Home கட்டுரைகள் அரசியல் சிறுபான்மையினர், தலித்துகள் என்ன செய்யப் போகிறார்கள்?
சிறுபான்மையினர், தலித்துகள் என்ன செய்யப் போகிறார்கள்? PDF Print E-mail
Wednesday, 27 November 2013 07:36
Share

சிறுபான்மையினர், தலித்துகள் என்ன செய்யப் போகிறார்கள்?

  மனுஷ்ய புத்திரன்  

[ இந்தியாவில் அனைத்து அதிகார அமைப்புகளிலும் கலாச்சார அமைப்புகளிலும் நீதி அமைப்புகளிலும் தங்கள் ஆட்களையும் கொள்கைகளையும் விதைக்க வேண்டும் என்பதுதான் ''அவர்கள்'' திட்டம். இதைச் செய்வதன்மூலம் பிற்காலத்தில் பா.ஜ.க. அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்துத்வா சக்திகள் ஒரு வலிமையான அதிகார மையமாக மாறிவிடும். ]

கடந்த பல மாதங்களாகவே மோடிதான் ஊடகங்களின் மைய கதாபாத்திரமாக இருந்தார். அனுதினமும் மோடியின் நாமம் மட்டுமே எல்லா திசைகளிலும் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக அதில் ஒரு சிறிய குறுக்கீடு நிகழ்ந்திருக்கிறது. இப்போது ராகுல் காந்தியின் பெயரும் அடிபடத் தொடங்கியிருக்கிறது.

ராகுல் தனது உணர்ச்சிகரமான அமைதியற்ற பேச்சுக்களால் ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்த ஆரம்பித்து இருக்கிறார். குற்றவழக்குகளில் தண்டனை பெற்ற எம்.எல்.ஏ., எம்.பி.க்களைக் காப்பாற்றும் அவசர சட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவர முயற்சித்தபோது அந்தச் சட்டத்தைக் கிழித்தெறிய வேண்டும் என்று பத்திரிகையாளர் மன்றம் ஒன்றில் ராகுல் முழங்கினார்.

இத்தனை நாள் இவர் எங்கு இருந்தார் என்று ஆச்சரியத்துடன் தேசமே அவரைத் திரும்பிப் பார்த்தது. பா.ஜ.க. இந்தியப் பிரதமருக்கு நேர்ந்த அவமானம் என்று நீலிக்கண்ணீர் வடித்தது. ஆனால் தாங்கள் இதே பிரதமரை இதற்கு முன் எவ்வளவு கேவலமாக விமர்சித்திருக்கிறோம் என்று பா.ஜ.க.வினர் வசதியாக வழக்கம்போல மறந்துவிட்டனர். காங்கிரஸ் அவசர சட்டத்தைத் திரும்பப் பெற்றது. ஆனால் ராகுல் காந்தியின் இந்த சத்திய ஆவேசத்திற்குப் பின்னர் இருந்த வேறொரு அரசியல் மறைக்கப்பட்டுவிட்டது.

காங்கிரசிற்குள் மூத்த அரசியல்வாதிகளுக்கும் ராகுல் தலைமையிலான இளைய தலைமுறையினருக்குமிடையே கடும் பனிப்போர் நடந்து வருகிறது. காங்கிரஸின் மூத்த தலைமை மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவைக் காப்பாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தபோது ராகுல் தலைமையிலான கோஷ்டி லாலுவை ஒழிப்பதன் மூலம் பீகாரில் நிதீஷ்குமாருடன் புதிய கூட்டணியை உருவாக்கத் திட்டமிட்டது. அவசர சட்ட விவகாரத்தில் ராகுல் நீதிக்கான போராளியாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்ட சமயம் கட்சிக்குள் தனது அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்வதில் மேலும் ஓரடி முன்னேறினார் என்றுதான் சொல்லவேண்டும்.

ராகுல் காந்தியின் இரண்டாவது தாக்குதல் பா.ஜ.க. மீது நேரடியானது. ராஜஸ்தானில் அவர் ஆற்றிய உரையில், பா.ஜ.க. மதவாதத்தால் இந்த தேசத்தைத் துண்டாக்குகிறது என்றும் தனது பாட்டியைப் போல், தனது தந்தையைப் போல தானும் கொல்லப்படலாம் என்றும் கூறினார். அது ஒரு உணர்ச்சிகரமான சம்பவம். இந்திரா காந்தியின் படுகொலை மற்றும் ராஜீவ் காந்தியின் படுகொலை இந்தியர்களின் மனதை ஆழமாக உலுக்கிய சம்பவங்கள் எனலாம்.

இன்றும் அவை அவர்களின் இதயங்களில் அறியாத துயர வடுக்களாக மிஞ்சி நிற்கின்றன. அந்த துயரங்களுக்குப் பதிலடியாக பஞ்சாபில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். ஈழத்தில் இந்தியா நடத்திய மறைமுக யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் உயிரை இழந்தார்கள். நேரு குடும்பத்திற்கோ அல்லது அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான மக்களுக்கோ இதுபோன்ற துயரங்கள் இனிமேல் நிகழாதிருக்கட்டும் என்றுதான் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டியிருக்கிறது.
ராகுல் காந்தியின் வகுப்புவாதம் தொடர்பான இந்த தாக்குதல் பா.ஜ.க.வை வெகுண்டெழ வைத்திருக்கிறது. பா.ஜ.க. சமீபகாலமாக ஒரு திறமையான நாடகத்தை ஆடிவருகிறது. அது தனது வகுப்புவாத அரசியலைக் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளிவிட்டு மோடியை மையமாக வைத்து வளர்ச்சி என்ற கட்டுக்கதையினால் இந்தியர்களை முட்டாளாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பா.ஜ.க.வின் பின்னால் வகுப்புவாத உணர்வு உள்ளவர்கள் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளார்கள்.

இனி வகுப்புவாத உணர்வு இல்லாத மத்தியதர வர்க்கத்தினரையும் இளைஞர்களையும் ஒன்றிணைக்க வேண்டும். அப்போதுதான் பரந்துபட்ட இந்தியாவில் அதிகாரத்தை வெல்ல முடியும் என்பது பா.ஜ.க.விற்கும் அதை இயக்கும் சங் பரிவாருக்கும் நன்கு தெரியும். அதனால்தான் காங்கிரஸ் பா.ஜ.க.வை அதன் புராதன வகுப்புவாத ஆயுதத்துடன் சண்டைக்கு அழைக்கிறது. ‘எங்கள் சண்டை மோடி என்ற தனிநபருடன் அல்ல. பா.ஜ.க.வுடன்கூட அல்ல. உண்மையில் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கும் எங்களுக்கும்தான் இந்தத் தேர்தலில் போட்டி’ என்று சொல்லும் அளவிற்கு காங்கிரஸ் சென்றுவிட்டது. இந்த அடிப்படையில்தான் சமீப காலமாக அது இஸ்லாமியர்களைத் தங்கள் பக்கம் அழைக்கும் பல செயல்களை மேற்கொண்டிருக்கிறது.

உரிய விசாரணையின்றி தவறான குற்றச்சாட்டின் பேரில் இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை விடுவிக்க வேண்டும்; அவர்கள் தவறாகக் கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களுக்கு நஷ்டஈடு அளிக்க வேண்டும்; தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே மாநில முதல்வர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதுகிறார். அப்படி ஒரு கடிதத்தை எழுதுவதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஒன்பதரை ஆண்டுகால அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக போலி பயங்கரவாத குற்றச்சாட்டு வழக்குகளில் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் ஏராளமானோர் இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட எந்த முறையீடுகள் குறித்தும் காங்கிரஸுக்கு சிறிதும் கருணை பிறக்கவில்லை.

அடுத்ததாக, வரும் மழைக்காலக் கூட்டத் தொடரில் வகுப்புவாத தடுப்பு மசோதாவை பாராளுமன்றத்தில் காங்கிரஸ் தாக்கல் செய்ய இருக்கிறது. 2005இல் சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு இந்த மசோதாவை உருவாக்கியது. வகுப்புவாத வன்முறைகளில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த வன்முறையாளர்களால் தாக்கப்படும் மதச் சிறுபான்மையினர், மொழி சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோரை இந்தச் சட்டம் பாதுகாக்கிறது. வன்முறைகளைத் தடுக்கத் தவறும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளைத் தண்டிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது. கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்கள், பாலியல் கொடுமைகளுக்கு ஆளான பெண்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் இந்த மசோதா பரிந்துரைக்கிறது.

முஸ்லிம் கைதிகள் தொடர்பான உள்துறை அமைச்சரின் கடிதம் மற்றும் வகுப்புவாத தடுப்பு மசோதா ஆகிய இரண்டையும் பா.ஜ.க. கடுமையாகத் தாக்கி வருகிறது. இது சிறுபான்மையினரைத் தாஜா செய்யும் முயற்சியே என்று விமர்சிக்கிறது. காங்கிரஸ் விரும்பியது இதைத்தான். பா.ஜ.க.வை ஏற்காத இந்துக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களாகவோ அல்லது காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கும் கட்சியின் ஆதரவாளர்களாகவோ இருக்கிறார்கள். சிறுபான்மையினரின் ஓட்டுக்களையும் ஒருங்கிணைத்துவிட்டால் காங்கிரசிற்கு அது தேர்தலில் ஒரு அனுகூலமான சூழலை உருவாக்கும் என்று அது நம்புகிறது.

உண்மையில் இந்தியாவில் இப்போது ஒரு பெரிய மதக்கலவரம் நடந்தால் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டுக்குமே சரிசமமான பலன்கள் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், மேற்படி இரண்டு செயல்களுமே காங்கிரசின் ஓட்டு வங்கி அரசியலில் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை முன் வைக்கின்றன என்றபோதிலும் அவற்றில் உள்ள நியாயங்களைப் யாராவது மறுக்க முடியுமா? பா.ஜ.க. அந்த நியாயங்களைப் புறக்கணிக்க விரும்புகிறது. இதுவரை பா.ஜ.க.தான் இந்த தேசத்தைப் பிளவுபடுத்துகிறது என்று குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இப்போது பா.ஜ.க., காங்கிரசை நோக்கி ‘நீங்கள் இந்த தேசத்தைப் பிளவுபடுத்துகிறீர்கள்’ என்று சொல்ல ஆரம்பித்து இருக்கிறது. உண்மையில் இந்த இரண்டு கட்சிகளுக்கிடையிலான அரசியல் யுத்தத்தில் சிறுபான்மை மக்கள் பலிகடாவாக்கப் பட்டுள்ளார்கள் என்பதுதான் உண்மை.

தேசம் ஏற்கனவே பிளவுண்டு கிடக்கிறது. அந்தப் பிளவின் மூலமாக சமூகத்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியினைத் தாழ்த்தி வைத்திருக்கிறது. சிறுபான்மையினருக்கு சலுகைகள் அளிக்கப்படும்போதும், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப் பட்டோருக்கு சலுகைகள் அளிக்கப்படும்போதும் இதுபோன்ற கூச்சல்கள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன. ஒரு ஏற்றத்தாழ்வான சமூகத்தில் வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு, நியாயங்கள் மறுக்கப்பட்டவர்களுக்கு, பாரபட்சம் காட்டப்பட்டவர் களுக்கு, நியாயம் வழங்குவதற்குச் செய்யப்படும் முயற்சிகளை எதிர்ப்பவர்கள் பொத்தாம்பொதுவாக போலி சமவாய்ப்புகளைப் பற்றிப் பேசுகிறார்கள். வரலாற்றுரீதியிலான மேலாதிக்கம் பெற்ற சமூகங்களுக்கும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கும் ஒன்று போல வாய்ப்புகளை வழங்கவேண்டும் என்று சாதிக்கிறார்கள்.

வகுப்புவாத வன்முறை தடுப்பு சட்டத்தையே எடுத்துக்கொள்வோம். இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் சிறையில் வாடும் இஸ்லாமியர்களின் சராசரி எண்ணிக்கை அவர்களது மக்கள்தொகை சராசரியை விட மிகவும் அதிகம். அதேபோல சுதந்திர இந்தியாவில் வகுப்புக் கலவரங்களில் இதுபோல கொல்லப்பட்டவர்கள் 40,000 பேர். இதில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர். அதாவது மக்கள் தொகையில் 12 சதவீதமே இருக்கும் இஸ்லாமியர்கள் வகுப்புக் கலவரங்களில் 65 சதவீதம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது இயற்கையானதுதானா? காவல்துறையினர், அதிகார அமைப்புகளின் பாரபட்சமின்றி இது நடந்திருக்க முடியுமா? இதைத் தடுக்க ஒரு சட்டம் கொண்டுவந்தால் இது எப்படி தாஜா செய்வதாகும்?

ஒரு வாதத்திற்கு அது சரியே என்று வைத்துக்கொண்டாலும் தலித்துகளும் சிறுபான்மையினரும் இங்கு வகுப்புவாதிகளாலும் உயர்சாதி இந்துக்களாலும் தொடர்ந்து பெரும் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். வகுப்புவாதக் கலவரங்கள் தொடர்பாக இந்தியாவில் இதுவரை அமைக்கப்பட்ட 31 விசாரணை கமிஷன்களும் வகுப்புவாத வன்முறைகளில் நிர்வாக இயந்திரம் எவ்வாறு வகுப்புவாத சக்திகளோடு சேர்ந்து செயல்பட்டன என்பதைத் திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டுகின்றன. இந்த சூழ்நிலையில் சிறுபான்மையினரையும் தலித்துகளையும் தாஜா செய்வது என்பது நீதிமிக்க ஒரு அமைப்பினுடைய கடமை. அது வெறும் அரசியல் பேரமல்ல.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலைக் கட்டப்போவதில்லை. பசுவதை தடுப்பு சட்டத்தைக் கொண்டுவரப் போவதில்லை. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்போவதில்லை. பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவரப்போவதில்லை. மாறாக, அவர்கள் நோக்கம் வேறு. இந்தியாவில் அனைத்து அதிகார அமைப்புகளிலும் கலாச்சார அமைப்புகளிலும் நீதி அமைப்புகளிலும் தங்கள் ஆட்களையும் கொள்கைகளையும் விதைக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் திட்டம்.

இதைச் செய்வதன்மூலம் பிற்காலத்தில் பா.ஜ.க. அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்துத்வா சக்திகள் ஒரு வலிமையான அதிகார மையமாக மாறிவிடும். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் பா.ஜ.க.வுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைய வேண்டும் என்பது இன்றைய காலத்தின் முதன்மையான சவால். ஆனால் அந்த ஒருங்கிணைப்பு கடைசியில் காங்கிரசுக்கு மட்டும் பயன்படுவதோடு நின்றுவிடப் போகிறதா? இந்த முறையேனும் தலித்துகளும் சிறுபான்மையினரும் மதச்சார்பின்மை ஆயுதத்தின் மூலம் தங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். உண்மையில் அவர்கள் காங்கிரசோடும் பிற மதச்சார்பற்ற கட்சிகளோடும் ஒரு கறாரான பேரத்தில் ஈடுபட வேண்டும். அந்த பேரம் என்பது இதுவரை அவர்களுக்கு எல்லோராலும் மறுக்கப்பட்ட நீதியை வென்றெடுப்பதாக இருக்க வேண்டும்.

source: http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=6422