Home கட்டுரைகள் குண நலம் அன்புக்கு அடிப்படை காதல் என்ற உணர்வுதான்!
அன்புக்கு அடிப்படை காதல் என்ற உணர்வுதான்! PDF Print E-mail
Monday, 04 November 2013 07:22
Share

அன்புக்கு அடிப்படை காதல் என்ற உணர்வுதான்!

பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளையும் நாம் காதலிப்போம். அதுவே உண்மையான காதல். அதற்கு ஆதாரமாய் அமைவது ஆண் பெண் மீது கொள்ளும் காதலும் பெண் ஆண்மீது கொள்ளும் காதலும்தான்.

பிரபஞ்ச செடியில் காதல் ரோஜாக்கள் பூக்கப்பூக்க, வன்முறை முட்களெல்லாம் உதிர்ந்து போய்விடுகின்றன. ஆகவே காதலிப்போம் வாருங்கள்.

ஆண் பெண் காதல் என்பது எதிர்பார்ப்புகள் உள்ள சுயநலம் கொண்ட அன்பு என்கிறார்கள் சிலர். உண்மைதான், ஆனால் அதை ஏன் சுயநலம் என்று சொல்லவேண்டும். இருவருக்கும் பொதுவான வாழ்க்கைப் பிடிப்பும் உயிர் வாழும் ஆதாரமும் மகிழ்வுறும் நலனும் கிடைக்கும் உயர்வு உண்மையான உயர்வல்லவா?

அதோடு எந்த உறவில் சுயநலமில்லை எந்த உறவில் எதிர்பார்பில்லை. ஒரு பக்கம் கொடுப்பதும் இன்னொரு பக்கம் பெறுவதுமாகவே இருக்கும் நிலைப்பாடு என்றென்றும் நீடித்திருக்கும் நிரந்தரமாய் அமையாது. அது எல்லோருக்கும் ஏற்றதாகவும் ஆகாது. கொடுத்தலும் எடுத்தலுமே வாழ்வின் நிலைத்த ஒன்றாய் ஆகும். அப்படியான எல்லோருக்கும் பொதுவான ஒன்றையே நாம் பரிந்துரைக்க வேண்டும். வெற்றுத் தியாயங்களுக்கு ஆயுள் குறைவு.

உயிர்களெல்லாம் ஆண் பெண் காதலால் வந்தவையே. காதலின்றி உயிரினங்களே மண்ணில் இல்லை. அப்படி உயிரினங்களே இல்லாதபோது யார் மீது அன்பு காட்டுவது? அன்பு காட்டுபவரும் இல்லை. அதைப் பெறுபவரும் இல்லை. எதிர்ப்பார்ப்பு பொதுவாக எல்லாவற்றிலுமே உண்டு.

ஒரு தாய் பிள்ளைக்கு பணிவிடை செய்யும்போது மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறாள். அந்த மகிழ்ச்சிதான் அவளின் எதிர்பார்ப்பு. அது கிடைக்காத பட்சத்தில் அவள் செய்யப்போவதில்லை. தன் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த தன் பிள்ளை என்ற சுயநலம்வேறு அவளிடம் மிகுதியாக இருக்கும். அதுமட்டுமல்ல தன் பிள்ளை தன்னைக் கைவிடமாட்டான் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு தாய்க்கும் உண்டு.

தாய்ப்பாசம் என்பது சுயநலம் குறைந்த ஓர் உணர்வு என்றாலும் அப்படியான தாய்ப்பாசத்துக்கும் ஆதாரமாய் இருப்பதும் ஆண் பெண் காதல்தான். அதுதான் பின் வளர்ந்து பலருக்காக என்று பெருகுகிறது.

காதல் என்ற உணர்வு உள்ளுக்குள் இருக்கும். காதல் என்றதும் நாம் உடம்பையே நினைத்தல் கூடாது. சுயநலமான காதல்தான் பொதுநல அன்புக்கான ஆதாரப்புள்ளி. ஆண் பெண்ணைத் தவிர காதலிக்க நிறைய இருக்கிறதுதான். நாம் உயிரினத்திற்கு எது ஆதாரம் என்பதையே இங்கே பார்க்கிறோம். ஒன்று என்ற தொடக்கத்திலிருந்துதானே ஆயிரம் பல்லாயிரம் எல்லாம்.

ஆண் பெண் இருவர் ஏற்றிவைக்கும் தீபத்தில்தான், மற்ற உறவுகளே விளைகின்றன. உறவில்லாத அப்பா அம்மா உறவானபின் வந்த உறவுகள்தான் அக்கா தம்பி மாமா மச்சான் எல்லாம். அப்பா அம்மா என்ற நிலைப்பாடே இல்லாவிட்டால், எதுவுமே இல்லை.

அந்த அப்பா அம்மா என்ற நிலைப்பாட்டுக்கான உணர்வுகள்தான் நம்மிடம் வேறு வேறு வடிவங்களாய் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இறைவனிடம் வைக்கும் காதலில் அதாவது பக்தியில் கூட சொர்க்கம் போகவேண்டும் என்ற எதிர்பார்ப்பாவது மனிதர்களிடம் உள்ளது. வேறு நிலைப்பாடுகளில் புகழ் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது அல்லது தன் தனிமையைப் போக்கவும் தனக்கான அங்கீகாரத்தை வளர்க்கவும் நட்பையும் உறவையும் வளர்த்துக்கொள்வது எதிர்பபர்ப்பாக இருக்கிறது.

இன்னொருவரின் பாராட்டையோ அன்பையோ உறவையோ எதிர்பார்த்துச் செய்பவையும் சுயநலத்தின் வெளிப்பாடுதானே. எது எப்படியானாலும் அன்புக்கு அடிப்படை காதல் என்ற உணர்வுதான். காதலின் பல்வேறு வெளிப்பாடுகள்தான் பாசம், நேசம், அன்பு, பரிவு, கருணை, இரக்கம் என்ற எல்லாமும்.
Label: காதல் கட்டுரைகள்.

அன்புடன் புகாரி

source: http://anbudanbuhari.blogspot.com/