Home குடும்பம் பெண்கள் மகளிர் சக்தி வீணாகிறதா?
மகளிர் சக்தி வீணாகிறதா? PDF Print E-mail
Friday, 17 January 2014 05:51
Share

வீணாகும் மகளிர் சக்தி

எனது மகள் எம்.சி.ஏ. படித்து முடித்துவிட்டு, வங்கி வேலைக்கு தேர்வு எழுதியுள்ளாள். ஆனால் மாப்பிள்ளை அமைந்துவிட்டது. அடுத்த மாதம் திருமணம். மாப்பிள்ளை எனது மகளை வேலைக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறிவிட்டார். இப்படி பல பெண்கள் தினசரி இங்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் மகளிர் கலைக்கல்லூரி பேராசிரியை ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர், "பெண்கள் நன்றாகப் படிக்கிறார்கள்; நல்ல மதிப்பெண்கள் பெறுகிறார்கள். அவர்கள் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது, பல நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்துகிறது. அதில் பல பெண்கள் வேலைக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மூன்றாம் ஆண்டில் கல்லூரி இறுதி நாள்களில், அவர்கள் "மேடம் எனக்கு திருமணம், இந்தாருங்கள் அழைப்பிதழ்' என திருமண அழைப்பிதழை நீட்டுகிறார்கள். "நீ பெங்களூரில் உள்ள நிறுவனத்திற்கு வேலைக்கு தேர்வு செய்யப்படிருந்தாயே. திருமணம் முடிந்ததும் வேலைக்கு செல்வாய் அல்லவா' என்று கேட்டால், "இல்லை மேடம், அவர் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டார்' என மாணவியர் கூறிச் சென்று விடுகிறார்கள்' என ஆதங்கத்துடன் கூறினார்.

இப்படி வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு, வேலைக்குச் செல்லாமல் விட்டுவிடுபவர்கள் 80 சதவீதம் பேர் எனக் கூறப்படுகிறது. அதாவது ஒரு கல்லூரி கேம்பஸ் இன்டர்வியூவில் 10 மாணவிகள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டால் வேலைக்கு செல்வது இரண்டு மாணவிகள் மட்டுமே. ஏன் இந்த நிலை? பெண்கள் என்றால் படித்து முடித்து விட்டு திருமணம் ஆகி வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டும் என சட்டம் ஏதாவது உள்ளதா? அந்தப் பெண்கள் படித்த படிப்பு வீணாகி கொண்டிருப்பது தெரியவில்லையா? ஒருநபர் இளங்கலை பட்டப்படிப்பு படிக்க அரசு அதிக பணம் செலவழிக்கிறது. முதுகலை பட்டப்படிப்பு படிக்க அதற்கும் மேல் செலவழிக்கிறது. இந்தச் செலவுகள் மக்கள் வரிப் பணத்தில்தான் செய்யப்படுகின்றன. இதனை ஏன் இந்த மகளிர் சமுதாயம் உணரவில்லை?

எனது மகன் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும்போது, அவனுடன் ஆறு பெண்கள் பொறியியல் படித்தனர். படிப்பு முடிந்ததும் அவர்களில் ஒரு பெண் கூட வேலைக்கு செல்லவில்லை. இது எவ்வளவு வருத்தப்படக் கூடிய விஷயம். இதனை ஏன் பெற்றோர்களும், ஆண்வர்க்கமும் சிந்திக்க மறுக்கிறது. படிப்பு என்பது வாழ்க்கையின் ஒளிவிளக்கு. அந்த விளக்கைப் பயன்படுத்தாமல் மூலையில் போட்டுவிட்டால் எப்படி?

"எனது மகன் கைநிறைய சம்பாதிக்கிறான். எனவே, எனக்கு வரப்போகும் மருமகள் வேலைக்கு செல்ல வேண்டியதில்லை' எனக் கூறும் தாய்மார்கள், வீட்டிலேயே இருக்கத்தான் மருமகள் தேவை என்றால், குறைந்த படிப்பு படித்த அல்லது படிக்காத பெண்களை பார்க்க வேண்டியதுதானே! தங்களின் கௌரவத்திற்கு பெண்களின் உயர் கல்வியை பலிகடாவாக்குவது எந்தவகையில் நியாயம்?

பல நிறுவனங்களில் வேலைக்கு தகுதியான நபர்கள் குறைவாகவே உள்ளார்கள் எனக் கூறுகிறார்கள். அப்படி இருக்கும்போது, வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை வேலைக்கு அனுப்பாமல் இருப்பது எந்த வகையில் நியாயம்? தற்போது பல துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்கி வருகிறார்கள். விண்வெளி ஆய்வு, காவல்துறை, அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் என பலதரப்பட்ட இடங்களிலும் பெண்கள் தங்களது திறமையை காட்டி வெற்றி பெற்றுள்ளார்கள். இவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்களே. திறமைமிக்க பலர் வீட்டிலேயே முடங்கி விட்டனர். அவர்கள் சிந்தனை மற்றும் திறமை வீணடிக்கப்படும்போது, அவர்கள் தடுமாறுகிறார்கள். நாம் படித்த படிப்புக்கு சமையல் வேலை செய்தால் போதுமா என உள்ளத்தில் எண்ணிக் கொண்டு, வெளியில் சொல்ல முடியாமல் நெருக்கடியான வாழ்க்கை வாழும் பெண்கள் பலர் உள்ளார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இதுவா பெண் விடுதலை?

பெண்களே! உங்கள் திறமை இந்த நாட்டிற்கு தேவை. உங்களது மாறுபட்ட சிந்தனை சமையலில் மட்டுமில்லாமல், சகல துறைகளிலும் இருக்க வேண்டும். நீங்கள் தயாரா?

-எஸ்.பாலசுந்தரராஜ்

மேலே கூறப்படுள்ள கருத்துக்கள் சரியானது தானா...?!

மகளிர் சக்தி வீணாகிறது என்பது சரிதானா?

பெண்ணின் கல்வி அவசியமே, அது உயர் கல்வி ஆகட்டும் அல்லது ஓரளவு கல்வியாகட்டும், எல்லா பெண்களுக்கும் திருமண வயதில் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் எண்ணுவது இயல்பே.

இன்றைய நிலையில் கணவன், மனைவி இருவரும் சம்பாதித்தால்தான் ஓரளவாவது கடன் இல்லாமல் நிம்மதியாய் குடும்பம் செய்ய இயலும், அதே சமயம் சில கணவன்கள் வீட்டில் வசதிகள் இருப்பின், மனைவி வேலைக்கு போவதை விரும்புவது இல்லை. அதற்காக அந்த பெண் படித்த உயர்கல்வி விரயம் என நாம் எண்ணுவது தவறே.

தனது வாரிசுகளுக்கு அந்த பெண்ணால் நல்லொதொரு கல்வியை, ஒழுக்கம் நடைமுறைகளை கற்பிக்க இயலும், அதுவும் இந்த தேசத்திற்கு செய்யும் சேவைகளே என்பதை நாம் மறுக்க முடியாது.

பெண்கல்வி அவசியம், எதிர்கால தலைமுறையினர் தரமானவர்களாக, பொது அறிவு பெறுவதற்கு, உயர்கல்வி படித்த பெண்களால், அந்த கல்வியின் பயன் அரசுக்கோ அல்லது தனியார் நிறுவனத்திர்க்கோ இல்லை என்றால் மக்களின் வரிப்பணம் விரயம் என எண்ணுவது சரி இல்லை. மக்களின் வரி பணம் ஊழல் அரசியல்வாதிகளால் விரயம் ஆகுவதைவிட, ஒருபெண்ணுக்கு உயர்கல்வி கொடுத்த வகையில் ஆகுவது ஏற்புடையதே.

- சைல்ஸ் அகமது

நன்றி: தினமணி