Home செய்திகள் இந்தியா இந்திய துணைத் தூதர் கைது விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியாவின் அதிரடி பதில்!
இந்திய துணைத் தூதர் கைது விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியாவின் அதிரடி பதில்! PDF Print E-mail
Wednesday, 18 December 2013 09:23
Share

இந்திய துணைத் தூதர் கைது விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியாவின் அதிரடி பதில்!

அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே பொது இடத்தில் கைது செய்யப்பட்ட விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகளை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணிபுரிவோர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் அடையாள அட்டைகளை உடனடியாக தரவேண்டும் என்று இந்தியா உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த விமான நிலையத்துக்கான ‘பாஸ்’ அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அமெரிக்க பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விசா விவரங்கள், அந்த பள்ளிகளில் பணிபுரியும் இந்தியர்களின் ஊதியம் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசுக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் இந்தியர்கள் குறித்த விவரங்கள், அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் ஆகியவை குறித்தும் தகவலைத் தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தூதரகம் சார்பில் இறக்குமதி செய்யப்படும் மது உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் இனி விமான நிலையத்தில் சோதனையிட்டு சரிபார்த்தபிறகே அனுமதிக்கப்படும்.

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சாலையில் தடுப்புகளை வைத்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இப்போது எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, அந்த தடுப்புகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. அந்த தூதரகம் அமைந்துள்ள பாதையை பொது போக்குவரத்துக்கு போலீஸார் திறந்துவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், "அமெரிக்க தூதரக ஊழியர்கள் சிலருக்கு ‘கூட்டாளி’ என்ற பெயரில் விசா வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை குற்றச் செயல் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் அமெரிக்க தூதரக பணியாளர்கள் அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

மக்கள் கருத்து....

தன் சுயமரியாதையை ஏகாதிபத்திய அரசுகளிடம் அடகு வைத்தாலும், திடீரென ஞானயோதையம் வந்து பதிலடி/தடாலடி என்று மத்திய அரசு இறங்கி இருப்பது வியப்பிற்குரியது.

மிகவும் வரவேற்கத்தக்க ஒரு பதிலடி. இதற்கும் மேல், ஒரு அமெரிக்க தூதரக அதிகாரியையாவது கைது செய்து அவர் மேல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். ஏதாவது தவறு செய்து யாராவது அகப்படாமல் போய் விட மாட்டார்கள். அமெரிக்கா பணிந்து போகும் நாடுகளை ஏறி மேய்க்கும். அவர்களின் தூதரக அதிகாரிகளுக்கு, தேவைக்கு மேல், நாம் சலுகைகளை நமது நாட்டில் கொடுத்து இருக்கிறோம். அவற்றை எல்லாம் உடனடியாகப் பிடுங்க வேண்டும். நமது தூதரக அதிகாரி தேவயானி அங்கே தவறு செய்தாரா இல்லையா என்பது அடுத்த விசயம். அவர் நடத்தப்பட்ட விதம் மிகவும் மோசமானது. மகள்களின் பள்ளியில் கை விலங்கிட்டுப் போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப் பட்டது, துகிலுரித்துச் சோதனை செய்யப்பட்டது போன்றவை ஒருக்காலும் ஒப்புக் கொள்ள முடியாதவை. ஏற்கெனவே, நமது பாதுகாப்பு மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ், மற்றும் அப்துல் கலாம் போன்றவர்களை அமெரிக்கா விமான நிலையங்களில் நிறுத்தி வைத்து சோதனை செய்திருக்கிறார்கள். ஆணவத்தின் உச்சக் கட்டத்தில் உள்ள அமெரிக்காவிற்கு உரைக்கும் வகையில் நாம் பதிலடி கொடுக்க வேண்டிய காலம் இது.

இந்திய மக்களுக்கு நேரும் துன்பங்களுக்கு இவ்வளவு வேகத்துடன் எந்த ஒரு முடிவும் இந்த அரசாங்கம் இதுவரை எடுத்தது இல்லை, ஆனால் ஒரு தனிப்பட்ட அதிகாரிக்கு ஏற்பட்டால் உடனே கோபம் வருகிறது! அதற்கு முன் குற்றம் சாட்டபட்ட அந்த அதிகாரியையும் விசாரிக்க வேண்டும்.