Home குடும்பம் பெண்கள் ஆணின் போகப்பொருளாக மட்டுமே பெண்ணுடல் மாற்றப்பட வேண்டும் என்பதுதான் நாகரீகமோ!
ஆணின் போகப்பொருளாக மட்டுமே பெண்ணுடல் மாற்றப்பட வேண்டும் என்பதுதான் நாகரீகமோ! PDF Print E-mail
Saturday, 18 January 2014 06:27
Share

ஆணின் போகப்பொருளாக மட்டுமே பெண்ணுடல் மாற்றப்பட வேண்டும் என்பதுதான் நாகரீகமோ!

[ இன்றைய பெண்களின் நடை, உடை, பாவனைகளை அவர்கள் தெரிவு செய்வதில்லை. மாறாக பன்னாட்டு அழகு சாதன நிறுவனங்கள்தான் அவற்றைப் பயன்படுத்துமாறு பெண்களை நிர்ப்பந்திக்கின்றன.

இந்நிறுவனங்களின் நோக்கம் பெண்களின் சுதந்திரத்தைப் பெற்றுத் தருவது அல்ல. மாறாக ஆணின் போகப்பொருளாக பெண்ணுடல் மாற்றப்பட வேண்டும் என்பதுதான். ஏனெனில் ஆண்களைக் கவருதற்குத்தான் ஆயிரக் கணக்கில் பொருட்கள் பெண்களின் மேக்கப் உலகில் குவிக்கப்படுகின்றன.

ஆண்களின் இன்பத்திற்காகப் பெண்களைக் கடைச்சரக்காக்கும் இந்த மாயவலையில் இருந்து பெண்கள் விடுபடவேண்டும். அரை நிர்வாண உடையுடன் நடக்கும் ஃபேஷன் ஷோக்கள் எல்லாம் பெண்களின் விடுதலைக்காகவா நடத்தப்படுகின்றன?

எந்த அளவுக்கு ஆண்களைக் கவர முடியும் என்பதே அவற்றின் அழகியல் விதி. உள்ளாடைகளைக்கூட ஆண்களின் கவர்ச்சிக்காகத் தயாரிக்கிறார்களேயன்றி பெண்களுக்கு அவை சிறப்பாகப் பயன்படவேண்டும் என்பதற்கல்ல.]

தன்னை வல்லுறவுக்குள்ளாக்கிய அயோக்கியனை ஒரு பெண் பொது அரங்கில் தண்டிக்க நினைப்பதே அரிது. இந்தியா போன்ற நாடுகளில் அது இன்னமும் கடினமான ஒன்று. கற்பு, புனிதம் என்ற சங்கிலியில் பூட்டப்பட்டிருக்கும் ஒரு பெண் தான் கற்பழிக்கப்பட்டவள் என்று நீதி கோரினாலே அவள் வாழ்க்கை அத்துடன் முடிந்தது. பார்ப்பனியத்தின் விழுமியங்களால் இயங்கிவரும் சமூகம் அவளை புனிதம் கெட்ட அபலையாகத்தான் பார்க்கிறது.

தமிழ் சினிமாவில் கூட கற்பழித்தவனைக் காப்பாற்றுவதற்கு வழக்குரைஞர் பாதிக்கப்பட்ட பெண்ணிடன் அவன் எங்கே கை வைத்து என்ன செய்தான் என்று வாதிடும்போது, எதுவும் சொல்ல முடியாமல் அந்தப் பெண் அழுது அரற்றுவாள். நிழலில் மட்டுமல்ல நிஜத்திலும் இதுதான் யதார்த்தமாக உள்ளது. 

பாலியல் வல்லுறவுக்கு ஓரளவு பெண்களும் காரணமாக இருக்கின்றனர் என்பது உலகத்தின் பொதுப்புத்தியாக இருக்கிறது. 'அம்னஸ்டி அமைப்பு' சென்ற வருடம் உலகெங்கிலும் உள்ள இளைஞர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் பதிலளித்த கால்பங்கினர் பாலியல் வல்லுறவுக்கு பகுதியளவோ, முழுமையாகவோ பெண்களும் செக்சியான உடை அணிவதின் மூலம் காரணமாக இருக்கின்றனர் என்று தெரிவித்தனராம். இதையே அயர்லாந்தில் நடந்த ஆய்விலும் நாற்பது சதவீதம் பேர் வழிமொழிந்திருக்கின்றனர்.

ஒரு பெண் எந்த ஆடை உடுத்த வேண்டும் என்பது அவளது விருப்பம, சுதந்திரத்தைப் பொறுத்தது என்பதில் சிறிய சிக்கல் இருக்கிறது. இன்றைய பெண்களின் நடை, உடை, பாவனைகளை அவர்கள் தெரிவு செய்வதில்லை. மாறாக பன்னாட்டு அழகு சாதன நிறுவனங்கள்தான் அவற்றைப் பயன்படுத்துமாறு பெண்களை நிர்ப்பந்திக்கின்றன. இந்நிறுவனங்களின் நோக்கம் பெண்களின் சுதந்திரத்தைப் பெற்றுத் தருவது அல்ல. மாறாக ஆணின் போகப்பொருளாக பெண்ணுடல் மாற்றப்பட வேண்டும் என்பதுதான். ஏனெனில் ஆண்களைக் கவருதற்குத்தான் ஆயிரக் கணக்கில் பொருட்கள் பெண்களின் மேக்கப் உலகில் குவிக்கப்படுகின்றன.

இந்தியாவில் பூவும், பொட்டும், வளையலும் அணிந்து ஒரு பெண் செல்வதற்கு காரணமென்ன? கணவனைக் கவருவதற்குத்தான். ஆனால் ஆண்கள் யாரும் பெண்களைக் கவருவதற்கு மல்லிகையைச் சூடுவதில்லை. தெருவோரம் நிற்கும் விலைமாது கூட இந்த அலங்காரங்களோடுதான் தனது வாடிக்கையாளரைக் கவருகிறாள். இவையின்றி அவளால் தொழிலைச் செய்ய முடியாது.

ஆண்களின் இன்பத்திற்காகப் பெண்களைக் கடைச்சரக்காக்கும் இந்த மாயவலையில் இருந்து பெண்கள் விடுபடவேண்டும். அரை நிர்வாண உடையுடன் நடக்கும் பேஷன் ஷோக்கள் எல்லாம் பெண்களின் விடுதலைக்காகவா நடத்தப்படுகின்றன? எந்த அளவுக்கு ஆண்களைக் கவர முடியும் என்பதே அவற்றின் அழகியல் விதி. உள்ளாடைகளைக்கூட ஆண்களின் கவர்ச்சிக்காகத் தயாரிக்கிறார்களேயன்றி பெண்களுக்கு அவை சிறப்பாகப் பயன்படவேண்டும் என்பதற்கல்ல.

எல்லா விளம்பரங்களிலும், ஏன் ஆண்கள் பயன்படுத்தும் பொருட்களுக்குக் கூட பெண் மாடல்கள்தான் தேவைப்படுகிறார்கள். இப்படி எல்லா வழியிலும் அல்லும் பகலும் பெண்ணுடல் என்பது உலக முதலாளித்துவ நிறுவனங்களால் அன்றாடம் கற்பழிக்கப்படுகின்றன. அதனால்தான் சொல்கிறோம் ஒரு பெண் தனக்குரிய ஆடைகளை அணிவதற்கு சுதந்திரமில்லை. இதைப்பெறவேண்டுமானால் போகப்பொருளாகக் கருதி திணிக்கப்படும் இந்த அழகியல் பொருட்களை மறுக்க வேண்டும். இவற்றைத் துறப்பதில்தான் பெண்ணழகு உண்மையாக மலர முடியும். ஆண்களைக் கவரும் விசயத்திலிருந்து பெண்கள் விடுதலையாவதுதான் அவளின் சுதந்திரத்திற்கான முதல் நிபந்தனை.

சமத்துவமான பெண்ணுரிமை என்பது அப்படித்தான் மீட்கப்பட முடியும்.

உலகெங்கும் பாலியல் வன்முறைகளுக்காக தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் விகிதம் குறைவாகத்தான் உள்ளது.

www.nidur.info