Home கட்டுரைகள் அரசியல் காஷ்மீர் : அப்சல் குருவுக்காக அழக்கூட உரிமையில்லை..!
காஷ்மீர் : அப்சல் குருவுக்காக அழக்கூட உரிமையில்லை..! PDF Print E-mail
Wednesday, 12 February 2014 19:31
Share

காஷ்மீர் : அப்சல் குருவுக்காக அழக்கூட உரிமையில்லை..!

அப்சல் குருவை தூக்கிலேற்றி கொன்ற இந்திய அரசுக்கு இப்போதும், இனியும் காஷ்மீரில் நிம்மதியில்லை என்பதையே அப்சல் குரு நினைவு நாளன்று நடந்த போராட்டங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு 2013 பிப்ரவரி மாதம் ஒன்பதாம் நாள் அப்சல் குரு தூக்கிலேற்றிக் கொல்லப்பட்டார். 2001-ம் ஆண்டு நடந்த தில்லி பாராளுமன்றத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் என்று அரசால் சதி செய்து முத்திரை குத்தப்பட்ட அப்சல் குரு அந்த தேதியில் மிகவும் இரசியமான முறையில் தூக்கிலிடப்பட்டார். இந்தியாவின் கூட்டு மனசாட்சியை திருப்திப் படுத்தும் பொருட்டு முறையான நிரூபணங்கள் ஏதுமில்லாத நிலையிலேயே அப்சல் கொலை செய்யப்பட்டார்.

“இந்தியாவின் கூட்டு மனசாட்சி” எனப்பட்டது ஆளும் வர்க்கங்களாலும், ஆளும் வர்க்க ஊதுகுழல்களான பத்திரிகைகளாலுமே பெற்றெடுக்கப்பட்டது. பாராளுமன்ற “தாக்குதல்” நடைபெற்றதில் இருந்து அப்சல் சட்டப்பூர்வமாகவே கொலை செய்யப்படும் நாள் வரை தீர்ப்பில் சொல்லப்பட்ட ‘கூட்டு மனசாட்சியை’ திட்டமிட்டு கட்டமைத்தனர். விசாரணை நீதிமன்றத்திலும் முதலாளித்துவ பத்திரிகைகளிலுமாக நடைபெற்ற வந்த பிரச்சாரத்தின் மூலம் தீர்ப்பு எழுதப்படுவதற்கு முன்பே அப்சலின் விதி தீர்மானிக்கப்பட்டது.

மரணத்திற்கு முன் அப்சலின் உறவினர்களையோ, மனைவி மற்றும் குழந்தைகளையோ கூட பார்ப்பதற்கு அவர் அனுமதிக்கப்படவில்லை. அவரது தண்டனை நிறைவேற்றப்படும் தகவல் கூட உடன் கிடைக்காதவாறு ‘தபாலில்’ அனுப்பப்பட்டது. இறுதியில் இந்தியாவின் கூட்டு மனசாட்சி 2013 பிப்ரவரி 9 அன்று ஒரு அப்பாவியின் உயிரைத் தின்று தன்னை திருப்தி செய்து கொண்டது.

அப்சல் இறந்து ஒரு வருடம் கடந்து விட்டது. இதோ இன்றைய காஷ்மீரில் இராணுவமும் துணை இராணுவப் படைகளும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளது. இணைய சேவையும் செல்போன் சேவையும் தடைசெய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு ஆயுதம் ஏந்திய படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கூட்டு மனசாட்சியின் மேல் காஷ்மீரிகளின் ஒரு துளி கண்ணீர் கூட சிந்தி விடக்கூடாது என்பதில் ஆளும் வர்க்கம் தெளிவாக உள்ளது.

தில்லி திகார் சிறையில் கொன்று புதைக்கப்பட்ட அப்சல் குருவின் உடலுடைய மிச்சங்களையாவது கொடுங்கள் என்று கேட்டு காஷ்மீரிகள் தெருக்களில் இறங்கியிருக்கிறார்கள். காஷ்மீர் தலைநகர் சிறீநகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பேரணி சென்றதை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி யாசின் மாலிக்கின் தலைமையில் சிறீநகரின் மியாசுமா பகுதியில் எழுச்சிகரமான பேரணி ஒன்று நடைபெற்றுள்ளது. பேரணியைத் தடுத்து நிறுத்திய காவல்துறை யாசின் மாலிக்கை கைது செய்துள்ளது.

போராட்டக்காரர்கள் மேல் சி.ஆர்.பி.எப் படையினர் தாக்கியதில் நான்கு சிவிலியன்கள் காயமடைந்துள்ளனர். பதிலுக்கு ஆயுதமேந்திய, உலகின் மூன்றாம் பெரிய இராணுவத்தை எதிர்த்து கற்களோடு களமிறங்கியிருக்கிறார்கள் மக்கள். நாய்ட்காய் சம்பால், பாப்சன், மெயின் சவுக், பண்டிபுரா, மார்குண்ட் கங்கன் மற்றும் ஹடிபோரா ஆகிய இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளதாக போலீசு அறிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டம் ஊரடங்கு உத்திரவுகளாலும், ஆயுதமேந்திய சீருடையணிந்த குண்டர் படைகளாலும் ’இந்தியாவின் கூட்டு மனசாட்சி’ மேலும் ஒரு முறை காப்பாற்றப்பட்டுள்ளது. என்றாலும் சத்சிங்கபுரா, பத்ரிபால், அப்சல் குரு, பாலியல் வல்லுறவுகள், போலி மோதல் கொலைகள் என்று தொடர்ந்து காஷ்மீரிகளின் மேல் ஏவி விடப்பட்டுள்ள அரச பயங்கரவாதத்திற்கான எதிர்வினையிலிருந்து நீண்ட நாட்களுக்கு அந்த ‘கூட்டு மனசாட்சியை’ பாதுகாக்க முடியாது.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 8,000 காஷ்மீரிகள் ’காணாமல் போயுள்ளனர்’, அரச படைகளால் கொன்று புதைக்கப்பட்ட 2,730 அப்பாவிகளின் சடலங்கள் இரண்டாண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு வகைகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் அநீதியான முறையில் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

அப்பாவிகளின் கொலைகளால் கட்டிக் காப்பாற்றப்படும் ‘கூட்டு மனசாட்சியின்’ ஆயுள் நீடித்ததில்லை என்பதே வரலாறு. இந்திய தேசிய வெறியின் தாக்குதல் இலக்கான காஷ்மீரிகள் தங்கள் உடமைகளையும் உயிர்களையும் இழந்து இன்று கண்ணீர் வடிக்கும் உரிமை கூட மறுக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளனர். எனினும், காஷ்மீர் மாநிலமெங்கும் தடையை மீறி தெருவில் கூடி வரும் மக்கள் திரள் ’கூட்டு மனசாட்சியின்’ புதைகுழி தயாராகி வருவதையே உணர்த்துகிறது.

அப்சல் குருவை தூக்கிலேற்றி கொன்ற இந்திய அரசுக்கு இப்போதும், இனியும் காஷ்மீரில் நிம்மதியில்லை என்பதையே அப்சல் குரு நினைவு நாளன்று நடந்த போராட்டங்கள் தெரிவிக்கின்றன.

மேலே கட்டத்தில் உள்ளவைகளை மொழிந்தவர் : சமூக ஆர்வலர், அருந்ததி ராய்

source; http://www.vinavu.com/2014/02/12/afzalguru-killing-anniversary-kashmir-brutally-suppressed/