Home இஸ்லாம் கட்டுரைகள் மக்களை நேர்வழியில் நடத்திச் செல்லும் பொறுப்பு முஸ்லிம்களிடமே!
மக்களை நேர்வழியில் நடத்திச் செல்லும் பொறுப்பு முஸ்லிம்களிடமே! PDF Print E-mail
Saturday, 23 November 2013 06:57
Share

மக்களை நேர்வழியில் நடத்திச் செல்லும் பொறுப்பு முஸ்லிம்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது

இன்று உலகளாவிய அளவில் அநியாயங்கள், அக்கிரமங்கள், பண்பாட்டுச் சிதைவுகள், ஒழுக்கச் சீர்கேடுகளான புகை, குடி, விபச்சாரம். சூது, லஞ்சம், கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, கற்பழித்துக் கொலை, ஈவ்டீஸிங் என வெறுக்கப்படவேண்டிய அனைத்துக் கெட்ட செயல்களும் வரவேற்கப்படுகின்றன, வளர்க்கப்படுகின்றன.

வியாபாரிகளிடம் பொய், பித்தலாட்டம், ஏமாற்று, கலப்படம், அளவையில் மோசடி, அடுத்தவனைக் கெடுத்து தான முன்னேற விரும்பல், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தனக்கு உரிமையில்லாதவற்றை முறை தவறி அடைதல் என அனைத்துத் தீய செயல்களும் மலிந்து காணப்படுகின்றன.

அரசு அதிகாரிகளிடம் ஒழுக்கக் கேடுகள், பணியில் முறைகேடுகள், கடமைகளை நிறைவேற்றுவதில் பொறுப்பற்ற தன்மை, லஞ்சம், மது, மாது, சூது, கூடாவழிகளில் சொத்து சேர்த்தல் என அனைத்துத் தீய செயல்களும் மலிந்து காணப்படுகின்றன.

மக்களுக்கு சேவை செய்வதாகக் கூறிக் கொண்டு புற்றீசல்போல் கிளம்பும் அரசியல்வாதிகள் செய்யும் அட்டூழியங்களுக்கும், அநியாயங்களுக்கும் எல்லையே இல்லை. மக்களை ஏமாற்றி அவர்களின் பொருளை நியாயமின்றி சுருட்டுவதிலும் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.

ஆட்சியில் அமர்ந்திருப்போரின் அடாவடித்தனங்களுக்கு ஒரு எல்லையே இல்லை. ஆட்சியாளர்களிடமும், அரசியல்வாதிகளிடம் கொள்கை, கோட்பாடு என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. மக்களை ஏமாற்றிச் சுரண்டி கோடிக்கணக்கில் பல தலைமுறைகளுக்குச் சொத்துச் சேர்ப்பதே அவர்களின் அசலான கொள்கை கோட்பாடு; அதற்கு வசதி ஏற்படுத்தித் தரும் கட்சிகளிடையே மரத்திற்து மரம் தாவும் குரங்குபோல் தாவுவதே அவர்களின் நீங்கா லட்சியம்.

ஆளும் கூட்டணி தனது பதவிக் காலத்தைத் தக்கவைத்துக் கொள்ள செய்த முயற்சிகள், குதிரை பேரம், கைமாறியதாகச் சொல்லப்படும் பல கோடிகள், அதற்காக பல்லாயிரம் கோடிகளைக் கொண்டுள்ள குபேரர்களின் தலையீடு – உதவி இவை அனைத்தையும் உன்னிப்பாகக் கவனித்தார்கள் நாடும், நாட்டு மக்களும் எங்கு நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய முடியும்.

ஆம்! நாட்டு மக்கள் இன்று மனிதர்களாக இல்லை; இரண்டு கால் மிருகங்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இல்லை! இல்லை!! அல்குர்ஆன் 7:179 சொல்வது போல் மிருகங்களைவிட கேடுகெட்ட நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் யார் காரணம் தெரியுமா? நாளை மறுமையில் அல்லாஹ்விடம் யார் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் தெரியுமா? ஆம்! முஸ்லிம்களே இதற்கு முழுப் பொறுப்பு ஏற்கும் நிலையில் இருக்கிறார்கள்.

ஏன் தெரியுமா? முஸ்லிம்களையே நடுநிலைச் சமுதாயமாக அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான். (பார்க்க 2:143). அது மட்டுமல்ல; நாளை மறுமையில் சாட்சி சொல்லும் சமுதாயமாக முஸ்லிம்களே இருக்கிறார்கள். (பார்க்க 22:78) உலக மக்களுக்கு சத்தியத்தையும், அசத்தியத்தையும் எடுத்துக் கூறி, நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து மக்களை நேர்வழியில் நடத்திச் செல்லும் பொறுப்பு முஸ்லிம்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது (பார்க்க 3:104,110, 103:1-3).

தூய வாழ்க்கை நெறியை – நேர்வழியை தெளிவாக, நேரடியாக எடுத்துக் கூறும் இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ன் முஸ்லிம்களின் கைவசமே உள்ளது.

3:103-ல் அல்லாஹ் கட்டளையிட்டிருப்பது போல் முஸ்லிம்கள் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதில் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளபடி தாமும் நடந்து, மற்றவர்களையும் அதன்படி வழிநடத்திச் செல்லக் கடமைப் பட்டிருக்கிறார்கள். ஆனால் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் இந்தக் கட்டளையை உதாசீனம் செய்து புறக்கணித்துவிட்டு, மார்க்கத்தை கொடிய ஹராமான வழியில் பிழைப்பாகக் கொண்டுள்ள பெயர்தாங்கி மார்க்க அறிஞர்களை நம்பி, அவர்களின் கற்பனைச் சரக்குகளை இறைவாக்காக நம்பி, வழிகேட்டில் செல்பவர்களின் நடைமுறைகளையே இவர்கள் பின்பற்றும் பரிதாப நிலையில் இருக்கிறார்கள்.

முஸ்லிம்களின் அழகிய நடைமுறைகளைப் பார்த்து, அதில் ஈர்க்கப்பட்டு மற்றவர்கள் சாந்தி மார்க்கத்தின்பால் வருவதற்கு மாறாக, சில பெயர்தாங்கி மார்க்க அறிஞர்களின் தவறான வழிகாட்டுதல் காரணமாகவும், ஷைத்தானின் தூண்டுதலுக்கு அடிமைப்பட்டும் மாற்றார்களின் கோணல் வழிகளால் ஈர்க்கப்பட்டு வழிகேடுகளில் சென்று கொண்டிருக்கிறார்கள் முஸ்லிம்கள்.

அன்று முஸ்லிம்களின் அழகிய நடைமுறைகளால் ஈர்க்கப்பட்டு மற்றவர்கள் கூட்டம் கூட்டமாக சாந்தி மார்க்கம் நோக்கி வந்தார்கள். இன்றோ முஸ்லிம்கள் மற்றவர்களின் வழிகேட்டுச் செயல்களால் ஈர்க்கப்பட்டு, அவற்றிற்கு அரபி பெயர்களைச் சூட்டி அவற்றைச் செய்வது கொண்டு வழிகேட்டில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஆக உலக மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் அதற்கு மாறாக பின்மாதிரியாகத் திகழ்கிறார்கள். இதற்குக் காரணம் முஸ்லிம்கள், மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொண்டு செயல்படும் பெயர்தாங்கி மார்க்க அறிஞர்களை தங்களின் வழிகாட்டிகளாக நம்பி அவர்களின் போதனைகளைக் கண்மூடி ஏற்று நடப்பதேயாகும்.

முஸ்லிம்கள் இன்றைய தங்களின் இழிநிலையை மாற்றிக் கொள்ள முன்வராவிட்டால், அல்லாஹ் முஸ்லிம்களின் நிலையை மாற்றி உயர்த்தப் போவதில்லை. அதற்கு மாறாக பிரிதொரு சமூகத்தை அல்லாஹ் தேர்ந்தெடுப்பான், அவர்கள் இன்றைய முஸ்லிம்கள் போல் இருக்க மாட்டார்கள்.

“.... எந்த ஒரு சமுதாயமும், தன் நிலையை தானே மாற்றிக் கொள்ளாதவரை, அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை....” (அர்ரஃது 13:11)

“நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனம் தங்கள் மார்க்கத்திலிருந்து மாறிவிட்டால், வேறு மக்களை அல்லாஹ் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள்ஸ? (அல்மாயிதா 5:54)

“(சத்தியத்தை நிலைநாட்ட அழைக்கப்பட்டு) நீங்கள் செல்லாவிட்டால், உங்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. உங்கள் இடத்தில் மற்றவர்களை ஏற்படுத்தி விடுவான்...? (அத்தவ்பா 9:39)

“...(அவனது கட்டளைகளை) நீங்கள் புறக்கணித்தால், நீங்கள் அல்லாத மக்களை (உங்கள் இடத்தில்) பதிலாகக் கொண்டு வருவான்; பின்னர் உங்களைப் போன்று அவர்கள் இருக்க மாட்டார்கள்.” (முஹம்மது 47:38)

source: http://annajaath.com/?p=373