இட்டுச் செல்ல வல்லது என்று நாம் உறுதியாய் நம்பிட வேண்டும்.

பெரும்பாலான அநாதை இல்லங்கள் பொதுமக்களின் நன்கொடைகள் மூலமே நடத்தப்படுகின்றன. அவைகள் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனவா? வருடா வருடம் முறையாக தணிக்கை செய்யப்பட்ட வரவு – செலவு அறிவிக்கை பொது மக்கள் முன் சமர்ப்பிக்கப்படுகிறதா? அவற்றின் நன்கொடையாளர்களின் பட்டியல், மற்றும் சொத்து விபரங்கள் அரசாங்கத்திற்கோ அல்லது பொது மக்களுக்கோ அறியத்தரப்படுகிறதா? அரசாங்கத்தின் அநாதைகளுக்கான சலுகைகளும், பலன்களும் பெறப்பட்டு அவற்றின் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றனவா? போன்ற கேள்விகளுக்கு திருப்திகரமாண பதில்கள் கிடைக்குமா? பெரிய ஐயமோ, இல்லையோ, அதிர்ச்சியோ ஒரு வேளை பதிலாக கிடைத்தாலும் ஆச்சர்யமில்லை.

‘(நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இவ்வாறு இறைஞ்சுங்கள்:) ‘எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து போயிருப்பினும், பிழை செய்திருப்பினும் நீ எங்களை (குற்றம்) பிடிக்காதே! எங்கள் இறைவனே! மேலும் எங்களுக்கு முன் சென்றோர் மீது நீ பாரத்தை சுமத்தியது போல் எங்கள் மீதும் பாரத்தைச் சமத்தி விடாதே! எங்கள் இறைவனே! மேலும் நாங்கள் தாங்க இயலாத பாரத்தை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்களைப் பொறுத்தருள்வாயாக! எங்களுக்கு மன்னிப்பு வழங்குவாயாக! எங்கள் மீது கருணை பொழிவாயாக! எங்கள் பாதகாவலனாவாய்! (சத்தியத்தை) நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக வெற்றி கொள்ள எங்களுக்கு உதவி செய்வாயாக!’ (அல்பகரா: 2:286)

அதனால் மேலே குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் வசனங்களையும், நபிமொழிகளையும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தாரிடம் கனிவோடு மீண்டும் நினைவுபடுத்திடுவோம். அதை நம் கடமையென கருதுவோம். அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்.

ஆக்கம்: பேராசிரியர் கே. தாஜுத்தீன், குவைத்

source: http://igckuwait.net/