Home கட்டுரைகள் பொது காசு வாங்குவதும் போதை... வாங்காததும் போதை!
காசு வாங்குவதும் போதை... வாங்காததும் போதை! PDF Print E-mail
Thursday, 21 November 2013 08:51
Share

காசு வாங்குவதும் போதை... வாங்காததும் போதை!

எல்லாவற்றையும் தூய்மைப்படுத்த வேண்டும் என்கிற குரலை இப்போதெல்லாம் தேநீர்க்கடை தொடங்கி எல்லா இடங்களிலும் சர்வசாதாரணமாகக் கேட்க முடிகிறது. “வெளிநாடுகளில் இப்படியில்லை. இங்கே பாருங்கள், சாதாரண விஷயங்களுக்கெல்லாம்கூடக் காசு கேட்கிறார்கள். காசு தராமல் ஒரு காரியமும் நடப்பதில்லை” என அங்கலாய்க்கிறார்கள். அறிந்துதான் பேசுகிறார்களா, இல்லை அறியாமல் பேசுகிறார்களா?

துணைக்கு ஏன் ஆள் தேடுகிறோம்?

காவல் நிலையங்கள், வங்கிகள், கிராம நிர்வாக அலுவலகங்கள், கிராமப் பஞ்சாயத்துக்களுக்குச் செல்ல சுற்றுப்புறங்களில் இருப்பவர்கள் துணைக்கு அழைப்பார்கள். அவர்களுக்கு அங்கே ஏதேனும் சின்ன விஷயங்கள்தான் ஆக வேண்டியிருக்கும். துணைக்கு ஒரு ஆள் அவசியமே இல்லை. பரிச்சயமற்ற இடங்களில் தேநீர் அருந்துவதற்கும், சிறுநீர் கழிப்பதற்கெல்லாம்கூடத் துணைக்கு ஆள் தேவைப்படுகிறார்கள்.

காரியங்களைக் காட்டிலும் பிற விஷயங்களில் நமக்கு ஆர்வம் அதிகம். உறவு முறைகளற்ற ஓரிடத்தில் ஒருபோதும் சுலபமாகத் தனித்திருக்க முடிவதில்லை. உறவு முறைகளை ஏற்படுத்திக்கொள்ளாமல் எதையும் எதிர்கொள்ள முடிவதில்லை. பகிர்தலற்ற இடங்களில் காசு கொடுத்து உறவைப் பெற விரும்புகிறோம். பகிர்தல் சாத்தியமற்ற இடத்தில் காசுதான் இயந்திரத்தில் எண்ணெய்போல் செயல்படுகிறது. இது நமது அடிப்படைப் பண்பு. காலங்காலமாகக் கற்றுவந்தது.

மலிவான தரகர்களைத் தவிருங்கள்

உங்களுக்குத் தரகர்கள் தேவைப்படும் சமயங்களில் விலை மலிவான தரகர்களை ஒருபோதும் ஏற்பாடு செய்யாதீர்கள் என்றே நண்பர்களுக்குச் சிபாரிசு செய்கிறேன். மலிவான தரகர்கள் உங்களைத் தலைசுற்றச் செய்துவிடுவார்கள். இரண்டு குழப்பம் ஒன்று சேர்ந்தால் மகா குழப்பம்தான். ஏதேனும் ஒன்று தெளிவாக இருத்தல் வேண்டும். கடுந்தெளிவும் கடும் ஆபத்து. அமைப்பின் எந்தப் பகுதியில் சுண்ட வேண்டும் என்பதை நன்கறிந்தவரே நல்ல தரகர். வீணான அலைச்சல்களுக்கு அவர் வாய்ப்பை ஏற்படுத்துவதில்லை.

காவல் நிலையங்களுக்குச் செல்லும்போது மலிவான தரகன் கண்கூடாகவே உபத்திரவமாக மாறுவதைக் காண்பீர்கள். அவன் வேண்டாத தகவல்களையெல்லாம் சொல்லி மழுங்கடித்துவிடுவான். அப்போது சந்தர்ப்பம் உங்களுக்கு எதிராகக்கூட மாறிவிடும் பேராபத்து உண்டு. காசு கொடுப்பது என்பது ஓர் உத்தி. அது வசப்பட வேண்டும். எப்படிக் கொடுப்பது, எதைக் கொடுப்பது, எவ்வளவு கொடுப்பது என்று தெரிய வேண்டும். எதில் பசித்திருக்கிறார்களோ அதைக் கொடுப்பதே தானம். வீணே நீட்டினால் வில்லங்கமாகிவிடும்.

காசு வாங்கும் அதிகாரிகளிடையேகூட வேறுபாடுகள் இருக்கின்றன. சிலர் எண்ணி, சரிபார்த்து வாங்குவார்கள். காசு பெறுவதும் பதவியின், அதிகாரத்தின் ஒரு பகுதிதான் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்று பொருள். காசைப் பெற்றுக்கொள்வதில் பல தினுசுகள் உள்ளன. “நானாகக் கேட்பதில்லை, தருவதை வாங்கிக்கொள்வேன்” என ஒருவர் கூறிவிட்டாரெனில், அவர்தான் பொருத்தமானவர். அந்த இடத்தின் நிர்ணயிக்கப்பட்ட தொகையை அறிந்தவர் அவர்தான். நிர்ணயிக்கப்பட்ட தொகையைத்தான் அங்கே ஒருவர் கொடுக்கவோ பெறவோ முடியும். அவர்தான் நமக்கு சூட்சுமத்தின் வாசற்கதவைத் திறக்கிறார். ஆனால், முதலிலேயே அவரைச் சென்றடைவது நமது அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.

அமைப்பு மட்டும் சுத்தமா என்ன?

காசு வாங்குவதில் அமைப்புக்குப் பங்கு இல்லை என்று சொல்ல முடியாது. கிராம நிர்வாக அதிகாரிகளில் பலர் ஓய்வுக் காலத்தில் பென்ஷன்கூட வாங்க முடியாத அளவுக்கு அரசாங்கம் தண்டித்துவிடுகிறது. கடைநிலைச் செய்தியாளரின் நிலையும் இதுதான். வழியில்லாமல் அவர் வட்டார அதிகாரத் தரகராகிவிடுகிறார். அவரில்லாமல் ஒரு நாளிதழ் இல்லை. பெருஞ்செய்திகளுக்காக நாளிதழைப் பிரயோகிப்பவர்கள் குறைவு. தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிவதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால், ஒரு வட்டாரச் செய்தியாளரின் நிலை இன்று எப்படி இருக்கிறது? இப்படித்தான் பல தொழில்கள் - பதவிகள்.

பொதுவாகவே, நாம் அதிகாரப் பசி நிறைந்தவர்கள். நான்கு பேருக்கு நாம் தொண்டூழியம் செய்வதைப் போல 40 பேர் நமக்கு அடிமையாயிருக்க எண்ணுபவர்கள். பதவியின் அதிகாரத்தைக் காட்டிலும் அதிக பசி. அதனால்தான் பதவியின் அதிகாரத்தில் பொலிவுகூடி நடப்பவர்கள், இறங்கியதும் வெற்றுத் தோடாகிவிடுகிறார்கள்.

-லக்ஷ்மி மணிவண்ணன்

source: http://tamil.thehindu.com