Home இஸ்லாம் வரலாறு ஒரு துளி கண்ணீரும் சிறு புன்னகையும்
ஒரு துளி கண்ணீரும் சிறு புன்னகையும் PDF Print E-mail
Friday, 10 January 2014 07:59
Share

ஒரு துளி கண்ணீரும் சிறு புன்னகையும்

மிகச் சிறப்பான மொழிபெயர்ப்பிலும்கூட, தனது உயிர்த்துடிப்பையும், ஆன்ம ஓட்டத்தையும் இழந்து நிற்கும் மிகச் சிறந்த கவிஞர்களும் கவிதைகளும்தான் இந்த உலகில் ஏராளம். ஆனால், உலக இலக்கிய வரலாற்றில், மிக மோசமான மொழிபெயர்ப்பிலும்கூட தனது உயிர்த்துடிப்பையும் ஆன்மத் தவிப்பையும் அப்படியே தக்க வைத்துக்கொள்ளும் கவிஞர்களும், கவிதைகளும் மிகக் குறைவே. அப்படிப்பட்ட விரல்விட்டு எண்ணக்கூடிய மாபெரும் கவிஞர்களுல் ஒருவர்தான் கலீல் கிப்ரான்.

20ஆம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞராக உலகளவில் தன் இறப்புக்குப்பின் அறியப்பட்ட மகாகவி கலீல் கிப்ரான் 1883 ஜனவரி 6ஆம் தேதி, தற்போது லெபனான் என்று அறியப்படும் நாட்டில் பிறந்தார். அவரது தந்தை கலீல் அவரது தாயார் கமீலாவிற்கு மூன்றாவது கணவர்.

சிறுவயதில் அவருடைய தந்தை சிறையிலிடப்பட்டு அவரது குடும்பச் சொத்துக்கள் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டதால் ஏழ்மையில் வீழ்ந்த கிப்ரானின் குடும்பம், பாஸ்டன் நகரத்திற்கு 1895இல் குடிபெயர்ந்தது.

அமெரிக்காவில் சிறிது காலம் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்த கிப்ரான், பள்ளிக் கல்வியோடு, ஓவியக்கலை மற்றும் புகைப்படக்கலையையும் பயின்றார். தனது 15ஆவது வயதில் கிப்ரான் தன் தாய்நாட்டிற்குத் திரும்பி, அங்கே மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

மறுபடியும் 1902ஆம் ஆண்டு பாஸ்டன் நகருக்கு திரும்பிய கிப்ரான், 1908 முதல் 1910 வரை பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒரு கலைக்கூடத்தில் ஓவியம் பயின்றார். பின்னர் 1904ஆம் ஆண்டு பாஸ்டன் நகரில் அவர் நடத்திய ஓவியக் கண்காட்சியில்தான் அவர் தனது நீண்டகால நண்பராக மாறிய மேரி எலிஸபெத் ஏஸ்கல்லை சந்தித்தார்.

குறுகிய காலத்திற்குள் மிக அற்புதமான மெய்யியல் மறைக்குறிக் கவிதைகளைப் படைத்த கலீல் கிப்ரான் 1931 ஏப்ரல் 10ஆம் நாள் தனது 48ஆவது வயதில் காலமானார். அவருடைய இறுதி ஆசைக்கிணங்க அவருடைய உடல் அவரது தாய்நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரது நண்பர் மேரி ஏஸ்கல் மற்றும் அவரது சகோதரி மரியானா ஆகியோரால் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று அது "கிப்ரான் அருங்காட்சியக'மாக விளங்குகிறது.

கிப்ரான், தன் கல்லறையில், தான் பார்க்க விரும்பும் வாசகங்களாகக் குறிப்பிட்டவை: "நான் உங்களைப் போலவே வாழ்கிறேன், உங்கள் அருகில் நின்று கொண்டிருக்கிறேன். கண்களை மூடிக்கொண்டு சுற்றிலும் பாருங்கள், உங்கள் முன்னால் என்னைக் காணலாம்' - இவ்வாசகங்கள் தற்போது அவரது கல்லறையில் பொறிக்கப்பட்டு, அங்கு வருவோரை அவருக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

கிப்ரானின் படைப்புக்களில் சாகா வரம்பெற்றவை, "தேவதூதன்' (டழ்ர்ல்ட்ங்ற்), "ஒரு துளி கண்ணீரும் சிறு புன்னகையும்' (அ ற்ங்ஹழ் ஹய்க் ஹ ள்ம்ண்ப்ங்) ஆகியவை. கிப்ரானின் தூய்மையான தத்துவ ஞானமும், ஆழமான அழகுணர்ச்சியும், அவரது வாழ்நாளில் மட்டுமின்றி, அவர் இறந்து 80 ஆண்டுகளுக்குப் பின்னும், அவர் ரசிகர்களைக் கிறங்கடிக்கின்றன. அதனால்தான், ஒரு கவிஞனுக்கும் மரணத்திற்கும் நடக்கும் உரையாடலில் கலீல் கிப்ரான் சொன்னார், "ஒரு கவிஞனின் மரணம்தான் அவனது வாழ்க்கையாகும்' என்று.

ஏழ்மையையும் செல்வத்தையும் வேறு எந்தக் கவிஞனோ, மெய்யியல் அறிஞனோ பார்த்திராத கோணத்தில் கலீல் கிப்ரான் பார்த்தார். "என் ஏழை நண்பனே, உன்னை துன்பத்தில் தள்ளியிருக்கும் அதே ஏழ்மைதான், நீதியைப் பற்றிய தெளிவையும் வாழ்வின் பொருளைப் பற்றிய புரிதலையும் உனக்கு அளிக்கிறது என்பதை நீ உணர்ந்து கொண்டால், இறைவனின் தீர்ப்பில் நீ சமாதானம் அடைவாய்.

பணக்காரனின் முகம் ஞானத்திலிருந்து வெகு தொலைவிற்கப்பால் புதையலுக்குள் சிதைந்து கிடப்பதையும், அதிகாரத்தைக் கைக்கொண்டவன், பெருமையைத் தேடி ஓடும் முயற்சியில், வாழ்க்கையின் அர்த்தத்தைத் தொலைப்பதையும், நீ உணர்ந்து கொள். அப்போது நீதான் நீதியின் குரல் என்பதையும், வாழ்க்கையின் புத்தகம் என்பதையும் உணர்ந்து மகிழ்வாய்.

தன் வாழ்க்கை, கண்ணீரும் புன்னகையும் கலந்ததாகவே இருக்கட்டும் என்று சொன்ன கிப்ரான், அதற்கான காரணத்தை இப்படிச் சொன்னார் : "என் இதயத்தைப் பரிசுத்தப் படுத்துவதற்காகவும், வாழ்க்கையின் ரகசியங்களையும், மறைபொருள்களையும் பற்றிய புரிதலுக்காகவும், எனக்குக் கண்ணீர் தேவை. உடைந்துபோன இதயங்களுக்குச் சொந்தமானவர்களோடு என்னை இணைப்பதற்கு எனக்குக் கண்ணீர் தேவை.

ஆனால், அதே நேரத்தில், வாழ்தலில் எனக்குள்ள மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் குறியீடாக எனக்கு புன்னகையும் தேவை. மாலையில் மலர் தனது இதழ்களை மூடிக்கொண்டும், தனது ஏக்கத்தைத் தழுவிக்கொண்டும் உறங்கப் போகிறது. மறுநாள் காலையில் அதே மலர், சூரியனின் முத்தங்களைப் பெறுவதற்காகத் தன் இதழ்களைத் திறக்கிறது. ஒரு மலரின் வாழ்க்கை, நிறைவும் ஏக்கமும் கலந்ததாகும். கண்ணீரும் புன்னகையும் போலாகும்.

கொடுப்பதையும், பெறுவதையும் பற்றி கிப்ரானின் கவிதை: "மலரிலிருந்து தேனைச் சேகரிப்பது வண்டுக்கு இன்பம். ஆனால் அத்தேனை வண்டுக்கு ஈந்தளிப்பது மலருக்கு இன்பம். வண்டுக்கு மலர்தான் வாழ்க்கையின் ஊற்றுக்கண். மலருக்கு வண்டு தான் அன்பின் தூதுவன். மலருக்கும் வண்டுக்கும், தருவதும் பெறுவதும், தேவையும் தன்னிலை மறந்த ஆனந்தமும் ஆகும்'.

காலத்தைப் பற்றிய கிப்ரானின் அளவீடு: "அளவிட முடியாத, அளவெல்லை இல்லாத காலத்தை நீங்கள் அளக்கிறீர்கள். காலம் என்னும் ஓடையை, அதன் கரையிலே அமர்ந்து, நீங்கள் காண்கிறீர்கள். இருப்பினும், உங்களுக்குள் இருக்கும் காலம் தாண்டிய அது, வாழ்க்கையின் காலமற்றத் தன்மையை அறியும். நேற்று என்பது இன்றைய நினைவாகும். நாளை என்பது இன்றைய கனவாகும்'.

இறை ஞானத்தைப் பற்றி கிப்ரான் இப்படிச் சொன்னார்: "இசைக்கலைஞன் இந்த நேரத்தில் உலவும் ராகத்தை உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கலாம். ஆனால், அந்தச் சுருதியைக் கைது செய்யும் காதுகளையோ, அதை எதிரொலிக்கும் குரலையோ, அவனால் உங்களிடம் கொண்டுவர முடியாது. காரணம், ஒருவனது பார்வை, இன்னொருவனுக்குச் சிறகுகளை அளிக்க முடியாது. இறைவனின் பேரறிவில், ஒவ்வொருவரும் தனித்து நிற்பதுபோல், இறைவனைப் பற்றிய அறிவிலும் ஒவ்வொருவனும் தனியாகவே இருப்பான்'.

மரணத்தைப் பற்றிய கலீல் கிப்ரானின் பார்வை, ஒரு காதலன் காதலியின் மேல் செலுத்தும் பார்வையைப்போல் இருக்கிறது. "கவிஞனின் மரணம்தான் அவனது வாழ்க்கை' என்ற கவிதையில், மரணப்படுக்கையில் கிடக்கும் ஒரு கவிஞனை கிப்ரான் படம் பிடித்துக் காட்டுகிறார்: "ஊர்க்கோடியில் பாழடைந்து கொண்டிருக்கும் சுவர்களால் ஆன ஒரு பழைய வீட்டின் மூலையில், உடைந்துபோன கட்டிலின் மேல், இறக்கும் தருவாயில் கிடக்கிறான் அந்தக் கவிஞன். வாழ்க்கையின் வசந்தத்தில் இளைஞனாக இருந்த அவன், வாழ்வின் தளைகளிலிருந்து விடுபடும் தருணம் கையருகில் இருப்பதை உணர்ந்திருந்தான். எனவே, இறப்பின் வருகைக்காக அவன் காத்திருந்தான்.

ஒரு காலத்தில், தன் அழகியல் கவிதைகளால், மனிதர்களின் இதயங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய அவன், தற்போது செல்வந்தர்களும், சீமான்களும் வாழும் நகரத்தில் பட்டினியால் இறந்து கொண்டிருக்கிறான்.

தன் கடைசி மூச்சை அவன் வாங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில், அவனருகில் துணை நின்றது, எக்காலத்திலும் அவனது தனிமைக்குத் துணையாக நின்ற ஒரு சிறு விளக்கும், ஒருசில காகிதங்களும் தான். தன் உடலிலிருந்த சக்தியை ஒன்று திரட்டி, அக்கவிஞன் இறப்பைக் கூவி அழைத்தான்.

என் அழகான இறப்பே, என் ஆன்மா உனக்காக ஏங்குகிறது. இவ்வுடல் பருப்பொருள்களோடு கொண்ட தளையை நீக்கிவிடு. என் அருமை இறப்பே, தேவதைகளின் வசனங்களை மனிதர்களின் மொழியில் நான் பேசிய காரணத்தாலேயே, என்னை அன்னியனாகப் பார்த்த மனிதர்களிடமிருந்து எனக்கு விடுதலை அளிப்பாய், சீக்கிரம் வா இனி மனிதகுலத்திற்கு நான் தேவையில்லை என் காதல் இறப்பே என்னை சீக்கிரம் கட்டித்தழுவு'.

கவிஞன் இப்படிக் கூவியதும், இறப்பெனும் பெண், அவனைக் கட்டித்தழுவி, முத்தமிட்டாள் - அவன் மறைந்தான். பல காலத்திற்குப் பின், அறியாமையிலிருந்தும், மடைமையிலிருந்தும் விழித்தெழுந்த மக்கள், அக்கவிஞனுக்கு ஊர் நடுவே ஒரு மிகப்பெரிய சிலையை நிறுவி, ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த மனிதர்களிடம்தான் எவ்வளவுமடைமை?

ஒரு கவிஞனின் மரணத்தைப் பற்றி கலீல் கிப்ரான் எழுதிய இக்கவிதை, அரபு மொழியில் 1914இல் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்டது.

ஆனால், இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், அமெரிக்காவில் குடியேறிய ஒரு லெபனான் நாட்டுக் கவிஞன், பாரிஸ் நகரில் அரபு மொழியில் எழுதிய அக்கவிதையின் வாசகங்களை 1921இல் தமிழகத்தில் காலமான நம் பாரதியின் மரணம் மெய்ப்பித்துக் காட்டியது. காரணம் பாரதியும் ஒரு மகா கவியன்றோ?

By வெ. இராமசுப்பிரமணியன், நீதியரசர், சென்னை உயர்நீதிமன்றம்.

நன்றி: தினமணி